சனி, 27 பிப்ரவரி, 2016

ஓ மானே.. மானே... மானே.... உன்னைத்தானே!

ழகான பெண்களை புள்ளிமான் என்று அந்தக்கால பொயட்ஸ் வர்ணிப்பார்கள். இப்போதும் கூட சிலர் செய்கிறார்கள். உண்மையில், புள்ளிமான்களைக் காட்டிலும், அழகான பெண்கள் அழகானவர்கள். இல்லையா? (இணையத்தில் மணமகள் தேடும் போது, இளம்பெண்ணுக்கு பதில் புள்ளிமான் படம் இருந்தால், அப்ளை பண்ணுவீர்களா?). சரி. மேட்டர் அதுவல்ல. ஓ.. மானே... மானே....க்கு தமிழில் என்னென்ன பெயர்கள் இருக்கின்றன?


தைலம் கிடைக்குமா?

குரங்கம், ஏணம், மறி, குனம், பிணை, உழை, அரிணம், சாரங்கம், நல்லி - மிரள, மிரளப் பார்க்கிற மான் மேடத்துக்கு தமிழில் இருக்கிற பெயர்கள் இவை. முடி உதிர்வது சிம்பிள் பிரச்னை. அமேசான் காட்டு மூலிகையில் இருந்து தயாரிக்கப்பட்ட தைலங்கள் இப்போது நிறைய மார்க்கெட்டில் கிடைக்கின்றன. ஆனால், கவரிமானுக்கு இந்த விஷயம் சென்று சேர்ந்திருக்காது என்று நினைக்கிறேன். சிங்கிள் முடி உதிர்த்து விட்டால் கூட சூசைட் அட்டம்ப்ட் பண்ணி விடும் என்று இலக்கியங்கள் பில்டப் கொடுப்பதை படித்திருப்பீர்கள். நம்ம வள்ளுவப் பேராசான் கூட,
‘‘மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்’’
- என்று எழுதி வைத்திருக்கிறார். இந்த கவரிமானுக்கு தமிழில் எகின், பட்டம், படகம், மனமா என்று பெயர்கள் இருக்கின்றன. கவரிமான் பேமிலிக்கு தூரத்துச் சொந்தம் உள்ள மான் வகையறாக்களுக்கு பவரி, சீகரம், கவரி என்றும் பெயர்கள் இருக்கின்றன. கலைமான் (black buck) என்கிறார்களே, அதற்கு கருமான், புல்வாய், இரலை, வச்சயம் என்று பெயருண்டு.

புஸ்.. புஸ்ஸ்... கஸ்தூரி?

மயமலை பகுதியில் காணப்படுகிற அரிதான ஒரு வகை மானினம் கஸ்தூரி மான் (Musk deer). கொம்புகள் கிடையாது. ஆனால், மிரட்டுவது போல பற்கள் உண்டு. ஆண் கஸ்தூரிமானின் வயிற்றில் இருந்து கிடைக்கிற ஒரு திரவப்பொருள் (கஸ்தூரி?!) மூலம், நீங்கள் சட்டையில் புஸ்... புஸ்ஸ்... என்று அடிக்கிற சென்ட் தயாரிக்கப்படுகிறது. இமயமலை பகுதியில் காணப்படுகிற இந்த விலங்கு பற்றி தமிழ் இலக்கியங்களில் எக்கச்சக்கமாக எழுதப்பட்டிருக்கிறது என்பது ஆச்சர்யமான / ஆராயப்பட வேண்டிய விஷயம்.
(உதாரணம் 1:
திருமந்திரம் (பாடல் 30)
சாந்து கமழுங் கவரியின் கந்தம்போல்
வேந்தன் அமரர்க் கருளிய மெய்ந்நெறி
உதாரணம் 2:
சூளாமணி (பாடல் 954)
கணங்கெழு கவரிகள் கலந்து காழகி
லணங்கிவர் நாவிகா லளைந்து நாறலால்
இணங்கிய கடற்படைப் பரவை யிவ்வழி
மணங்கம ழிமகிரி வருவ தொக்குமே.

மான்மதம், நானம், துருக்கம், நரந்தம் ஆகிய பெயர் சூட்டி கஸ்தூரி மானை தமிழ் அழைக்கிறது. புலி, சிங்கத்துக்குக் கூட இரண்டு பாராவுக்கு மிக வில்லை. அழகான மான் சிக்கியதும் பார்த்தீர்களா... அரைப்பக்கம் கடந்து விட்டது. எனவே, மான் புராணம் இந்தளவுக்குப் போதும். சரியா? இனி மெயின் மேட்டர்.

நோபல் பரிசு கன்ஃபார்ம்!

ணக்கதிகாரம் பார்த்துக் கொண்டிருந்தோம் இல்லையா? காரிநாயனார் என்ற ேசாழ நாட்டு புலவர் எழுதியது. புத்தகம் முழுக்க, கணித, அறிவியல் விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது. படிக்க, படிக்க பிரமிப்பாக இருக்கும். இன்றைக்கெல்லாம் இருந்திருந்தார் என்றால், அறிவியலின் அத்தனை பிரிவுகளிலும் நோபல் பரிசு காரி நாயனாருக்குத்தான் கிடைத்திருக்கும். 60 வெண்பாக்களும், 45 புதிர் கணிதங்களும் இதில் இருக்கின்றன. பூமி சூரியனைச் சுற்றுகிற கால அளவு, நிலா பூமியைச் சுற்ற எடுத்துக் கொள்கிற காலம் என்று டெலஸ்ேகாப் இல்லாமலே விண்ணியலில் பின்னியிருக்கிறார். கணக்கதிகாரத்தில் நம்மை ஆச்சர்யப்படுத்துகிற ஒரு விஷயம் இந்த வாரம் பார்க்கலாம்.

பலாச்சுளை எத்தனை?

வீட்டில் பசங்களுக்குப் பிடிக்குமே என்று சிறுமலை பலாப்பழம் வாங்கி வந்திருப்பீர்கள். உரித்ததும், உள்ளே இருப்பதை பங்கு பிரிப்பதில் (வழக்கம் போல) பிரச்னை. கணக்கதிகாரம் படித்தவராக நீங்கள் இருந்தால், கச்சிதமாக பங்கிட்டிருக்க முடியும். உரிப்பதற்கு முன்பே, உள்ளே எத்தனை சுளை இருக்கிறது என்று உங்களுக்குத்தான் தெரிந்து விடுமே! அந்த கால்குலேஷன் போட கத்துக்கலாமா?

‘‘பலாவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு
சிறுமுள்ளுக் காம்பருக் கெண்ணி வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை...’’

- இந்த தமிழ் பார்முலாவை மனப்பாடம் பண்ணிக்கோங்க. அதாவது, பலாப்பழத்தின் காம்புக்கு அருகேயுள்ள சிறு முட்களின் எண்ணிக்கையை (தப்பு விடாமல்) எண்ணிக் கொள்ளவேண்டும். ஆச்சா? அதை ஆறால் பெருக்கி, வருகிற எண்ணிக்கையை ஐந்தால் வகுத்தால்... அதுதாங்க, உள்ளே இருக்கிற பலாச்சுளைகளின் எண்ணிக்கை. இன்னும் புரிகிற மாதிரி சொல்லவேண்டுமானால், பலா காம்புக்கு அருகே உள்ள சிறு முள்களின் எண்ணிக்கை 20. இதை ஆறால் பெருக்கினால், 120. இதை ஐந்தால் வகுத்தால், 24. எண்ணி 24 சுளை உள்ளே இருக்கும். அடுத்தமுறை, பலாப்பழம் வாங்கும் போது கன்பார்ம் பண்ணிட்டு லெட்டர் போடுங்க. ரைட்டா?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

1 கருத்து:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...