திங்கள், 27 ஜூன், 2016

வாள் நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த...

‘‘சார், நம்ம ஊர் நாகர்கோவில் பக்கம், தெரிசனங்கோப்பு. சின்ன வயசில, ஊரைச் சுத்தி நீர்நிலைகள், ஓடைகள், வாய்க்கால்கள் அவ்வளவு இருக்கும். இப்பவும் இருக்கு. ஆனா, சின்ன வயசில பார்த்ததில கால்வாசி கூட இப்ப இல்லை. தமிழர்கள், நீர்நிலை வகைகளை 47 பிரிவா பிரிச்சி வெச்சிருக்காங்கனு படிச்சதும் ரொம்ப ஆச்சர்யமா இருந்திச்சி சார். சின்ன வயசில முங்கிக் குளிச்ச எங்கூர் குளமெல்லாம் நினைவுக்கு வந்திடுச்சி...’’ - தற்போது திண்டுக்கல்லில் செட்டிலாகியிருக்கும் வாசகர் விஸ்வேஸ்வரன் தொடர்பில் வந்தார். நீர்நிலை தொடர்புடைய விஷயங்களை 47 பெரும் பிரிவுகளாக பகுப்பதை உலகின் வேறெந்த சமூகமாவது செய்திருக்குமா - அதுவும் 2 ஆயிரம், 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் - என்று என் கூகுளறிவுக்கு எட்டிய வரையில் ஆராய்ந்து பார்த்தேன். சான்ஸே இல்லை. நமது முன்னோர்களின் சமூக அறிவியல் அறிவுக்கு லட்சம் நோபல் கொடுத்தாலும்... கட்டுபடியாகாது!


நம்ம குடும்பம்... சூரிய குடும்பம்
திநவீன தொலைநோக்குக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட காலமாக இருந்தாலும் கூட, வான சாஸ்திரம் என்பது இன்றைக்கு வரைக்கும் புதிர்தான். சூரியக் குடும்பத்தில் மொத்தம் எத்தனை கோள்கள் (Planets) என்று இன்றைக்கு வரைக்கும் அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. சூரியக் குடும்பத்தின் மெம்பர்ஷிப் கூடுகிறது. அறிவியல் வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கிற இந்தக் காலத்திலேயே இப்படி. மக்களே, பால்வெளி மண்டலம் (Galaxy) பற்றியெல்லாம் 2 ஆயிரம்,  3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம்மாட்கள், போகிற போக்கில் பாடி வைத்திருக்கிறார்கள் என்று சொன்னால்... நம்புவீர்களா? ஆனால், சாமி சத்தியம் சாமீயோவ்!

‘‘வாள் நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த
இளங் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து
விளங்கு பொற்கலத்தில் விரும்புவன பேணி,
ஆனா விருப்பின், தான் நின்று ஊட்டி...’’ - (சிறுபாணாற்றுப்படை 238 - 245)


பாடலைப் படிச்சிட்டீங்களா?  இசைக்கருவிகளை இசைத்து, பாடல் பாடுகிற பாணர்கள் ஒன்றாகக் கூடியமர்ந்து உணவு உண்கிற காட்சி இங்கு குறிப்பிடப்படுகிறது. எப்படிச் சாப்பிடுகிறார்களாம்?
பெரிய தங்கத் தட்டிலே (பொற்கலத்தில்) உணவு இருக்கிறது. அந்த பொன் தட்டைச் சுற்றி காய்கறி, கூட்டு, ஊறுகாய், அவியல், துவையல்... என்று எக்ஸ்ட்ரா ஐட்டங்களை கிண்ணங்களில் நிரப்பி வைத்திருக்கிறார்களாம். இது பார்ப்பதற்கு எப்படி இருக்கிறது? அங்கேதான் வெளிப்படுகிறது புலவரின் அறிவியல் அறிவு. விண்ணில் இருக்கிற சூரியனைச் சுற்றி கோள்கள் இருக்கிறதே (வாள் நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த  / இளங் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து) அதுபோல உணவு இருக்கிற தட்டைச் சுற்றி கிண்ணங்கள் இருக்கிறதாம்.

டெலஸ்கோப் தந்தது யார்?

சிறுபாணாற்றுப்படை என்பது சங்க இலக்கியங்களில் முக்கியமான பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று. கிறிஸ்து பிறப்பதற்கும் முன்பாக எழுதப்பட்டவை பத்துப்பாட்டு நூல்கள். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாகவே, வானில் சூரியனைச் சுற்றி கோள்கள் வட்ட வடிவில் நிற்பது புலவருக்கு எப்படித் தெரியும்? யார் அவருக்கு டெலஸ்கோப் கொடுத்தார்கள்? புலவர், இதை ஒரு பெரிய அறிவியல் கண்டுபிடிப்பாக எழுதி பீற்றிக் கொள்ளவில்லை. பாடலில் சுவை சேர்ப்பதற்காக, சும்மா ஒரு வர்ணனையாக இந்த மெகா அறிவியல் மேட்டரை போகிற போக்கில் வீசி விட்டுப் போகிறார்.

தண்ணீரைத் தேடி...

நீர்நிலைகளில், பார்க்க வேண்டியது இன்னும் 40 பாக்கி இருப்பதால், சிறுபாணாற்றுப்படையில் இருந்து விலகி, இந்தப்பக்கம் வரலாம்.


8) அருவி (Water Falls): ‘குற்றால அருவியில குளிச்சது போல் இருக்குதா...?’ - அதேதான். மேலே இருந்து (மலை முகடுகளில் இருந்து) ஜேராக கீழே கொட்டினால்... அருவி!

9) ஆறு / நதி (River): நதியெங்கே போகிறது... கடலைத் தேடி - மலைப்பகுதிகளில் தோன்றி, நிலப்பகுதியில் பாய்ந்து, கடலில் போய் கலப்பதுதான் நதி என்று நான் அறிமுகப்படுத்தினால்... இது கூடத் தெரியாதா என்ன என்று, அடிக்க வருவீர்கள்.


10) கடல் (Sea): மணிரத்னம் படம் அல்ல. பூமிப் பரப்பில் ஏறத்தாழ 71 சதவீதத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருக்கிற மெகா நீர்நிலை. அதாவது, சமுத்திரம்.


11) இலஞ்சி (Reservoir for drinking and other purposes): இலைஞ்சி என்றும் சொல்லுவார்கள்.  ஏரி மாதிரி மெகாவாக இல்லாமல், சின்னதாக தாகம் தீர்க்க / பிற பயன்பாடுகளுக்கு பயன்படுகிற நீர்நிலை.



12) கண்மாய் (Irrigation Tank): தமிழகத்தின் தென்மாவட்டங்களில் மிகுதியாக இருக்கிறது. குடிநீர் மற்றும் வேளாண் தேவைக்காக அமைக்கப்படுகிற மெகா நீர்நிலை. இயற்கையாக அமைந்ததும் உண்டு. செயற்கையும் உண்டு.


13) கால்வாய் (Suppy channel to a tank): ஏரி, குளம், கண்மாய் வெட்டினால் போதுமா? அதற்கு தண்ணீர் எங்கிருந்து வரும்? நீர்நிலைகளுக்கான நீர்வழிப்பாதையே கால்வாய். படகு, கப்பல் போக்குவரத்தும் சில கால்வாய்களில் நடப்பது உண்டு.



14) கால் (Channel): ஒரு நீர் வழியில் இருந்து மற்றொன்றுக்கு நீர் பாய்ந்து செல்கிற சிறு வழி.


15) கலிங்கு (Sluice with many Venturis): ஏரி, கண்மாயில் தண்ணீர் சேர்த்து வைத்தாயிற்று. இந்த நீர்நிலைகள் நிரம்பி வழிந்து உடைப்பெடுத்து விடாமல் இருப்பதற்காக கற்கள், பலகைகளால் அமைக்கப்பட்ட (அடைத்துத் திறக்கும் படியான) நீர் வெளியேறும் அமைப்பு.



16) குட்டம் (Large Pond): கொஞ்சம் பெரிய சைஸ் குளம். அதாவது, பெரிய குட்டை.


17) கட்டுங்கிணக் கிணறு (Built-in -well): கிணறுகளில் நிறைய வகை இருக்கிறது. இது ஒரு வகை. சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவை கொண்டு சுவர் அமைத்துக் கட்டிய கிணறு.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

1 கருத்து:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...