திங்கள், 28 நவம்பர், 2016

ஊட்டியில் ஒரு டூயட்!

‘ஊ... லலால்லா... ஓஹூ... லலலால்லா...’ என்று தமிழ் சினிமாவின் கனவுக்காட்சிகளில் கதாநாயகனும், கதாநாயகியும் கட்டிப்பிடித்து டூயட் பாடுவார்களே...? இளையராஜாவின் படு அருமையான பாடலுக்கு அவர்கள் ஆடுகிற அந்த இடம், எந்த இடமாக இருக்கும்? ராமநாதபுரம்? விருதுநகர்? சிவகாசி? பரமக்குடி? நோ. நிச்சயமாக இருக்காது. படத்தின் பட்ஜெட்டைப் பொறுத்து ஊட்டியோ, கொடைக்கானலோ, மூணாறோ... அல்லது சுவிஸ் தேசமாகவோ அந்த கட்டிப்பிடி லொகேஷன் இருக்கும். சரிதானே? லொகேஷன் எதுவாகவும் இருக்கட்டும். அதில் இருக்கிற ஒரு பொதுவான ஒற்றுமையை கவனித்ததுண்டா? ஹீரோவும், ஹீரோயினும் காதல் செய்து பாட்டுப்பாடுகிற காரியத்துக்கு தேர்ந்தெடுக்கிற இந்த இடம் 89.99 சதவீதம் மலையும், மலை சார்ந்த குறிஞ்சி நிலப்பரப்பாகவே இருக்கிறதே... ஏன் மக்கா ஏன்?


நெஞ்சு வலித்தால்...?


லகின் மற்ற நாகரிகங்கள் எல்லாம் அதது வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்த காலத்தில், தமிழ் நாகரிகம் மட்டும், மக்களின் வாழ்வியலை ஐந்து திணைகளாக பிரித்து, வகுத்துத் தந்தது ஏன்? -பள்ளிக்கூடத்தில் பாடம் நடத்திய சாரிடம் என்றைக்காவது இந்த சந்தேகம் கேட்டதுண்டா? இந்த நிலத்து மக்களுக்கு இதுமாதிரியான வாழ்க்கை முறை, உணவு முறை என்று வகுத்துத் தந்திருக்கிறது திணையியல். இதை சரியாக பின்பற்றினால் உடல்நலமும் நன்றாக இருக்கும், இயற்கை வளமும் நாசமாகாமல் இருக்கும். அதாவது, நிலவியல் கோட்பாடுகளை நமது நாகரிகம் அமைப்பாக (structure) பார்க்காமல், அமைவாக (system) பார்த்து, பகுத்து வைத்திருக்கிறது.

மைப்பு, அமைவு... ரெண்டுக்கும் என்ன பெரிய வித்தியாசம்? அமைப்பு (structure) என்பது செயற்கையாக உருவாக்கிக் கொள்வது. அதில் இருந்து ஒரு விஷயத்தை நாம் நீக்கலாம். சேர்க்கலாம். தப்பில்லை. எந்தக் கேடும் ஏற்பட்டு விடாது. ஒரு கட்டிடம் கட்டுகிறார்கள். ஆறு மாதம் கழித்து, உள்ளே இருக்கிற பாத்ரூமை இடித்து அகற்றி வெளியே கொண்டு போகிறார்கள். வெளியே இருக்கிற சமையலறையை உள்ளே கொண்டு வருகிறார்கள். அமைப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்பட போவதில்லை. அமைவு (system) என்பது அப்படி அல்ல. அது இயற்கை. அதில் கையை வைத்தால் கதை முடிந்து விடும். மனித உடல் அமைப்பு என்பது அமைவு. நெஞ்சு வலிக்கிறது என்று, அதை கழட்டி வைத்து விடமுடியுமா? ஒரு systemல் இருந்து ஒரு விஷயத்தை நீக்குவது ஆபத்து.

உள்ளது உள்ளபடி!

மிழர்கள் நிலத்தை, இயற்கையை அமைவாக, system ஆக பார்த்தார்கள். இங்கிருந்து ஒரு விஷயத்தை நீங்கள் அகற்றினால்.. அதற்கான விலையை நீங்கள் கட்டாயமாக கொடுத்தாக வேண்டும். காடுகளை அழித்து விட்டு, மழையை இழந்திருக்கிறீர்கள் இல்லையா? பாம்பை அழித்து விட்டால்... வயல்களில் பெருகுகிற எலிகளை எப்படி கட்டுப்படுத்துவது? மரங்களையும், அதில் இருக்கிற நுண்ணுயிர்கள், பறவைகளை இல்லாமல் ஆக்கி விட்டால்... கொசுக்களையும், இன்னபிற கொடிய கிருமிகளையும் எப்படி அழிக்கமுடியும்? என்பதால், இயற்கை என்பது உள்ளது உள்ளபடியாக இருக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது திணையியல். உள்ளது உள்ளபடி என்றால்...?

‘ஒன்னரை டன்’ எங்கே?


லையும், மலை சார்ந்த குறிஞ்சி நிலப்பரப்பில் வசிக்கிற மக்களாக குன்றவர் (இப்போது, குறவர்), இறவுளர் (இப்போது இருளர் என்று அழைக்கப்படுகிறவர்கள்) ஆகியோர் குறிப்பிடப்படுகிறார்கள். அருவியும், சுனையும் இந்த நிலத்துக்கான நீர்நிலைகள். தேக்கு,, கடம்பு, வேங்கை, கருங்காலி, அகில், சந்தனம், பலா, நாகம் உள்ளிட்ட மரங்கள் இங்கு அடர்ந்து வளர்ந்து கிடந்தன. மூங்கில் புதர்களும் உண்டு. கிளி, மயில் போன்ற பறவைகளால் நிரம்பியது குறிஞ்சி. யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டுப்பன்றி, குரங்கு ஆகியவை இங்கு திரிந்த விலங்குகள் (ஓங்கி அடிச்சா ஒன்னரை டன்னை காணோம் கவனிச்சீங்களா?).

லைகளிலும், மலைச்சாரல்களிலும் நிலத்தைப் பக்குவப்படுத்தி தினை, மலைநெல் பயிரிட்டார்கள். வனத்தை வெட்டி சமன்படுத்தி, தீயிட்டுக் கொளுத்தி விட்டு அங்கு விதைகளைத் தூவுகிறார்கள். கிழங்கு தின்ன வரும் காட்டுப்பன்றிகள் நிலத்தை குத்திக் கிளறி விட்டுச் சென்றிருக்கும். அங்கும் விதைக்கிறார்கள். மழை நன்றாக இருக்கும் என்பதால் உழவேண்டிய அவசியம் இல்லை. அந்த நிலத்தில் பற்றாக்குறையாக இருப்பது சாம்பல் சத்து (பொட்டாஷ்) மட்டுமே. எரித்து விட்டு பயிர் செய்வதால் அந்தச் சத்தும் இயல்பாகவே பயிருக்கு கிடைத்து விடுகிறது.

ழையை நம்பி பயிர் விளைந்தது. மலை உச்சி, பாறைகளில் இருந்து மலைத்தேன் எடுத்தார்கள். கிழங்குகளை தோண்டி எடுத்தார்கள். அப்புறம், வேட்டை என்பது பிரதானத் தொழில். மாலையில் வீடு திரும்புகிற போது குறிஞ்சித் திணையைச் சேர்ந்த வாலிபன் கையில் ஒரு காட்டுப்பன்றியை பிடித்து வந்தால்தான்... மனைவி வீட்டுக்குள் விடுவார். - இதெல்லாம் குறிஞ்சி நிலத்துக்கான கருப்பொருள். அதாவது, அந்தப்பகுதி மக்களின் உணவு, தொழில் பற்றிச் சொல்கிற பகுதி.

டூயட் தான் வேலையா?


டுத்து, அங்கு வசிக்கிற மக்களின் மன உணர்வுகளைக் குறிப்பிடுகிற உரிப்பொருள் மேட்டர். குறிஞ்சி நிலத்தில் கிளைமேட் சூப்பராக இருக்குமில்லையா? ஜிலுஜிலு காற்று. எதிரே இருக்கிற ஆளை மறைக்கிற மாதிரியாக பனி (Mist), கல்யாண வீட்டில் பன்னீர் தெளிக்கிறது போல உடல் நனைக்காத சாரல். பார்க்கிற இடமெல்லாம் பச்சை நிறமே... பச்சை நிறமே! -  இப்படி ஒரு சிச்சுவேஷனில் யோசித்துப் பாருங்கள்...? சினிமாவில் ஏன் ஹீரோ கனவு காண ஆரம்பித்ததும், டூயட்டுக்கு குறிஞ்சி நிலத்தைக் காட்டுகிறார்கள் என்று இப்போது தெரிகிறதா?


‘‘புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை
தேருங் காலை திணைக்குஉரிப் பொருளே...’’ என்கிறது தொல்காப்பியம் (அகம் 16) - போனவாரம் படித்திருப்போம். கூடல் தான் இந்த நிலத்துக்கான உரிப்பொருள். வேட்டை ஆடுவதும், டூயட் பாடுவதும் மட்டும்தான் இந்தப்பகுதி காரர்களுக்கு வேலை. கொடுத்து வெச்ச ஆளுங்கப்பா... என்று ஜெலஸி கூடாது. நிஜத்தில் இவர்கள் வாழ்க்கை கடினமானதாகவும், சிரமங்கள் நிரம்பியதாகவுமே இருந்தது. என்ன சிரமம், என்ன கடினம் என்ற கேள்விகளுக்கான பதில், குறிஞ்சி நிலத்துக்கான Space & Time பற்றிச் சொல்கிற  முதல்பொருள் பகுதியில் இருக்கிறது. அது அடுத்தவாரம்!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

1 கருத்து:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...