திங்கள், 24 அக்டோபர், 2016

மலரே... குறிஞ்சி மலரே...!

ருளைக்கிழங்கு சிப்ஸ் தின்று விட்டு வீசி எறிந்த பிளாஸ்டிக் குப்பைகளும், தேயிலைச்செடி போடுவதற்காக மலைச்சரிவுகளில் நம்மவர்களால் நாசமாக்கப்பட்ட பசுஞ்சோலைகளும்... ஜூராஸிக் பார்க் டைனோசர்கள் போல இப்படி திரும்பி வந்து தாக்கும் என்று நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம். எல் நினோ, கிரீன் ஹவுஸ் எஃபெக்ட்... என்று சுற்றுச்சூழலை நாம் எக்கச்சக்கமாய் கெடுத்து வைக்க... பெருமழையாகவும், கொடும் வறட்சியாகவும் அது தனது ஆட்டத்தை இப்போது ஆரம்பித்திருக்கிறது. என்ன செய்யலாம், எப்படித் தப்பிக்கலாம் என்று உலகம் இன்று கையைப் பிசைந்து நிற்கிறது.


எந்த மொழி... அந்த மொழி?

னால், நண்பர்களே... ஆயிரம், ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பாகவே ஒரு மொழி, தனது இலக்கியங்கள் வாயிலாக சூழலியல் பாதுகாப்பை வலியுறுத்தியிருப்பதை நீங்கள் அறிவீர்களா? விரிந்து, பரந்து கிடக்கும் பூமிப் பரப்பை சூழலியல் மண்டலங்களாக (Ecological Zone) அந்த மொழி பிரித்து வைத்திருப்பது உங்களுக்குத் தெரியுமா? அந்தச் சூழல் மண்டலத்தில் இருக்க வேண்டிய மரங்கள், செடிகள், தானியங்கள், விலங்குகள், உயிரினங்களின் முக்கியத்துவம், அவை ஒவ்வொன்றுக்குமிடையிலான உறவுச்சங்கிலியைப் பேணி பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து அந்த மொழி வலியுறுத்தி வைத்திருப்பதை நீங்கள் படித்திருக்கிறீர்களா?

து எந்த மொழி... என்ற கேள்வி நிச்சயம் உங்களுக்குள் எழாது என்று எனக்குத் தெரியும். சூழலியல் பாதுகாப்புக்கு அதி தீவிர முக்கியத்துவம் கொடுத்து, வலியுறுத்திய / வலியுறுத்துகிற அந்த மொழி, அது... நம்மொழி என்று கூறி, சட்டைக்குப் பின்பக்கம் இருக்கிற காலரை தைரியமாக உயர்த்தி பிடித்திருப்பீர்கள் என்றும் எனக்குத் தெரியும்.

Ecologyனா என்ன?

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விழிப்புணர்வு என்று பேசுவதும், கூட்டம் போடுவதும்தான் இப்போது டிரெண்ட். நல்ல விஷயம் என்றாலும், அதன் மெய்யான அர்த்தம் குறித்த புரிதலின்றி பலர் Ecology என்கிற வார்த்தையை இன்று பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் கூகுளில் Ecology அல்லது சூழலியல் என்று டைப் செய்து தேடிப் பாருங்கள். ‘‘Ecology is the scientific analysis and study of interactions among organisms and their environment. சூழலியல் என்பது, உயிர் வாழ்க்கையின் பரவல் பற்றியும், உயிரினங்களுக்கும் அவற்றின் இயற்கைச் சூழலுக்கும் இடையிலான இடைவினைகள் பற்றியும் அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்யும் துறையாகும்...’’ என்று ஆங்கிலத்திலும், தமிழிலும் விக்கிபீடியா விளக்கம் அளித்திருக்கும்.

னில், Ecology எனப்படுகிற சூழலியல் கோட்பாடுகள், நவீன அறிவியல் கண்டுபிடித்துத் தந்த விஷயமா என்கிற கேள்வி இங்கு எழுகிறது, இல்லையா? இன்றைய அறிவியல்காரர்கள் கண்டுபிடித்துச் சொல்வதற்கு பல பல ஆயிரம் ஆண்டுகள் முன்பாகவே, இதை விடவும் தெளிவாகவும், விளக்கமாகவும், ஆழமான அர்த்தங்களுடனும் தமிழ் தனது இலக்கியங்கள் வாயிலாக சூழலியல் குறித்து தனது மக்களுக்கு விழிப்புணர்வு செய்து கொடுத்திருக்கிறது.

குறிஞ்சி... முல்லை...!

க்கள் வசிக்கும் இடங்களை, அந்த நிலப்பகுதியின் இயற்கை அமைப்பை அடிப்படையாகக் கொண்டு பெரும் பிரிவுகளாகப் பகுத்துத் தந்திருக்கிறது தமிழ். திணைகள் பற்றி சின்ன வயதில் தமிழ் பாடத்தில் படித்திருக்கலாம். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் + பாலை என திணைகளின் வகைகளை மதிப்பெண் எடுப்பதற்காக மனப்பாடம் செய்து விட்டு மறந்திருப்போம். நிஜத்தில், தமிழ் இலக்கியங்கள் வலியுறுத்திய திணைகள் எனப்படுகிற வாழிட அறிவியல் கோட்பாடுகளை மட்டும் உலகம் கடைபிடித்திருக்குமேயானால்... இன்றைக்கு சர்வதேச நாடுகள் புவி வெப்ப உச்சி மாநாடுகள் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.

ரிப்பீட்டு...!

‘‘மாயோன் மேய காடுறை யுலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே...’’
(தொல்காப்பியம்: அகத்திணை 5)

- நிலங்களை, அதன் இயற்கை அமைப்பை அடிப்படையாகக் கொண்டு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என பெயர்சூட்டு விழா நடத்தியிருக்கிறார் தொல்காப்பியர். தொல்காப்பியம் பற்றி இந்தத் தொடரில் நிறையவே படித்து தெரிந்து வைத்திருக்கிறோம். தேவமைந்தன் இயேசு கிறிஸ்து அவதரித்து, உலகை ஆசிர்வதித்த காலத்துக்கும் பல நூற்றாண்டுகள் பழமையான நூல் அது. இப்போது, மேலே படித்த பாடலில் கடைசி இரு வரிகளை மட்டும் அண்டர்லைன் பண்ணி, திரும்பிப் படித்துப் பாருங்களேன்...

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே...
- அதாவது, தொல்காப்பியர் சார், மேற்படி சூழலியல் நிலப்பகுப்பு முறையை தனது சொந்த கண்டுபிடிப்பு என்று தம்பட்டம் அடிக்க வில்லை. மாறாக, ‘சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே’ என எழுதுகிறார். அப்டினா என்ன அர்த்தம்? ‘‘இது நம்ம சரக்கு இல்ல ராசா. ஏற்கனவே, நம்ம தாத்தாஸ் சொல்லி வெச்சதை... ஜஸ்ட் ஒரு தபா ரிப்பீட் பண்றேம்பா. அவ்ளோதான்...’’ என்கிறார்.

செம்மொழினா... சும்மாவா?

ண்ணைக் கட்டுற மாதிரி இருக்கா? தொல்காப்பியத்தில் சூழலியல் பகுப்பு முறைகள் இருக்கிறது என்று நாம் பெருமை பேசிக் கொண்டிருக்கிற இந்த பொன்னான தருணத்தில், தொல்காப்பியரே ‘இது எங்கள் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிற சமாச்சாரம்’ என்கிறாரே... அப்படியானால், தமிழ் சிந்தனை மரபின் துவக்கப்புள்ளி எங்குதான் மையம் கொண்டிருக்கிறது. தொல்காப்பியருக்கு எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இது எழுதப்பட்டது? எழுதியவர் யார்? எந்த நூலில் இப்படி எழுதி வைத்திருக்கிறார்....? அருமை சகோதர, சகோதரிகளே... தமிழை உலகின் மூத்த மொழி, உயர்தனிச் செம்மொழி என்றெல்லாம் வெற்று வார்த்தை அலங்காரமாக யாரும் சொல்லிக் கொண்டிருக்கவில்லை என்பது இப்போது லேசாக புரிய ஆரம்பிக்கிறதுதானே?

ந்தப் புரிதலுடன் இந்த வாரத்தை முடிக்கலாம். தமிழ் இலக்கியங்களில் கொட்டிக் கிடக்கிற சூழலியல் கோட்பாடுகளை அடுத்தவாரத்தில் இருந்து படித்து பிரமிக்கலாம். சரியா?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

1 கருத்து:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...