வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

பாவம் கோட்டான்... பழியைப் போட்டான்!

‘‘இன்னிக்கு எல்லாமே ஏட்டிக்குப் போட்டியா நடக்குதே; காலையில எந்தக் கோட்டான் முகத்துல முழிச்சமோ...’’ என்று அலுவலக டார்ச்சர் தருணங்களில் அலுத்துக் கொண்டிருப்பீர்கள். அதென்ன கோட்டான்? அதற்கு அப்படி என்ன அமானுஷ்ய வல்லமை? கோட்டானைப் பார்த்தால், குளறுபடிகள் கன்ஃபார்மா? தமிழ் இலக்கியம் கோட்டான் பற்றி எதுவும் குறிப்பு வைத்திருக்கிறதா? தெரிஞ்சுக்க வேணாமா?


கட் அடிக்கக்கூடாது!

‘‘என்ன சார் ஆச்சரியமா இருக்கு? இன்னிக்கு சயின்ஸ்ல படிக்கிற கேலக்ஸி, மில்க்கி வே பற்றி 2 ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடியே நம்ம சங்க இலக்கியங்களில் இவ்வளவு டீடெய்லாவா எழுதி வெச்சிருக்காங்க. ரியல்லி ஆவ்ஸம்...’’ என்று கொடைக்கானலில் இருந்து ராஜிவ் நெடுமாறன் பேசினார்.  அதுக்குள்ள ஆச்சர்யப்பட்டா எப்படி சார்? இன்னும் நிறைய்ய்ய்ய்ய்ய்ய இருக்கு. அவ்வளவும் தெரிஞ்சுகிட்டு அதற்கப்புறம் மொத்தமாக ஆச்சர்யப்படலாம். சரியா?

சூரியனைப் பற்றிய ஆய்வுகள் இன்றைக்கு வரைக்கும் முடிந்தபாடில்லை. தினமும் புதிது, புதிதாக கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். சூரியனின் இந்த வியக்கத்தகு ஆற்றலின் ஊற்றுக்கண், அதன் மையப்பகுதியே என்பது மாடர்ன் சயின்ஸ் உறுதி செய்திருக்கிற விஷயம். அதைப் பற்றி விரிவாகப் பேசினால், சயின்ஸ் கிளாசை கட் அடித்து விட்டு எஸ்கேப் ஆகிற மாதிரி, இங்கேயும் ஒரு சிலர் துண்டை உதறிக் கொண்டு எழுந்து விடும் ஆபத்து இருக்கிறது. என்பதால், சுருக்க்க்க்கமாக...

புரோட்டா அல்ல... புரோட்டான்!


சூரியனின் மையப்பகுதி, அதாவது நட்டநடு சென்டர் பகுதி, நம்ம வீட்டு காஸ் ஸ்டவ் மாதிரி. ஒரே வித்தியாசம்... எந்த நேரமும் அணையவே அணையாமல் அனல் கக்கி எரிந்து கொண்டிருக்கிறது. பக்கத்தில் நெருங்க முடியாது. தீயினால் சுட்டபுண் கூட உள்ளாறும்... இது, இருக்கிற இடம் தெரியாமல் / தடம் தெரியாமல் ஆக்கி விடும். அவ்வளவு வெப்பம். மையப்பகுதியின் வெப்ப அளவு சுமாராக 15.7 மில்லியன் கெல்வின் (K). கற்பனையே செய்ய முடியாத படு பயங்கர வெப்ப ஆற்றல். எங்கிருந்து வருகிறது இவ்வளவு அசாத்தியமான வெப்பம்?

சூரியனின் இந்த வெப்ப ஆற்றல் அணுக்கரு புணர்ச்சி (Nuclear fusion) மூலமாக உருவாகிறது என்கிறார்கள் அறிவியல் சார்கள். அணுக்கரு புணர்ச்சி, புரோட்டான் - புரோட்டான் தொடர் விளைவு (Proton - Proton chain) என அழைக்கப்படுகிறது. இந்த செயல்பாட்டின் போது, ஹைட்ரஜன் அணுக்கள், ஹீலியமாக மாற்றப்படுகிறது. வெப்ப ஆற்றலுக்கான முக்கியக் காரணம் இது. இப்படி ஏற்படுகிற வெப்ப ஆற்றல், சூரியனின் மையப்பகுதியில் இருந்து படிப்படியாக மற்ற அடுக்குகளுக்கும் பரவுகிறது.

அகம் கனலின்னா... என்ன?

- இப்படியாக, அறிவியலில் விளக்கப்படுகிற சூரியன் பற்றி நமது எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான நற்றிணையில் ஒரு குறிப்பு இருக்கிறது. படித்துப் பாருங்கள். ஆச்சர்யப்பட்டுப் போவீர்கள்.
‘‘வான மூழ்கிய வயங்கு ஒளி நெடுஞ்சுடர்
கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிறு...’’ ( நற்றிணை 163)

ந்த பாடல் வரியில் ‘அகம் கனலி’ என்கிற வார்த்தைகளை அண்டர்லைன் பண்ணிக் கொள்ளுங்கள். அதென்ன அகம் கனலி? காஸ் ஸ்டவ் உதாரணம்தான். காஸ் ஸ்டவ்வை கனலி என்று சொல்ல முடியாது. குமிழைத் திருகி அணைத்து விட்டால், பூனை ஏறி படுத்துக் கொள்ளலாம். ஆகவே, அது கனலி அல்ல.

ன்றால், கனலி என்பது எது? தனக்குத்தானே கனலை உண்டு செய்து கொள்ளக் கூடிய ஆற்றல் கொண்ட ஒரு பொருளை கனலி எனலாம். நற்றிணை எழுதிய பொலவர், சூரியனை  ‘அகம் கனலி’ என்கிறார். அதாவது, மையப்பகுதியில் வெப்ப ஆற்றலை தனக்குத்தானே உற்பத்தி செய்து தகித்துக் கொண்டிருக்கிற சக்தியாக சூரியனை வர்ணிக்கிறார். தனக்குத்தானே எப்படி வெப்ப ஆற்றலை உற்பத்தி செய்ய முடியும்? நற்றிணை எழுதிய காலத்தில் சூரியன் பற்றிய அறிவியல் அறிவு எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்வது கடினமான காரியமல்ல. சூரியன் என்பது, மாபெரும் சக்தியாக, கடவுளாக, ஆற்றல் தேவனாக மட்டுமே பார்க்கப்பட்டிருக்கும். இல்லையா?

அதுக்கும் மேல...!

 ஆனால், சங்க இலக்கியங்கள் சூரியனை இப்படியாக வர்ணனைகள் மட்டுமே செய்து விட்டு விலகிப் போய் விடவில்லை. இன்னும் நெருங்கிச் சென்று அறிவுப்பூர்வமாகவும் விளக்கி எழுதியிருக்கின்றன.

‘அலங்குகதிர்க் கனலி’ - (புறநானூறு 35.6)
‘நெருப்பெனச் சிவந்த உருப்பவிர் மண்டிலம்’ - (அகநானூறு 31: 1)
‘தெறுகதிர்க் கனலி’ - (புறநானூறு  43:2; 397:24)
‘வெங்கதிர்க்கனலி’ - (புறநானூறு 41:6)
‘வீங்கு செலல் மண்டிலம்’ - (நெடுநல்வாடை 161:45)
‘தேயா மண்டிலம்’ - (பரிபாடல் 17:32)
‘வானிற விசும்பிற் கோள்மீன் சூழ்ந்த
விளங்குகதிர் ஞாயிறு’ - (சிறுபாணாற்றுப்படை 242-247)


- சங்க இலக்கியங்களில் எதை எடுத்துப் புரட்டினாலும், சூரியனைப் பற்றியும், அதன் அபரிமித ஆற்றல் பற்றியும் விளக்கங்களை விரிவாக பார்க்கமுடியும். சூரியன் மட்டுமா... டெலஸ்கோப் வைத்து இன்றைக்கு கண்டுபிடித்து வைத்திருக்கிற கோள்கள் பற்றியும், அவற்றின் இயங்கு நிலை, ஆற்றல் பற்றியும் நம்ம இலக்கியங்களில் இருக்கிறது.

ந்த வாரம், ரொம்ப சீரியஸா போகுதே... என்று உங்களில் யாராவது ‘கனலி’யாக மாறிவிடுகிற ஆபத்து இருப்பதால், கோட்டனை பார்க்கப் போலாமா? ஆந்தை குடும்பத்து பறவையான கோட்டானுக்கு தமிழில் குரால், உலூகம், கூகை, குடிஞை என்று பெயர்கள் இருக்கின்றன.  மற்றபடி, கோட்டான் அப்பிராணி. அதை பார்த்தால் காரியம் கெட்டுப் போகும் என்று பழி போட்ட புண்ணியவான் யாரென்று தெரியவில்லை. ஆந்தை, கோட்டான், கூகை - தோற்ற அமைப்புகளில் சிறு சிறு வித்தியாசங்கள் தவிர இவை மூன்றும் (ஏறக்குறைய) ஒன்றே. தலையில் கொம்பு அல்லது கோடு போல டிசைன் இருந்தால் அது கூகை. அந்தக் கூகையை கவுசிகம், ஊமன், பெரும்புள் என பெயர் சூட்டி அழைக்கிறது தமிழ் மொழி.

கூகை பற்றி பேசும் போது, சிலேடைக் கவிஞர் காளமேகப்புலவரின்
‘‘காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குகூ காக்கைக்குக் கொக்கொக்க கைக்குக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா...’’
- என்ற பாடலை குறிப்பிடாமல் நிறைவு செய்வது நிறைவாக இராது. படிப்பதற்கு, Tongue twister போல இருக்கும் இந்தப் பாடல் சொல்கிற கருத்து மிக உயர்வானது. காகத்துக்கு இரவில் கண் தெரியாது. ஆகவே, அது கூகையை ஜெயிக்கமுடியாது. கூகைக்கு பகலில் கண் தெரியாது. என்பதால், காகத்தை கவிழ்த்த முடியாது. எதிரியை வீழ்த்த வேண்டுமானால்... சரியான சமயத்துக்கு, சந்தர்ப்பத்துக்கு காத்திருக்க வேண்டும் என்கிற யதார்த்த வாழ்வின் ஆதார கருத்தைத்தான், மதுரை பக்கம் திருமோகூரில் பிறந்த நம்ம காளமேகம் சார், இப்படி ‘க்கக்கா குக்குக்கூ...’ என்று சுழற்றியடித்திருக்கிறார்.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...