சனி, 20 பிப்ரவரி, 2016

இரக்கமுடையவர்கள்... பாக்கியவான்கள்!

‘இந்திய மொழிகளில் முதன்முதலில் அச்சுப்புத்தகம் எந்த மொழியில் வெளியானது’ என்று யாராவது கேள்வி கேட்டால், சட்டைக் காலரை சற்றே உயர்த்தி விட்டபடி ‘நம்மொழி செம்மொழியில்’ என்று பதில் சொல்லலாம் என தொடரின் 59வது அத்தியாயத்தில் படித்தோம். அந்தப் பெருமையை நமக்குக் கொடுத்ததற்காக ஹென்ரிக் ஹென்ரிக்ஸ் பாதிரியாருக்கு நன்றியும் தெரிவித்தோம். ஞாபகத்தில் இருக்கும். இந்த வாரம், தமிழுக்கு மகுடம் சேர்க்கிற இன்னொரு விஷயம்.


முதன் முதலாய்...!

‘இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள். உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி...’ என்றெல்லாம் நற்குணங்களை மனிதனுக்குள் விதைத்து பண்படுத்துகிறது விவிலியம் எனப்படுகிற பைபிள். அந்த பைபிள் இந்திய மொழிகளில் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டு, அச்சேறியது தமிழ் மொழியில்தான். இது எத்தனை பேருக்குத் தெரியும்? ஜெர்மனியைச் சேர்ந்த லூத்தரன் பாதிரியார் பர்த்தலோமேயு சீகன்பால்க் (Bartholomäus Ziegenbalg ஜூன் 20, 1682 - பிப்ரவரி 23, 1719), தமிழகத்துக்கு வந்த முதலாவது புராட்டஸ்டண்ட் கிறிஸ்தவ மதபோதகர். 1714ல், பைபிளை இவர் தமிழில் மொழிபெயர்த்தார்.

மயம் பரப்பும் பணிக்காக 1706ம் ஆண்டு தமிழகத்தின் கடற்பகுதியான தரங்கம்பாடிக்கு கப்பலில் வந்திறங்கினார் சீகன். கடற்கரை மணலில் விரலால் எழுதி, எழுதியே தமிழ் இலக்கண, இலக்கியத்தில் தேர்ந்தார். சமயம் பரப்பியதோடு அல்லாமல், ஏழைத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக பள்ளிக்கூடம், குழந்தைகள் இல்லங்கள் ஆரம்பித்தார். வெகு விரைவில் சென்னை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பள்ளிக்கூடங்கள் துவக்கி கல்வி வளர்த்தார். சீகன் ஆரோக்கியமான ஆள் கிடையாது. அடிக்கடி உடம்புக்கு முடியாமல் போய் விடும். தவிர, அப்போது இங்கு ஆட்சி செய்த ஆங்கில கவர்னருக்கு சீகனை சுத்தமாக பிடிக்காது. அடிக்கடி டார்ச்சர். உச்சக்கட்டமாக பிடித்து இழுத்துப் போய் ஜெயிலில் தள்ளி விட்டார்.

கப்பல் எங்கே?

த்தனை பிரச்னைகளையும் கடந்து, மாபெரும் பைபிளின் புதிய ஏற்பாடு பகுதியை தமிழில் மொழிபெயர்க்கும் மகத்தான பணியை 1708, அக்டோபர் 17ம் தேதி துவக்கினார் சீகன். சரியான ஒத்துழைப்பு இல்லாவிட்டாலும் கூட, பெரும் சிரமத்துக்கு இடையே 1711, மார்ச் 31ல் இந்தப் பணியை ஏறக்குறைய முடித்தார். இந்திய மொழிகளில் முதன்முதலாக தமிழில் பைபிள் மொழிபெயர்க்கப்பட்டு விட்டது. சரி, அதை புத்தகமாக அச்சடிக்கவேண்டாமா? தமிழ் விவிலியத்தை அச்சடிக்க அவர் பட்டபாடு.... இன்றைக்கு தமிழ் ஆர்வலர்கள் படுகிற பாட்டுக்கு ஒப்பானது.

முதலில் ஜெர்மனியில் இருந்து அச்சு இயந்திரம் கொண்டு வந்த கப்பலை பிரெஞ்ச் படைகள் மடக்கி விட்டன. பெரும்பாடு பட்டு அதை மீட்டெடுத்தால், காகிதப்பற்றாக்குறை. எழுத்துருக்களும் சரியான அளவில் இல்லை. தரங்கம்பாடியிலேயே சிறிய அளவில் தமிழ் எழுத்துகளை வார்த்து, 1713ல் அச்சுப்பணியைத் துவக்கினார். பட்ட பாட்டுக்கு பலன் இல்லாமல் போகுமா? 1715, ஜூலை 15ல் தமிழில் புதிய ஏற்பாடு அச்சுப் புத்தகம் தயார். இந்திய மொழிகளில் முதலில் பைபிள் மொழிபெயர்ப்பு கண்டது தமிழ் மொழி. முதல் இந்திய பைபிள் மொழிபெயர்ப்பாளர் சீகன்பால்க்.

புதிய ஜெருசலேம்


த்து வருட மிஷனரி பணிக்குப் பிறகு 1715ல் சொந்த ஊர் திரும்பியவர், அங்கும் சும்மா இருந்தாரில்லை. தமிழ் இலக்கண புத்தகம் எழுதி அச்சில் வெளியிட்டார். புது மனைவி மரியா டாரதியுடன் 1716, ஆகஸ்ட்டில் மீண்டும் தரங்கபாடி வந்த சீகன்பால்க், இங்கு தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் அளப்பரியது. தமிழ்நாட்டு தெய்வங்களின் பரம்பரை, நீதிவெண்பா, கொன்றைவேந்தன் புத்தகங்களை தொகுத்தார். லத்தீன் மொழியில் தமிழ் இலக்கணத்தை (Grammatica Tamulica) மொழிபெயர்த்து வெளியிட்டார். தமிழ் - ஜெர்மன் அகராதியை தயாரித்தளித்தார்.

‘‘ஆரம்பத்தில் தமிழர்கள் மீதும், தமிழ் மொழியின் மீதும் எனக்கு பெரிய அபிப்பிராயம் இல்லை. தமிழ் மொழியைப் படித்தப் பிறகும், தமிழர்களுடன் பழகியப் பிறகும் எனது கருத்து தலைகீழ் மாற்றம் பெற்றது. தமிழ் மிகப் பழமையான மொழி. தமிழ் இலக்கண விதிகள் மிகச் சிறந்த முறையில் அமைக்கப் பெற்றுள்ளன. தமிழர்கள் பல கலைகளில் புலமை கொண்டவர்கள். அவர்கள் எழுதிய நூல்கள் பெரும் போற்றுதலுக்குரியவை....’’ என்கிறார் சீகன்பால்க். 24 வயதில் தமிழ் மண்ணில் கால் பதித்து, 1719, பிப்ரவரி 23ல், வெறும் 37 வயதில் மறைந்த சீகன்பால்க், இங்கிருந்த 13 ஆண்டுகாலத்தில் தமிழுக்கு ஆற்றிய பணி விவரிப்புகளுக்கு அப்பாற்பட்டது. தரங்கம்பாடியில் அவர் கட்டிய ‘புதிய ஜெருசலேம்’ தேவாலயத்தில் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

ஆங்கில மனைவி; தமிழ் காதல்!

மிழ் மேல் அவர் கொண்டிருந்த அளப்பரிய அன்பை காட்ட, ஒரே ஒரு உதாரணம் மட்டும் சொல்லலாம். திருமணம் செய்வதற்காக 1715ல் தனது சொந்த ஊர் கிளம்புகிறார் சீகன்பால்க்.
போய் வர ஆகிற கால இடைவெளியில் தமிழுக்கும், தனக்குமான தொடர்பு அறுந்து விடுமே என்கிற அச்சம். தமிழுடனான தொடர்பில் இருப்பதற்காக, தன்னுடன் மலையப்பன் என்கிற தமிழ் இளைஞனை உடன் அழைத்துச் செல்கிறார். ஜெர்மனியில் இருக்கிற நாட்களிலும், திருமண விழாவின் போதும் கூட தமிழில் பேசி, தமிழில் எழுதி பொழுதைக் கழித்தவர் சீகன்பால்க். அவருக்கு மரியாதை செலுத்தி, இந்த வாரத்தை நிறைவு செய்யலாமா?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

3 கருத்துகள்:

  1. சீகன் பால்க் போன்றவர்களால்தான் நம் தமிழ் மொழியின் அருமையே நமக்குத் தெரியவந்தது. இதை எந்தவித மத பேதங்களின்றி உலகிற்கு வெளிப்படையாக அறிவித்தவர்கள் தி க மற்றும் தி முக வினர்தான். இல்லாவிட்டால் ஆர் எஸ் எஸ் சித்தாந்தத்தில் இத்தனை அறிய சேவை அறியப்படாமலே போயிருக்கும்.

    நல்ல அருமையான பதிவு. நன்றி. மற்றும் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி காரிகன் சார்... (பூனைக்குட்டியை தொடர்வதற்காக!)

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...