வியாழன், 6 அக்டோபர், 2016

சிந்து சமவெளி... நம்ம ஏரியா?

‘கர்ர்... கர்ர்... கெர்ர்க்.... கெர்ர்ர்ரக்..’ - மழைகாலங்களில் இந்த டார்ச்சர் சத்தம் கேட்காமல் தப்பித்திருக்க முடியாது - தவளை. நிலத்திலும், நீரிலும் செல்லும் ஆற்றல் கொண்ட வாகனத்தை ஹோவர்கிராப்ட் (Hovercraft) என்று சொல்கிறோம், இல்லையா? தவளை என்பது ஒரு ஹோவர் கிராப்ட் மாடல் உயிரினம். தண்ணீரில் எவ்வளவு நேரமும் முங்கு நீச்சல் அடித்து கிடையாய் கிடக்கும். ‘ஜலதோஷம் பிடிச்சிக்கப் போகுது. வெளில வர்றியா... முதுகில ரெண்டு வைக்கவா...’ என்று அம்மா கத்தினால், தண்ணீரை விட்டு தரைக்கு வந்து, அங்கும் செம டேரா போடும். இந்தத் தவளைக்கு அரி, நுணலை, பேகம், நீகம், தேரை என்று தமிழ் இலக்கியங்களில் பெயர் இருக்கிறதாக்கும்!


ஹார்ட் பிராப்ளம்... நோ பிராப்ளம்?!

சின்ன வயதில் நண்டூருது, நரியூருது... விளையாடியிருக்கலாம். மறந்திருக்காது. அந்த விளையாட்டில் வரும் நண்டுக்கு நமது தமிழில் கர்க்கடகம், நள்ளி, கவைத்தாள், அலவன், குளிரம், களவன் என்று பெயர் இருக்கிறது. விஷத்தைப் பாய்ச்சி டார்ச்சர் பண்ணும் உயிரினங்களில் பாம்புக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது தேள் (Scorpion). தேள் கடி கொடுமையான வலியையும், துன்பத்தையும் தரவல்லது. மறுபக்கம், தேள் கடித்தால் ஆயுளுக்கும் இருதய நோயே வராது என்று ஒரு குரூப் கொளுத்திப் போட்டுக் கொண்டிருக்கிறது. ‘‘நியோயின்டிமல் ஹைபர்பிளேசியா பிரச்னை உள்ளவர்களுக்கு இருதயத்தின் ரத்த தமனிகளில்  (Artery) ரத்த ஓட்டம்
தடைபடும். ஹார்ட் அட்டாக் ஆபத்து வரும். தேளின் விஷத்தில் இருக்கும் மார்கடாக்சின் என்கிற விஷ(ய)ம், இருதயத் தமனியில் நியோயின்டிமல் ஹைபர்பிளேசியா பிரச்னை ஏற்படுவதை தடுக்கிறது. ஒருமுறை தேள் கடி வாங்கி விட்டால்... ஜென்மத்துக்கும் இருதயப் பிரச்னை இல்லை. பிரிட்டனின் லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி இப்படி தெரிவிக்கிறது,’’ என்று நண்பர் சொன்னார். அவர் மருத்துவம் படித்தவர் அல்ல. என்பதால், அவர் பேச்சை நம்பி தேள் கடி வாங்க முடியாது. தேளுக்கு தமிழில் நளிவிடம், துட்டன், தெறுக்கால் என்று பெயர்கள் இருக்கின்றன என்ற அளவுக்கு மட்டும் தெரிந்து கொள்ளலாம். சரியா?

தமிழி... தப்பா?

மிழ் பிராமி என்று திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிற தமிழி எழுத்து பற்றிய கடந்தவாரச் செய்தி நிறைய நண்பர்களை கடிதம் போடத் தூண்டியிருக்கிறது. ‘‘நாங்கள் படித்த, கேட்ட வரையில் தமிழ் பிராமி என்றுதானே சார் இருக்கிறது? தமிழ் பிராமி என்று அதை அழைப்பதில் என்ன தப்பு?’’ - ஆண்டிபட்டியில் இருந்து வின்சென்ட் செல்வம் போஸ்ட் கார்டில் கேள்வி வைத்து அனுப்பியிருந்தார்.

ட இந்தியப் பகுதிகளில் பிராமி எழுத்து கி.மு. 5ம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே புழக்கத்தில் இருந்தது நவீன ஆய்வுகளில் தெரிந்திருக்கிறது. தென் பகுதிகளில், அதாவது தமிழகப் பகுதியில் ஏறக்குறைய அதே காலத்தில் அல்லது அதற்கும் முன்பாக ‘ஏதோ ஒரு’ எழுத்து வடிவம் புழக்கத்தில் இருந்திருப்பதை உறுதி செய்திருக்கிறார்கள் தொல்பொருள், மொழியியல் அறிஞர்கள். அந்த எழுத்து இன்னதென்று அவர்கள் எழுதி வைக்கவில்லை. போனவாரம் நாம் பார்த்த ஹென்றி ஹீராஸ் பாதிரியார் தான், அது தமிழ் மொழியின் மூத்த வடிவம் என்று முதன் முதலில் ஆவணப்படுத்தினார். அதற்கு அவர் தமிழ் இலக்கியங்களில் இருந்து ஆதாரங்கள் எடுத்து வைத்தார்.

நன்றி... பாதர் ஹென்றி!

நீங்கள் யோசித்துப் பாருங்கள். தமிழ் வளர்ந்த பாண்டிய மண்ணில் தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று மூன்று சங்கங்கள் இயங்கி வந்ததை இலக்கியங்கள் வாயிலாகவும், ஆய்வுகள் மூலமாகவும் நாம் இன்றைக்கு அறிந்து கொள்கிறோம். இந்தச் சங்கங்களில் முத்தமிழ் நூல்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன என்றும் குறிப்புகள் இருக்கின்றன. அந்த நூல்கள் எந்த எழுத்து வடிவில் இருந்திருக்க முடியும்? பிராமி எழுத்து வடிவத்துக்கும் முந்தைய அந்த எழுத்து வடிவமே தமிழி என்று ஹென்றி ஹீராஸ் ஃபாதரின் ஆய்வுகளை மேற்கோள் காட்டி, அதற்குப் பின் வந்தவர்கள் உறுதி செய்கிறார்கள். அரிக்கமேடு, அரிட்டாபட்டி, முத்துப்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் தொல்பொருள் துறையினர் கண்டுபிடித்திருக்கும் தமிழி எழுத்துகள் கிறிஸ்து பிறப்பதற்கும் முந்தைய காலத்தைச் சேர்ந்தவை என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதை பிராமி எழுத்து வடிவம் என்று சொல்வது எப்படி பொருத்தமாக இருக்கும்?

ஒட்டகத்துக்கு என்ன வேலை?

ரி. இந்த தமிழி எழுத்துக்கும், சிந்து சமவெளி பகுதிக்கும் என்ன சம்பந்தம்? ஹென்றி ஹீராஸ் பாதிரியார் துவக்கி வைத்த புள்ளியில் இருந்து அதன் பிறகு வந்தவர்கள் தொடர் ஆய்வுகள் செய்தனர். ஆய்வு முடிவுகள், உலக நாகரிக வரலாற்றில் புதிய சில அத்தியாயங்களைச் சேர்த்தன. சிந்து சமவெளிப் பகுதியில் வாழ்ந்தவர்கள் தமிழ் தொல்குடி மக்களே என்று அறிவியல்பூர்வமாக உறுதி செய்துள்ளனர். ‘சிந்து சமவெளி நாகரிகம் பழந்தமிழர்களின் பண்பாட்டுத் தொட்டில்’ என்கிறார் ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ். அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து‘சிந்து சமவெளி பண்பாட்டின் திராவிட அடித்தளம்’ என்கிற பெயரில் அவர் வெளியிட்ட புத்தகம், பல புதிய உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.‘‘சிந்து சமவெளி மக்கள் யார்? தமிழர்களின் தோற்றம் என்ன? இந்த இரு கேள்விகளுக்கும் பதில்கள் ஒரே புள்ளியில் இருக்கின்றன. ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல...’’ என்கிறார் பாலகிருஷ்ணன்.

தற்கு ஏராளமான ஆதாரங்களை அடுக்குகிறார். அகநானூறு, தொல்காப்பியம் உள்ளிட்ட சங்க நூல்களில் ஒட்டகம் பற்றிய குறிப்புகள் பல இடங்களில் வருகிறது. யோசித்துப் பாருங்கள்... தமிழக நிலப்பரப்பில் ஒட்டகத்துக்கு என்ன வேலை? ஆக, வடபுலத்தில் இருக்கிற விலங்கை நமது இலக்கியம் பதிவு செய்திருப்பது உறுதியாகிறது. சிந்து சமவெளி நாகரிகத்தின் சான்றுகள், நமது தமிழ் பரப்பில் மிக அதிகமாக கண்டுபிடிக்கப்படுவதன் மூலமாக, சிந்துவெளி நாகரிகமும், தொல் தமிழ் நாகரிகமும் வெவ்வேறானது அல்ல என்று அவர் நிரூபிக்கிறார். அடுத்த வாரம் அஸ்கோ பர்போலா ஆய்வுகளைப் பார்க்கும் போது, இன்னும் ஒரு திரை விலகுவதை உங்களால் உணரமுடியும்.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...