வெள்ளி, 27 ஜனவரி, 2017

பிதாவே... பீட்டாவை மன்னியும்!

‘போராட்டம்... போராட்டம்....’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் தெருமுனையில் உரத்த குரலில் பெட்ரோல், டீசலுக்காக நடத்துகிற போராட்டமே... இந்த வாட்ஸ்அப் காலத்து இளைஞர்கள் பார்த்திருக்க சாத்தியமுள்ள மிகப் பெரிய போராட்டம். ‘இந்தி எதிர்ப்பு போராட்டத்துல கலந்துகிட்டவராம் எங்க தாத்தா...’ என்று சிலர் பழம் பெருமை பேசலாம். ‘அதெல்லாம் இன்னா போராட்டம். இந்தா புடி, செம்ம போராட்டம்....’ என்று ஜல்லிக்கட்டுக்காக மெரினா துவங்கி, திருச்சி மார்க்கமாக, மதுரையில் மையம் கொண்டு, கன்னியாகுமரி சன்ரைஸ் கடற்கரை வரைக்கும் சிறுவர் - சிறுமியர், மாணவர் - மாணவியர், இளைஞர் - இளைஞிகள், இல்லத்தரசிகள் - அரசர்கள், பெரியவர்கள்... அத்தனை பேரும் போராட்டம் நடத்தி ஹாலிவுட் ரேஞ்சுக்கு பிரம்ம்ம்ம்ம்ம்மாண்டமாக மிரட்டி, சாதித்து விட்டார்கள் (டிராஜடி கிளைமாக்ஸ் தான் சங்கடம்). சும்மா இருக்குமா ‘பூனைக்குட்டி’? ‘பேசும் படம்’ பகுதிக்காக, கிளம்பி விட்டது கேமரா வலம்.

ல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தேவாலயத்தின் முன் மண்டியிட்டு... மனதார வேண்டுகிறது (??!!) இந்த ‘கரும்புள்ளி - செம்புள்ளி’ காளை. இடம்: சாணார்பட்டி, திண்டுக்கல் மாவட்டம்.


கருப்புக் கொடி... பாலைக் குடி!

பிற போராட்டக் களங்களில் இருந்து, இந்த ஜல்லிக்கட்டு போராட்டக் களம் கொஞ்சம் வித்தியாசப்பட்டிருந்தது. குழந்தை, குட்டிகளுடன் மக்கள் குடும்பத்தோடு திரண்டு வந்திருந்தது சத்தியமான ஸ்பெஷல்.  இது அலங்காநல்லூர் காட்சி. ஒரு கையில் பாலைக் குடித்து உடம்புக்கு எக்ஸ்ட்ரா எனர்ஜி ஏற்றிய படியே, மறுகையில் கருப்புக் கொடியுடன் களத்தில் போராட்டம்.... போராட்டம்!


ஹிப்.. ஹாப்பி பர்த் டே!

‘‘பாப் ஆல்பம் போடறவன், திருட்டு டிவிடி பார்த்து படமெடுக்கிறவனெல்லாம் தமிழ் போராளி வேஷம் கட்டிகிட்டு, உள்ள பூந்து உடான்ஸ் அடிச்சிட்டுப் போயிட்டானுவ. நாம அப்டியில்லை. உணர்வோட உள்ள வந்திருக்கமாக்கும். இன்னிக்கு எனக்கு ஹிப்... ஹாப்.... ஸாரி ஹாப்... ஹாப்பி பர்த்டே. ஆனா, அதுவாங்க முக்கியம்? வாடிவாசலை என்னிக்கு திறக்கிறமோ... அன்னிக்குத்தாங்க கொண்டாடுறோம் ஆப்பி பர்த் டே. - ‘கேக்கும் வேணாம் - கோக்கும் வேணாம்’ என்று பிறந்தநாளும், அதுவுமாக திண்டுக்கல் போராட்டக்களத்துக்கு அம்மாவுடன் வந்திருந்த ஒரு வயது முகமது ஆஷித்.

மாமேய்... எனக்கு அப்பர் பெர்த்து!

திமிறிக் குதித்துக் கொண்டு பாய்ந்து வருகிற காளைகளையே திமிலைப் பிடித்து அடக்கி மடக்குகிற நம்மாட்களுக்கு, பிரேக் கட்டை வைத்திருக்கிற ரயில் எம்மாத்திரம். கோவையில் இருந்து மதுரை மார்க்கமாக நாகர்கோவிலுக்கு சென்று கொண்டிருந்த பாசஞ்சரை, வைகை ஆற்றுப்பாலத்தில் மடக்கி நிறுத்தி விட்டார்கள் மதுரை பாய்ஸ். அன்று துவங்கி, ஐந்து நாட்கள் அந்த ரயிலும், பாலமும்... பூவும் நாரும் போல, ஈருயிர் ஓருடல் போல, சந்தனமும் நறுமணமும் போல இணைபிரியாது இருந்த காட்சியை, மதுர கார மக்காஸ் குடும்பம், குடும்பமா வந்து பாத்துட்டுப் போனாய்ங்க!

தோ பார்ரா... பொம்பளை டீ.ஆரு??

வாடா எம் மச்சி, வாழக்கா பஜ்ஜி... டேய் காளி, இத்தோட நீ காலி... மாதிரியான ரிதமிக் டயலாக் டி.ஆர் மட்டும்தான் எழுதமுடியுமா என்ன? திண்டுக்கல்லு பொண்ணுங்க பின்னுவாங்க. ‘டேய் டேய் பீட்டா... பிஞ்சுறும்டா பேட்டா...’ என்ற அவர்கள் எழுதிப் பிடித்திருக்கிற இந்தப் பதாகையைப் பார்க்க நேரிடுகிற போது... பீட்டா, ஜல்லிக்கட்டு... அதெல்லாம் விடுங்க! திண்டுக்கல் பசங்க... ரொம்பப் பாவமில்லை?

ஊதா கலரு ரிப்பன் இல்லடீ!

ல்லிக்கட்டுக்கு ஆதரவு கேட்டு நம்மாட்கள் நடத்திய போராட்ட வகைகள்... அப்பப்பப்பா...! கூகுளில் அடித்துத் தேடினாலும், இப்படியெல்லாம் வெரைட்டி கிடைக்காது. ‘அல்வா நகரத்து’ பெண்கள் அடுத்த லெவலுக்கு போய் விட்டனர். வாயில் கருப்புத் துணி (ரிப்பனை கழட்டி???) கட்டிய படியே கடுங்கோஷங்கள் எழுப்பி மவுனப்போராட்டம் (!!!) நடத்தி அசரடித்தனர். ‘வாயில கட்டியிருக்கிற ரிப்பனை வீ்ட்டிலயும் கழட்டாதம்மா... புண்ணியமா போகும்’ என்று அண்ணாவோ, தம்பியோ மனு கொடுத்திருக்கலாம்.

மச்சி... இங்க சிக்னல் கெடக்கிதுடா!

போலீசும் சும்மா இல்லை. போராட்டத்தை ஒடுக்குவதற்கு அவர்களால் ஆன அளவுக்கு நிறைய வேலைகள் செய்து கொண்டே இருந்தார்கள். ‘வாட்ஸ்அப்பு, ஃபேஸ்புக்குனு நம்ம பயலுக டெக்னாலஜி காரனுகளா இருக்கானுகப்பா. இங்க போராட்டத்த ஆரம்பிச்சிட்டோம். ஓவர்... ஓவர்...னு தீயை கொளுத்தி போட்டுர்றானுக...’ என்று யோசித்து கடைசியில், செல்போன் சிக்னலை முடக்க ஜாமர் கருவி கொண்டு வந்து வைத்து விட்டார்கள். ஆக, செல்போன் சிக்னல் தேடி இவர்கள் டவரில் ஏறியிருப்பதாக நினைத்து விடவேண்டாம். போராட்ட உத்திகளில் இதுவும் ஒரு வகை. இடம்: அரவக்குறிச்சி, காரைக்கால்.

அப்பால நவரு நைனா..!

‘நகந்துக்கோ நைனா. நாம் பாத்துக்கிறேன் அந்த பீட்டா பக்கிய...’ என்று தோட்டத்தில்வீட்டில் புல் மேய்ந்து கொண்டிருந்த காளையை கழட்டி கையில் பிடித்துக் கொண்டு, (போராட்ட) களத்துக்குக் கிளம்பி விட்டது இந்தச் சின்னச் சிங்கம்! இடம்: திருச்சுழி, விருதுநகர் மாவட்டம்.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

6 கருத்துகள்:

 1. காளைக்காக பூனைக்குட்டியின் மியாவ் சூப்பர்

  பதிலளிநீக்கு
 2. விரிவான சுவையான தகவல்கள்.
  இராயசெல்லப்பா நியூஜெர்ஸி

  பதிலளிநீக்கு
 3. உண்மையிலேயே மிரட்டிய போராட்டம்தான். ஆனால் ரயில் மறியல் போன்ற பொதுமக்கள் இடையூறுகளைத் தவிர்த்திருக்கலாம். ரசிக்க வைத்த படங்கள்.

  பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...