வெள்ளி, 20 ஜனவரி, 2017

வினைகள் தீர்ப்பவர் யாரு?

ரண்டு காட்சிகளை இப்போது கற்பனை செய்து கொள்ளுங்கள்.
காட்சி 1:
‘முகூர்த்தத்துக்கு நேரமாச்சு. மண்டபத்துக்கு இப்ப கிளம்புனாத்தான் சரியா இருக்கும். கிளம்புங்க... கிளம்புங்க...’ என்று வீட்டில் இருக்கும் பெரிய மனிதர்கள் குரல் கொடுக்கிறார்கள். நண்பர்கள், உறவினர்கள் புடை சூழ, பட்டு வேட்டி சட்டை பளபளக்க, பலப்பல கனவுகளுடன்  மாப்பிள்ளை சார் மண்டபம் செல்வதற்காக வீட்டில் இருந்து காலெடுத்து வெளியே வைக்கிறார். ‘‘போடா.. உம்மூஞ்சில எம் பீச்சாங்கைய வெக்க! நீயெல்லாம் என்னத்த கிழிக்கப் போற? இனிமே உனக்கு ஏழரைதாண்டி...’’ - டாஸ்மாக் அரவணைப்பில் இருந்து இன்னும் விடுபடாத ‘குடிமகன்’ யாருடனோ செல்போனில் பேசியபடி போகிறார். இந்த வார்த்தைகளை கேட்டால்... மாப்பிள்ளை சாருக்கு மனதுக்கு எப்படி இருக்கும்?
காட்சி 2:
‘‘சபாஷ். வாழ்த்துகள். எல்லாமே நல்லபடியா இருக்கும்பா. உன் கஷ்டமெல்லாம் இனி ஐஸா கரைஞ்சி போகும்டா...’’ என்று செல்போனில் பேசியபடியே ஒருவர் கிராஸாகிறார். இந்த வார்த்தைகளை கேட்கும்போது மாப்பிள்ளை சாருக்கு எப்படி இருக்கும்?


தொட்டுத் தொடரும் பாரம்பரியம்

முல்லை நிலத்தில் இருந்து கிளம்புவதற்கு முன்பாக, அந்த ஏரியா கார மக்களின் சில குணநலன்களை தெரிந்து கொண்டு செல்வது நல்லது. காரணம், அந்த ‘குணநலன்கள்’ தொட்டுத் தொடரும் பாரம்பரியமாக இன்றைக்கும் கூட நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறது. முல்லை நில மக்களின் பழக்கவழக்கங்கள் தெரிந்து கொள்ளவேண்டுமானால் முல்லைப் பாட்டு படிக்கலாம். பத்துப்பாட்டு தொகுதியின் ஒரு பகுதியான முல்லைப்பாட்டில் இருந்து இந்தப் பாடலைப் படித்துப் பாருங்களேன்...

‘‘நனந் தலை உலகம் வளைஇ, நேமியொடு
வலம்புரி பொறித்த மா தாங்கு தடக் கை
நீர் செல, நிமிர்ந்த மாஅல், போல,
பாடு இமிழ் பனிக் கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி
பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை,
அருங் கடி மூதூர் மருங்கில் போகி,
யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப, நெல்லொடு,
நாழி கொண்ட, நறு வீ முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய், கைதொழுது,
பெரு முது பெண்டிர், விரிச்சி நிற்ப...’’

- முதல் பாராவில் ஒரு குடிகாரப் பக்கி, மிஸ்டர் ‘பி பாசிட்டிவ்’ ஆகியோரது செல்போன் உரையாடல்களைக் கேட்டு மாப்பிள்ளை சாரின் ரியாக்‌ஷன்களைக் கவனித்திருப்பீர்களே? நம்மில் நிறையப் பேருக்கு இருக்கிற பழக்கம் இது. ஒரு காரியம் துவங்கும் போது காதில் விழுகிற விஷயம் நல்லதாக இருக்கவேண்டும். நல்ல விஷயம் பேசிக் கொண்டிருக்கும் போது... ‘ஆஆஆஆ.. அக்ஸ்ஸ்ச்ச்ச்...’ என்று யாராவது தும்மினாலோ, சுவரில் இருக்கிற பல்லி ‘கிக்கி.. கிக்கி..’ என்று சிரித்தாலோ... ‘சகுனம் சரியில்ல மக்கா’ என்று துண்டை உதறுகிற குணம் இன்றும் இருக்கிறதுதானே? இந்தக் குணம் முல்லை நிலத்தில் பிறந்த குணம் என்று சொன்னால் நம்புவீர்களா?

விரிச்சி...? ஓடுங்க தெறிச்சி!


முல்லை நில மக்களிடம், அதுவும் குறிப்பாக பெண்களிடம் சகுனம் கேட்கிற மாதிரியான ஒரு குணம் இருந்திருக்கிறது. ‘விரிச்சி கேட்டல்’ என்று இலக்கியங்கள் அதை குறிப்பிடுகின்றன. ஒரு வேலையைத் துவக்கும் போது நல்ல வார்த்தைகள் காதில் விழுந்தால் மேட்டர் சூப்பராக இருக்கும். வில்லங்கமாய் காதில் கேட்டால்... புட்டுக்கும் என்று அவர்கள் நம்பியிருக்கிறார்கள். எக்குத்தப்பாக ஏதாவது காதில் விழ நேர்ந்தால்... ஊரில் இதற்கென்றே டெண்ட் போட்டு அமர்ந்திருக்கிறவர்களிடம் ஓடியிருக்கிறார்கள். ‘வினைகள் தீர்ப்பதற்காக’ அவர்களிடம் அருள்வாக்கு (விரிச்சி) கேட்டிருக்கிறார்கள்.

குறிஞ்சி நில மக்கள் முருகனை (சேயோன்) கும்பிட்டது போல, ஆயர்நில மக்களான இவர்கள் மாயோனை (கண்ணன்) வணங்கியிருக்கிறார்கள். இன்றைக்கு வைணவத் தலங்களில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிற திருமால் எனப்படுகிற விஷ்ணுவும், இந்த மாயோனும் ஒருவரேதானா அல்லது வேறு வேறு தெய்வங்களா என்று தீராத குழப்பம் இன்றும் இருக்கிறது. சமயப்பெரியவர்கள் சம்பந்தப்பட்ட மேட்டர் என்பதால், அதற்குள் நாம் போகவேண்டாம்.

முல்லை நிலத்தில் படிக்க ஆச்சர்யம் தருகிற விஷயங்களும் நிறைய இருக்கின்றன. சிற்றரசுகள் இந்த நிலப்பரப்பில்தான் தோன்றின என்று பார்த்தோம் இல்லையா? இவர்கள் சண்டைக்கு போகிற போது, படையணிகளில் பெண்களும் இருந்திருக்கிறார்கள் என்கிற வியப்பான தகவலை சங்க இலக்கியங்கள் பதிவு செய்கின்றன. நேரம் தெரிந்து கொள்ள ‘நாழிகை வட்டில்’ பயன்படுத்தியிருக்கிறார்கள். சிற்றரசர்கள், தங்களுக்கு காவலாக வாய்பேச இயலாதவர்களை பணியமர்த்தியிருக்கிறார்கள். அப்போதுதான் அரச ரகசியங்கள் வெளியே போகாதாம். இன்றைக்காக இருந்தால், வாட்ஸ்அப்பில் அனுப்பியிருப்பார்கள்!

முல்லைப் பாட்டு!


முல்லை நிலம் எனப்படுகிற காடும், காடு சார்ந்த அந்த நிலப்பரப்பு, மனித நாகரிகத்தின் இரண்டாவது கட்டம் என்று படித்திருக்கிறோம். நமது தமிழ் மண் மட்டுமல்ல... உலகம் முழுவதுமே, இந்த மலையடிவார வனப்பகுதிகளில் தான், மனித நாகரிகம் தனக்கென்று ஒரு வரையறைகளை வகுத்து, அடுத்தகட்டத்துக்குள் புகுந்திருக்கிறது. அந்த வகையில் உலக இலக்கியங்களை பார்க்கும் போது, பிற செம்மொழிகளான லத்தின், கிரேக்கம், எபிரேயம் (Hebrew) ஆகியவற்றிலும் முல்லைப் பாடல்கள் இருப்பதைக் காணமுடிகிறது. வடமொழியில் முல்லைப் பாடல்கள் பெரிய அளவில் இல்லை என்பதும் பதிவாகிறது. மற்றெந்த செம்மொழிகளையும் விட, நமது தமிழில் முல்லைப் பாடல்களின் எண்ணிக்கை அதிகம். மிக அதிகம்.

ட்டுத்தொகை நூல்களான நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, பத்துப்பாடல் நூல்களான நெடுநல்வாடை, முல்லைப்பாட்டு ஆகியவற்றில் பல நூற்றுக்கணக்கில் முல்லை நில சித்தரிப்புகள் இருக்கின்றன... என்கிற புரிதல்களுடன் முல்லை நிலத்திற்கு கைகாட்டி விடை கொடுக்கலாம். திணைகளின் வழியான நமது நீண்ட பயணம்... ஆச்சர்யங்களை நிறைய வைத்திருக்கிற மருத நிலத்தை நோக்கி அடுத்து பயணிக்கிறது.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

3 கருத்துகள்:

  1. முல்லை நிலத்தில் பிறந்த குணம் - அறியாத தகவல்...

    உடன் பயணிக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  2. புதிய புதிய தகவல்களை அறிந்து கொள்ள பயணத்தில் நானும் இணைந்து கொள்கிறேன்..

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...