செவ்வாய், 27 டிசம்பர், 2016

வீரம் வௌஞ்ச மண்ணு!

குடிநீர் வரவில்லை என்று குடங்களுடன் சாலையை மறித்து ஆர்ப்பாட்டம் நடக்கிறதை அன்றாடம் செய்திகளில் பார்த்திருக்கலாம். சிலர் நேரிலும் பார்த்திருக்கலாம். சாலை மறியல் செய்கிறவர்களின் கனிவான கவனத்துக்கு: குறிஞ்சி எனப்படுகிற மலைப்பகுதியில் வளர்ந்து செழித்திருந்த உயர, உயர மரங்களை எல்லாம் வெட்டிச் சாய்த்து கதவு, ஜன்னல் ஆக்கி விட்டோம். மேகங்களை மறித்து மழையாய் மடை மாற்றுகிற வேலையை இனி யார் செய்வது? பூமியின் சமநிலையைப் பாதுகாக்கும் பணியில் ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக ஈடுபட்டுக் கிடந்த மலைகளை, மலைக்குன்றுகளை பிறந்தநாள் கேக் போல துண்டு துண்டாக அறுத்து சமையலறை, குளியலறைகளில் பதித்து விட்டோம். நீர்நிலைகளுக்கு ஆதார ஊற்றாக இருக்கிற பணியை இனி யார் செய்வது? எந்த பதில் எதிர்பார்ப்பும் இல்லாமல் நமது உயிர் வளர்த்த இயற்கையை சூறையாடி நாசம் செய்து விட்டு, கடைசியாக இப்போது.... குடங்களுடன் சாலையை மறித்துக் கொண்டிருக்கிறோம்!


ஜிம்மி எப்போ வந்தது?

லையும், மலை சார்ந்த இடமுமான குறிஞ்சி நிலம் இனிமையானது. அழகானது. பச்சைப் பசுமையானது. ரசனைக்காரர்களுக்கு பிடித்தமானது. என்பதற்காக, அங்கேயே முகாம் போட்டு உட்கார முடியாதில்லையா? முல்லைக்குக் கிளம்பவேண்டாமா? அதிவேகமாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிற, அந்த குறிஞ்சி நில மலையை விட்டுக் கீழிறங்கினால்... காடும், காடு சார்ந்த நிலப்பரப்பான முல்லை உங்களை அன்புடன் வரவேற்கிறது!

குறிஞ்சியில் குகைகளிலும், மலைகளிலும் வாழ்ந்த மனிதன், குடும்பம் குடும்பமாக பல்கிப் பெருக... ‘சர்தான்... வர்றேன்பா...’ என்று சொந்த பந்தங்களுக்கு ஒரு சலாம் சொல்லி விட்டு கீழிறங்கி முல்லைக்கு வந்து சேர்ந்தான்.  மனித நாகரிக வளர்ச்சியின் முக்கியமான கட்டம் முல்லை நிலத்தில் துவங்குகிறது. குறிஞ்சி மலையில், மனம் போன போக்கில் வாழ்ந்த மனிதன், இங்குதான் முறையான குழு வாழ்க்கையைத் துவக்குகிறான். பசு, எருமை, ஆடு போன்ற விலங்குகளை பழக்கி, தனது அன்றாடத் தேவைகளுக்குப் பயன்படுத்தக் கற்றுக் கொள்கிறான். ஆடு, மாடுகளை பாதுகாப்பதற்காக ஜிம்மி, டைகர்களை வீட்டில் வளர்க்க அவன் பழகியதும், இங்குதான். களவொழுக்கம், கற்பொழுக்கம் என்று நாம் ஏற்கனவே படித்திருக்கிறோம். கற்பொழுக்கம் என்கிற மேட்டர், இந்த முல்லை நிலப்பரப்பில்தான் அறிமுகம் ஆகிறது.

மழை கால மேகம் ஒன்று!


குளிர் நடுக்குகிற குறிஞ்சிப் பரப்பில் டூயட் மட்டும்தான் ஒர்ர்ர்ரே வேலையாக இருந்திருக்கலாம். முல்லை நிலத்தில் முடியாது. நாலு காசு சேர்த்தால் மட்டுமே உலை கொதிக்கும். ‘‘பத்திரமா இருந்துக்க கண்ணு. பக்கத்து வீட்டு பாலு, எதிர்த்த வீட்டு ராசு, இன்னும் எஞ்சோட்டுப் பசங்க ஏழெட்டு பேரு பக்கத்து காட்டுக்கு போய் பொருள் சேர்த்துட்டு, இந்தா... மழைகாலம் ஆரம்பிக்கறதுக்கு முன்னால வந்திடறோம்...’’ என்று கண்களை துடைத்த படியே முல்லை ஹீரோ கிளம்பி விடுவான். இந்த நிலத்தின் உரிப்பொருள் இருத்தலும், இருத்தல் நிமித்தமும் என்பதால்... மழை காலம் எப்ப வரும்; நம்மாள் எப்ப திரும்ப வருவான் என்று வானத்தையும், பூமியையும் பார்த்த படி தலைவி காத்துக் கிடப்பாள்.

வானிலை அறிக்கை வந்தாச்சா?


ப்பித் தவறி வீட்டுப் பக்கம் தோழிப்பெண் வந்து விட்டால் போச்சு. ‘அவரு... எப்ப வருவாரு...’ என்று கேட்டு,கேட்டே டார்ச்சர் படுத்தி விடுவாள். ‘உன்னோட இதே வேலையா போச்சு. இந்தப் பக்கமே இனி வரலைடீ...’ என்று தோழி ஓட்டம் பிடிக்கிற அளவுக்கு நிலைமை இருக்குமாம். குறுந்தொகை 21வது பாடல், மேற்படி காட்சியை படம் பிடித்துக் காட்டுகிறது பாருங்களேன்.

‘‘வண்டு படத் ததைந்த கொடி இணர் இடையிடுபு
பொன் செய் புனை இழை கட்டிய மகளிர்
கதுப்பில் தோன்றும் புதுப் பூங்கொன்றை
கானம் கார் எனக் கூறினும்
யானோ தேறேன் அவர் பொய் வழங்கலரே...’’

‘‘மழைகாலம் ஆரம்பிக்கிறதுக்கு முன்பாகவே வந்து விடுவேன் என்று அவர், வாக்குறுதி அளித்து விட்டுச் சென்றார். இன்னும் ஆளைக் காணோம். இந்தக் காட்டைப் பாரேன். பச்சைப் பசேல் இலைகளுக்கு மத்தியில், மஞ்சள் நிறத்தில் சரக்கொன்றை மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. பார்ப்பதற்கு, பொன் நகைகளை சூடியிருக்கும் பெண்ணின் கூந்தல் போல அவை காட்சியளிக்கின்றன. சரக்கொன்றை மலர்களில் இருந்து தேன் குடிப்பதற்காக வண்டுகள் கிளம்பி வந்து விட்டன. இது மழைக்காலம் இல்லை என்று நீ சொல்வதை, என்னால் நம்பமுடியவில்லை. ஆனால், என்னோட சார், பொய் சொல்ல மாட்டார். நிஜமாகவே இன்னும் மழைகாலம் துவங்கவில்லையா...?’’ - இப்படியாக, பிரிந்து சென்ற சாருக்காக, மேடம் வானிலை அறிக்கை பார்த்த படியே காத்திருக்கிற இடம்தான் முல்லை வனப்பகுதி. சங்க இலக்கியங்களில் முல்லைப் பாட்டெல்லாம் எடுத்துப் படித்தால்... நமக்கே ‘அய்யோ பாவம்பா அந்தப் பொண்ணு’ என்று ஃபீலிங் வந்து விடுமாக்கும்!

பொத்தி வெச்ச மல்லிக மொட்டு!

னால், எல்லா இளவட்டங்களும் இப்படியாக பெண்களை தவிக்க விட்டு பரதேசம் செல்வதில்லை. ‘இங்கயே இருந்து, கிடக்கிறத வெச்சு பொழப்பை ஓட்டுவோமப்பா...’ என்றும் ஒரு கூட்டம் இருந்திருக்கிறது. பகலானால், ஆடு மாடுகளை கிளப்பிக் கொண்டு வனப்பகுதிக்குள் செல்வது இவர்கள் வேலை. பெண்கள் பால் விற்பது, பழம் சேகரிப்பது என லோன் எதுவும் வாங்காமலேயே சுய தொழில் செய்து குடும்பம் நடத்தியிருக்கிறார்கள்.


ன்றைக்கு பெரும் மல்லுக்கட்டாக இருக்கிற ஜல்லிக்கட்டு, இந்த நிலப்பரப்பில்தான் தோன்றியிருக்கலாம் என்பது மொழியியல் ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.
‘யார்றா சின்ராசு, ஏங்காளைய வந்து அடக்கிக் காட்றா. அப்புறம் கட்றா என் மக கழுத்துல தாலிய’ என்று வெள்ளை வேட்டி நாட்டாமைகள் தோளில் துண்டை மாற்றிப் போட்டுக் கொண்டு பேசும் ‘ஏறு தழுவுதல்’ இங்கு நடந்ததாக கலித்தொகை (முல்லைக்கலி) சொல்லுகிறது. காளைகளை அடக்குகிற ‘காளை’களை, கூட்டத்தில் ஓரமாக நின்று கொண்டு ஓரக்கண்ணால் பார்த்த படியே ‘பொத்தி வெச்ச மல்லிக மொட்டு...’ என்று இளவட்டப் பெண்கள் மனதுக்குள் டூயட் பாடியிருக்கலாம். தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்த ஒரு வீர விளையாட்டின் விளைநிலம், இந்த முல்லை நிலம்.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

3 கருத்துகள்:

  1. அருமை நண்பரே விரிவாக பாராட்ட இயலவில்லை காரணம் செல்லின் வழி

    கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  2. நமது திரட்டியில் இணைத்தமைக்கு நன்றி...

    பேசுவது போல அழகாக எழுதுகிறீர்கள்... பாராட்டுகள்...

    பதிலளிநீக்கு
  3. தமிழ் வலைப்பதிவத் திரட்டி வழியாக உங்கள் பதிவைக் காணும் வாய்ப்பினைப் பெற்றேன். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...