திங்கள், 4 ஜூலை, 2016

சுவாதியும்... சாதியும்!

முகநூலில் நட்புக்கான கோரிக்கை அனுப்புவது. சேர்த்ததும், புரொஃபைல் போட்டோவை பார்த்து விட்டு, ‘தலையில அந்த மஞ்சக் கலர் க்ளிப் சூப்பர். பூசணிக்கா சுத்திப் போடச் சொல்லுங்க...’ என்று பனிக்கட்டி வைப்பது. நேரில் சந்திக்கிற வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு, ‘அ - நான்கு’ பேப்பரில் மடக்கி எழுதி, காதல் கடுதாசி கொடுப்பது. ‘போடா பொறுக்கி....’ என்று மறுத்துத் திட்டினால்... அரிவாளை எடுத்து ஒரே போடாக போட்டு விட்டு டிரெய்ன் பிடித்து எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்! - எம்மாம் பெரிய தப்பு? ‘இந்தக் காலிப் பயலுவல எல்லாம் சும்மா விடக்கூடாதுங்கோ...’ என்று வாட்ஸ்அப், முகநூல்களில் (மட்டும்) தமிழகம் கொந்தளிக்கிறது. தப்புத்தான். சும்மா விடக்கூடாதுதான். சும்மா விட்டால், கடையில் பேனா வாங்குகிறது போல ஆளாளுக்கு அரிவாள் வாங்கிக் கொண்டு கிளம்பி விடுவார்கள். கழுத்தறுத்தான் பையன் விவகாரத்தை ஒரு கோடிப் பேருக்கும் மேல் பேசி, எழுதி, விவாதித்து விட்டார்கள்... என்பதால், அவனை விட்டு விடலாம். அதுக்கும் மேல போலாம். ரைட்டா?


நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ‘சதக்’ சம்பவம் நடந்ததும், தீப்பிடித்தது போல செய்தி நாடெங்கும் பரவியது. ஒபாமா, கேமரூன் நாட்டுக் காரர்கள் தவிர, ஒட்டுமொத்த இந்திய தேசமும் டிவியில் கவலைப்பட்டு விவாதித்தது. மறுநாளும்... அதற்கடுத்த நாட்களும் நாளிதழ்களில் முதல் பக்கச் செய்தி இதுதான். டிவிகளில் தலைப்புச் செய்திகள் இதுவேதான். முகநூல்களில் நிறையப்பேர் கண்ணீர் விட்டிருந்தார்கள். மெய்யாகவே, மிகப்பெரிய ஒரு துயரம் அது. இளம்பெண்களுக்கும், மாணவிகளுக்கும் இந்த நாட்டின் பொதுவெளிகளில் என்ன மாதிரியான பாதுகாப்பு இருக்கிறது என்று எச்சரிக்கை மணி அடித்த சம்பவம் அது. எத்தனை கனவுகளோ....? வாழ்க்கையின் பட்டுப்பூச்சி வயதில், அந்தப் பெண் ரயில்நிலைய பிளாட்பாரத்தில் கிடந்த கோரக் காட்சி, பெற்றவர்களுக்கும், மற்றவர்களுக்கும் ஏற்படுத்திய திகில் நிரப்பிய சோகம்... வெகுநாளைக்கு மறக்காது. சாதி, மத, இன வேறுபாடின்றி அத்தனை பேரும் துக்கித்தார்கள். கண்டனம் தெரிவித்தார்கள்.

ப்படிப்பட்ட ஒரு தருணத்தில் முகநூலில் ஒரு பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தப் பதிவு, (உள்ளது உள்ளபடியே) இப்படியாக இருந்தது:

‘‘ஸ்வாதி என்ற பிராமணப்பெண் கொடுரமாக பிலால் மாலிக் என்ற மிருகதால் வெட்டி கொல்லப்பட்டுள்ளார்
தமிழகத்தில் மயான அமைதி நிலவுகிறது
யாருமே கண்டனம் தெரிவிக்கவில்லை
இதே ஸ்வாதி தலித்தாக இருந்திருந்தால் ராகுல் ஓடி வந்திருப்பான்
ஊடங்கங்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து ஒப்பாரி வைத்திருக்கும்
தலித் இயக்கங்கள் மறியல் போராட்டம் என பொங்கியிருப்பார்கள்
 திராவிட அரசியல் பொறுக்கிகள் தாண்டவம் ஆடியிருப்பார்கள்
காம ரேட்டு கயவர்கள் மாதர் சங்கங்கள் ஓலமிட்டிருப்பார்கள்
என்ன செய்வது இறந்தது பிராமணபெண்
இதை வைத்து அரசியல் செய்தால் எந்த லாபமும் இருக்காது
செத்தவனிலும் ஜாதி பார்க்கும் இந்த அவலம் எப்போது மாறும் ???
இறைவா இந்த தமிழகத்தை எப்படி தான் மாற்றப்போகிறாயோ  ???’’

- இவை, முகநூலில் வெளியாகி சர்ச்சைகளையும், பரபரப்புகளையும் ஏற்படுத்திய கடிதத்தின் வரிகள். முகநூலில் மேற்படி கடிதத்தை எழுதியவர் அல்லது அதை பரப்பியவர் லேசுப்பட்ட ஆளில்லை. தேர்ந்த நாடகக்காரர். சினிமாவின் உச்சத்தில் இருக்கிறவருக்கு உறவுக்காரர். இன்னும், மிகப்பெரிய அரசியல், அதிகார செல்வாக்குக் கொண்டவர். அவ்வளவுதானே தவிர, நிச்சயமாக சிபிஐ, எப்பிஐ, சிஐஏ மாதிரியான புலனாய்வு அமைப்புகளுடன் தொடர்புடையவர் அல்லவே அல்ல. என்பதால், ‘பிலால் மாலிக் என்கிற மிருகம் வெட்டிக் கொன்றது’ என்று தன்னிச்சையாக புலனாய்வு செய்து, போலீசுக்கும் முன்பாக கருத்து பரப்பியது, நியாயப்படியே தர்மமான செயல் அல்ல.


சொல்லப்போனால், கடைந்தெடுத்த அக்கிரமத்தனம் என்றே சொல்லலாம். ஒரு கொலை நடந்திருக்கிறது. கொல்லப்பட்டவர் இளம்பெண். கொடூரமான கொலை. சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்த மக்களின் பெருங்கவலை, கோபமாக மாறி நிற்கிறது. இந்தக் கோபத்தை அப்படியே, சிறுபான்மை சமூக மக்களின் பக்கம் மடை மாற்றுகிற செயல் இல்லையா இது? குற்றவாளி யார் என்று தெரியாமல் போலீசார் திசைக்கொரு பக்கம் திண்டாடிக் கொண்டிருக்கையில், இன்னார் தான் குற்றவாளி என்று ஒருவர், அதுவும் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கிறவர் பகிரங்கமாக தகவல் வெளியிடுகிறார் என்றால்... அவர் மீது சட்டம் என்ன விதமான நடவடிக்கையை எடுத்திருக்கிறது? டாஸ்மாக் தப்பு என்று பாடியதற்கே தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது. எனில், இரு சமூக பெரு மோதலுக்கு வழிவகுக்கிற வகையில் கருத்து வெளியிட்டவர் மீது என்ன விதமான நடவடிக்கை எடுக்கப்பட்டது?

‘தமிழகத்தில் மயான அமைதி நிலவுகிறது, யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை’ என்று பதிவெழுதியவர், இங்கு தமிழகத்தில் தான் இருந்தாரா அல்லது நாசாவின் ஆராய்ச்சிக்காக சந்திர மண்டலத்துக்குச் சென்றிருந்தாரா என்று விசாரித்துச் சொல்லவேண்டியது ஊடகக்காரர்களின் கடமை. ‘இதே ஸ்வாதி தலித்தாக இருந்திருந்தால்...’ என்கிற வரியும், அதற்குப் பிந்தைய வரிகளும் வக்கிரத்தில் வார்த்தெடுத்தவை. நிச்சயமாக, ஒரு நல்ல மனநிலை உள்ள, சமூக இணக்கத்தை விரும்புகிற மனிதரின் வார்த்தைகளாக இவை இருக்க வாய்ப்பே இல்லை. ‘திராவிட அரசியல் பொறுக்கிகள், காம ரேட்டுகள்...’ என்றெல்லாம் அடுத்தடுத்த வரிகளைப் படிக்கிற போது, டாஸ்மாக் கடைத் தெருவின் ஓரமாக, குப்பையில் புரண்டு கிடந்த படியே வருகிற, போகிறவரையெல்லாம் வம்பிழுத்துத் திட்டுகிற ‘குடிமகனுக்கு’ம், பதிவெழுதியவருக்கும் பெரிய வித்தியாசம் எனக்குப் புலப்படவில்லை.

ப்படிப்பட்ட வக்கிர மனிதர்களின் செயல்பாடுகள் அதிகரித்து வருகிற இந்த வேளையில்... சமூக அக்கறை கொண்ட, நடுநிலையாளர்கள், மனிதநேய பண்பாளர்களின் பணிகள், முன்னெப்போதையும் விட மிக அதிகமாக இந்த சமூகத்துக்குத் தேவையாக இருக்கிறது. இதுபோன்ற விஷம் தோய்ந்த கருத்துகளில் மக்கள் மயங்கி சென்று விடாமல், பாதை தவறி விடாமல் இருக்க, நாம் முன்பை விடவும் தீவிரமாக செயலாற்ற வேண்டியிருக்கிறது.

னால், நடக்கிற சில விஷயங்கள் மகிழ்ச்சிக்குப் பதில் கவலையையே அதிகம் சேர்க்கிறது. அருவாப் பையன் சிக்கியதும், தென்மாவட்டத்துச் சிங்கங்கள் நிறையப் பேர் டேட்டா கார்டு டாப்-அப் போட்டுக் கொண்டு வாட்ஸ்அப்புக்கு வந்து விட்டார்கள். ‘தலித் இளவரசன், தலித் கோகுல்ராஜ், தலித் சங்கர், தலித் விஷ்ணுப்பிரியா என்று போடத்தெரிந்த ஊடகங்களுக்கு, சுவாதியைக் கொன்றவனை தலித் ராம்குமார் என்று ஏன் போட இயலவில்லை?’’ என்று ‘அறச்சீற்றத்தை’ வெளிப்படுத்தியிருந்தார்கள்.

வர்களுக்கு இந்தியாவின் இன்றைய சமூகச் சூழல் தெரியவில்லை. இளவரசனும், கோகுல்ராஜூம், சங்கரும் தலித்தாக பிறந்த அந்த ஒற்றைக் காரணத்துக்காக கொல்லப்பட்டார்கள். வேறு ஜாதியில் பிறந்திருந்து காதலித்திருந்தால், இன்னேரம் பெண்டாட்டி, குழந்தைகளுடன், வாரக்கடைசியில் என்ன சினிமா பார்க்கலாம் என்று அவர்கள் திட்டமிட்டுக் கொண்டிருந்திருப்பார்கள். சுவாதி விஷயம் அப்படி அல்லவே? அந்தப் பெண்ணின் கொலையில் ஜாதி எங்கே வருகிறது? நாட்டில் நடக்கிற கொலை, கொள்ளை, முறைகேடுகளுக்கெல்லாம் ஜாதி பார்க்க வேண்டுமானால்... கிரானைட் வெட்டியவன், மணல் அள்ளியவன், அரசியலுக்கு வந்து பொதுச்சொத்துகளை திருடி சிறை சென்றவன், கூலிப்படைகள் வைத்துக் கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்கிறவன், இந்திய வங்கிகளில் இருந்ததெல்லாம் வாரிச் சுருட்டி எடுத்துக் கொண்டு லண்டனுக்கு ஓடியவன்... இப்படி ஆளாளுக்கு ஜாதி தேடிக் கொண்டிருக்க வேண்டும்.

னால், அது அறிவார்ந்த நமக்கான வேலை அல்ல. ஜாதி தேடிக் கொண்டிருப்பது கல்யாண புரோக்கர்களுக்கான வேலை. இன்னும் எத்தனை நாட்களுக்கு நாம் புரோக்கர்களாக இருக்கப் போகிறோம்? சிந்திக்கலாம் வாங்க!

- பூனைக்குட்டி -

3 கருத்துகள்:

  1. தலைப்பே கட்டுரையின் விஷயத்தை முழுமையாக விளக்கி விட்டது. நகைச்சுவை வேடம் கட்டுபவருக்கு பின்னால் இருக்கும் வில்லத்தனத்தை தோலுரித்துள்ளது பாராட்டுக்கள் ஸார். இக்கட்டுரையின் வழியாக சில விஷயங்களைத் தொடலாமே என நினைக்கிறேன்.
    ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பார்கள். ஆனால், பிரபலங்கள் சொன்னால் உடனடியாக அது வைரலாக பரவி விடும். இன்றைய அரசு குழாய்களில் வழங்கும் குடிநீரை அப்படியே குடித்தால் அனைத்துவித நோய்களும் தாக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.அதை சுடவைத்து குடிக்க வேண்டும் என்பதை கூட ஒரு நடிகர் வந்து திரையிலோ, தொலைக்காட்சியிலோ சொன்னால் தான் நமக்கு புரிகிறது.அந்த அளவிற்கு பிரபலங்களின மீதான ஈர்ப்பை அரசும், நிறுவனங்களும் நன்றாகவே புரிந்து வைத்திருக்கின்றன.
    திரையில் தோன்றும் நடிகன் எந்த சாதி, மதம் என யாரும் பார்ப்பதில்லை. ஏனெனில் கலைகளுக்கும், கலைஞனுக்கும் ஏது சாதி? பாமரனுக்கு கலையும், இலக்கியமும் தன் மொழியில் இருந்து விட்டால் போதுமானது.
    தமிழகம் கால காலமாக மொழி, மதம் கடந்தே பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது. மலையாளி என அறியப்பட்ட மக்கள் திலகம் எம்ஜிஆரை இன்றளவும் எதிரிகளும் நேசிக்கிறார்கள். கலையின் வாயிலாக அனைத்து தரப்பு மக்களின் நெஞ்சங்களில் குடி கொண்டவர் அவர். கர்நாடகாவில் பிறந்த சிவாஜிராவ் கெய்க்வாட்டை தமிழகத்தின் சூப்பர் ஸ்டாராக ஏற்றுக்கொண்டோம். இதில் எங்கேயிருக்கிறது சாதி?
    ஆனால், சுவாதியின் மரணத்தையொட்டி நடிகர்கள் ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.வி.சேகர் போன்ற நபர்கள் பிற மத, சாதியினரை பற்றிய பேச்சுகளைப் பகுத்துப் பார்க்க வேண்டிய அவசியத்தில் உள்ளது.
    திரை மற்றும் நாடக மேடைகள் மூலம் இன்று வரை கலைஞனாய் அறியப்பட்ட ஒய்ஜிஎம்க்குள் உள்ள சாதி அழுக்கு, சுவாதியின் மரணத்தின் மூலம் வெளிப்பட்டிருக்கிறது. தானாடா விட்டாலும் தசையாடும் என்பதை நிரூபித்திருக்கிறார். சபாக்களில் நடத்தப்படும் இவரது நாடகத்தை அவாக்கள் மட்டும் பார்ப்பதில்லை. முத்தின கத்திரிக்காய் போல முகம் வைத்துள்ள இவரது திரை நகைச்சுவையை அம்பிகள் மட்டும் பார்த்து ரசிக்கவில்லை. அவரது சகலையின் வீட்டில் பெண் எடுத்துள்ள சூத்திரசாதி தனுசை இவர் எப்படி இதுவரை முகமலர்ச்சியோடு வரவேற்கிறார் என்ற கேள்விகளும் எனக்கு எழுகிறது. எஸ்.வி.சேகர் என்ற நபர், தொலைக்காட்சியில் கூட தனது அடையாளம் தெரிய வேண்டும் என பூநூலை வெளியே காட்டுபவர். உள்ளாடைகள் தான் உங்கள் இந்து மதம் இருக்கிறதென்றால் அதையும் அவிழ்த்துக்காட்ட தயங்காதவர்.
    கலை என்ற வடிவம் கொண்ட மனிதர்களின் முகத்தில் பவுடர் பூச்சுக்களைத் தவிர வேறு எந்த சாதி, மத பூச்சுகள் தேவையற்றது. ஏனெனில் கலை வடிவமென்பது மதம் கடந்தது. சாதி கடந்தது. ஒரு ஓட்டுக்குள் சுருண்டு கொள்ளும் நத்தையின் அளவைப் போன்றதே சாதியின் கட்டுமானம். தன்னை மட்டுமே பாதுகாத்துக் கொள்ள பாடாதபாடு படும் எதுவும் சமூகம் குறித்து அக்கறை கொள்ளாது. அப்படியே ஒய்ஜிஎம், எஸ்.வி.சேகர் வகையறாக்களும்.
    சுவாதியையும், சாதியையும் பேசுபவர்களைப் பற்றி சத்தமாக பேச வேண்டிய தருணம் இது.
    - ப.கவிதா குமார், மதுரை.

    பதிலளிநீக்கு
  2. அற்பர்கள். இவர்கள் இன்று வாழும் சொகுசு வாழ்வே இவர்கள் பேசவே/தொடவே அருவருப்பு காட்டி இவர்களால் தாழ்த்தபட்ட பல்லாயிரம் ஏழை சாதி மக்களால் கொடுக்க பட்டது. அவர்கள் தரும் பணம் மட்டும் மணக்கும். இவர்கள் மட்டுமல்ல சாதி பார்க்கும் யாரும் மன நோயாளிகளே. இதே செயலை லோக குரு செய்த போது மூடி கொண்டு இருந்தவர்கள்.

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...