செவ்வாய், 17 மே, 2016

பாதையில் பணி கிடந்தா... போகாதீங்க!

‘‘அந்தப் பக்கம் பணி ரொம்ப இருக்கும். கொஞ்சம் ஜாக்கிரதையா போங்க ப்ரதர்...’’ என்று யாராவது அக்கறையாகச் சொன்னால், ‘‘நோ ப்ராப்ளம். பணி செய்து கிடப்பதே என் கடன்...’’ என்றெல்லாம் இனி ஃபிலிம் காட்டவேண்டாம். அந்த ஏரியாவில் பாம்புத் தொல்லை அதிகம் என்று அவர் உங்களுக்கு வார்னிங் கொடுக்கிறாராக்கும்! பணி என்றால், தமிழில் பாம்பு என்கிற ஒரு அர்த்தமும் இருக்கிற விஷயம் உங்களுக்கு தெரிந்திருந்தால், இந்தப் பிரச்னை வந்திருக்காது!


கட்டுவிரியன் முகத்தில் கரி!

விலங்குகளுக்கான தமிழ் பெயர்களை பார்த்தாச்சு. இனி, ஊர்வன (Reptile). புலியை முறத்தால் அடித்து விரட்டிய தமிழ்க்குடி கூட, பாம்பு என்றால், படையும் நடுங்கும் என்று பழமொழி பாடி வைத்திருக்கிறது. என்பதில் இருந்தே, பாம்பு எத்தகைய டெரர் பார்ட்டி என்பதை நாம் புரிந்து கொள்ளமுடியும். நல்லபாம்பு, கட்டுவிரியன் போன்றவை பிடுங்கித் தள்ளிவிட்டால், கபால மோட்சம் கன்ஃபார்ம் என்று கிராமங்களில் இன்றும் பீதியுடன் பேசுவதைக் கேட்டிருக்கலாம். உண்மையில், பாம்பு கடிக்கு நல்ல மருந்துகள் இருக்கின்றன. சரியான தருணத்தில் அட்மிட் பண்ணி விட்டால், ஆளைக் காப்பாற்றி, விரியன் முகத்தில் கரியைப் பூசி விடமுடியும். சரி. பாம்புக்கு தமிழில் என்னென்ன பெயர்கள் இருக்கிறது?

ணி, அரவு, அங்கதம், பாந்தள், கட்செவி, போகி, அகி, அரி, நாகம், மாசுணம், சக்கிரி, புயங்கம், பன்னகம், உரகம், சர்ப்பம், வியாளம் என ரகத்தைப் பொறுத்து பாம்புகளுக்கு தமிழில் பெயர் இருக்கிறது. நீள சைஸ் புடலங்காய் போல நெடுநெடுவென இருக்குமே... சாரைப்பாம்பு, அதற்கு ராசிலம், அண்டம் என்று பெயர். பாம்பு வைத்திருக்கிற பயோ வெப்பனான, நச்சுப்பல்லுக்கு தட்டம் என்று தமிழில் பெயர் இருக்கிறது. ரைட்டா?

நம்பள்கி... நிம்பள்கி!

மிழுக்கு சேவை செய்த அயல்நாட்டவர்கள் பட்டியல் தயாரிக்கிற போது, நாம் தவிர்க்கக்கூடாத பெயர், சார்லஸ் தியோப்ளஸ் ஈவால்ட் ரேனியஸ் (Charles Tleoplilus Ewald Rhenius). சுருக்கமாக சி.டி.இ.ரேனியஸ். ஹிட்லர் தேசத்துக்காரர். ஜெர்மனியின் கிராடென்ஸ் (Graudens) நகரில் 1790 நவம்பர் 5ம் தேதி பிறந்த ரேனியஸ், தூத்துக்குடி மாவட்டம், அடைக்கலாபுரத்தில் 1838 ஜூன் 5ம் தேதி மறைந்தார். சுவிசேஷப் பணிகளுக்கு இணையாக, நம்மொழிக்கு இவர் ஆற்றிய தொண்டு, இன்றளவுக்கு தமிழ் ஆர்வலர்களால் நன்றியுடன் பேசப்படுகிறது.

1815, ஜூலை மாதம் இந்தியாவுக்கு வேத ஊழியராக வந்த ரேனியஸ், தரங்கம்பாடி, சென்னையில் தமிழ் கற்றார். தமிழ் கற்றார் என்றால்... ‘நம்பள்கி வர்றான், நிம்பள்கி போறான்...’ என்று டபாய்க்கிற மாதிரி இல்லை. முகவை ராமானுஜ கவிராயரிடம் நன்னூல் சூத்திரம் உள்ளிட்ட தமிழ் இலக்கண நூல்கள், திருப்பாற்கடல் கவிராயரிடம் இலக்கண, இலக்கியங்களை கிட்டத்தட்ட 14 வருடங்கள் கற்றுத் தேர்ந்தார். தமிழின் மிக ஆழ்ந்த இலக்கிய, இலக்கண வளங்களில் மனம் லயித்தார். நம்மொழியின் பெருமையை உலக நாடுகளுக்கு கொண்டு சென்றார்.

ழியத்துக்காக நெல்லை வந்த ரேனியஸ், இங்கு நிறைய பள்ளிக்கூடங்கள் துவக்கினார். அந்தப் பள்ளிக்கூடங்கள் திருநெல்வேலியில் இன்றளவுக்கும் அவர் பெயர் சொல்லிக் கொண்டிருக்கின்றன (ஒரு உதாரணம்: மேரி சார்ஜென்ட் மேல்நிலைப்பள்ளி). இங்கு துவங்குகிறது அவரது தமிழ்ப் பணி. இங்கு தமிழில் மட்டுமே பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும் என பரிந்துரைத்தார். அதற்காக, ஆங்கிலத்தில் இருந்து வரலாறு, புவியியல், இயற்கை, வான சாஸ்திரம் உள்பட 9 பாடநூல்களை தமிழில் மொழிபெயர்த்தார். அப்போது, அந்தப்பகுதியில் இருந்த சாதிய வேறுபாடுகளை தகர்த்து, அனைவருக்கும் கல்வியை புகுத்தினார். மட்டுமல்ல, பெண் கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கி, பெண்களுக்கென்று தனி பாடசாலைகளைத் துவக்கினார். நல்லது செய்தால், நம்மாட்கள் விடுவார்களா...? எக்கச்சக்கமான தொந்தரவு. ஆனாலும் மனம் தளர்ந்து விடவில்லை ரேனியஸ்.

சமூகநீதி போராட்டம்:

மிழில் படு அழகாக, எளிமையாக பேசும் வல்லமை அவருக்கு வாய்க்கப் பெற்றிருந்தது. அவரது தமிழ் சொற்பொழிவுகளை - அது கிறிஸ்துவ சமய சொற்பொழிவாக இருந்தாலும் கூட - இந்துக்களும் திரண்டு வந்து ரசித்திருக்கிறார்கள். தமிழ் இலக்கணம் (Rhenius, CTE. Rev.: A grammar of the Tamil language, with an appendix., 3d ed. Madras, Printed for the proprietor, by P.R. Hunt, American mission press, 1853), பூமி சாஸ்திர நூல், மனுக்குல வரலாற்றுச் சுருக்கம், உருவக வணக்கம் உள்பட ஏராளமான தமிழ் உரைநடை நூல்கள் எழுதியிருக்கிறார்.

னைத்துத் தரப்பினருக்கும் கல்வி, சமூக நீதி, எளிமையான தமிழ் உச்சரிப்புகள், அடித்தட்டு மக்களுக்கும் புரியும் படியான மொழிபெயர்ப்பு ஆற்றல் என அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாடுகள், அன்றைய அடித்தட்டு தமிழ் மக்களுக்கு மிக நெருக்கமாக ரேனியஸை கொண்டு சென்று சேர்த்தன. சமூக நீதி, பெண் கல்வி போன்ற புரட்சிகளை விதைத்ததன் காரணமாக, பெரும் நெருக்கடிகளை அவர் சந்திக்க நேர்ந்தது. பணிநீக்கம் கூட செய்யப்பட்டார். சபையில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார். ஆனாலும், தனது கொள்கையில் துளியும் தளர்ந்து விடவில்லை. இன்றைய சமூகநீதிக் கொள்கைகளுக்கும், பெண் கல்வி வளர்ச்சிக்கும் அடியுரமாக இருந்தவர்களில் ரேனியஸ் முக்கியமானவர் என்றால், மறுக்க முடியாது. அடைக்கலாபுரம், தூய யோவான் ஆலய கல்லறைத் தோட்டத்துக்கு வெளியே அவர் கல்லறை இருக்கிறது. தமிழுக்கும், தமிழ் சமூகத்துக்கும் ஆற்றிய சேவைக்காக, அவருக்கு மரியாதை செலுத்தி இந்த வாரத்தை நிறைவு செய்யலாமா?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...