ஞாயிறு, 16 அக்டோபர், 2016

இனித்தால் கரும்பு; கடித்தால் சுரும்பு முதலில் ஒரு ஜி.கே. கேள்வி. சரியாக பதில் சொல்பவர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ், கடைசிப்பாராவில் காத்திருக்கிறது. கீதம், கீடம், சுரும்பு - இதெல்லாம் என்ன? ‘ஏதாச்சும் ஹின்ட் கொடுங்க சார்...’ என்று கேட்பவர்களுக்காக... கரும்பு - நாம் கடிப்பது. சுரும்பு - நம்மைக் கடிப்பது. போதுமா? சரியான பதிலுடன் காத்திருங்கள்.


ரஹ்மான் போட்ட பாட்டு!

பின்லாந்து தேசத்தின், ஹெல்சின்கி பல்கலைக்கழக (University of Helsinki) பேராசிரியர் அஸ்கோ பர்போலா பற்றி போனவாரம் படித்தோம். சிந்து சமவெளி குறித்து மிகப்பெரிய ஆய்வுகள் நடத்தி, அது திராவிட - தமிழ் நாகரிகமே என ஆதாரங்களுடன் உலகின் பார்வைக்கு உறுதி செய்திருப்பவர். இவரது ஆய்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு உலகின் பல திசைகளிலும் பல பேர் (நம்மைத் தவிர!?) தொடர்ந்து சிந்து சமவெளியை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். ‘சிந்து சமவெளியில் பேசப்பட்டது திராவிட மொழியே; இங்கு இருந்தது திராவிட நாகரிகமே’ என்று உறுதி செய்து பல்வேறு ஆராய்ச்சி புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார்.


கோயம்புத்தூரில் 2010ம் ஆண்டு ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை நடந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாடு மறந்திருக்காது. ‘செம்மொழியான தமிழ் மொழியாம்...’ என்று ஏ.ஆர்.ரஹ்மான் நவ நாகரிக தமிழ் இளைஞர்களுக்காக ஒரு பாட்டு போட்டாரே... அந்த செம்மொழி மாநாட்டில் இந்த அஸ்கோ பர்போலாவும் கலந்து கொண்டார். ‘சிந்து சமவெளி எழுத்துக்களுக்கான திராவிடத் தீர்வு’ என்கிற தலைப்பில் 35 பக்கங்கள் கொண்ட ஆங்கில ஆய்வுக்கட்டுரையை இந்த மாநாட்டில், அப்போதைய முதல்வர் கருணாநிதி முன்னிலையில் பர்போலா சார் சமர்ப்பிக்கிறார். அதில் நிறைய, நிறைய ஆதாரங்களை எடுத்து அவர் அடுக்கியது கண்டு, அரங்கில் குழுமியிருந்த நிறையப் பேர் ஆடிப் போனார்கள். தமிழ் மொழியின், கலாச்சாரத்தின் தொன்மை, பழமை கண்டு மெய்யாகவே பிரமித்துப் போனார்கள்.

சிந்து மொழி... நம்ம மொழி!

‘‘சிந்து சமவெளி நாகரிகம் அழிந்த போதே, அதன் மொழியும் அழிந்து விட்டதாகவே பலரும் நம்பினார்கள். ஆனால், இல்லை. மெசபடோமியா உள்பட பல இடங்களில் நடத்திய அகழாய்வுகளில் சிந்து வெளி எழுத்து வடிவங்கள் கிடைத்திருக்கின்றன. இந்த எழுத்துகளைக் கொண்டு நடத்திய ஆய்வுகளின் மூலம், அந்த நாகரிக காலம் கிமு 2600 முதல் 1900க்குள் இருந்திருக்கலாம் என முடிவுக்கு வரமுடிகிறது. ஆனாலும், அந்த எழுத்துகளைக் கொண்டு, அது என்ன மொழி என்று புரிந்து கொள்ளமுடியாத நிலை நீண்டகாலம் நீடித்தது...’’ - என்று நிறுத்தியவர், சிறிது இடைவெளி விட்டு தனது அகழாய்வு ஆதாரங்களை எடுத்துப் பிடித்த படியே தொடர்கிறார்.

‘‘சிந்துவெளி எழுத்துகளை படிக்க, புரிந்து கொள்ள உதவியாக இருந்தவை திராவிட மொழியே. திராவிட மொழியின் துணை கொண்டே சிந்து வெளி எழுத்துகளின் அர்த்தம் புரிந்து கொள்ள முடிந்தது. சிந்து வெளி எழுத்துகள் மட்டுமல்ல... கிமு 1100 துவங்கி கிமு 600ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வடமேற்கு நிலப்பகுதியில் புழங்கிய இந்தோ - ஆரிய எழுத்து வடிவங்களில் திராவிட மொழியின் தாக்கம் இருப்பதை அறிய முடிகிறது. அறிவியல் பூர்வமாக நடத்தப்பட்ட நீண்ட ஆய்வுகளின் வாயிலாக நாம் அறிய முடிவது என்னவென்றால், சிந்து சமவெளி பகுதி மக்கள் (ஹரப்பா) திராவிட மொழியைத்தான் பேசியிருக்க வேண்டும். சிந்து  சமவெளி மதங்களை பற்றி படிக்க பழந்தமிழ் இலக்கியங்கள் உதவிக்கு வருகின்றன...’’ மிக விரிவான ஆதாரங்களுடன் அன்றைய மேடையில், தமிழின் மிக ஆழமான தொன்மையை உலகிற்கு அறிவித்தார் அஸ்கோ பர்போலா.

திராவிட மொழி என்று குறிப்பிட்டு, தமிழ் மொழியின் பிரமாண்ட பெருமையை உலகமறியச் செய்த அவருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டிய தருணம் இது.

குத்துதே... குடையுதே...!

சொல்லுங்க சார்... சொல்லுங்க. சுரும்புனா என்ன என்று முதல் பாரா கேள்வியுடன், ஞாபகமாகக் காத்திருப்பவர்களுக்கு இதோ பதில்:

லுவலகத்திலோ... வேறெங்குமோ, செம குடைச்சல் கொடுப்பவர்களை ‘வண்டு மாதிரி கொடைச்சலா குடையறாண்டா... படுபாவி’ என்று புலம்புவோமே... யெஸ். அந்த வண்டுக்குத்தான் மேற்படி பெயர்கள். மதுபம், புள், அரி, அளி, ஞிமிறு, அறுபதம், பிரசம், பிருங்கம், சிலீமுகம், சஞ்சரிகம், சரகம், சுரும்பு, கீதம், மா, பிரமரம், கீடம்.... இதெல்லாமே மிஸ்டர் வண்டுக்கான தமிழ் பெயர்கள்.

ங்களை டார்ச்சர் செய்தது ஆண் வண்டு என்று உங்களால் உறுதி செய்யமுடியுமேயானால், அதை சுரும்பு, மதுகரம் என்று கூறலாம். மிஸ் வண்டாக இருப்பின் கரும்புள், தேன், கேசவம் என்று பெயர் சொல்லி கூப்பிடலாம்.

கோபப்படாதீங்க மேடம்!

டைசிப் பாராவில் ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்று சொல்லியிருந்தோம். மறந்திருக்காது. இதுதான் அது:
‘நிலவியல் கூறுகளின் அடிப்படையில் நாம வசிக்கிற பகுதியை ஐம்பெரும் திணைகளா நம்ம முன்னோர் பிரித்து வெச்சிருக்காங்களே... அதுபத்தி ஏன் எழுதலை சார்’ என்று ராஜபாளையத்தில் இருந்து வாசகி போனில் கோபப்பட்டார். அவரது கோபம் நியாயம்தான். பூமிப்பரப்பின் எந்தத் திசைக்குப் போனாலும், தமிழர்கள் செய்திருக்கிற இந்தப் பகுத்தாய்வுக்கு இணையான இன்னொன்றை இன்றைய தேதி வரைக்கும் நீங்கள் பார்க்க முடியாது. பார்க்கவே... முடியாது, அந்த மாபெரும், மெகா, பிரம்மாண்டமான சப்ஜெக்ட் அடுத்தவாரம்! ரைட்டா!?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...