வியாழன், 12 ஜனவரி, 2017

நானும்... ரவுடிதான்!

லையில் வசிப்பதை விடவும், மலையடிவாரத்தில் வசிப்பது இன்னும் சொகுசானது. நாகர்கோவில், கோயம்புத்தூர், தேனி மாவட்டத்து மக்களைக் கேட்டால், அடடா... அனுபவித்துச் சொல்லுவார்கள். காம்பவுண்டு சுவர் கட்டி வைத்தது போல மலைத்தொடர், அருவிகள், காட்டாறுகள், வீட்டு வாசலுக்கே தேடி வரும் கால்வாய் நீர், உறைக்காத வெயில், மென் குளிர்காற்று, டென்ஷன் போக்கி, மனதை இலகுவாக்குகிற வல்லமை கொண்ட பசும் புல்வெளிகள்... அடடா, அழகுதான் போங்க! சினிமா கேமராக்களுக்கு செம தீனி இங்கிருக்கிறது. குறிஞ்சி போல நடுக்குகிற குளிர் இல்லை. மிரட்டுகிற விலங்குகள் இல்லை. இயற்கை அழகு நிறைத்து பதுக்கி வைத்திருக்கிற முல்லை நிலப்பரப்புக்குள் இப்போது நாம் நுழையப் போகிறோம்.


கலப்பை எங்க இருக்கு?

முல்லை நிலத்தில் நாம் தெரிந்து கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன. இன்றைக்கு கோடானுகோடி ஏழைகளைக் கண்ணீர் வடிக்க வைக்கிற, விவசாயம் என்கிற உயிர் வளர்க்கும் தொழிலின் ஆதி வடிவம் இந்த மண்ணில் தான் தோன்றியிருக்கிறது. நிலத்தை கொத்தி, பகுத்து பயிரிட மனிதன் கற்றுக் கொண்டது முல்லை நிலத்தில்தான். அதற்காக, கலப்பை என்கிற கருவி கண்டறியப்பட்டதும் இங்குதான்.
‘‘பிடிக்கணத்து அன்ன குதிருடை முன்றில்
களிற்றுத் தாள் புரையும் திரிமரப் பந்தர்
குறுஞ்சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி...’’
என்கிறது பெரும்பாணாற்றுப்படை (196-199). விளைந்த தானியங்களைச் சேர்த்து வைக்கிற குதிர்கள், விவசாயத்துக்குப் பயன்படுகிற கலப்பை குறித்த ஆதாரங்கள் இந்தப் பாடலில் இருக்கிறது.

கார் என்றால் ‘கார்’ அல்ல!


முல்லை நிலத்தின் முதல் பொருள் (Space & Time) கார் என்னும் பெரும்பொழுது, மாலை என்னும் சிறுபொழுது. கார் காலம் என்றால் தெரியும்தானே...? SUV மாடல் சொகுசு வாகனங்கள் நிறைந்திருக்கிற இன்றைய நவீனகாலம் என்று முடிவுக்கு வந்து விடப்படாது. கார் என்றால் மழை. அதாவது, மழை காலம்.

டுத்து (மக்களின் மன உணர்வுகளைப் பேசுகிற) உரிப்பொருள் - இருத்தலும், இருத்தல் நிமித்தமும். முல்லை நிலத்துப் பெண்களுக்கு... பாவம், காத்திருத்தலே கதி. ஜாலியாக சுற்றி விட்டு, ஒரு கால் கட்டு போடுகிற காலம் வந்ததும், பொருள் தேடி பையன் தூரதேசம் கிளம்பி விடுவான்.

‘மழைகாலத்துக்குள் வந்து விடுவேன்’ என்று சத்தியமடித்துச் செல்வான். சின்னப்பொண்ணு பாவம்... மழை எப்போ வரும்... அவன் எப்போ வருவான் என்று காத்திருக்கும். நான் சொல்லவில்லை... சங்க இலக்கியங்கள் சொல்கின்றன.

அவர்... சுத்த வேஸ்ட்!‘‘செல்வச் சிறாஅர் சிறு அடி பொலிந்த
தவளை வாய பொலஞ்செய் கிண்கிணிக்
காசினன்ன போது ஈன் கொன்றை
குருந்தோடு அலம் வரும் பெருந்தண் காலையும்
கார் அன்று என்றி ஆயின் இது
கனவோ மற்றிது வினவுவல் யானே...’’

குறுந்தொகையின் (148) இந்தப் பாடலைப் படித்துப் பாருங்களேன். ‘அவர் எப்பவுமே இப்படித்தான். சுத்த வேஸ்ட். இன்னும், காணோம் பாருடீ...’ என்று தோழிப் பெண்ணிடம் புலம்புகிறாள். ‘அட! மழைகாலத்துக்கு இன்னும் நாள் இருக்கு. கட்டாயம் உன் ஆளு வந்திடுவான். கவலைப்படாதே...’ என்று தோழி ஆறுதல் படுத்துகிறாள். இந்தப் பதிலால் திருப்தி இல்லை. ‘‘அந்தச் சின்னக் குழந்தைகளின் கால் கொலுசுகளை கவனித்துப் பாரேன். தவளை வாய் போல, லேசாகப் பிளந்து கிண்கிணிச் சத்தம் எழுப்புகின்றன. அந்தக் கொலுசுகளில் கோர்த்த பொன் நாணயம் போல தோற்றமளிக்கும் கொன்றையும், குருந்தமும் சுழல்காற்றில் சுற்றிச் சுழல்கின்றன. இது மழைகாலம் இல்லை என்று சொல்கிறாய். நீ என்ன கனவா காண்கிறாய்...?’’ என்று தோழியை போட்டு படாத டார்ச்சர் படுத்துகிறாள் இந்த இளம்பெண்.

விருந்துக்கு போகலாமா?


டுத்து, ஒரு நிலத்தில் வசிக்கிற மக்களின் பழக்க வழக்கங்களை விளக்குகிற கருப்பொருள். முல்லையில் வசித்த மக்களை இடையர், ஆயர் என வகை பிரிக்கிறார்கள் தமிழறிஞர்கள். வீட்டில் விருந்துக்கு போனால் வரகும், சாமையும் மணக்க, மணக்க சமைத்து வைத்திருப்பார்கள். குழம்பூற்றிப் பிசைந்து சாப்பிட்டால் ருசி... பிச்சிக்கும். உடம்புக்கும் நல்லது. காட்டுக்கோழி, மயில், மான், முயல் போன்றவை இந்த நிலத்தில் இருந்தன. மலையில் தண்ணீர் இல்லாமல் காட்டுயானைகள் கீழிறங்கி வந்து இப்போது டார்ச்சர் பண்ணுகிறதே... அந்தத் தொந்தரவெல்லாம் அப்போது இல்லை. கால்நடை நிறைய வளர்த்தார்கள். கேழ்வரகு, அவரை, துவரை பயிரிட்டார்கள். குளங்கள் வெட்டப்பட்டன.

கால்நடைகள் வளர்த்ததால், இவர்களது வீட்டுக்கு எப்போது போனாலும் பால், தயிர், மோர் கிடைக்கும். ஓரளவுக்கு உயரமான வீடுகள் கட்டி வசித்தார்கள். மனித நாகரிக வளர்ச்சியின் இரண்டாவது கட்டம் இந்த நிலப்பரப்பில் ஏற்பட்டிருக்கலாம் என்பது மானுடவியல் நிபுணர்களின் கருத்து. தனிநபர் சொத்துரிமை, தனித்தனி குடும்பமுறை, தந்தை வழிச் சமூகம் போன்ற இன்றைய அவஸ்தைகள், முல்லை நிலப்பரப்பில் தான் முதன்முதலில் தோன்றியிருக்கிறது. களவு மணம் என்பது கற்பு மணமாக ‘கன்வர்ட்’ ஆனதும் இங்குதான். எக்கச்சக்கமாக கால்நடைகள் வைத்திருந்தவன் ஏரியா பிஸ்தா ஆனான். ‘நானும் ரவுடிதான்...’ என்று தனக்குத்தானே கிரீடம் சூட்டிக் கொண்டான். அதுவரை இருந்திராத... அதிகாரமும், ஆதிக்கமும், ஆணவமும் மனித சுபாவத்தில் இங்குதான் மெதுவாக நுழையத் துவங்கின.
எதிர்பார்ப்பு... போச்சு!
கால்நடைகளே செல்வம் எனக் கருதப்பட்டது. கால்நடைகளைக் கவர்வதற்காக சிறு, சிறு குழுச் சண்டைகள் இந்த நிலப்பரப்பில் நடந்திருக்கிறது. ‘ஆநிரை கவர்தல்’ என்று இந்த குழு மோதல்களை இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இயற்கையோடு இயைந்து குறிஞ்சியில் வாழ்ந்த மனிதன், முதன்முதலாக இன்றைய நாகரிக மனித குணம் பெறத் துவங்கியது... இந்த முல்லை நிலப்பரப்பில்தான்.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

3 கருத்துகள்:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...