வியாழன், 17 மார்ச், 2016

எம்.எஸ். படிக்காமல் சர்ஜரி செய்தால் சரியா?

‘நம்மொழிக்கு வந்த சோதனையா? என்ன சார் ஆச்சு; போனவாரம் தொடரைக் காணமே?’ என்று அலை/தொலைபேசிகளில் நிறையப் பேர் கண்ணீருடன் (ஆனந்தக் கண்ணீராக இருக்குமோ!?) விசாரணை நடத்தினார்கள். அவர்களுக்கு நன்றி. தவிர்க்க முடியாத காரணங்கள், தடுத்து விட்டன. சரி. மேட்டருக்கு வரலாம்.


செம்மொழினா... சும்மாவா?
ரு மொழி என்றால் இலக்கண, இலக்கிய வளங்கள் இருக்கும். நமக்குத் தெரியும். இன்றைக்கு உயர்த்திப் பிடிக்கப்படுகிற சில மொழிகளுக்கு செறிவான அளவுக்கு இலக்கண வளம் இல்லை என்பது தெரியும்தானே? ஆனால்... இலக்கண, இலக்கியங்களைத் தவிர்த்து கணிதம், அறிவியல், வானியல், மருத்துவம்... என்று தமிழில் இல்லாததே இல்லை. ‘பை (Pi π)’ கணித முறை பற்றிய 65வது வார தொடரைப் படித்த நண்பர்கள் இப்படிக் கேட்டனர். அப்புறம்? செம்மொழி என்றால், சும்மாவா? இதெல்லாமும், இதற்கும் மேலும் இருப்பதால் தான், உயர்தனிச் செம்மொழியாக உலகளவில் தமிழ் உயர்ந்து நிற்கிறது.

கீழே விழுந்து அடிபட்டுக் கொண்டால், இன்றைக்கு தையல் போடுகிறார்கள் இல்லையா? மக்களே... இன்றைக்கில்லை; இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே, M.S. படிக்காமல், நமது முன்னோர்கள் சர்ஜன் வேலை பார்த்திருக்கிறார்கள்.

நேயர் விருப்பம்!

எட்டுத்தொகை நூல்களில் முக்கியமானது பதிற்றுப் பத்து. பத்து புலவர்கள் சேர்ந்து பத்துப் பத்து பாடல்களாக சேர மன்னர்களைப் பற்றி பாடிய பாடல்களின் தொகுப்பு இது. கடைச் சங்க நூலான இதன் காலம், கி.பி. 2ம் நூற்றாண்டு. நாம் கேள்விப்பட்டிருக்கிற கபிலர், பரணர் போன்ற கிரேட் பொயட்ஸ் எல்லாம் இதில் பாடல் எழுதியிருக்கிறார்கள். அந்தப் பதிற்றுப் பத்தில் இருந்து ஒரு நேயர் விருப்பப் பாடல்.

‘‘மீன் றேர்கொட்பிற் பனிக்கய மூழ்கிச்
சிரல் பெயர்ந் தன்ன நெடுவெள் ளுசி
நெடுவசி பரந்த உடுவாழ் மார்பின்
அம்புசே ருடம்பினர்ச் சேர்ந்தோ ரல்லது
தும்பை சூடாது மலைந்த மாட்சி...’’ (பதிற்றுப்பத்து 42: 2 - 6)

- அர்த்தம் புரிகிறதா? அதாகப்பட்டது, தண்ணீருக்குள் நீந்திக் கொண்டிருக்கும் மீனை ‘லஞ்ச்’ ஆக்கிக் கொள்வதற்காக சிரல் பறவை ஒன்று (king fisher) குபீர் என்று ஆற்றுக்குள் பாய்ந்து, அடுத்த நொடி, வாயில் மீனுடன் ஜிவ்வென்று ஜிஎஸ்எல்வி போல மேலே கிளம்புகிறது. அதுபோல, உடலில் ஏற்பட்ட புண்ணுக்குள் புகுந்து, ஒரு பெரிய ஊசி கண்ணிமைக்கும் நேரத்தில் வெளியே வருகிறது என்கிறது இந்தப் பாடல்.

சர்ஜரி சரியா?
யுத்த முரசு கொட்டி விட்டால், போர்க்களத்தில் சிறப்பு டாக்டர்கள் குழு இரவு பகல் வேலை பார்ப்பது வழக்கம்தான். வெட்டு வாங்கி விழுந்து கிடக்கிற போர்வீரர்களின் கிழிந்து தொங்குகிற தசைப் பகுதியை சேர்த்து தைக்கிற ‘சர்ஜரி’ வேலைகளும் நடந்திருப்பதை இந்தப் பாடல் மூலம் தெரிந்த கொள்ள முடிகிறது, இல்லையா? புறநானூறுக்குப் போனால், இதற்கும் மேலாக ஒரு மருத்துவ விஷயத்தை தெரிந்து கொள்ளமுடியும்.

‘‘செருவா யுழக்கிக் குருதி யோட்டிக்
கதுவாய் போகிய துதிவா யெஃகமொடு
பஞ்சியுங் களையாப் புண்ணர்....’’ (புறம். 353)

தே போர்க்கள எபெக்ட்டை மனதுக்குள் கொண்டு வந்து விடுங்கள். வெட்டுப் பட்டு விழுந்து கிடக்கிற போர் வீரனின் கிழிந்த உடல் தசையை ஊசி வைத்துத் தைத்து, அந்தப் புண் சீக்கிரம் ஆறுவதற்காக, அதற்கு மேலே மருந்து தடவி, பஞ்சு வைத்து மூடி, கட்டும் போட்டு அனுப்புவதாக இந்தப் பாடல் குறிப்பிடுகிறது. மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலில் இன்றைக்கு நடக்கிற சர்ஜரி மேட்டர்கள், அந்தக் காலத்தில் சர்வ சாதாரணமாக நடந்திருப்பதை இந்த சங்கப்பாடல்கள் நிரூபிக்கின்றனதானே? M.D., M.S.., எதுவும் இல்லாமல் ஆபரேஷன், அதன் பிறகான சிகிச்சைகள் எப்படி செய்யமுடிந்தது?

ந்தக்காலத்திலேயே மருத்துவ அறிவு அந்தளவுக்கு பிரமிக்கத்தக்கதாக இருந்திருக்கிறது. நமது மருத்துவ முறைகள் பற்றி பேசுவதற்கென்றே தமிழில் நிறைய இலக்கியங்கள் இருக்கின்றன; இருந்திருக்கின்றன. பாதுகாக்க வைக்கத் தெரியாமல் நாம்தான் தொலைத்து தலைமுழுகி விட்டோம்.

வாப்பா... வாலேயம்!
‘அடக்கழுதை....’ என்று யாரையாவது திட்டுவோம் இல்லை?அந்தக் கழுதைக்கு தமிழில் என்னென்ன பெயர்கள் இருக்கின்றன? கரம், கோகு, வேசரி, வாலேயம், காளவாய், கர்த்தபம், அத்திரி - இதெல்லாம், கழுதைக்கான ‘நம்மொழி’ பெயர்கள். ‘வாப்பா... கோகு!’ என்று யாராவது கூப்பிட்டால், எசகுப்பிசகாக இனி இருந்து விடவேண்டாம். ‘சொல்லுப்பா, வாலேயம்!’ என்று பதிலுக்கு கவுன்ட்டர் கொடுங்கள். ரைட்டா?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

1 கருத்து:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...