சனி, 4 பிப்ரவரி, 2017

ஊரு விட்டு, ஊரு வந்து... காதல் கீதல் பண்ணாதீங்க!

 டல் என்கிற ஒரு வார்த்தை தமிழில் இருக்கிறது தெரியும்தானே? படித்து அறிவதை விட, உணர்ந்து அறிந்தால் மட்டுமே இந்த வார்த்தைக்கான அர்த்தத்தை முழுதாகப் புரிந்து கொள்ளமுடியும். காதலர்களும், புதிதாக கல்யாணம் முடித்தவர்களும் ஊடல் பற்றி நன்றாகவே தெரிந்து வைத்திருப்பார்கள். ஆசையாகப் பேச அருகே போகும் போது, முகத்தை, உதட்டை சுழித்து, பழித்துக் காட்டிய படி உங்கள் ஆள், அந்தப் பக்கம் நகர்ந்தால் (பொய்க் கோவமாம்!) அதற்குப் பெயர் ஊடல். சரியாவதற்கு, சிறிதுநேரம் பிடிக்கும். வயலும் வயல் சார்ந்த மருத நிலத்துக்கும், இந்த ஊடலுக்கும் என்ன சம்பந்தம்?


மேகமே எல்லை!

‘‘மருத நிலத்துக்கான தெய்வம் இந்திரன் தானே சார்? அப்படித்தானே படிச்சிருக்கேன். நீங்க குழப்புறீங்களே?’’ என்று சாத்தூரில் இருந்து ஒரு போஸ்ட் கார்ட் வந்திருந்தது. ஒரு குழப்பமும் இல்லை. இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, தமிழுக்கு இலக்கணம் தந்த தொல்காப்பியர் சார் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா?

மாயோன் மேய காடுறை யுலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே...

- தொல்காப்பியத்தில் (அகத்திணை 5) இப்படியாக இருக்கிறது. காடுறை என்றால் வனமும் வனம் சார்ந்த முல்லை. மைவரை என்றால் மேகங்களை எல்லையாகக் கொண்ட என்று அர்த்தம். அதாவது, மலையும் மலை சார்ந்த குறிஞ்சி. அடுத்து வருகிறது பாருங்கள், தீம்புனல். அப்டினா...? நீர்நிலைகள் அதிகம் இருக்கிற பகுதி என்று அர்த்தம். அதாவது மருதம். அந்த மருத நிலத்துக்கு அய்யா தொல்காப்பியர் யாரை தெய்வமாகக் குறிப்பிட்டிருக்கிறார் என்றால்... வேந்தன். இந்திரன் அல்ல. இந்திரன் என்று சொல்ல வேண்டுமானால், அவர் யாதொரு தயக்கமும் இன்றி நேரடியாகவே சொல்லியிருப்பார். பின்னால் வந்தவர்கள் வேந்தனை, இந்திரன் என்று எழுத... அது அப்படியே நிலைப்பெற்று விட்டது. சரி. ஏன் வேந்தனை மருத நிலத்துக்கு தெய்வமாக்கினார்கள்?

இந்திரன் எப்போ வந்தார்?


ல்வினை செய்கிறவர்களின் உயிர், அவர்கள் ‘காலமான’ காலத்துக்குப் பிறகு மேலுலகம் செல்லும். இங்கு அரசனாக இருந்தவன், கண்ணீர் அஞ்சலி காலத்துக்குப் பிறகு மேலுலகத்திலும் அரசனாகவே இருப்பான் என்பது மருத நிலத்து நம்பிக்கை. இன்றைக்கும் கூட அதன் எச்சம், மிச்சம் இருக்கிறதுதானே? நல்லபடியாக ஆட்சி, அதிகாரம் செய்து, செத்துப் போன வேந்தனை அவர்கள் கடவுளாகவே வணங்கியிருக்கிறார்கள். அந்த நிலத்து மக்களின் தொழில் வேளாண்மை என்று தெரியுமில்லையா? வேளாண்மைக்கு என்ன தேவை? மழை. மேகம் பிச்சுகிட்டு மழை பெய்த போது, ‘அடடா... செத்தப் பிறகும் நம்ம அரசன் நம்மளை மறக்கலையேப்பா. மேல இருந்து, மழையை பிச்சுகிட்டு கொட்ட வெக்கிறார் பாரேன்...’ என்று தங்கள் அரசன் பெருமை பேசி புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்கள். பின்னாட்களில், மழைக்கான தெய்வமாக இந்திரன் ‘பொறுப்பேற்றுக் கொண்ட’ப் பிறகு, வேந்தன், இந்திரனாக மாறிப் போனான்.

மும்மாரி பொழியுதா மந்திரி?


ப்போது போல, மலையை உடைப்பது, காட்டை அழிப்பது, நதிகளை பிளாட் போட்டு விற்பது போன்ற  மெகா வியாபார உத்திகளை மருத நிலத்து மக்கள் பழகியிருக்க வில்லை என்பதால்... இயற்கை இயற்கையாகவே இருந்தது. மழை வளமும் பிரமாதமாக இருந்தது. ‘வானம் மும்மாரி பொழிகிறதா மந்திரியாரே?’ என்று வாரத்துக்கு ஒருமுறை வேந்தன் வானிலை அறிக்கை கேட்டு உறுதி செய்து விட்டு, அந்தப்புரத்துப் பணிகளை அக்கப்போர்களின்றி கவனித்துக் கொண்டிருந்தான்.

ழை பெருகினால், மகசூல் பெருகும். மகசூல் பெருகினால்... பாக்கெட்டில் திணிக்க முடியாத அளவுக்கு பர்ஸ் கனத்துப் போகுமில்லையா? வேளாண் தொழிலில் அள்ளிய செல்வத்தை கலை, இலக்கியம், ஆன்மிகம் என்று பல வகைகளிலும் வாரி இறைக்க ஆரம்பித்தார்கள். இயல், இசை, நாடகம் என்று மொழியின் சகல திசைகளுக்கும் சென்று ரசித்தார்கள்; படைத்தார்கள். மாட மாளிகைகள், அரண்மனைகள் கட்டி அழகு பார்த்தார்கள். அத்தோடு நின்றிருந்தால் பரவாயில்லை. நாட்டியம் ஆடி மகிழ்விக்க வந்த பெண்களிடம் மனதைப் பறிகொடுத்தார்கள். தோளில் கிடந்த துண்டில் பணத்தை சுருட்டிக் கட்டி எடுத்துக் கொண்டு நாட்டியப் பெண்மணிகளின் வீடே கதியென்று கிடக்கவும் ஆரம்பித்தார்கள். குறிஞ்சி, முல்லை நிலப்பரப்புகளில் இருந்து மருதம் வித்தியாசப்படுவது இந்த ‘மேற்படி’ விஷயத்தில்தான்.

திருந்துங்கப்பா...!


ழைத்துப் பிழைத்த நம் மக்களின் சமூக வாழ்க்கை மருத நிலத்தில்தான் லேசாகத் தடம் புரண்டிருக்கிறது. சங்க இலக்கியங்களில் நிறைய பதிவுகள் இருக்கின்றன. கல்யாணம் கட்டியதையே மறந்து போய் நடன சிகாமணிகளின் (பரத்தையர் என்று இலக்கியங்களில் இவர்கள் பற்றிக் குறிப்பிருக்கும்) வீட்டில் சென்று செட்டிலாகியிருக்கிறார்கள். ‘வருஷம் ஒண்ணாச்சு. போன மனுசனை இன்னும் காணமே? இப்ப வருவாரோ... எப்ப வருவாரோ?’ என்று வீட்டில் மனைவிமார்கள் கண்ணீர் வடித்துக் கிடந்த கதையை ஐங்குறுநூறு (50வது பாடல்) படம் பிடித்துக் காட்டுகிறது.

‘‘துணையோர் செல்வமும் யாமும் வருந்துதும்
வஞ்சி ஓங்கிய யாணர் ஊர
தஞ்சம் அருளாய் நீயேநின்
நெஞ்சம் பெற்ற இவளுமார் அழுமே...’’


‘அங்கே’ இருக்கிற தலைவனை பார்த்து புத்தி சொல்வதற்காக, (அனேகமாக வயதான!!) தனது தோழியை தலைவி அனுப்பி வைக்கிறாள். ‘ஊரு விட்டு ஊரு வந்து... காதல் கீதல் பண்ணாதீங்க...’ என்று இந்தக்காலமாக இருந்தால் தோழி, செட்டுச் சேர்த்து பாட்டுப் பாடியிருப்பாள். சங்க காலமாக இருந்ததால் ‘துணையோர் செல்வமும்...’ என்று பாடி வைத்திருக்கிறாள். என்ன அர்த்தமாம்? ‘‘பல தொழில் செய்து பணத்தை பதுக்கி வைத்திருக்கிறவனே... உன்னை நம்பி வீட்டில் ஒருத்தி இருக்கிறாளே... அவ ரொம்பப் பாவம்பா. உன்னையே மனதில் நினைத்து தினம், தினம் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறாள். வந்தாலும் வந்தாய்... மாதக்கணக்கில் இப்படியா இங்கே கிடையாய் கிடப்பாய்? பணம், பொருள் என்ன இருந்தாலும், அந்தப் பொண்ணுக்கு நீ இல்லாம எப்டிப்பா? காலா காலத்துல பொண்டாட்டிகிட்ட போய்ச் சேருகிற வழியைப் பாருப்பா...’’ என்று தோழி புத்தி சொல்லியிருக்கிறாள்.

ல்லாப் பெண்களும் ஒரே மாதிரி இருக்கமாட்டார்களே? கணவனை நினைத்து, அழுது வடிந்த பெண்களும் இருந்திருக்கிறார்கள். கதவைச் சாத்தி வெளியே தள்ளியவர்களும் இருந்திருக்கிறார்கள். கெஞ்சிக் கூத்தாடி தான் உள்ளே நுழைய முடியும். என்பதால், மருத நிலத்து மக்களின் மன உணர்வுகளை விளக்குகிற உரிப்பொருள்... ஊடலும், ஊடல் நிமித்தமும். ரொம்ப, ரொம்பச் சரிதானே?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

3 கருத்துகள்:

  1. ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
    கூடி முயங்கப் பெறின்.


    DD சாருக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. நன்கு எழுதுகிறீர்கள். பின் ஏன் தொல்காப்பியர் சார் போன்ற கொலைகள்? பெயரைத் தமிழ் எழுத்துகளில் குறிக்கலாமே! திருத்தங்களும் மாற்றங்களும் மேற்கொண்டு தெரிவித்தால் உங்களுக்கு ஒரு விருது காத்திருக்கிறது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! தமிழே விழி! தமிழா விழி!

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...