வெள்ளி, 28 அக்டோபர், 2016

ஊட்டி, கொடைக்கானலுக்கு ஒரு டிரிப்?

‘வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம், பிளாஸ்டிக் பொருள் தவிர்ப்போம்...’ என்று அரசாங்கமும், தன்னார்வ அமைப்புகளும் கரடியாகக் கத்திக் கொண்டிருக்கின்றன. எதற்காக? சுற்றுச்சூழல் சீர்கேடு தவிர்ப்பதற்காக! சுற்றுச்சூழலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை எழுதி வைத்து, கற்றுக் கொடுத்த உலகின் ஒரே நாகரிகம், தமிழ் நாகரிகம் என்று போன வாரம் பார்த்தோமில்லையா? ‘அப்படினா, மத்த நாகரிகமெல்லாம் கண்ணை மூடிகிட்டு இருந்துச்சா சார்?’ என்று மிகத் தேர்ந்த ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார் கம்பம் பக்கத்தில் இருக்கிற சுருளிபட்டி வாசகி ஜனனி.


சொல் அல்ல... செயல்!

Ecology... Ecology... என்று இன்றைக்கு உலகம் பாட்டாய் பாடுகிறதே... அந்த வார்த்தையே ஆங்கிலம் கிடையாது தெரிந்து கொள்ளுங்கள். ‘OIKOC’ என்கிற கிரேக்க சொல்லுக்கு வீடு, சூழல் என்கிற மாதிரியான அர்த்தம். ‘LOGY’ என்றால் இயல். இரண்டு சொல்லும் அப்டி, இப்டி ஒன்று சேர்ந்து Ecologyஆகி விட்டது (தகவல் உபயம்: விக்கிபீடியா Ecology - from Greek: οἶκος, "house", or "environment"). ஆனால், நண்பர்களே... பிற மொழிகளில் அப்படி ஒரு வார்த்தை உருவாகும் காலத்துக்கு முன்னதாகவே, நம்மொழியில் ‘திணையியல்’ என்கிற மகத்தான கோட்பாடு உருவாகி, அதுவும் செயல்பாட்டுக்கே வந்து விட்டது என்றால் ஆச்சர்யமாகவும், மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறதுதானே?

வருசநாட்டில் டிரெக்கிங்?

திணை என்ற தமிழ் சொல்லுக்கு வாழிடம் என்கிற மேம்போக்கான அர்த்தம் மட்டுமில்லை. அதற்கும் மேலே இருக்கிறது. வாழ்க்கை, இயங்குமுறை (ஒழுகலாறு) என்கிற ஆழமான அர்த்தங்களையும் தனக்குள்ளே வைத்திருக்கிறது திணை என்கிற சொல். அதாவது, ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசிக்கிற மக்கள் வாழ வேண்டிய வாழ்க்கை முறை, கடைபிடிக்கவேண்டிய இயங்குமுறைகள் திணையியலில் இருக்கிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் + பாலை என்று நமது திணையியல் கோட்பாடுகள் ஒரு இயங்குமுறையை வகுத்துக் கொடுத்திருக்கின்றன. காட்டில் வசிக்கிற மக்கள் எப்படியெப்படி நடந்து கொள்ளவேண்டும், கடலோரத்தில் இருக்கிறவர்கள் என்ன செய்யவேண்டும் என்று ஒரு நாகரிகம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே வகுத்து வைத்திருக்கிறது என்றால்... அதை, உலகின் ஒப்பற்ற நாகரிகம் என்று சர்வதேச அறிஞர்கள் கொண்டாடுவது, அப்பீலே இல்லாமல் நியாயம்தானே?


மது நாகரிகம் பிரித்துக் கொடுத்துள்ள திணையியல் மண்டலத்துக்குள் நுழைந்து ஒரு ரவுண்ட் அடித்துத் திரும்பலாமா?
அதோ, அங்கே மலையும், மலை சார்ந்த இடமாகத் தெரிகிறதே... அதுதான் குறிஞ்சி. ஊட்டி, கொடைக்கானல், வால்பாறை என்று வருடத்துக்கு இருமுறை டிரிப் அடிப்பீர்களே... அதெல்லாம் குறிஞ்சி ஏரியா. மலையை விட்டு கொண்டை ஊசி வளைவுகள் வழியாகக் கீழே இறங்கி வந்தால்... காடும், காடு சார்ந்த இடமுமாக கண்ணில் தட்டுப்படுகிறதா? யெஸ்... அது முல்லை. வருசநாட்டு வனப்பகுதி, சத்தியமங்கலம் காடு - இங்கெல்லாம் டிரெக்கிங் போயிருக்கிறீர்களா? இதெல்லாம் முல்லை வெளி.

உப்புக் கருவாடு!


ஞ்சாவூர், சோழவந்தான், கம்பம் பள்ளத்தாக்கு பக்கங்களுக்கு பஸ்சில் போனால்... கண்ணில் தட்டுப்படுகிற இடமெல்லாம் பச்சைப்பசேலென நெல் வயல் டாலடிக்குமே, பார்த்து சொக்கிப் போயிருக்கலாம். அது மருதம். வயலும், வயல் சார்ந்த இடங்களும் மருதத் திணை. சரியா?
மருத நிலப்பகுதியை குழந்தைகளிடம் காட்ட, போட்டோ பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். எல்லாம் பிளாட் போட்டு கொண்டிருக்கிறார்கள். அடுத்து, கடல். ராமேஸ்வரம், தூத்துக்குடி பக்கம் என்ட்டர் ஆனதுமே அடிக்கும் பாருங்கள் ஒரு வாசனை? உப்புக் கருவாடு...! பக்கத்து நாட்டு கடற்படை காரர்களிடம் அடிபடவென்றே பிறந்த பரிதாபத்துக்குரிய கடலோடிகள் வசிக்கிற பகுதி. கடலும், கடல் சார்ந்த அந்தப்பகுதிதான் நெய்தல்.

டைசியாக வருகிறது பாலை திணை. பாலை என்றதும் ஒட்டகம் திரிகிற தார் பாலைவனத்தை கற்பனை பண்ணிக் கொள்ளக் கூடாது. நியாயமாகப் பார்த்தால் பாலை என்று தனியாக ஒரு நிலப்பரப்பு நம் மண்ணில் இல்லை. குறிஞ்சி, முல்லை ஆகிய நிலப்பகுதிகள் கோடை வெப்பத்தால் கெட்டு, வறண்டு, காய்ந்து கிடக்கிற நிலைமையே பாலை. பாழ்பட்டுக் கிடக்கிற நிலப்பரப்பு பாலை. இது காடாகவும் இல்லாமல், மலையாகவும் இல்லாமல் கடும் வறட்சியுடன், வெப்பமாக இருக்கும். குறிஞ்சி, முல்லை நிலப்பரப்புகளில் உள்ள காடழித்து, மலை வளமழித்து வந்தால்... நீங்கள் இன்றைக்கு டிரிப் அடித்துத் திரும்புகிற ஊட்டியும், கொடைக்கானலும், வால்பாறையும் கூட, எதிர்காலத்தில் பாலையே!

ஓ... மை காட்!

யற்கையை இஞ்ச் பை இஞ்ச்சாக பிரித்து மேய்கிற அறிவியல் ஆற்றல் கொண்டது நம்மொழி என்கிறோம். இலக்கியங்களின் பக்கங்களில் அதற்கான ஆதாரங்கள் நிரம்பக் கிடைக்கிறது. சின்னதாய் ஒரு உதாரணம். செடியில் பூத்துக் குலுங்குமே... பூ, அதை வேறு என்னென்ன பெயரில் கூப்பிடலாம்? ‘பூவை, பூ என்றும் சொல்லலாம். புய்பம் என்றும் சொல்லலாம்’ என்று சினிமா டயலாக் சொல்வீர்கள். ஆனால் சகோஸ், உருவம் + பருவம் ஆகியவற்றின் அடிப்படையில் பூவை நமது தமிழ் எத்தனை வகையாக பிரித்து வகைப்படுத்தி வைத்திருக்கிறது என்று சொன்னால், ‘ஓ... மை காட்!’ என்று ஐரோப்பியர்களே ஆச்சர்யப்பட்டுப் போவார்கள். காத்திருப்போம்!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...