ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

மெட்ராஸ்... நல்ல மெட்ராஸ்!

‘சூரியன் உதிக்கும் திசை கிழக்கு; மறையும் திசை மேற்கு...’ என்றுதானே இன்றைக்கும் பாடப்புத்தகத்தில் படித்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில், சூரியன் உதிப்பதும் இல்லை; மறைவதும் இல்லை. அது நிரந்தரமானது. நிலைத்து நிற்கிறது. அதை மையமாகக் கொண்டுதான் பூமியும், அதன் சகாக்களும் சுற்றிச் சுற்றி வட்டமடித்து வருகின்றன. பூமியின் இந்த நாலுகால் பாய்ச்சல் ஓட்டம்தான், நமக்கு சூரியனின் நகர்வாகத் தெரிகிறது. தூரத்தில் இருப்பதை பக்கத்தில் காட்டுகிற டெலஸ்கோப்புகள், கோயில் கடைகளில் கூட விற்கிற இந்தக்காலத்திலேயே நமது ‘அறிவியல் அறிவு’ இப்படி என்றால்... 2 ஆயிரம், 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிலைமை எப்படி இருந்திருக்கும்? யோசித்துப் பாருங்கள்!


சூரியக் குடும்பம்!
ரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நமது சங்க இலக்கியங்களைப் புரட்டிப் பார்க்கிற போது... வானியல் சூட்சுமங்களில் நம்மவர்கள் அப்படி ஒன்றும் லேசுப்பட்டவர்கள் அல்ல என்பது புரிகிறது. ‘சூரியன் உதிக்கும் திசை கிழக்கு; மறையும் திசை மேற்கு...’ என்றெல்லாம் அவர்கள் தவறாக பாடம் படித்ததுமில்லை; படிப்பித்ததுமில்லை. புறநானூறில் இருந்து ஒரு உதாரணம்...

‘‘செஞ் ஞாயிற்றுச் செலவும்
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும், என்று இவை
சென்று அளந்து அறிந்தோர் போல, என்றும்
இனைத்து என்போரும் உளரே; அனைத்தும்...’’ (புறநானூறு 30)

ஞாயிறு என்றால், சூரியன் என்பது தெரியும்தானே? பரிப்பு சூழ்ந்த மண்டிலம் என்பது இங்கு சூரியக் குடும்பத்தை குறிக்கிறது. சூரியனை மையமாகக் கொண்டே கோள்கள் இயங்கும் தத்துவத்தை இந்த புறநானூறு பாடல், ஜஸ்ட் லைக் தட்.... சொல்லிச் செல்கிறது. இந்தப் பாடலில் ‘அளந்து அறிந்தோர்...’ என்ற வார்த்தைகளைக் கவனியுங்கள். வானியல் நுணுக்கங்களை ஆய்வு செய்யக் கூடிய வல்லுனர்கள் என்பது இதன் பொருள். அந்தக் காலத்திலேயே அதற்கென்று ஒரு குரூப் இருந்திருக்கிறார்கள் என்பதும் புரிகிறதில்லையா?

‘‘விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து...’’ என பட்டினப்பாலை குறிப்பிடுகிற சேதியும் வான மண்டலம் பற்றியதே. ‘சும்மா அடிச்சு விடாதீங்க சார்...’ என்று காதில் புகை விட்டபடியே, யாராவது டென்ஷனாகிறீர்களா? சூரியன் மட்டுமல்ல, சூரியக் குடும்பத்தில் இருக்கிற பிற கோள்கள் பற்றியும் சங்க இலக்கியங்கள், நமது அறிவியல் புத்தகங்களைக் காட்டிலும் விளக்கமாகப் பேசுவதைக் கேட்டால், பிரமித்துப் போவீர்களாக்கும்!

ஸ்டிக்கர் ஒட்டினாரா கலெக்டர்?


மெட்ராஸ்... நல்ல மெட்ராஸ் - கலெக்டர் பிரான்சிஸ் வைட் எல்லிஸ் பற்றி பார்த்துக் கொண்டிருந்த விஷயம் பாதியில் நிற்கிறது. தமிழ் மேல் சாருக்கு ரொம்ப, ரொம்ப பிரியம் - அதுவும் திருக்குறள் மீது ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப்ப்ப்ப்ப - என்று கடந்தவாரங்களில் படித்தோமில்லையா? வாய்ப்பு கிடைக்கிற நேரத்தில் எல்லாம் திருக்குறளை மேற்கோள் காட்டுவது எல்லிஸ் சாருக்கு பிடித்தமான விஷயம்.

ப்போது சென்னையாக இருக்கிற அப்போதைய மெட்ராஸில் 1818ல் படு பயங்கர தண்ணீர் பஞ்சம். குளிப்பதற்கு விடுங்கள்... குடிப்பதற்கே திண்டாடும் நிலை. அப்போது சார் தான் ஜில்லா கலெக்டர். ஆக் ஷன் பிளானை ஆரம்பித்தார். நகரில் ஏறத்தாழ 27 இடங்களில் தாகம் தீர்க்கும் கிணறுகள் அமைத்தார். கிணறு தோண்டி விட்டு, அதில் எல்லிஸ் என்று அவர் பெயர் போட்டு கல்வெட்டோ, ஸ்டிக்கரோ அடித்தாரில்லை. மாறாக, பொருத்தமான திருக்குறளை மேற்கோள் காட்டி கல்வெட்டுகள் பதித்தார்.

மகாலுக்கு வந்து பாருங்க!

ராயப்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோயில் பகுதியில் இன்றும் சாட்சியாக இருக்கிற ஒரு கிணற்றின் கைப்பிடிச் சுவரில் இப்படி ஒரு கல்வெட்டை கண்டுபிடித்து ஆவணப்படுத்தியிருக்கிறது தொல்லியல் துறை. அந்தக் கல்வெட்டில்...
‘‘இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணு நாட்டிற் குறுப்பு’’
-  என்ற திருக்குறள் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது. இந்தக் கல்வெட்டு மட்டுமல்ல... திருக்குறளை மேன்மைப்படுத்தி எல்லிஸ் பதித்த நிறைய கல்வெட்டுகள் மதுரையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் மகால் வரலாற்று அருங்காட்சியகத்தில் இன்றைக்கும் இருக்கிறது. சந்தேகமிருப்பவர்கள், பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

எப்படி வந்தது எல்லிஸ் நகர்?

மிழ் மொழியையும், தமிழ் மக்களையும் அதிகம் நேசித்த எல்லிஸ், நம்மாட்கள் சுலபமாக கூப்பிடுவதற்கு வசதியாக, தனது பெயரையும் எல்லிசன் என்று தமிழ் வண்ணமாக்கிக் கொண்டார். சென்னை நாணய சாலையின் பொறுப்பாளராக இருந்த காலத்தில், திருவள்ளுவர் உருவம் பதித்த தங்க நாணயங்கள் வெளியிட்டும் பெருமை சேர்த்திருக்கிறார்.  திருக்குறளை மொழி பெயர்த்ததோடு நிறுத்திக் கொள்ளவில்லை. தமிழின் யாப்பிலக்கணம் பற்றியும் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். தமிழ் பற்றி இவர் ஆங்கிலத்தில் எழுதிய நிறைய விஷயங்கள், சமீபத்தில் கண்டறியப்பட்டிருக்கிறது. மதுரையில் எல்லிஸ் நகர் ஏரியா கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தமிழை நேசித்த இவரின் பெயரை, புகழை இன்றைக்கும் நினைவுகூர்ந்து கொண்டிருக்கிறது எல்லிஸ் நகர்.

லெக்டராக இருந்தோமா... அத்தனை ஆடம்பர, சொகுசு வாழ்க்கையையும் அனுபவித்தோமா என்று இல்லாமல், தமிழுக்காக வாழ்ந்த, தமிழாகவே வாழ்ந்த பிரான்சிஸ் வைட் எல்லிஸ், உடல்நலக்குறைவு காரணமாக 1819 மார்ச் 10ம் தேதி ராமநாதபுரத்தில் காலமானார். அப்போது அவருக்கு வயது... வெறும் 41. உலகின் திசைகளுக்கு தமிழின் பெருமைகளைக் கொண்டு செல்கிற முயற்சியில் ஈடுபட்டிருந்த எல்லிஸின் திடீர் மறைவு, தமிழுக்கான இழப்பாக, அப்போதைய தமிழறிஞர்களால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவருக்கு மரியாதை செலுத்தி இந்த வாரத்தை நிறைவு செய்யலாமா?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...