சனி, 30 ஜனவரி, 2016

திருக்கி வளர்க்கணும் மீசையை!

போன பிறவியில் என்ன பாவம் செய்து வந்ததோ... திட்டித் தீர்ப்பதற்கென்றே, இந்த விலங்கின் பெயரைப் பயன்படுத்துகிறோம். ஒருவருடைய இமேஜை, ஒரு வினாடியில் டேமேஜ் ஆக்குவதற்கு, ‘ச்ச்சீ பன்னீ... போடா பன்னீ’ என்று சர்வ சாதாரணமாக போட்டுத் தாக்குகிறோம், இல்லையா? உண்மையில், பன்னீ எனப்படுகிற பன்றி, அறிவுக்கூர்மை அதிகம் கொண்ட விலங்கு. நாய், பூனையைக் காட்டிலும், நாம் சொல்வதை எளிதில் புரிந்து கொண்டு, சொல்படி கேட்கும். என்பதால், வெளிநாடுகளில் இவற்றை செல்லப்பிராணிகளாக கூட வளர்க்கிறார்கள்.


தீவிரவாதப் பன்றி?

ந்த புத்திசாலி விலங்கை நாம் தரம் குறைத்தாலும் கூட, தமிழ் கவுரவப்படுத்தத் தவறவில்லை. கழிவுநீர் குட்டைகளில் புரண்டு திரிவதால், போக்கிரி விலங்கு என்று நாம் நினைக்கிற பன்றியை, தமிழ் என்னென்ன பெயர் சூட்டி அழைக்கிறது கவனியுங்கள். வராகம், கோலம், குகரம், எறுழி, மைம்மா, கோட்டுமா, போத்திரி, கிருட்டி, ஏனம், மோழல், இருளி, வல்லுளி, களிறு, கேழல், அரி, குரோடம், கிரி, கிடி என பல்வேறு பெயர்கள் சூட்டி அழைக்கிறது தமிழ்.

டம்பிலேயே ‘ஆயுதங்கள்’ வைத்துக் கொண்டு அலைகிற ‘தீவிரவாத’ முள்ளம்பன்றிக்கும் தமிழில் பெயர் இருக்கிறது. சல்லியம், சல்லகம், எய், முளவுமா என்று கூப்பிட்டுப் பாருங்கள்... முள்ளம்பன்றி லேசாக ‘ஜெர்க்’ ஆகலாம். முள்ளம்பன்றியின் உடலில் உள்ள முள் சவலம், சலம் என்ற பெயர்களால் தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறது. பன்னிக்கு... ஸாரி, பன்றிக்கு இந்த இடத்தில் ‘பை’ சொல்லலாமா?

போனவாரத்துக்கும் போனவாரம்... அதாவது தொடரின் 58வது வாரம் (‘எளிதாக கணக்குப் பண்ணுவது எப்படி’) பிதாகரஸ் தேற்றம், போதையனார் கணித கட்டமைப்புகள் பற்றி படித்தோம். அதற்கு வாசக நண்பர்கள் தரப்பில் நிறைய ரெஸ்பான்ஸ். இனி ஒவ்வொரு வாரமும், தமிழில் உள்ள அறிவியல், கணித பதிவுகளை கட்டாயம் சொல்லுங்க சார் என்று உத்தரவுகளும் வந்தன. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற பொன்.களஞ்சியம் விரிவான கடிதம் எழுதியிருந்தார். செங்கோண முக்கோணத்தில் கர்ணத்தின் அளவை அறிய ‘‘ஆதியாம் சதுரம்தன்னை ஆறு கூறு செய்து, கூறிலே ஐந்தைக் கூட்டி கொடுத்திட கர்ணமாகும்...’’ என்ற புதிய தேற்றத்தை உருவாக்கியிருப்பதாக, படங்களுடன் பதிவு செய்திருந்தார். அவருக்கு வாழ்த்துகள். தமிழ் நமக்கு ஒரு மிகப்பெரிய களத்தை உருவாக்கி வைத்திருக்கிறது. இங்கு யாரும், எப்படி வேண்டுமானாலும் விளையாடலாம். விளையாட்டுக்கான சூட்சுமங்களையும் தனக்குள்ளே பொதிந்து வைத்திருக்கிறது தமிழ். தேடி அறிந்து கொள்ளத் திறன் கொண்டவர்கள்... பாக்கியவான்கள்.

அடைமழை நிச்சயமா?

கிராமத்துப் பக்கங்களில்தான், தமிழ் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது என்று நான் சொன்னால், மறுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன். ‘பையன் சொன்ன பேச்சுக் கேக்காம, ஆடுகாலியா திரியறானே....’ என்று சொன்னால், ‘‘அடித்து வளர்க்கணும் பிள்ைளய, முறித்து வளர்க்கணும் முருங்ைகய, திருக்கி வளர்க்கணும் மீசைய...’’ என்று ஒரு சொலவடை (பழமொழி) வீசி, நாம் கேட்டது தவிர, எக்ஸ்ட்ராவாக இரண்டு அட்வைஸ் (முருங்கை, மீசை!) கொடுத்துச் செல்வார்கள் கிராமத்துப் பாட்டிகள். தமிழர் வாழ்வோடு இரண்டறக் கலந்தவை பழமொழிகள். ஒரே வரி. உள்ளே இருக்கும் ஒரு கூடை அர்த்தம். வெளியில் தெரியாத விஞ்ஞானமும் கூட அதில் இருக்கும். ‘அந்தியில ஈசல் வெடிச்சா, அடைமழை நிச்சயம்’ என்று வெதர் ஃபோர்காஸ்ட் தருவார்கள்!

பழமொழிப் பாட்டி!

கிராமத்துப் பக்கங்களில் புழங்கிய பழமொழிகளை இன்றைக்கு திரும்பிப் பார்த்து நாம் பிரமிக்கிறோம் என்றால், அதற்காக ஹெர்மன் ஜென்சன் பாதிரியாருக்கு (Rev. Herman Jensen) நன்றி சொல்ல வேண்டியது கட்டாயம். பிரான்ஸ் தேசத்துக்காரர். சமயம் பரப்புவதற்காக நம்மூருக்கு வந்தவர், இங்கு காது வளர்த்த பாட்டிகள் அடித்து விசிய சொலவடைகளைப் பார்த்து ஆச்சர்யப்பட்டுப் போனார். வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு, தமிழ் பழமொழிகளைத் தேடித் தேடி சேகரிக்கத் துவங்கினார். இதற்காக, தமிழகத்தின் பல்வேறு உட்கிடை கிராமங்களுக்கும் சென்று கள ஆய்வு செய்தார்.

விளைவாக, 3 ஆயிரத்து 644 அரிய தமிழ் பழமொழிகளைத் தொகுத்து, 523 பக்கங்கள் கொண்ட A Classified Collection of Tamil Proverbs நூலை 1897ல் வெளியிட்டார். புத்தகத்தைப் பார்த்தப் பிறகு, தமிழின் வளம் கண்டு மேலைநாடுகள் பிரமித்தன. தமிழின் பிரமாண்ட தொன்மையை உணர்ந்தன (இந்தப் புத்தகத்தை 1982ம் ஆண்டு புதுடில்லி ஏஷியன் எஜூகேஷனல் சர்வீஸ் அமைப்பு மறுபதிப்புச் செய்தது). அத்தோடு விட்டாரில்லை. ஐரோப்பியர்கள் தமிழை எளிதாக அணுகும் வகையில், A practical Tamil reading book for European beginners என்ற நூலையும் எழுதி வெளியிட்டார். தமிழின் புகழ் இன்று உலகின் திசைகளில் ஓங்கி ஒலிக்கிறது என்றால்... சமயம் பரப்ப வந்த ஹெர்மன் ஜென்சன் பாதிரியாரும் ஒரு காரணம். அவருக்கு நன்றி சொல்லி, இந்த வாரத்தை முடிக்கலாமா?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

1 கருத்து:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...