ஞாயிறு, 12 ஜூன், 2016

குயில் போல பொண்ணு; மயில் போல பேச்சு!?

‘பொண்ணு ச்ச்சும்மா மயில் மாதிரிடா...’ என்று பள்ளி, கல்லூரிகளில் நம்ம பசங்க பேசக் கேட்டிருக்கலாம். அழகான பெண்களை (மட்டும். ஆண்களை அல்ல!) வர்ணிக்க மயில்களை நாம் காலம், காலமாக உதாரணத்துக்கு அழைக்கிறோம். அதாவது, பார்த்ததும் கவர்ந்திழுக்கிற / சொக்க வைக்கிற / மீண்டும், மீண்டும் பார்க்கத் தூண்டுகிற ஒரு ஈர்ப்பு அங்கே குடி கொண்டிருக்குமாம். மயில்கள் நிஜத்தில் அழகுதான். ஆனால், அருமை சகோதரர்களே... தோகை விரித்த படியே உங்களுக்கு ‘சிக்னல்’ காட்டுவது ஆண் மயிலன்றி, பெண்ணல்ல. உண்மையில், பெண் மயிலை ஒருமுறை பார்த்தீர்களானால்... அப்புறம் உங்கள் தோழியை மயில் என்று வர்ணிக்க சின்னதாக ஒரு தயக்கம் உங்களுக்கு வரலாம். கொஞ்சம் பெரிய சைஸ் கோழி போல இருக்கும். என்ன... கழுத்தில் கொஞ்சம் கலர் பெயிண்ட் இருக்கும். அவ்ளோதான்!


பாடு மயிலே... பாடு!


ழகு மயிலுக்கு தமிழில் எக்கச்சக்கமாக பெயர்கள் இருக்கிறதாக்கும். மஞ்ஞை, மயூரம், சிகி, கலாபி, நவீரம், கேகயம், பீலி, ஞமலி, சிகாவளம், தோகை, ஓகரம், சிகண்டி, பிணிமுகம் - இதெல்லாம் மிஸ் / மிஸ்டர் மயிலுக்கு தமிழில் இருக்கிற பெயர்கள். மயிலின் அழகுக்கு அழகு சேர்க்கிற அந்தப் பீலி இருக்கிறதே... அதற்கு தோகை, சந்திரகம், தொங்கல், தூவி, சரணம், கூந்தல், சிகண்டம், கலாபம், கூழை என்று பெயர். என்னதான் அழகாக இருந்தாலும், அதன் அழகில் கரியைப் பூசியது போல, குரலைக் கொடூரமாகப் படைத்து விட்டது இயற்கை. மயில் வாயைத் திறக்க ஆரம்பித்தால்... ‘சபாஷ்! பாடு சாந்தா... பாடு...’ என்று தாளம் போட்டபடி கேட்கத் தோணாது. தகர டப்பாவில் கூழாங்கற்களைப் போட்டு சுழற்றியடிப்பது போல, ஒரு ஒலி எழுப்பும் பாருங்கள்... அதற்கு அகவல், ஏங்கல், ஆலல் என்று பெயர்.

யாருமற்ற தனிமையில்...!


யிலுக்கு அப்படியே நேர் எதிர் குயில். பார்க்க கொஞ்சம் அப்டிக்கா... இப்டிக்கா... இருந்தாலும், குரலைக் கேட்டால்... எப்.எம்.மில் பேசுகிற இளம்பெண்களின் குரல் போல, சொக்கி விழுந்து விட நேரிடலாம். அவ்ளோ இனிமையாக இருக்கும். மலைப்பள்ளத்தாக்குகளின் யாருமற்ற தனிமையில், அதிகாலை நேரங்களில் ஒற்றைக் குயில் எழுப்புகிற ஏகாந்தமான பாடல் கேட்பவர்கள் பாக்கியவான்கள். மனதுக்குள் பட்டாம்பூச்சிகளை பறக்க விடுகிற வல்லமை குயிலின் ‘காந்தர்வ’க் குரலுக்கு உண்டு. இந்தக் குயிலை தமிழில் கோரகை, பிகம், கோகிலம், களகண்டம், பரபுட்டம் என்று அழைக்கலாம். அழகான குரலுக்கு சொந்தக்காரப் பெண்களை (ஒரு பாலிசி போடுங்களேன்... என்று செல்போனில் கூப்பிடுவார்களே!) குயில் என்று கூப்பிட்டால், குயில் கோபித்துக் கொள்ளாது.

கவே பிரதர்ஸ்... அழகான பெண்களை மயில் என்றும், அழகான குரலைக் கொண்ட பெண்களை குயில் என்று கூப்பிடலாம். மாற்றிக் கூப்பிட்டால் ஜாக்கிரதை! உதை விழலாம்!!

ஞானப்பாட்டு:

ரோப்பிய நாடுகளில் இருந்து சமயம் பரப்புகிற நோக்கம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு தமிழகம் வந்த பலர், தமிழ் மொழியின் ஆளுமைக்காட்பட்டு, தமிழ் வளர்த்த கதை நமக்குத் தெரிந்ததுதான். அந்த வரிசையில் ஜோகன் பிலிப் ஃபப்ரீஷியஸ் (Johann Phillip Fabricius, ஜனவரி 22, 1711 - ஜனவரி 23, 1791) முக்கியமானவர். ஜெர்மன் நாட்டுக்காரர். கிறிஸ்துவ சமய நெறிகள் பரப்புவதற்காக 1740ல் தரங்கம்பாடி வந்திறங்கினார். அங்கிருந்து சென்னை சென்று செட்டிலானவர், தமிழ் கற்றுத் தேர்ந்தார். தமிழ் இலக்கியங்களில் மனதைப் பறிகொடுத்த ஃபப்ரீஷியஸ், 9 ஆயிரம் சொற்கள் கொண்ட தமிழ் - ஆங்கில / ஆங்கில - தமிழ் அகராதிகளை தயாரித்து வெளியிட்டார். தமிழ் இலக்கண நூல், ஜெர்மானிய மொழியில் உள்ள பக்திப்பாடல்களை தமிழில் மொழிபெயர்த்து ஞானப்பாட்டு உள்ளிட்ட  நூல்களை வெளியிட்டார்.

னால், இன்றளவுக்கும் அவர் பெயர் நிற்கிறது என்றால், வேறொரு மெகா காரணமிருக்கிறது.
கிறிஸ்தவ வேதாகமங்களை தமிழில் சீகன் பால்க் உருவாக்கி அளித்ததும், அவர் மிச்சம் வைத்ததை அவருக்குப் பிறகு பெஞ்சமின் ஷூல்ஸ் வெளியிட்டு சிறப்புச் செய்ததையும் தொடரின் முந்தைய அத்தியாயங்களில் படித்திருக்கிறோம். கொஞ்சம் கடின நடையில் இருந்ததால், அடித்தட்டு மக்களிடம் வேதாகமம் சென்று சேர்வதில் சிக்கல் இருந்தது. என்பதால், எளிமையான தமிழில், பைபிள் தயாரிக்கும் பணிக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் ஃபப்ரீஷியஸ். 1752ல் துவங்கி, கிட்டத்தட்ட 20 ஆண்டுகள்... 1772ல் தமிழ் வேதாகமத்தை தயாரித்து முடித்தார்.

புர்யல நைனா...

கூடுமான வரைக்கும், எளிமையான / அனைவருக்கும் புரிகிற தமிழில் இந்த மொழிபெயர்ப்பு அமைந்திருந்தது. எழுதி முடித்ததும், மெத்தப் படித்த பண்டிதர் முதல் பாமரர் வரை அத்தனை பேரையும் அழைத்து வந்து, அவர்களுக்கு படித்துக் காட்டியிருக்கிறார் ஃபப்ரீஷியஸ். ‘‘இத்து... சர்யா புர்யலையே... நைனா...’’ என்று கூட்டத்தில் யாராவது தலையைச் சொறிந்தால், சற்றும் தயங்காது அந்த வரிகளை மாற்றி இன்னும் எளிமைப்படுத்தியிருக்கிறார். முதலில் புதிய ஏற்பாடும், பிறகு பழைய ஏற்பாடும் மொழிபெயர்த்தார். வேதாகம மொழிபெயர்ப்பு சரித்திரத்தில், ஃபப்ரீஷியஸின் மொழிபெயர்ப்பு இன்றளவுக்கும் GOLDEN VERSION என்று குறிப்பிடப்படுகிறது. ஆறுதலும், தேறுதலும் தேவைப்படுகிற நேரங்களில் இன்று நாம் படிக்கிற தமிழ் வேதாகமம், ஃபப்ரீஷியஸ் மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டே உருவானது. நாம் புரட்டுகிற தமிழ் பைபிளின் பக்கங்களுக்குள், ஃபப்ரீஷியஸ் உழைப்பு பாதுகாப்பாக பொதிந்திருக்கிறது.

1791, ஜனவரி 23ல் தனது உழைப்பை நிறுத்திக் கொண்ட ஃபப்ரீஷியஸின் கல்லறை சென்னை, வேப்பேரி ரிதர்டன் சாலையில் உள்ள தூய மத்தியாஸ் ஆலயத்தில் (St. Matthias Church) இருக்கிறது. அங்கு சென்று மரியாதை செலுத்துவதன் மூலம், தமிழுக்கு அவர் ஆற்றிய மகத்தான சேவைக்கு நமது பதில் நன்றியை பதிவு செய்யலாம்!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

5 கருத்துகள்:

  1. குயிலின் குரலை விட விளக்கம் இனிது

    பதிலளிநீக்கு
  2. தமிழ் மிகவும் அழகு. நல்லதோர் பதிவு

    பதிலளிநீக்கு
  3. மயில் அகவனல கேட்டது உண்டா? பெண் மயிலும் அழகு தான் நன்றாக கண் மற்றும் காதுகளை பயன்படுத்தவும்.

    பதிலளிநீக்கு
  4. அருமை செய்தி ஆசிரியர் அவர்களே

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...