செவ்வாய், 14 ஜூன், 2016

தி கன்ஜூரிங் 2 - அப்பாலே போ சாத்தானே...


பேய் படம் எடுப்பது ஒரு கலை (இன்றைக்கு நம்மாட்களில் சிலர் செய்து கொண்டிருப்பது பக்கா கொலை). அச்சுறுத்துவதும்,  அலற விடுவதும், படம் முடிந்ததும் நேராக போய் ஒரு எக்கோ டெஸ்ட் எடுத்து பார்க்க வைப்பதும் அல்ல பேய் படங்களின் இலக்கணம். உணர வைத்தலே சிறந்த படைப்புக்கான இலக்கணம். ஒரு சினிமாவை, அதன் கதையின் போக்கின் வழியே உடன் பயணித்து, உணர்ந்து, ரசித்து, பின்னர் விடுபட்டு திரையரங்கில் இருந்து அதை அசை போட்டபடி வெளியே வருவோமேயானால்... அது நல்ல சினிமா. ‘தி கன்ஜூரிங் - 2’ அந்த இலக்கணங்களுக்கு நெருக்கமாய் இருக்கிற ஒரு சினிமா.


2013ல் வெளியாகி பேய்ப்பட ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று உலகமெங்கும் வசூலை அள்ளிக் குவித்த ஹாலிவுட் படம் ‘தி கன்ஜூரிங் (The Conjuring)’. அதன் இரண்டாம் பாகம் ‘தி கன்ஜூரிங் 2 (The Conjuring 2)’ உலகமெங்கும் ஜூன் 10ம் தேதி (2016) வெளியாகியிருக்கிறது. முதல் படத்தை இயக்கிய ஜேம்ஸ் வான் (James Wan) இரண்டாம் பாகத்தையும் கதை, திரைக்கதை அமைத்து இயக்கியிருப்பதால் எதிர்பார்ப்புகள் நிரம்பவே இருந்தன.


முதலில், கன்ஜூரிங் திரைப்படங்களின் பின்னணி தெரிந்து கொள்வது முக்கியம். காஞ்சனா டைப் கதையம்சம் இதில் இருக்காது. உண்மைச் சம்பவங்களை (??!!) அடிப்படையாகக் கொண்டு இந்தப் படங்கள் உருவாக்கப்படுகின்றன. பிறருக்கு கெடுதல் செய்கிற பிறவி குணத்தை, செத்தப் பிறகும் கூட விட்டு விலகமுடியாமல் சில துஷ்ட ஆவிகள் மனிதர்களை சீண்டி மண்டையடி கொடுக்கும். அப்படி, துஷ்ட ஆவிகள் டார்ச்சர் பண்ணுகிற இடங்களுக்குச் சென்று அவற்றை தெறிக்க விடுவது லொரைன் வாரென், எட் வாரென் தம்பதிகளின் வேலை. ஆவிகளுடன் டீலிங் செய்யக்கூடிய ஆற்றல் இவர்களுக்கு இருப்பதால், சர்ச் நிர்வாகம் மேற்படி காரியங்களுக்கு இவர்களை அனுப்பி விசாரணை அறிக்கை பெறுகிறது. அந்த அறிக்கையின் பேரில் மேல் நடவடிக்கை எடுக்கிறது.


டக்கு லண்டனின் புறநகர் பகுதியான என்பீல்டில் 4 குழந்தைகளுடன் (2 மகள், 2 மகன்) வசிக்கிறார் பெக்கி ஹாட்ஸன். பிரிந்து சென்ற அப்பாவின் நினைவுகளில் இருந்து விடுபட முடியாமல் ஏங்குகிறார் பெக்கியின் 11 வயது மகள் ஜேனட் ஹாட்ஸன். ஒரு நாள் இரவில் தனது அக்காவுடன், ஒய்ஜா போர்டு மூலம் ஆவிகளுடன் பேச முனைகிறார். ‘அப்பா திரும்பவும் வீட்டுக்கு வருவாரா? மீண்டும் ஆனந்தமான குடும்பமாக வசிக்க முடியுமா?’ என்கிற பதிலில்லாத கேள்விக்கான விடை தெரிந்து கொள்ள ஆவிகளை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார். அங்கே ஆரம்பிக்கிறது வினை.


ந்த இரவில், கதை மட்டும் அல்ல... அந்தக் குடும்பத்தின் வாழ்க்கை திடுமென திசைமாறிப் போகிறது. வயதான மனிதரின் ஆவி அந்த வீட்டுக்குள் என்டர் ஆகிறது. எக்குத்தப்பான களேபரங்கள் செய்து, குளிர்சாதன திரையரங்கிற்குள் நம்மை வியர்க்க வைக்கிறது. விஷயம் சர்ச் நிர்வாகத்தின் கவனத்துக்குப் போக... அடுத்த ரயில் பிடித்து ஆஜர் ஆகிறார்கள் வாரென் தம்பதி.


சிறுமி ஜேனட்டை மிரட்டும் ஆவியிடம் நைசாகப் பேசி, அதை வழிக்குக் கொண்டு வந்து, அவர்கள் என்கொயரி நடத்தும் போதுதான்... வெடிக்கிறது அணுகுண்டு. உண்மையில் அந்த வயதான மனிதரின் ஆவி வெறும் தண்ணிப் பாம்பு. அதை முன்னிறுத்தி இயக்குவது, அந்தக் குடும்பத்தை அழித்தொழிப்பதை இலக்காகக் கொண்டு செயல்படுவது மிகப்பெரிய, மிக, மிகப் பெரிய துஷ்ட சக்தி என்பது தெரிந்ததும் ஆவிகளுடன் ரெகுலர் மீட்டிங் போடும் வாரென் தம்பதியே ஆடிப் போகிறார்கள். அதன் பிறகு அவர்கள் நடத்தும் ‘அப்பாலே போ சாத்தானே...’ மேட்டர்கள்தான் தி கன்ஜூரிங் 2.



முதல் பாராவில் படித்தது ஞாபகம் இருக்கிறதா? ‘‘அச்சுறுத்துவதும்,  அலற விடுவதும், படம் முடிந்ததும் நேராக போய் ஒரு எக்கோ டெஸ்ட் எடுத்து பார்க்க வைப்பதும் அல்ல, பேய் படங்களின் இலக்கணம்...’’ - கன்ஜூரிங் 2 படம் ஆகச்சிறந்த உதாரணம். அதிரடி திகில் காட்சிகளைக் காட்டி ஹார்ட் அட்டாக் வரவழைப்பது இயக்குனரின் விருப்பம் அல்ல. ஆனால், படம் ஓடுகிற 134 நிமிடமும் தியேட்டரில் இருப்பவர்களை பயத்தில் முக்கி, நனைத்து எடுத்துப் பிழிகிறார். குறிப்பாக, நள்ளிரவு நேரத்தில் தண்ணீர் குடிக்க வரும் அந்தக் குட்டிப் பையன், வெளியே வினோதச் சத்தம் கேட்டு சமையலறை ஜன்னல் வழியாக மெதுவாக எட்டிப் பார்க்கிறான். யாருமற்ற தனிமையில், பனி அப்பியிருக்கும் அந்த மகா இரவில், ஊஞ்சல் ஒன்று தனியாக கிர்ர்ரீய்ச்... கிர்ர்ர்ரீய்ச் சத்தம் எழுப்பிய படியே ஆடிக் கொண்டிருக்கிறது - இதுபோன்ற சம்பவங்களைக் கோர்த்து பயம் விதைக்கிறார் இயக்குனர். எக்ஸார்சிஸ்ட், ஈவில் டெட் மாதிரியான படு ஹாரர் பேய் படங்களுக்கும், கன்ஜூரிங் படத்துக்குமான முக்கியமான வித்தியாசமே இதுதான்.

ரு நேர்த்தியான பேய் படத்துக்கு இரண்டு விஷயங்கள் அடிப்படை - ஒளிப்பதிவும், இசையும். கேமரா கோணங்களும், பின்னணி இசையுமே படம் பார்க்க வந்த ரசிகரை உச்சக்கட்ட பீதிக்குள்ளாக்கும். ஒளிப்பதிவாளர் டான் பர்கெஸ், இசையமைப்பாளர் ஜோஸப் பிஷாரா இருவரும் மிரட்டியிருக்கிறார்கள். பின்னணி இசைக்கு மியூட் போட்டு, கேமரா கோணங்கள் படு குளோஸ் அப்புக்கு போகிற வினாடிகளில் எல்லாம் தியேட்டரில் மயான எஃபெக்ட்.


மிகப்பெரிய மிரட்டல்களோ, கொடூரச் சாவுகளோ, ரத்தக்களறியோ, முகம் சுளிக்க வைக்கிற காட்சிகளோ இல்லாத காரணத்தால் தாராளமாகப் போய் பார்க்கலாம். 11 வயது ஜேனட் ஹாட்ஸனாக நடித்திருக்கிற சிறுமி மேடிஸன் வுல்ஃப் (Madison Wolfe) பிரமாதப்படுத்தியிருக்கிறார். ஆவியின் நடமாட்டம் உணர்ந்து அவர் நடுங்கி உறைகிற காட்சிகளில், பின்னியிருக்கிறார். அதுவும், அடர்ந்த இருள் சூழ்ந்த அறைக்குள், தலை வழியாக போர்த்திய போர்வைக்குள்ளாக கண்களில் மிரட்சியுடன் அவர் நடுங்குகிற இடம்... அந்த உணர்வை நமக்குள் கடத்துவது சத்தியம். ஆவி உடலுக்குள் புகுந்தப் பிறகு வெறித்த கண் பார்வையுடன், உதடுகளைச் சுழித்தபடி அவர் பேசுகிற காட்சிகளும் சபாஷ்.


ண்டன் புறநகரான என்பீல்ட் பகுதியில் அந்தப் பள்ளிக்கூடமும், உதிர்ந்து கிடக்கிற இலைகளுடன், சாலையின் இருபுறமும் வரிசையாக நிற்கிற குடியிருப்பும் அழகு. 1977ல் நடக்கிற கதை என்பதால், கலர் டோன் மங்கலாக்கி, நம்மை அந்த இடத்துக்கும், காலத்துக்கும் கொண்டு செல்கிறார்கள். படம் முடிந்ததும், ஆவியால் பாதிக்கப்பட்ட ஒரிஜினல் ஆட்களையும், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளையும் காட்டுகிறார்கள். பேய் என்பது கப்சா அல்ல என்று உறுதிபடுத்தி அனுப்புவது இயக்குனரின் நோக்கம் என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது. பயப்படுகிற இயல்புடையவர்கள் கையில் பைபிள் எடுத்துக் கொண்டோ, மந்தரித்த கயிறு கட்டிக் கொண்டோ படத்துக்குச் செல்வது உத்தமம். படத்தின் பரபரப்பு தருகிற படபடப்பை குறைக்க ஒருவேளை அவை உதவலாம்!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...