ஞாயிறு, 5 மார்ச், 2017

பெருமணல் உலகம்!

முதல் வரியை டச்சிங் டச்சிங் செய்வதற்கு முன்பாக ஒரு கேள்வி. படகோட்டி, மீனவ நண்பன், கடல் மீன்கள், அலைகள் ஓய்வதில்லை, கடலோரக் கவிதைகள், சுறா - எல்லாமே தமிழ் சினிமாக்கள் என்பதை கடந்து, இந்தப் படங்களுக்குள் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது என்ன? ‘What is your name?’ என்பது போல படு ஈஸியான கேள்வி. அத்தனையும் கடலும், கடல் சார்ந்த நெய்தல் நிலப்பரப்பில் உருவான சினிமாக்கள். நெய்தல் மண்ணில் படம் பிடிக்கப்பட்டிருந்தாலும் கூட, அந்த மண்ணையோ, இடர்களையும், புயல்களையும் கடந்து அங்கு வேர்பிடித்து நிற்கிற எளிய மனிதர்களின் வாழ்க்கையையோ எந்த சினிமாவும் இதுவரை நெருக்கத்தில் நமக்கு அறிமுகம் செய்ததில்லை. அதிகம் அறிந்திராத நெய்தல் மணல் பரப்பின் இன்னொரு பக்கத்துக்குள் துவங்குகிறது நமது பயணம்.


நீராலானது உலகு

லையும் மலை சார்ந்த குறிஞ்சி, காடும் காடு சார்ந்த முல்லை, வயலும் வயல் சார்ந்த மருத நிலங்கள் கடந்து இப்போது நாம் கால் பதித்திருப்பது தண்ணீரும், கண்ணீரும் சார்ந்த நெய்தல் நிலம். ‘வருணன் மேய பெருமணல் உலகமும்...’ என்று தொல்காப்பியர் சுட்டிக்காட்டும் இந்த நெய்தல் நிலப்பரப்பே, உலகின் ஆதார மையம் என்றால் அது நிச்சயம் மிகைப்படுத்தல் அல்ல.

ள்ளிக்கூட நாட்களில், புவியியல் பாடங்களில் படித்திருக்கலாம் - நீராலானது உலகு. நாம் வசிக்கிற இந்த பூமியின் மொத்தப் பகுதியில் 71 சதவீதம்... வெறும் H2O. அதாங்க, பச்சைத் தண்ணீ. இதில் 97.2 சதவீதம் கடல் நீர். கால்குலேட்டர் பயன்படுத்தி கணக்குப் போட்டுப் பார்க்கையில், இந்த பூமிப்பந்தில் 70 சதவீதத்தை கடல் ஆக்கிரமித்திருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இந்தியாவில் மிக நீண்ட கடற்கரையைப் பெற்றிருக்கும் மாநிலங்கள் பட்டியலில் நம்ம தமிழகமும் இருக்கிறது. ஆயிரத்து 76 கிலோ மீட்டர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகபட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி என கடலும், கடல் சார்ந்த நெய்தல் மாவட்டங்கள் தமிழகத்தில் மொத்தம் 13.

எற்பாடு... எப்போது?

சூழலியல் (Ecology) நிபுணர்களான நம்மாட்கள், ஒவ்வொரு நிலப்பரப்புக்கும் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்று தனித்தனியாக கோட்பாடுகளை வரையறுத்து வைத்திருக்கிறார்கள் என படித்திருக்கறோம். முதல் பொருள் என்பது நிலம், பொழுது (Space & Time). ‘‘முதலெனப்படுவது நிலமும் பொழுதிரண்டின் இயல்பென மொழிப இயல்புணர்ந்தோரே...’’ என்கிறது தொல்காப்பியம் (அகம் 4). நிலமும், பொழுதும் இன்றி எதுவும் இயங்காது. என்பதால், இவ்விரண்டையே, முதல்பொருளாக நம்மவர்கள் பகுத்து வைத்திருக்கிறார்கள். கடலும், கடல் சார்ந்த பகுதிகளும் நெய்தலுக்கான நிலப்பரப்புகளாம். கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்னும் பெரும் பொழுதுகளும் வைகறை, எற்பாடு (மாலைப்பொழுது) என்னும் சிறுபொழுதும் நெய்தல் நிலத்துக்குரிய பொழுதுகள். ரைட்டா?

முதல் பொருள் எனப்படுகிற Space & Time மேட்டருக்கு அடுத்த படியாக வருகிற விஷயம் கருப்பொருள். அந்தந்த ஏரியாக்காரர்கள் வணங்குகிற தெய்வம், சாப்பிடுகிற உணவு, அவர்களது தொழில், பொழுதுபோக்கு. அங்கு வளருகிற பறவை, விலங்கு, பயிர்கள் என சகலத்தையும் லிஸ்ட் போட்டுத் தருகிறது கருப்பொருள். ‘‘The beings and things peculiar to different regions (‘karu’) are said to be God, food, animal, tree, bird, drum, profession and lute and such others...’’ என்று இங்கிலீஷ்காரர்கள் இந்த விஷயத்தை படித்து ஆச்சர்யப்பட்டிருக்கிறார்கள்.

H2Oவை கட்டுப்படுத்த...


நெய்தல் காரர்கள் வணங்கிய தெய்வம் வருணன். மருத நிலத்து மக்கள் வணங்கிய ‘வேந்தன்’ பின்னாளில் ‘இந்திரன்’ என மாறியது / மாற்றப்பட்டது போல, இந்த வருணன் விஷயமும் இருக்கலாம் என்கிறார்கள் தமிழ் இலக்கியம் மெத்தப் படித்தவர்கள். அதாவது, வருள் + நன் = வருணனாம். வருள் என்றால் சுழற் காற்று, கடல் காற்று. கடலில் இருக்கும் ஆகப்பெரிய H2Oவை சாந்தப்படுத்தி வைத்திருக்கிற அந்த சுழல் காற்று, இவர்கள் வணக்கத்திற்குரிய ஒன்றாக இருந்திருக்கிறது (வருள் + நன் = கடல் காற்று). இங்கு வசித்த மக்களை சேர்ப்பன், நுளைச்சி, நுளையர், பரதவர், பரத்தியர் என பட்டியல் பிரித்து வைத்திருக்கிறார்கள். கண்டல், புன்னை, ஞாழல் போன்ற மரங்களும், நெய்தல், தாழை, கடம்பு ஆகிய மலர்களும் இந்த நிலத்தை அழகு படுத்தியிருக்கின்றன. மீன் பிடித்தலும், அது சார்ந்த பிறவும் இந்தப்பகுதி மக்களின் தொழில். பறை, விளரி யாழ் ஆகிய இசைக்கருவிகள் இந்த மக்களின் வாழ்வில் வசந்தம் சேர்த்திருக்கின்றன.

டுத்து, உரிப்பொருள். ஒரு நிலத்தில் வசிக்கிற மக்களின் மன உணர்வுகள் பற்றிப் பேசுகிற ஏரியா. நெய்தல் நிலத்தின் உரிப்பொருள் இரங்கலும், இரங்கல் நிமித்தமும். அதாவது பிரிவு தாங்கமாட்டாமல் வருந்துதல். இந்த ‘இரங்கல் துயர்’ இன்றைக்கும் தொடர்வதுதான் சோகம். சரி. தொல்காப்பியம் கூறுகிற ‘இரங்கல்’ எதற்காகவாம்? யாருக்காக, யார் இரங்குகிறார்களாம்? நெய்தல் மண்ணுக்குள் கால் புதைய நடக்கும் போது, ஆச்சர்யம் மிகுந்த அனேகக் கதைகள் நமக்கு கேட்கக் கிடைக்கின்றன. காத்திருக்கலாமா?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

5 கருத்துகள்:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...