ஞாயிறு, 18 டிசம்பர், 2016

குறிஞ்சி மலை டார்ஜான்!

க்கிரமானதொரு போர் இன்றைக்கு நடந்து கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியுமா? பொதுவெளிகளில் அதிகம் அறியப்படாத அந்தப் போர், எல்லாம் தருகிற இந்தப் பூமியின் இயற்கை சமநிலையின் மீது அதிதீவிர அணுகுண்டுகளை சரமாரியாக வீசி அழித்துக் கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? எதிர்காலத்தில் மனித இனம் பாதுகாப்பாக வாழ, இன்னொரு கிரகத்தை இப்போதே தயார் செய்து கொள்ளவேண்டிய உடனடி ஆபத்தை அந்தப் போர் உருவாக்கியிருக்கிறது என்கிற விபரீதம் உணர்ந்திருக்கிறீர்களா? இயற்கைக்கு எதிராக, இயற்கை சமநிலைக்கு எதிராக மனித இனம் நடத்திக் கொண்டிருக்கிற அந்த உக்கிரப் போர், இப்போது உச்சம் தொட்டிருக்கிறது.


வலுத்தது வாழும்!


னங்கள் சரம், சரமாக அழிக்கப்படுகின்றன. உலகின் தொன்மையான, இமயமலையை விடவும் வயதில் மூத்ததாக அறியப்பட்டுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் இன்றைய நிலைமை என்ன? மரங்கள் வேரோடும், வேரடி மண்ணோடும் வெட்டப்படுகின்றன. பாக்சைட் கிடைக்கிறது, மக்னீஷ் கிடைக்கிறது என்று மலைகளை உடைத்துத் தோண்டிக் கொண்டிருக்கிறோம். கடல் மணலையும் விட்டு வைக்கவில்லை . எத்தனை நாள் இயற்கை தாங்கும்? அது இப்போது பதில் தாக்குதல் துவக்கியிருக்கிறது. இயற்கையை, மிருகங்களை, பறவைகளை அழித்து ஒழிக்கிற அந்த துணிச்சல் மனிதனுக்கு யார் கொடுத்தது? வலுத்தது வாழும் (Survival of the fittest) என்ற மேற்கத்திய கோட்பாடு கொடுத்த துணிச்சல்தானே இது.

மிழ் கோட்பாடு வலுத்தது வாழும் என்று சொல்லித் தரவில்லை. அது மிக உயர்ந்த கற்பிதங்களை கற்றுக் கொடுக்கிறது. திருக்குறளை புரட்டினால் தெரியும்... ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...’ என்றுதான் எழுதி வைத்திருக்கிறாரே தவிர, ‘பிறப்பொக்கும் எல்லா மனிதருக்கும்’ என்று எழுதவில்லை வள்ளுவர். ‘எல்லா உயிர்க்கும்’ என்கிற இரு வார்த்தைகளில் இருக்கிறது விஷயம். ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்கிற வள்ளலார் வருத்தத்தில் இருக்கிறது இயற்கை குறித்த அக்கறை. பூமிக் கிரகம், மனிதனுக்கு மட்டுமே பட்டா போடப்பட்டதல்ல. ஒரு செல் அமீபா முதல் நீலத் திமிங்கலங்கள் வரை அத்தனையுமே உரிமதாரர்கள்தாம்.

ஜில் ஜில்... ஜல் ஜல்...


‘‘தாதூண் பறவை பேதுறல் அஞ்சி
மணி நாஆர்த்த மாண்வினைத் தேரன்...’’
- அகநானூறில் உள்ள இந்தக் காட்சி, இயற்கை மீதான அக்கறையை படம் பிடித்துக் காட்டும். நாலு காசு சம்பாதிப்பதற்காக காதல் மனைவியை வீட்டில் விட்டு விட்டு பட்டணம் போன இளவட்டம், கைநிறைய காசு சேர்த்து விட்டு ஊர் திரும்புகிறான். பல மாத இடைவெளிக்குப் பிறகு ஊர் திரும்புகிறான். சீக்கிரம் போனால் தேவலை. பணம் போனாலும் போகுது என்று முடிவெடுத்து, ஒரு தேர் அமர்த்திக் கொண்டு, நமது தனியார் பஸ்களை மிஞ்சுகிற அளவுக்கு செம ஸ்பீடாக விரைந்து வருகிறான். நல்ல புத்தம் புதிய தேர் அது. நிஜமாகவே தனியார் பஸ்கள் போல, சலங்கை கட்டி அலங்கரித்து ஜிகினா வேலைகள் செய்யப்பட்டிருக்கிறது. தேரின் வேகத்துக்கு ஏற்ப, அதில் உள்ள சலங்கைகள் ஜில் ஜில்... ஜல் ஜல்... என்று சத்தம் எழுப்புகின்றன.

டர்ந்த கானகம் வழியாக தேர் ‘பறக்கிறது’. வசதியாக சாய்ந்து உட்கார்ந்த படியே, ‘இன்னும் வேகமா ஓட்டுப்பா’ என்று தேரோட்டிக்கு கட்டளையிட்டு விட்டு கானகத்தைக் கவனிக்கிறான். அங்கு, யாருமற்ற தனிமையில் தேன்சிட்டுப் பறவைகள் (Sunbird) ஜோடி, ஜோடியாக தேன் உறிஞ்ச மரங்கள் தேடி அலைந்து கொண்டிருக்கின்றன. தேரில் இருந்து எழுகிற ஜில் ஜில்... ஜல் ஜல்... சத்தத்தைக் கேட்டு திடுக்கிட்டுப் போகிற அந்தப் பறவைகள், கதி கலங்கி அலைபாய்வதை நம்மாள் கவனிக்கிறான். ‘அடடா... தப்பு பண்ணிட்டமே! தாதூண் பறவைகளை (தேன்சிட்டு) டிஸ்டர்ப் பண்ணிட்டமே...’ என்று மனம் வருந்தி, ‘முதல்ல அந்த சலங்கை மணியை இழுத்துக் கட்டி, ஜில் ஜில்... ஜல் ஜல்... சத்தத்தை நிறுத்துப்பா’ என்று தேரோட்டிக்கு உத்தரவு போடுகிறான். சத்தம் நின்றப் பிறகே, தேர் அங்கிருந்து கிளம்புகிறது.

யற்கை மீதான நமது முன்னோர்களின் அக்கறை இது. இன்றைக்கு நிலைமை எப்படி இருக்கிறது? வனப்பகுதிகளில் மது குப்பிகளை உடைத்து வீசி எறிவதில் துவங்கி, பிளாஸ்டிக் பைகளை பறக்க விடுவது வரை... நாகரிகத்தில் நாம் எந்த உச்சத்துக்கு உயர்ந்திருக்கிறோம் என்பதை இந்த அகநானூற்றுப் பாடலுடன் ஒப்பிட்டு, சரி பார்த்துக் கொள்ளலாம். முடிந்தால்... திருத்தியும் கொள்ளலாம்.

பழைய டவுன்பஸ் பாடியா?

லையும், மலை சார்ந்த குறிஞ்சி நிலப்பரப்பில் இருந்து விடைபெற்று, முல்லைக்கு கிளம்புவதற்கு முன்பாக நாம் மனதில் இருத்திக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் இது. இயற்கை காப்போம். மலைகளையும், வனங்களையும், அங்கு வசிக்கிற ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்களையும்’ பாதுகாப்போம். முல்லை கிளம்பும் முன்பாக, இந்த குறிஞ்சி மலை மக்களின் ஆரோக்கிய ரகசியமும் தெரிந்து கொள்வது அவசியம். அருவி நீர், சுனை நீர் குடித்து, மூங்கில் அரிசி (Bamboo Rice) சாப்பிட்டு வளர்ந்தவர்கள் இவர்கள். ஐஆர் 20, பொன்னி அரிசிகள் கேள்விப்பட்டிருக்கலாம். அதென்ன மூங்கில் அரிசி?

மூங்கில் பூப்பதும், அதில் அரிசி விளைவதும் நமக்கெல்லாம் அதிசயமாக இருக்கலாம். அடர்ந்த வனங்களுக்குள் வசிப்பவர்களுக்கு இதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. எக்கச்சக்கமான மருத்துவக் குணம் இந்த மூங்கில் அரிசிக்கு இருக்கிறதாக்கும். டயாபடீஸ் வந்து சின்ன வயதிலேயே பழைய டவுன்பஸ் போல கிடுகிடுத்துக் கிடக்கிறவர்கள் அவ்வப்போது மூங்கில் அரிசி சமைத்து சாப்பிடலாம். மரத்துக்கு மரம் தாவுகிற டார்ஜான் மாதிரியான உடல்வாகு வந்தாலும் வரக்கூடும்!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

1 கருத்து:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...