ஞாயிறு, 29 ஜனவரி, 2017

டைம் மெஷின்... பயணம் போலாமா?

குறிஞ்சி நிலத்தில் துவங்கிய நமது திணை வழிப்பயணம் முல்லை கடந்து இப்போது மருதம் வந்தடைகிறது. ஒரு வகையில் பார்த்தால் இது டைம் மெஷின் எனப்படுகிற கால இயந்திர வழிப்பயணத்துக்கு ஒப்பானது. குறிஞ்சி என்பது ஆதம், ஏவாள் காலத்து ஆதி நிலம். எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாத ஒரு வாழ்க்கையை மனிதனுக்கு அந்த நிலம் வழங்கியது. மனிதன் தன்னை மனிதனாக உணர்ந்தது முல்லை நிலத்தில். வாழ்க்கை வாழ சில சமரசங்கள் தேவை என்பதை முல்லை அவனுக்கு கற்றுக் கொடுத்தது. மருதம் இன்னும் நமக்கு நெருக்கமானது. கருப்பு வெள்ளையில் இருக்கிற பழைய குடும்பப் புகைப்படங்களை பார்க்கிற உணர்வு, இந்த நிலத்தைக் கடக்கையில் மனதுக்குள் வந்து போவதைத் தவிர்க்க முடியாது. நமக்கு நெருக்கமான ஒரு நிலத்தை நெருங்கியிருக்கிறோம். வாருங்கள்... சுங்கச்சாவடிகள் எதுவுமில்லை. சுதந்திரமாக உள் நுழையலாம்!


பஸ்சை நிறுத்து!


தேனி மாவட்டத்தில் சின்னமனூர் கடந்து உத்தமபாளையம் நெருங்கும் போதே பஸ் ஜன்னல் வழியாகப் பார்த்து சொக்கிப் போயிருக்கலாம். சாலைக்கு இரு பக்கமும் பச்சைப்பசேல் என வயல்வெளிகள். பக்கத்து மே.தொ. மலைத்தொடரில் இருந்து கிளம்புகிற மென் காற்று, சமதள வயல்வெளிக்குள் புகுந்து, பயிர்களை உரசி, ஊடாடி விட்டு, அப்படியே... பஸ்சிற்குள் புகுந்து, ஓடுகிற சினிமாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் நமது முகத்தில் மோதும் பாருங்கள்... அடடா! ஆழ சுவாசித்துக் கொள்ளுங்கள். அதுபோன்ற 100 சதவீத ஜென்யூன் காற்றுக்கு, இனி வரும் காலங்களில் வாய்ப்பில்லை. கண்களுக்கும், உடலுக்கும் ஒருசேர குளிர்ச்சி, இதம் தருகிறதே... பஸ்சை நிறுத்தி இறங்குங்கள். வயலும், வயல் சார்ந்த இதுவே மருத நிலப்பரப்பு.

திக்கரை நாகரிகம் என்று பாடங்களில் படித்திருக்கிறோமில்லையா? உலக நாகரிகங்கள் எல்லாமே நதிக்கரைகளிலும், ஏரிக்கரைகளிலுமே வேர்பிடித்து வளர்ந்திருக்கின்றன. தமிழர் நாகரிகமும், பண்பாடும், கலையும், கல்வியும், வணிகமும், அரசியலும் அதன் உச்சத்துக்கு போன இடம்... இந்த மருத நிலம். மலையோ, மலையடிவாரமோ அல்லாத சமவெளி பரப்பு இது. மண் வளம் அபாரமாக இருக்கும். நீர்வளம் பற்றி கேட்கவே வேண்டாம். கல்லை விதைத்தால் கூட முளைத்து வளரும். என்பதால், தேவைக்கு அதிகமாகவே, மிக அதிகமாகவே இந்த நிலபரப்பு செல்வச் செழிப்புப் பெற்றது. இடைத்தேர்தல் நடக்கிற தமிழகத்து நகரங்கள் போல, மருத மக்கள் கைகளில் சாதாரணமாகவே பணப்புழக்கம் தாராளமாக இருந்தது. குறிஞ்சி, முல்லை மக்களை விட, இவர்கள் பாக்கியவான்கள்.

‘பெரும்பகடு’ன்னா என்ன?

நீர்வளமும், மண் வளமும் மிக்கதான நிலத்தில் நெல் பயிரிட்டார்கள். எருதுகள் பூட்டிய ஏர்கள் கொண்டு உழுதார்கள். நிலங்களை ஆழ, அகல உழுகிற வகையில் திறன்மிக்க கலப்பைகள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
‘‘குடிநிறை வல்சிச் செஞ்சால் உழவர்
நடைநவில் பெரும்பகடு புதவில் பூட்டி
பிடிவாய் அன்ன மடிவாய் நாஞ்சில்
உடுப்பு முக முழுக் கொழு மூழ்க ஊன்றி...
- கி.மு. இரண்டாம் நூற்றாண்டு இலக்கியமான பெரும்பாணாற்றுப்படையின் வரிகள் இவை.

பெரிய பெண் யானையின் பிளந்த வாய் போல மடிந்தும், அகன்றும் இருக்கிற கலப்பை என்ற மருத நில வர்ணிப்பை கவனியுங்கள். இந்த கலப்பை மாட்டி இழுக்க பெரும் காளைகள் (பெரும்பகடு) பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. திறன்மிக்க காளைகள், பிரமாண்ட கலப்பைகள் என விவசாயத்தை, அதன் அடுத்தகட்டத்துக்கு மருத நிலம் அழைத்துச் செல்கிறது. விளைகிற தானியங்களை சேர்த்து வைக்க இன்றைய கிட்டங்கிகளை (Ware house) மிஞ்சுகிற வகையில் மிகப் பெரிய குதிர்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. ‘‘ஏணி எய்தா நீள் நெடு மார்பின்...” (பெரும்பாணாற்றுப்படை 245) என்று மெகா உயரமான குதிர்கள் இருந்ததை இலக்கியங்கள் பதிவு செய்கின்றன.

பொழுது விடியும் பொழுது!

ன்றைக்குப் போல கண்ட கண்ட நச்சு, ரசாயனங்களை போட்டு நிலத்தை அவர்கள் மாசு படுத்தியிருக்கவில்லை. ஆகவே, நிலம் அவர்களுக்கு தேவைக்கு அதிகமாகவே வாரி வழங்கியது. செம விளைச்சல்.
‘‘சாலி நெல்லின் சிறைகொள் வேலி
ஆயிரம் விளையுட்டு ஆக...’’
வண்டி, வண்டியாக அறுவடை செய்து அவர்கள் அள்ளிச் சென்றதை பொருநர் ஆற்றுப்படை விளக்குகிறது.

ளமும், செழிப்பும் கொண்ட மருத நிலத்தின் முதற்பொருள் (நிலம், பொழுது) பார்க்கலாமா? வயலும், வயல் சார்ந்ததே மருத நிலம். கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்னும் பெரும் பொழுதுகளும் வைகறை எனப்படுகிற பொழுது விடிகிற சிறு (காலை) பொழுதும் மருத நிலத்துக்கான பொழுதுகளாகும் (Time).

ராஜா கைய வெச்சா?

டுத்து, ஒரு நிலத்தில் வசிக்கிற மக்களின் உணவு, தொழில், பொழுதுபோக்கு உள்ளிட்டவற்றைக் கூறுகிற கருப்பொருள். இந்த நிலத்து மக்களுக்கு வேந்தனே தெய்வம். மருத நிலத்து மக்கள் குழு வாழ்க்கைக்கு முற்றிலுமாக மாறி விட்டதால், ஆள்பவனே ஆண்டவன். ராஜா கைய வெச்சா... அது ராங்கா போனதில்ல என மருத மக்கள் நம்பியிருக்கிறார்கள் (இப்போதும் அப்படித்தானே?!).

க, வேந்தன் இங்கு கடவுள் நிலைக்கு உயர்ந்திருக்கிறான். பிற்காலத்தில் வந்தவர்கள் வேந்தன் என்பதை இந்திரன் என்று மாற்றி புதுக்கதை செய்திருக்கிறார்கள். ஆனால், சங்க இலக்கியங்களில் அப்படி இல்லை. மள்ளர், உழவர், கடையர் ஆகியோர் இங்கு வசித்த மக்கள். காஞ்சி, மருத மரங்கள் நிறைய இருந்திருக்கின்றன. செந்நெல், வெண்நெல் இவர்களது உணவு. பொழுதுபோகாத நேரங்களில் யாழ் எடுத்து செட்டு சேர்ந்து மெட்டு போட்டு மகிழ்ந்திருக்கிறார்கள். தண்ணீர் தேவைக்கு ஆறு, ஏரி தவிர, கிணறு தோண்டி குடிக்க, பயிர் வளர்க்க பயன்படுத்தியிருக்கிறார்கள்.

டுத்து, அந்த நிலத்தில் வசிக்கிற மக்களின் உணர்வுகளை விளக்குகிற உரிப்பொருள். மருத நிலத்துக்கான உரிப்பொருள் ஊடல். அப்டினா...? குடும்பச் சண்டை என்று எளிமையாக இதற்கு அர்த்தம் சொல்லலாம். எதற்காகவாம் ஊடல்? இந்தக் கேள்விக்குப் பின்னணியில் இருக்கிறது மருத நில மக்களின் சமூக, அரசியல், பொருளாதார வாழ்வியல் வரலாறு.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

5 கருத்துகள்:

  1. பல விசயங்களை கோர்த்து... யப்பா...!

    படங்கள் அதை விட...!

    பாராட்டுக்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. இயற்கையின் மடியில் தவழ்வது தேனி மாவட்டம். காடும் காடு கார்ந்த முல்லை நிலமாகிய மானாவாரிக் காடுகளும் வயலும் வயல் சார்ந்த மருத நிலமும் மலையும் மலை கார்ந்த குறிஞ்சி நிலமாகிய மேற்குத் தொடர்ச்சி மலையும் ஆயிரம் கற்பனை களுக்கு அடி எடுத்து கொடுக்கும். பெரியாற்றுறு பாசனத்தின் ஒவ் வொரு பயிரிலும். அதை உண்டு வாழும் ஒவ் வொரு உயிரிலும் மாசற்ற பென்னி குக்கின் தியாகம் மறைந்துள்ளது. கே.கே சார் தங்களின் உத்தமபாளையம் பயண வரிகள் எனது காலச் சக்கரத்தை பின்னோக்கி அழைத்து சென்று விட்டது. நன்றி சார்

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...