ஞாயிறு, 6 நவம்பர், 2016

என் மேல் விழுந்த மழைத்துளியே!

திருக்குறளில் இருந்து இந்த வாரத்தை ஆரம்பிக்கலாம்.
‘நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி 
தான்நல்கா தாகி விடின்’
- பள்ளிக்கூடத்தில் விளக்கம் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். மறந்து போனவர்களுக்காக... ‘‘பெய்ய வேண்டிய நேரத்தில் ஒழுங்காக மழை பெய்யவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள்... அது, எவ்வளவு பெரிய கடலானாலும் சரி. தனது தன்மை மாறி கெட்டு விடும்,’’ - இது வள்ளுவர் வாய்ஸ். இன்றைய சயின்ஸ் இதை ‘அப்சல்யூட்லி ரைட்’ என்று உறுதி செய்கிறது. ஒழுங்காக மழை பெய்து, மழை நீர் கடலைச் சென்று சேர்ந்தால் மட்டுமே நிலத்தில் உள்ள தாதுக்கள் கடலில் கலக்கும். கடல்வாழ் உயிரினங்களுக்கு போதிய போஷாக்கு கிடைக்கும். மழை குறைந்தால்... கடல் வளம் குறைந்து, மீன்வளம் குறையும். இயற்கை ஒன்றுக்கொன்று கண்ணி கோர்த்து வைத்திருக்கிறது. ஒரு கண்ணி விலகினாலும் எல்லாம் போச்சு.


ஆரோ 3 D எபெக்ட்!

யற்கையே இந்த பிரபஞ்சத்தின் தீராத இயங்கு சக்தி என்பதை நமது இலக்கியங்கள் சமயம் கிடைக்கும் போதெல்லாம் வலியுறுத்தி வந்திருக்கின்றன. நிலத்தை ஐந்து வகைகளாகப் பிரிக்கும் திணையியல் கோட்பாடுகள், இயற்கையை பேணிப் பாதுகாக்கக் கற்றுத் தருகிற உத்தியன்றி வேறென்னவென்று நினைக்கிறீர்கள்? ஒவ்வொரு நிலமும் அதன் ஆதி நிலை சிதையாமல் எப்படி பாதுகாக்கப்பட வேண்டும் என்று திணையியல் கோட்பாடுகள் இலக்கணம் தருகின்றன. மலையும், மலை சார்ந்த குறிஞ்சி நிலம் எப்படி இருக்கவேண்டுமாம்?

ங்க இலக்கியங்களில், எட்டுத் தொகை நூல்களில் ஒன்று கலித்தொகை. இதில் உள்ள, குறிஞ்சிக் கலி பகுதி, மலையும், வனமும் அடர்ந்து, மிகுந்த குறிஞ்சி நிலத்தின் இயற்கை எழிலை வர்ணித்து, விவரிக்கிறது. அழகான ஒரு குறிஞ்சி நிலப்பகுதியை அப்படியே ‘ஆரோ 3 D எஃபெக்ட்’டில் நமது கண் முன் கொண்டு வந்து ஐந்தாவது பாடல் நிறுத்துவதைப் பாருங்களேன்...‘‘இடி உமிழ்பு இரங்கிய விரைபெயல் நடுநாள்

கொடி விடுபு இருளிய மின்னுச் செய் விளக்கத்து
பிடியொடுமேயும் புன்செய்யானை
அடியொதுங்கு இயக்கம் கேட்ட கானவன்
நெடுவரை ஆசினிப் பணவை ஏறிக்
கடு விசைக் கவணையில் கல் கை விடுதலின்
இறுவரை வேங்கை ஓள் வீசிதறி
ஆசினி மென்பழம் அளிந்தவை உதிரா
தேன் செய்இறா அல் துளைபடப் போகி
நறுவடி மாவின் பைந்துணர் உழக்கி
குலையுடைவாழைக் கொழுமடல் கிழியா
பலவின் பழத்துள் தங்கும்...’’ 

- இந்தப் பாடல் விவரிக்கிற காட்சி படு பிரமாண்டமானது. பார்க்கலாமா?

கொம்பன் வந்தாச்சு!


விளைநிலங்களில் விளைந்து நிற்கிற பயிர்களை இரவு நேரங்களில் விலங்குகள் வந்து கபளிகரம் பண்ணி விடாமல் காப்பதற்காக, உயர்ந்த மரங்களின் மீது பரண்கள் அமைத்து, இரவு நேரங்களில் வாட்ட சாட்டமான இளவட்டங்கள் காவல் காப்பது வழக்கம். இடியும், மின்னலுமாக மழை பின்னி பெடலெடுக்கிற ஒரு நாளின் நள்ளிரவு நேரம். சூழ்நிலை சூப்பராக இருப்பதால், தனது லவ்ஸை கூட்டிக் கொண்டு ஆண் யானை ஒன்று இரவு டின்னர் முடிப்பதற்காக, அந்த விளைநிலத்துக்குள் என்டர் ஆகிறது. யானை என்ன பூனை மாதிரி பதுங்கிப் பதுங்கியா வரும்? இருக்கிற செடி, கொடிகளை ஏறி மிதித்து துவம்சம் செய்தபடி அது வருகிற சத்தம், இளவட்டத்தின் காதுகளை எட்டுகிறது.


ருவது கொம்பன் யானை என்று புரிந்து கொண்டான் நம்மாள். பக்கத்து பலா மரத்தில் விறுவிறுவென ஏறி, உச்சியில் இருக்கிற பரணில் இருந்து நாலாபுறமும் கவனிக்கிறான். அதுவோ நள்ளிரவு நேரம். கும்மிருட்டு வேளை. ஃபாரெஸ்ட் காரர்கள் வைத்திருக்கிற மாதிரி டார்ச் லைட் இல்லாத காலம். யானை எந்தப்பக்கம் இருக்கிறது என்று கண்டறிய முடியவில்லை. அதற்காக... சும்மா விடமுடியுமா? பரணில் பதுக்கி வைத்திருக்கிற கற்களை எடுத்து கவணில் (தெரியும் தானே cata pult?) மாட்டி ஏவுகணை தாக்குதல் நடத்துகிறான்.

இதுதான் குறிஞ்சி!

வனது கவணில் இருந்து கிளம்பிய கல்... ஜிவ்வென்று சீறிக் கிளம்பி, மலை மேல் இருந்த வேங்கை மரத்திற்குள் புகுந்து, அதன் ஒளி மிகுந்த பூக்களை சிதறடித்து, அப்படியே கீழிறங்கி... பலா மரத்தின் மென்மையான காய்களை கொத்தாக உதிர்த்து, இன்னும் கீழிறங்கி... அங்கிருந்த தேனடைகளைத் துளைத்து, மேலும் கீழிறங்கி... மிக பருமனான மா மரத்தின் பூக்களை உதிர்த்து, அதற்கப்புறமும் கீழிறங்கி... (கண்ணைக் கட்டுதா?!) குலை தள்ளிய படி நிற்கும் வாழையின் மடல்களை பீஸ் பீஸாக்கி, இன்னும் கீழ் நோக்கி வந்து... வேர்ப்பலாவின் பழத்துக்குள் புகுந்து, தனது பயணம் முடிக்கிறது. அப்பாடி!!


பாட்டு முடிந்து விட்டது. ஆனால். அந்தப் பாட்டுக்குள் குறிஞ்சி நிலத்தை கொண்டு வந்து காட்டி விட்டார் பாருங்கள் பொலவர். வேங்கை, பலா, மா, வாழை... கட்டக்கடைசியாக வேர்ப்பலா என்று எத்தனை அடுக்குகள்? இதே மாதிரியான ஒரு வர்ணிப்பு அகநானூறு 292வது பாடலிலும் இருக்கிறது.
‘‘இரவில் மேயல் மரூஉம் யானைக்
கால்வல் இயக்கம் ஒற்றி நடுநாள்
வரையிடைக் கழுதின் வன்கைக் கானவன்
கடுவிசைக் கவணின் எறிந்த சிறுகல்
உடுவுறு கவணின் போகிச் சாரல்
வேங்கை விரியிணர் சிதறி, தேன் சிதையூஉ
பலவின் பழத்தில் தங்கும்...’’

- இந்தப் புலவர்களுக்கு இதே வேலையாப் போச்சு... என்று சலித்துக் கொள்பவராக இருந்தால், பாடல்களின் வர்ணனைகளுக்குப் பின்னணியில் உள்ள மிகப் பெரிய சூழலியல் சயின்ஸை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம்.

மேகம்... கொட்டட்டும்!


மிழக நிலப்பரப்பில் குறிஞ்சிப் பகுதி என்பது சோலைக்காடுகளைக் (Shola Forest) கொண்டது. வெப்ப மண்டலக் காடுகள் (Tropical Forest) என்று சயின்ஸ் இதை அழைக்கிறது. இந்த வெப்ப மண்டலக் காடுகள் மழையை அதிகளவு ஈர்க்கும் வல்லமை இயல்பாகக் கொண்டவை. கிடுகிடுவென ஓங்கி உயர்ந்த மரம், அதற்கடுத்த நிலையில் மீடியம் சைஸ் மரம், அப்புறம் குட்டை மரம் என்று படிமான முறையில் இந்தக் காடு அமைந்திருப்பதே‘மேகம் கொட்டட்டும்’ சூழலுக்குக் காரணம்.


வெப்ப மண்டலக் காடுகளின் இந்த படிமான அடுக்கு முறையே, ‘ரெய்ன்.. ரெய்ன்.. கம் எகெய்ன்...’ என்று மழையை மீண்டும், மீண்டும் வரவழைக்கின்றனவாம். தவிர, சகல ஜீவராசிகளும் வசிக்கிற ஒரு உயிர் பன்மய சூழலையும் (Biological Diversity) இந்த காடுகள் ஏற்படுத்துகின்றன. குறிஞ்சித் திணை வலியுறுத்துகிற மாதிரியான அந்த ஒரு சூழலில் நாம், நமது மேற்குத் தொடர்ச்சி மலைகளை விட்டு வைத்திருக்கிறோமா?

- இந்தக் கேள்விக்கான நேர்மையான பதிலில் இருக்கிறது இன்றைய இயற்கை பேரபாயங்களுக்கான நிஜமான காரணம்!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

1 கருத்து:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...