சனி, 10 டிசம்பர், 2016

நான் வந்துட்டேன்னு சொல்லு... திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!

சினிமாக்காரர்கள் ஏன் டூயட் பாடல்களை மலையும், மலை சார்ந்த குறிஞ்சி நிலப்பரப்பிலேயே திரும்பத் திரும்ப எடுக்கிறார்கள் என்று ஒரு கேள்வி எழுப்பி, அதற்கான பதிலை இரு வாரங்களுக்கு முன்பாக பார்த்தோம். நினைவில் இருக்கும். இடம், கிளைமேட் அப்படி! சங்க இலக்கியங்களைப் புரட்டி, குறிஞ்சி நிலப்பரப்பு பற்றிய வர்ணிப்புகளைப் பார்த்தால்... சினிமா காதல் காட்சிகள் எல்லாம் டெபாசிட் காலியாகி விடுமாக்கும்!


ஜாலி... காலி!

கல் பொழுதுகளில் வேட்டை, விவசாயம், தேனெடுப்பது, மந்தியை விரட்டுவது என்று கிறுகிறுத்துப் போய் மாலையில் வீடு திரும்புவார் குறிஞ்சி ஹீரோ. ஆற்றிலோ, அருவியிலோ குளித்து ஃபிரெஷ் ஆகி விட்டாரென்றால், அடுத்து டூயட் மேட்டர்தான். லவ்ஸை பார்க்க கிளம்பி விடுவார். மாலை மயங்குகிற நேரம் பார்த்து, காடுகளில் பறித்த கனி வகைகளை பொட்டலம் போட்டு எடுத்துக் கொண்டு (அப்புறம்... வெறுங்கையுடன் போக முடியுமா என்ன?!) கிளம்பி விடுவார். காடு என்பது புலி, சிறுத்தை, யானை, கரடி என்று சகலமும் வாழ்கிற பூமி. ஜாலிக்கு ஜாலி. அசந்தால் ஆளே காலி. தெரியும்தானே? ‘எதுக்கு இவ்ளோ ரிஸ்க்? இந்த நேரத்துக்கு வராதீங்க... ஆபத்து’ என்று பொண்ணு எவ்வளவோ சிணுங்கி கோபப்பட்டாலும், நம்மாள் கேட்பதாக இல்லை.

‘இவர் ஏன் இப்டி ரஸ்க் சாப்பிடற மாதிரி ரிஸ்க் எடுக்கறார்? புலி, கிலி அடிச்சிடுச்சினா... என்னதான் பண்றது?’ என்று தோழியிடம் சொல்லி வருத்தப்படுகிறார் ஹீரோயின். கையில் பொட்டலத்துடன் ஹீரோ வருகிற நேரமாகப் பார்த்து தோழி ஒரு ‘கவித... கவித...’ எடுத்து விடுகிறார்.
எப்படி....?
இப்படி....!

‘‘கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்
இரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை யல்லை நெடுவெண் ணிலவே...’’

- அதாகப்பட்டது, தோழி நிலாவைப் பார்த்து பேசுகிறாளாம். ‘‘நீ...ண்ட கதிர்களைக் கொண்ட வெண்ணிலவே, கரிய அடியைக் கொண்ட வேங்கை மரத்தின் மஞ்சள் நிற மலர்கள், கீழே இருக்கிற கரு நிற பாறை மீது விழுந்து கிடக்கின்றன. மஞ்சள் மலர்கள் விழுந்து சிதறிக் கிடப்பதால், பார்ப்பதற்கு அந்தப் பாறை, ஒரு புலிக்குட்டி படுத்துக் கிடப்பது போலத் தெரிகிறது. உனது வெளிச்சத்தில் அவன் ஆபத்து அறியாது வருகிறான். உண்மையில், இது வேண்டாத வேலை. வெளிச்சமிட்டு வழிகாட்டுவதன் மூலம், அவனுக்கு நீ நன்மையேதும் செய்யவில்லை வெண்ணிலவே...’’ என்கிறாள்.

யாயும் ஞாயும் யாரா கியரோ...


நிலாவை குற்றம் சாட்டுவது போல, ஹீரோவுக்குக் கேட்கிற மாதிரி நல்ல சத்தமாகவே பேசுகிறாள் தோழி. ‘நான் வந்துட்டேன்னு சொல்லு. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு...’ என்று பஞ்ச் டயலாக் பேசியபடியே வருகிற நம்மாள், தோழியின் ‘கவித’யைப் புரிந்து கொள்கிறான். என்ன புரிந்து கொள்கிறான்? ‘இந்த வேலையெல்லாம் விட்டுட்டு, கால காலத்துல கல்யாணத்தைப் பண்ண பாருப்பா...’ என்று தோழி குட்டு வைப்பதை புரிந்து கொள்கிறான். நீங்கள் புரிந்து கொண்டீர்களா? குறிஞ்சி நில காதலொன்றை குறுந்தொகை (47வது பாடல்) இப்படி பதிவு செய்கிறது.

ர்ணனையை ரசித்து விட்டு கடந்து போகிற விஷயமல்ல. இரண்டாயிரம், மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நாம் எந்தளவுக்கு நாகரிகம், பண்பாட்டின் உச்சத்தில் இருந்தோம் என்பதற்கு சங்கப்பாடல்களில் இருக்கிறது சான்று. நாகரிகமோ, ஒழுக்க விழுமியங்களோ இல்லாமல் மனம் போன போக்கில் மனிதக் கூட்டம் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில், தமிழ் சமூகம் எப்பேர்ப்பட்ட ஒரு பண்பட்ட வாழ்க்கை வாழ்ந்திருக்கிறது என்பதற்கு சங்கப்பாடல்களே சான்று. ‘கடைசி வரைக்கும் நம்மை காப்பாற்றிக் கரை சேர்ப்பானா...?’ - தலைவன் மீது தலைவிக்கு மைல்டாக ஒரு டவுட் வருகிறது. ஒரே ஒரு பாட்டில், தலைவியின் சந்தேகம் தீர்க்கிறான். பாட்டைப் பாருங்களேன்... இல்லற வாழ்க்கை என்ன; எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இதை விடவும் எளிமையாக, ஆழமாக யாரும் விளக்கம் இனி கொடுத்து விடமுடியாது.

‘‘யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே...’’ (குறுந்தொகை 40)
- பொண்ணுக்கு இனி, இந்த ஜென்மத்தில் சந்தேகம் வருமா? சான்ஸே இல்லைதானே சகோஸ்!

நெருப்புடா...!


குறிஞ்சி நிலத்தில் சாம்பல் சத்து எனப்படுகிற பொட்டாஷ் சத்து குறைவாக இருக்கும். என்பதால், நிலத்தை தீயிட்டு எரித்து பிறகு பயிரிடுவார்கள் என இரு வாரங்களுக்கு முன்பாக எழுதியிருந்தோம். நிறையப் பேர் போன் போட்டு விட்டார்கள். ‘வனத்தில் தீயிட்டு எரித்து விட்டு பயிரிடுவது சாம்பல் சத்துக்காகவா? நம்ப முடியலையே சார்...?’ என்று கடிதங்களும் வந்தன. சந்தேகமே வேண்டாம். பொட்டாஷ் என்பது வெறும் சாம்பல் சத்து. POT + ASH... அதாவது, பானைச் சாம்பல்தான் பொட்டாஷ். இதை வயலில் தூவினாலே போதும். இன்னும் சந்தேகம் தீராதவர்கள் விக்கி பீடியாவை திறக்கலாம்.
பெயரிலேயே இருக்கிறது விஷயம்.

‘‘Potash is any of various mined and manufactured salts that contain potassium in water-soluble form. [1] The name derives from pot ash, which refers to plant ashes soaked in water in a pot, the primary means of manufacturing the product before the industrial era. The word potassium is derived from potash...’’ என்று விளக்கம் இருக்கும். சந்தேகம் இப்போது தீர்ந்திருக்குமே? ரைட்டு. குறிஞ்சி மலையில் இருந்து இறங்கி, காடும், காடு சார்ந்த முல்லை நிலத்துக்கு அடுத்தவாரம் பயணப்படலாமா?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...