சனி, 4 ஜூன், 2016

பனி வாடை வீசும் காற்றில், சுகம் யார் சேர்த்ததோ?

ழைப்புக்கு உதாரணம் எழுதச் சொன்னால் (நமது பெயர் தவிர்த்து!?) நாமெல்லாம் தயங்காமல் எழுதுகிற பெயர் எறும்பு. இல்லையா? ஹார்டு ஒர்க் என்கிற ஆங்கில / கடின உழைப்பு என்கிற தமிழ் வார்த்தைக்கு இது, நடமாடும் அர்த்தம். அந்த எறும்புக்கு பிபீலிகை, பிலஞ்சுலோபம் என்று தமிழில் பெயர் இருக்காம். துட்டன், தெறுக்கால், நளிவிடம், விருச்சிகம் - இதெல்லாம், வாயில் இரண்டு பக்கமும் டேஞ்சர் வெப்பன் வைத்திருக்கிற தேளின் பெயர்கள். நேராக ஓடுகிறதா; சைடாக ஓடுகிறதா என்று குழம்ப வைக்கிற நண்டுக்கு - நள்ளி, களவன், அலவன்,குளிரம், கர்க்கடகம், கவைத்தாள், வானரப்பகை என்கிற பெயர்கள் இருந்தது என்ற புரிதலுடன் நாம், இந்தவார மெயின் சப்ஜெக்ட்டுக்குப் பயணப்படலாம்.


காத்தடிக்குது... காத்தடிக்குது!ண்டை தமிழர்களின் அறிவியல் ஆற்றல் குறித்து நூலகங்களில் உள்ள (கரப்பான் கரும்பிய) புத்தகங்களை புரட்டுவதன் வாயிலாகவும், தேர்ந்த தமிழார்வலர்களிடம் பேசுவதன் மூலமாகவும் அறிந்து கொள்ளக்கூடிய விஷயங்கள் மெய்யாகவே பிரமிக்க வைக்கின்றன.
அந்தளவுக்கு, மிகத்தேர்ந்த அறிவியல் விஷயங்களை, அன்றாட வாழ்க்கையின் நிகழ்வுகளுடன் இயல்பாக பொருத்தி, இயற்கையோடு அவர்கள் இயைந்து வாழ்ந்திருக்கிறார்கள். சிவகங்கை பகுதியைச் சேர்ந்த தமிழார்வலர் ஒருவர் தொலைபேசி தொடர்பில் வந்து காற்றின் வகைகளைக் கூட, அவற்றின் இயல்புக்கு ஏற்ப வகை பிரித்து வைத்திருக்கும் நமது முன்னோர்களின் திறம் பற்றி பேசி வியந்தார். இந்த வாரம் அதுதான் மேட்டர்!

குடை எடுத்தாச்சா?

* கிழக்குத் திசையில் இருந்து வீசுகிற காற்றுக்கு கொண்டல் என்று நமது முன்னோர்கள் பெயர் சூட்டியிருக்கிறார்கள். கிழக்கு திசைக்கு குணக்கு என்கிற பெயரும் தமிழில் உண்டு. என்பதால், கிழக்கில் இருந்து வீசுகிற காற்று கொண்டல். இதை மழைக்காற்று என்றும் எழுதி வைத்திருக்கிறார்கள். ‘‘கொண்டல் மாமழை பொழிந்த...’’ என்று புறநானூறு (34, 22)பாடுகிறது. ‘கொண்டல் என்னும் காற்று நண்பனோடு கூடல் மாநகரம் புகுந்தான் கோவலன்’ என்கிறது சிலம்பு. இன்னும் பல சங்க இலக்கியங்களிலும் கொண்டல் பற்றி இருக்கிறது. மழைக்கான காற்று இது. கொண்டல் வீசினால் (வானிலை அறிக்கை சொல்லாவிட்டாலும் கூட), குடை எடுத்துப் போக மறக்கக்கூடாது சகோதர சகோதரீஸ்!

ஆடிக்கச்சான்... பாடி அடிக்கும்!

* மேற்கில் இருந்து வீசுகிற காற்றுக்கு கச்சான் என்று பெயர். மேற்கு திசைக்கு குடக்கு என்றொரு பெயர் இருக்கிறது. என்பதால், அங்கிருந்து வீசுவது கச்சான். மேற்கு பக்கம் உள்ள மலைப்பகுதிகளில் குளிர்ந்த காற்றாக வீசி, மழையைப் பொழிந்தப் பிறகு நம்மூரில் வறண்ட கச்சான் காற்றாக இது வீசுகிறது. என்பதால், இந்தக் காற்றை கோடை என்றும் சொல்கிறார்கள். கச்சான் காற்றை குறுந்தொகை, ‘‘கோடை இட்ட அடும்பு இவர் மணற்கோடு ஊர நெடும்பனை குறியவாகும்...’’ என்கிறது (குறு : 248). வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் வீசுவதே கச்சான் என்று தெரிகிறது. கிராமத்துப் பக்கம் போனால், ‘‘வைகாசிக் கச்சான் பொய்யாமல் வீசும், ஆடிக்கச்சான் பாடி அடிக்கும், ஆவணிக் கச்சான் புரட்டி அடிக்கும்...’’ என்று வெற்றிலை இடித்துக் கொண்டே பாட்டிமார்கள் சொல்லக் கேட்டிருக்கலாம்.

ஊதக்காத்தும் அடிச்சிருச்சு...!

* வடக்கில் இருந்து வீசுகிற காற்று வாடை. ‘‘ஊதக்காத்து வீசுது. உள்ள வாடா...’’ என்று உங்கள் பாட்டி சின்ன வயதில் காதைப் பிடித்து இழுத்திருப்பார்கள், ஞாபகம் இருக்கும். அந்த ஊதக்காத்துதான் வாடை. ஃபிரிட்ஜைத் திறந்தது போல காற்று செம ஜில்லென்று இருக்கும். வாடுதல் / வாட்டுதல் என்ற சொற்கள் வாடையை குறிப்பனவாக இருக்கலாம். ‘‘அரும்பனி கலந்த அருளில் வாடை...’’ என்று ஐங்குறுநூறு (479) போன்ற சங்க கால இலக்கியங்களும் ‘‘மாலையில் யாரோ மனதோடு பேச... மார்கழி வாடை மெதுவாக வீச... / புத்தம் புது காலை பொன்னிற வேளை... பனி வாடை வீசும் காற்றில்  சுகம் யார் சேர்த்ததோ...’’ என இந்தக்கால சினிமா இலக்கியங்களும் எழுதி வைத்திருக்கின்றன.

ஃபர்ஸ்ட் கியர் காற்று

* இனி, தெற்கு திசை மட்டும்தானே பாக்கி இருக்கிறது. அந்தத் திசையில் இருந்து அடிக்கிற காற்று தென்றல். இதைப் பற்றி எழுதாத இலக்கியங்கள், எழுத்தாளர்கள், கவிஞர் பெருமக்களை காண்பது அரிது. ‘‘தென்றல் தழுவியது போல...’’ என்று உவமை போட்டு எழுதினால்தான், மேட்டரில் ஒரு கிக் கிடைக்கும் என்று இன்றைக்கும் விடாப்பிடியாக இருக்கிற கவிஞர்களும் உண்டு. நான்கு காற்றுகளில், தென்றலுக்கு மட்டும் அப்படி என்ன பிரையாரிட்டி? காரணம் இருக்கிறது. மேற்படி நான்கில், ரொம்ப மென்மையானது தென்றல். வருடிக் கொடுப்பது போல, இதமான சுகம் தருவதால், இது செம ஸ்பெஷல். தெற்கு திசையில் இருந்து மலை, வனம், ஆறு என பல்வேறு பகுதிகளைக் கடந்து வருவதால், இந்தக் காற்று மிகவும் மெதுவாக, ஃபர்ஸ்ட் கியரில்தான் வரும். ஜிலுஜிலுவென நமது உடலை தழுவிக் கொண்டு செல்கையில்... கற்பனை ச்ச்ச்சும்மா பிச்சுகிட்டு ஊற்றெடுக்கும்.

தென்றலே... என்னைத் தொடு!

சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள், ‘‘வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்...’’ (சிலம்பு - 2, 24) என்கிறார். அதாவது, பல வித மலர்களின் நறுமணங்களை அள்ளி அழைத்து வருகிற தென்றல், கூடவே மலர்களில் இருக்கிற வண்டுகளையும் சேர்த்தே அழைத்து வந்து விடுகிறதாம்! சினிமாக்காரர்களும் தென்றலை சும்மா விட்டார்களில்லை. செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா, நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த இளம் தென்றலே, தென்றல் காற்று மஞ்சள் வானம் உனக்காகவே நான் வாழ்கிறேன், பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல், தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் - என்று எக்கச்சக்கமாக எழுதித் தள்ளியிருக்கிறார்கள்.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...