திங்கள், 26 செப்டம்பர், 2016

அஞ்சலி.. அஞ்சலி... அஞ்சலிகை!

‘இந்தக் கொசுத் தொந்தரவு தாங்கலைடா சாமீய்...’ என்று ‘சிறந்த இரவு’ பயன்படுத்துகிறீர்களா? கொசுப் பிடுங்கல் உங்களையும், என்னையும் மட்டும் அல்ல. நம்ம தாத்தாவுக்கும், தாத்தாவுக்கும், தாத்தாக்களையும் கூட பாடாய்படுத்தி இருக்கவேண்டும் என்றே தோன்றுகிறது. பிறகு...? தமிழ் மொழியில் கொசுவுக்கு அத்தனை வித, விதமான பெயர்கள் இருக்கிறதாக்கும்.


பனை மரத்துல வவ்வாலு!


சகம், துள்ளல், நுசம்பு, முஞல், அசவல், சுள்ளான், உலங்கு, ஒலுங்கு - இதெல்லாம், இரவுகளில் டார்ச்சர் பண்ணும்  டங்காமாரி கொசுக்களுக்கு நம்மொழி சூட்டியிருக்கும் பெயர்கள். மலைப்பகுதிகளுக்கு போனால், இரவு நேரங்களி்ல் வித்தியாசமான ஒரு அனுபவம் கிடைத்திருக்கும்.
பொருட்காட்சிகளில் விற்கிற பத்து ரூபாய் டார்ச்லைட்டுகள் பறந்து போவது போல... மினுக் மினுக் என மின்னிய படியே ஒரு வஸ்து நம்மை கடந்து ‘அங்கிட்டும், இங்கிட்டும்’ பறக்குமில்லையா? அது, மின்மினிப் பூச்சி. அதற்கு கச்சோதம் என்று தமிழ் இலக்கியங்களில் பெயர் இருக்கிறது. ‘பனை மரத்துல வவ்வாலு...’ என்று கல்லூரி பசங்க கலாய்க்கிறார்களே... அந்த வவ்வாலுக்கு அஞ்சலிகை என்று பெயராக்கும். உழைப்புக்கு இன்றைக்கும் உதாரணம் காட்டப்படுகிற தேனீக்கு பிரசம், சரகம் என்ற பெயர்கள் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு, அடுத்த மேட்டருக்கு போலாம் ரைட்!

பார்சிலோனா ஃபாதர்!

‘‘மொகஞ்சதாரோவில் வாழ்ந்த மக்கள் பேசிய மொழியின் கூறுகள் இன்றைக்கு தமிழில் மட்டுமே காணப்படுகின்றன. அதனால், இன்றைக்கு உலகில் பேசப்படுகின்ற மொழிகளில் மிகவும் பழமையானது தமிழ் மொழியாகத்தான் இருக்கமுடியும். ஐரோப்பிய மொழிகளில் உள்ள சொற்கள் பலவற்றின் மூலங்கள் தமிழ் மொழியில் காணப்படுகின்றன....’’


- ஹென்றி ஹீராஸ் பாதிரியாரின் (Fr. Henry Heras) மேற்கண்ட கருத்துடன் 92வது வாரத்தை முடித்திருந்தோம். ஹீராஸ் பாதிரியார் தூக்கத்தில் திடீரென விழித்துக் கொண்டு இப்படிச் சொல்லி விடவில்லை. மிக நீண்ட, நெடிய ஆய்வுகள் செய்திருக்கிறார். அடிப்படையில் அவர் ஒரு தொல்லியல் ஆர்வலர், நிபுணர். ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் (ஒலிம்பிக்ஸ் நடந்தே...) 1888, செப்டம்பர் 11ம் தேதி பிறந்தவர். 1955, டிசம்பர் 14ம் தேதி பம்பாயில் (இப்போது, மும்பை) காலமாகிற நாள் வரைக்குமான தனது வாழ்க்கையில் தமிழர்களின், தமிழின் தொன்மை குறித்து எக்கச்சக்கம் ஆய்வு செய்து கண்டுபிடித்திருக்கிறார்.

சிந்து சமவெளி!

‘‘மனித குலம் தென்னிந்தியப் பகுதிகளிலேயே முதன்முதலில் தோன்றியிருக்க வேண்டும். கடல்கோள் சோகத்தின் போது, இங்கிருந்தே அவர்கள் மத்திய தரைக்கடல் பகுதிக்கும், உலகின் இன்னபிற நிலப்பரப்புகளுக்கும் நகர்ந்திருக்கிறார்கள். ஆப்ரிக்க பகுதிக்கு சென்றவர்கள் ஆப்ரிக்கர்கள் ஆனார்கள். சிந்து சமவெளிக்குச் சென்றவர்கள் திராவிடர்கள் ஆனார்கள். பலவகை மனித இனமாக அவர்கள் கிளை பிரித்து விரவிப் பரவினார்கள்...’’

- தனது ஆய்வுகளின் முடிவில் இப்படி எழுதியிருக்கிறார் ஹீராஸ் ஃபாதர். இவரது கருத்துடன் டாக்டர் ஹால், டாக்டர் மக்ளின், ஹெச்.ஜி.வெல்ஸ் போன்ற ஆய்வாளர்களும் உடன்போகிறார்கள். 1922ம் ஆண்டு இந்தியா வந்தவர், மும்பையி்ல் உள்ள செயின்ட் சேவியர்’ஸ் கல்லூரியில் வரலாற்று ஆசிரியராக பணியில் சேர்ந்தார். ‘இந்திய வரலாறு’ கற்பிக்கும் பணியை தேர்ந்தெடுத்ததற்கு காரணத்தை அவரே சொல்கிறார்... ‘இந்திய வரலாறை நான் ஆழமாக அறிய விரும்பினேன். அதனால், அந்தப் பாடத்தை தேர்ந்தெடுத்தேன்...’.

பின்னாளில் நெடிய கள ஆய்வுகளுக்குப் பிறகு, ‘சிந்து சமவெளி நாகரிகம் திராவிடர்களுடையது’ என்று 1938ல் அவர் முதன்முதலாக வரலாற்றில் ஆவணப்படுத்துகிறார்.

பிராமி... அப்டினா?

ன்றைக்கும் நீங்கள் தொல்லியல் / கல்வெட்டியல் வகுப்புகளுக்குச் சென்றால், அங்கு உங்களுக்கு விளக்கம் கொடுக்கிற நிபுணர்கள், குச்சிக் குச்சி ராக்கம்மா வடிவத்தில் பாறைகளில் பதிக்கப்பட்டிருக்கும் எழுத்துகளைச் சுட்டிக் காட்டி, ‘இது தமிழ் பிராமி எழுத்து’ என்று அறிமுகம் செய்வார்கள். அதென்ன தமிழ் பிராமி எழுத்து? இயேசு கிறிஸ்து அவதரிப்பதற்கு முந்தைய காலகட்டத்தில் புழங்கிய தமிழுக்கு இப்படி நாமகரணம் சூட்டியிருக்கிறார்கள். உண்மையில் தமிழ் பிராமி என்கிற பதம் மிகத் தவறானது என்கிறார்கள் மொழியியல் ஆய்வாளர்களில் ஒரு தரப்பினர். ஏன்?

பிராமி எழுத்து பற்றி இந்த இடத்திலேயே லேசாக ‘டச்’ பண்ணி விடலாம். அசோக சக்ரவர்த்தி தெரியும்தானே? இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களுள் மிக மூத்ததாகக் கருதப்பட்ட ஒன்று இந்த அசோகருடையது. இந்தக் கல்வெட்டு (சாசனம்) அசோகரின் பிராமி மொழியில் இருந்தது. மிக மூத்த கல்வெட்டு என்பதாலும், அது பிராமி வடிவத்தில் இருந்ததாலும், பிராமி மொழியே இந்திய மொழிகளின் தாய் என்று ஒரு கூட்டம் அச்சடித்து ஆவணப்படுத்தி விட்டது. என்பதால், இந்தியாவின் மூத்த மொழிகளின் பெயர்களுக்கு பின்பாக ‘பிராமி’ என்று குடும்பப் பெயர் போல இயல்பாகவே சேர்க்க ஆரம்பித்தார்கள்.

பிராமி அல்ல... தமிழி!

தற்குப் பிறகு நடந்த தொல்பொருள் அகழாய்வுகளில் அசோகர் காலத்துக்கும் மிக மூத்த, முந்தைய கல்வெட்டுக்கள் நிறைய (நமது தமிழ் மண்ணில் இருந்தும்) கண்டெடுக்கப்பட்டன. முற்கால தமிழ் எழுத்துக்கள் இந்த கல்வெட்டுக்களில் இருந்தன. குறிப்பாக, கொடுமணல், அழகன்குளம், மாங்குளம், அரசலூர், கருங்காலக்குடி, கலசக்காடு உள்ளிட்ட தமிழகப் பகுதி ஆய்வுகளில் கிடைத்த ஆதாரங்கள், தமிழ் எழுத்து வடிவம், பிராமிக்கும் முந்தையது, மூத்தது என உறுதி செய்தன. தமிழறிஞர்களும், தொல்லியல் ஆய்வாளர்களும் இந்த மூத்த எழுத்து வடிவத்தை தமிழ் பிராமி என்று அழைக்காமல், ‘தமிழி’ என்று பெயர் சூட்டி அழைக்கத் துவங்கினர்.

சிந்து சமவெளி நாகரிகத்துக்கும், இந்த தமிழி எழுத்து வடிவத்துக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா? ஆய்வுகள் தொடர்ந்தன. பின்லாந்து பேராசிரியர் அஸ்கோ பர்போலா (Asko Parpola) மிக நுணுக்கமாக ஆய்வு செய்து, வெளியிட்ட முடிவுகள் உலக மொழியியல் ஆராய்ச்சிப் பாதையில் புதிய வெளிச்சமிட்டன. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் அங்கீகரித்து வெளியிட்ட அஸ்கோ பர்போலாவின் ஆய்வுகள், தமிழின் தொன்மையை இன்றைக்கு உலக அரங்கில் ஆணித்தரமாக உயர்த்தி, உறுதி செய்திருக்கின்றன. அஸ்கோ பர்போலா... அடுத்தவாரம்!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...