வெள்ளி, 15 ஜனவரி, 2016

இந்தப் பிஞ்சுகளின் வலி துடைக்க நீங்கள் தயாரா?

ன்பானவர்களே...
சில நிமிடங்கள் ஒதுக்கி, இந்தக் கட்டுரையை கடைசிவரை படிப்பீர்களா? ‘பூனைக்குட்டி’யின் நூற்றுக்கும் அதிக கட்டுரைகளுக்கு வைக்காத வேண்டுகோளை, இந்தக் கட்டுரைக்கு நான் வைக்க... நெஞ்சை கரைக்கிற காரணம் ஒன்று இருக்கிறது நண்பர்களே!


திருப்பூரைச் சேர்ந்தவர் மணிகண்டன் - வயது 36.. மனைவி ராதா (34), குழந்தைகள் மகாலட்சுமி (13), சபரி (6 வயது) ஆகியோருடன் கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கொண்டாடுவதற்காக டிசம்பர் மாதம் 24ம் தேதி சிவகாசியில் உள்ள சகோதரி வீட்டுக்கு காரில் கிளம்புகிறார். மணிகண்டனின் பெற்றோர் சுப்ரமணியன் (60), முத்துலட்சுமியும் (57) பயணத்தில் இணைந்து கொள்கிறார்கள். அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி என மொத்த உறவுகளுடன் மெத்த மகிழ்ச்சியாக ஆறு வயது சபரியும், அவனது அக்கா மகாலட்சுமியும் விடுமுறை கால வெளியூர் பயணம் கிளம்புகிறார்கள்.


யணங்களை... பெரியவர்கள் அலைச்சலாக, அலுப்பானதாக உணரலாம். குட்டீஸ்கள் உலகம் அப்படிப்பட்டதில்லையே! பயணங்கள் அவர்களுக்கு பள்ளிக்கூடங்களைக் காட்டிலும் அதிகம் கற்றுத் தருகிறது. ஒவ்வொரு வெளியூர் பயணம் முடிந்து திரும்புகையிலும் அவர்கள் புதிதாக சில விஷயங்களைக் கற்றுத் திரும்புகிறார்கள். பயணம் என்பது அவர்களுக்கு மாய உலகம். அந்த மாய உலகில் நுழைகிற சிலிர்ப்புடன் சிவகாசிக்கு கிளம்பினார்கள். உண்மையில், அவர்களுக்கு கற்றுத் தர கசப்பான... வெகு கசப்பான, வாழ்வின் மிகக்  கசப்பான ஒரு விஷயத்தை காலம் மறைந்து வைத்திருந்தது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த காருடன், எதிர்பாராதவிதமாக இவர்களது கார் பயங்கர வேகத்தில் மோதியது. விபத்துகள் எதிர்பார்த்து வருவதில்லை. ஒரு நொடியில் உலகைப் புரட்டிப் போட்டு விடக்கூடிய அணுகுண்டு சக்தி, விபத்துகளுக்கு உண்டு. அந்தக் குழந்தைகளின் உலகமும், அந்த ஒரு மோசமான நொடியில் புரட்டிப் போடப்பட்டது. பாசம் கொட்டி வளர்த்த அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி... அவர்களது உறவு சூழ் உலகம், ரத்தமும், சதையுமாக கண்ணெதிரே சிதைந்தது. ஆனால், அதை உணரக்கூடிய நிலையில் அவர்கள் இல்லை. உடல் முழுக்க பெரும் காயங்களுடன் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி, குழந்தைகள் இருவரும் ரத்தம் சிந்தி மயங்கிக் கிடந்தார்கள்.
றவுகளில் உன்னதமானது அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி உறவு. குழந்தை ஏறி மிதித்து விட்டுச் சென்றாலும்... தனக்கு வலிப்பதை உணராமல், குழந்தை கால் தவறி விழுந்து விடுமோ என பதறுகிற உள்ளம்... இந்த நான்கு உறவுகளுக்கு மட்டுமே வாய்க்கப்பெறும். ஒரு நொடி கவனக்குறைவால் நடந்த அந்த விபத்தை... விதி என்று சொல்வதா... வேறெந்த வார்த்தை சொல்லி அழைப்பதா என்று தெரியவில்லை. மகாலட்சுமி, சபரி என்ற இரு பிஞ்சுக் குழந்தைகளின் ஒட்டுமொத்த உலகமும், அவர்களது வரைபடத்தில் இருந்து அழிக்கப்பட்டது - நிரந்தரமாக!

கா கருணை கொண்ட மனிதர்கள் இந்த பூமியில் இன்னும் நிரம்பவே இருக்கத்தான் செய்கிறார்கள். மதுரை, கூடல் நகரைச் சேர்ந்த டாக்டர் அப்துல் காதர், அப்படிப்பட்ட ஒரு மனிதர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக் கிடந்த இரு குழந்தைகளையும் மீட்டு, மதுரைக்குக் கொண்டு வந்து, கே.கே.நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். மருத்துவச் செலவுகளுக்கு கணிசமாக பணமும் கொடுத்தார். பச்சிளம் பிஞ்சுகள் இருவருக்கும் உடல் முழுக்க ஆபரேஷன்கள். இருவருக்குமே கால், தொடை, கை எலும்புகள் முற்றாக உடைந்திருந்தன. அறுவைச் சிகிச்சைகள் அடுத்தடுத்து நடந்தன. ஆறு வயதுச் சிறுவன் சபரிக்கு விபத்து ஏற்படுத்திய காயம் காரணமாக கல்லீரலிலும் பாதிப்பாம். காயங்களில் இருந்து குழந்தைகள் இருவரும் படிப்படியாக இப்போது மீண்டு வருகிறார்கள்.

குழந்தைகளின் அத்தை (விபத்தில் இறந்த மணிகண்டனின் சகோதரி) ஜெமிமா மருத்துவமனையில் தங்கியிருந்து இருவரையும் கவனித்து வருகிறார். மகாலட்சுமிக்கு 13 வயது. சூழலின் விபரிதம் புரிந்து கொள்கிற வயது. ஆறு வயதுச் சிறுவன் சபரிக்கு என்ன நடந்தது என்பது இன்னும் புரியவில்லை. அப்பாவும், அம்மாவும், தாத்தாவும், பாட்டியும் இத்தனை நாளாக ஏன் வந்து பார்க்காமல் இருக்கிறார்கள்; அவர்கள் எங்கே இருக்கிறார்கள்.... என்ற கேள்வி அவன் மனதில் ஆழப்பதிந்து அழுத்துகிறது. வார்த்தைகளற்ற அவனது அழுகை மட்டுமே அதை உணர்த்துகிறது. அத்தனை பேரும் அந்த விபத்தில் அவனை விட்டுப் பிரிந்து போன தகவல்... பிஞ்சுக் குழந்தை என்பதால், இன்னும் அவனிடம் சொல்லப்படவில்லையாம்.

படத்தை ZOOM செய்து பாருங்கள். கார் கண்ணாடியின்
 வலது ஓரத்தில் குழந்தைகளின் பெயர்கள்...
த்தனை கொடூரம் பாருங்கள். பெற்றவர்கள் இறந்த தகவல் பிள்ளைகளுக்குத் தெரியாது. பிள்ளைகள் நிர்கதியாக, கேட்பாரற்றுக் கிடப்பது... பெற்றவர்களுக்குத் தெரியாது. நிலையற்ற மனித வாழ்வியலின் உச்சக்கட்ட சோகம். வாகனங்களின் இயங்கு விசையைத் திருகுவதற்கு முன்பாக, ஓட்டுபவர்கள் ஒவ்வொருவரும் மனதில் இறுத்திக் கொள்ளவேண்டிய விஷயம் இது. சாலைகளில் நாம் கடக்கிற ஒவ்வொரு விபத்துக்குப் பின்னாலும், கடலளவு சோகம் நம் கண்களுக்குத் தெரியாமல் மறைந்து கிடக்கும். இழப்பின் வலியை, இழந்தவர்கள் தவிர, வேறு யாராலும் உணர முடியாது. என்பதால், உங்கள் பயணங்களை இனி பாதுகாப்பானதாக மாற்றுங்கள்!


டல் முழுக்க ஆபரேஷன்கள் செய்யப்பட்டிருப்பதால் ஏற்பட்டிருக்கிற புற வலியைக் காட்டிலும் கொடுமையானது... தாயும், தகப்பனும், தாத்தாவும், பாட்டியும் இன்னும் நம்மை வந்து பார்க்காமல் இருக்கிறார்களே... தூக்கி வைத்து முத்தமிட்டு, அணைத்து, ஆறுதல் தராமல் இருக்கிறார்களே என்கிற அந்த ஏக்கமும், எண்ணமும் தருகிற மன வலி. அந்தக் காயத்துக்கு மருந்திட்டு, ஆற்றுகிற வல்லமை... காலத்துக்கு மட்டுமே உண்டு. நாட்கள் கடக்கிற போது, நடந்த விபரீதம் அவனுக்கு புரியலாம்; புரிய வைக்கப்படலாம். வாழ்க்கையின் புரியாத சவால்கள் இன்னதென்று அறிந்து கொள்ள அவனுக்கு இன்னும் சிறிதுகாலம் பிடிக்கலாம். எல்லாம் சரி! அவனது எதிர்காலம்...?

கூட இருந்து கவனித்துக் கொள்கிற அத்தை ஜெமிமா, ‘‘இருவரும் பிழைத்ததே பெரிய விஷயம். இன்னும் இவர்கள் முழுவதுமாக குணமாக வில்லை. அதனால், உறவுகள் இறந்த விஷயத்தை இன்னமும் இந்தக் குழந்தைகளிடம் தெரியப்படுத்த வில்லை...’’ என்கிறார்.

- நான், நாளிதழ் ஒன்றின் செய்திப்பிரிவில் பணிபுரிகிறேன். என்பதால், எனது பொழுது, செய்திகளுடன் இணைந்தது. தினமும், குறைந்தது நூறு செய்திகளையாவது கடந்து செல்ல வேண்டியிருக்கும். கோரமும், அவலமும், அக்கிரமும், வக்கிரமும் நிறைந்த செய்திகள் அன்றாடம் என்னைக் குறுக்கிடும். அவை செய்தி என்கிற வரையறை தாண்டி என்னை பாதிப்பதில்லை. எனக்குள் ஊடுருவுவதில்லை. ஆனால், இந்தச் செய்தி என்னை பாதித்தது. ஆறு வயது சபரியின் அழுகிற முகத்துடன் படமும், அதற்கான செய்தியும் எனது பார்வைக்கு வந்த போது... அதை முழுவதும் படித்த போது, மனதின் ஆழம் வரைக்கும் வலித்தது. செய்தி சேகரித்து வந்த நிருபரும், புகைப்படக் கலைஞரும் அந்த சம்பவத்தை வர்ணித்த போது, வலியின் அளவு இன்னும் அதிகமானது. அதிர்ச்சியில் இருந்து இன்னும் விலகாத சபரி, யாரைப் பார்த்தாலும் பயந்து அழுகிறானாம். போட்டோகிராபரை புகைப்படம் எடுக்கக் கூட விடவில்லையாம். ஒரே ஒரு நர்ஸிடம் மட்டுமே பாசத்துடன் ஒட்டிக் கொள்கிறானாம். வேறு யாரிடமும் செல்ல பயமாம். போட்டோகிராபரைப் பார்த்ததும் பயந்து போய், அந்த நர்ஸை தூக்கச் சொல்லி கைகளை உயர்த்திய படி அவன் அழுத காட்சியை விவரித்த போது....எனக்குள் எழுந்த உணர்வை வார்த்தைகளிட்டு இங்கே நிரப்ப முடியவில்லை.

ழக்கமான ஒரு செய்தியாக, சாதாரண ஒரு விபத்து செய்தியாக தலைப்பிட்டு அதை பக்கத்துக்கு அனுப்ப எனது மனம் உடன்படவில்லை. ‘இந்தப் பிஞ்சுகளின் வலி துடைக்க நீங்கள் தயாரா?’ என்று வாசகர்களுக்கு கேள்வியிட்டு பக்கத்துக்கு அனுப்பினேன். ஆயிரம் கோயில்களை தரிசிப்பதைக் காட்டிலும் அதிக புண்ணியம், இந்தச் செய்தியை வடிவமைப்பதில் கிடைக்கும் என பக்க வடிவமைப்பாளரை அழைத்து கூறினேன். ஜனவரி 14ம் தேதி, தினகரன் (மதுரை பதிப்பு) நாளிதழின் ஐந்தாம் பக்கத்தில் செய்தி பிரசுரமானது. டில்லி, மும்பை உள்ளிட்ட அனைத்து பதிப்புகளுக்கும் செய்தி அனுப்பப்பட்டு பிரசுரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. என்ன நோக்கத்துக்காக அந்த செய்தி வெளியிடப்பட்டதோ... அந்த நோக்கம் நிறைவேறியது. செய்தியை பார்த்ததும் ஏராளமான பொதுமக்கள் தொடர்பு கொண்டு உதவிக்கரம் நீட்ட உறுதியளித்திருக்கிறார்கள். உதவிகள் தொடர்கின்றன. வந்து குவியும் உதவிகள், இழப்பை எந்த விதத்திலும் ஈடுகட்டி விடமுடியாது. விபத்துக்கு முந்தைய நிமிடம் வரை தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடிய பாச உறவுகளை இழந்த - நிரந்தரமாக இழந்த - துயரை, எதை கொடுத்து தேற்றமுடியும்? அறியாத, பிஞ்சு வயதில் இத்தனை பெரிய இழப்பை கொடுத்த இயற்கை... அதை ஈடு செய்கிற விதத்தில் ஒரு சிறந்த எதிர்காலத்தை அந்தக் குழந்தைகளுக்கு அளிக்கும் என்ற மெய்யான நம்பிக்கையுடன் இந்தக் கட்டுரையை முடிக்க நினைக்கிறேன்.


அதற்கு முன்பாக,

பொருள் தேடி ஓடுவதே வாழ்க்கையென மாறிப் போன இன்றைய தேதியில், மனிதநேயம் மரித்துப் போனதாகவும், மரத்துப் போனதாகவும் ஒரு குற்றச்சாட்டு அழுத்தமாக வைக்கப்படுகிறது. மேலெழுந்தவாரியாக பார்க்கிற போது, அது உண்மையாகவும் படலாம். நிஜம் அப்படி அல்ல. மனிதநேயம் இன்னும் மரித்து / மரத்து விடவில்லை. அது, இன்னமும் பசுமையாக, துளிர்ப்பாக, உயிர்ப்பாகவே இருக்கிறது. ‘தினகரன்’ நாளிதழ் செய்தியைப் பார்த்தும், ஏராளமான பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு, உறவுகளை இழந்து பரிதவிக்கும் மகாலட்சுமி, சபரிக்கு கைகொடுக்க, ஆறுதல் அளிக்க முன்வந்திருக்கிற ஒற்றைச் சம்பவம்... அதற்கு உதாரணம்!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

7 கருத்துகள்:

  1. மோகனசந்திரன், திருப்பூர்15 ஜனவரி, 2016 அன்று PM 7:33

    மனதை உருக்கும் கட்டுரை. சிறுவனின் நிலை மனதை உருக்குகிறது. அவர்கள் பற்றிய விபரங்களை அளித்தால் உதவி செய்ய வசதியாக இருக்கும். அவர்கள் எந்த மருத்துவமனையில், இருக்கிறார்கள்? அவர்களை எப்படி தொடர்பு கொள்வது தெரியப்படுத்தவும். மோகனசசந்திரன், திருப்பூர்.

    பதிலளிநீக்கு
  2. தினகரன் வெளியிட்டுள்ள இச்செய்தி பாராட்டுக்குரியது. இதை வெறும் சாதாரண நிகழ்வாகப் பார்க்காமல், மிகவும் அழுத்தமான, கவலையளிக்கும் சூழ்நிலையில் உள்ள இக்குழந்தைகளின் நிலையை வெளியிட்டுள்ளது, அக்குழந்தைகளின் எதிர்காலப் பாதுகாப்புக்கு வழிவகை செய்துள்ளது.

    பதிலளிநீக்கு
  3. கிருஷ்ணகுமார், மிகவும் உருக்கமான வார்த்தைகளுடன் எழுததியிருக்கிறீர்கள். இந்தசிறுவனின் வலி துடைக்க உறுதியேற்போம். சிறுவன் எந்த ஊரில், எந்த மருத்துவமைனயில் இருக்கிறான். அதுபற்றிய தகவல்களை பதிவு செய்யுங்கள்.
    ரமேஷ், சென்னை

    பதிலளிநீக்கு
  4. இந்தச் செய்தியை படித்து முடித்தபோது, நெஞ்சம் முழுவதும் வேதனையே நிரம்பித் தளும்பியது. வாழ்க்கை முழுவதும் உடன் வரக்கூடிய இரத்த உறவுகளை இழந்துவிட்டு அந்தப் பிஞ்சுகள் எங்ஙனம் வாழப்போகின்றன என்பதை நினைக்கும்போது... அப்பப்பா... தாங்க முடியவில்லை. வெறுமனே வாசித்துவிட்டு கடந்து போகின்ற எங்களுக்கே இந்தச் செய்தியின் வெம்மை தாள முடியவில்லையே... செய்தியாக்கி... உரிய நிழற்படங்களை தாங்கொணாத வேதனையிலும் தந்திருக்கிற தங்களின் செய்தியாளரும் புகைப்படக்காரரும் உள்ளபடியே பாராட்டிற்குரியவர்கள்.

    கடந்த 1993ஆம் ஆண்டு சூடான் நாட்டில் நிலவிய கடும் வறட்சியின்போது, அங்குள்ள சூழலை நிழற்படமெடுத்து உலகுக்குத் தெரிவிப்பதற்காக புகைப்படச் செய்தியாளர் கெவின் கார்ட்டர் களப்பணிக்குச் செல்கிறார். அப்போது அவர் எடுத்த ஒரு படம் அந்நாட்டின் நிலைமையை தெற்றென விளக்கியது. வறட்சியில் உயிருக்குப் போராடியபடியே குற்றுயிரும் குலையுயிருமாய் கிடக்கும் குழந்தையொன்று, அதன் அருகே அக்குழந்தையின் சாவை எதிர்பார்த்து நின்று கொண்டிருக்கும் பிணந்தின்னிக்கழுகு என ஒருசேர எடுத்த அந்தப்படம், பின்னாளில் கெவின் கார்ட்டருக்குப் புலிட்சர் விருதைப் பெற்றுத் தந்தது. ஆனால் இதில் வேதனைக்குரிய செய்தி என்னவென்றால், அந்நிகழ்விற்குப் பிறகு பெரும் மன உளைச்சலுக்கு ஆளான கெவின் கார்ட்டர் மனவேதனை தாங்காமல் அடுத்த ஆறு மாதத்திற்குள் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிடுகிறார். இதற்குக் காரணம் உயிருக்குப் போராடிய அக்குழந்தையைக் காப்பாற்றாமல், வெறுமனே நிழற்படமெடுத்து மனிதப்பண்பைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டோமே... அக்குழந்தை போராடிய அவ்விடத்திலிருந்து ஐ.நா.வின் உதவி முகாம் சில கி.மீ. தொலைவிலிருந்தபோதும் அக்குழந்தையைத் தூக்கிச் சென்று காப்பாற்றாமல் விட்டுவிட்டோமே என்ற நெடுநாள் வேதனை அவரது தற்கொலைக்குக் காரணமாகியது. இதில் வேடிக்கை என்னவென்றால், அவர் நிழற்படமெடுத்த அக்குழந்தை காப்பாற்றப்பட்டுவிட்டது என்பதுதான். அக்குழந்தை இறந்துபோயிருக்கும் என்ற அனுமானத்தில் அப்புகைப்படக்கலைஞர் தனது உயிரை மாய்த்துக் கொண்டுவிட்டார்.

    அப்படியொரு மனஉளைச்சலுக்கு தாங்களும், தங்களின் செய்திக்குழுமமும் ஆளாகியிருப்பீர்கள். அதன் விளைவே தினகரன் ஏட்டில் வெளியான அந்தச் செய்தியும், நீண்டு கொண்டிருக்கும் உதவிகளும்... ஒரு செய்தியாளன் தனது பணி எல்லையையும் தாண்டி, தான் செய்ய வேண்டிய மனிதக்கடமையையே தாங்கள் செய்திருக்கிறீர்கள். வாழ்த்தும்! பாராட்டும்!

    இது போன்ற பல்வேறு உண்மை நிகழ்வுகள்... நம் தொப்புள்கொடி உறவுகள் வாழும் ஈழத்திலும் நிகழ்ந்திருக்கின்றன. நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. தாங்கள் குறிப்பிட்ட செய்தி அறியாமல் நிகழ்ந்த விபத்து... ஆனால், ஈழத்தில் நடந்தது இந்தியாவோடு இணைந்து சிங்களம் தெரிந்தே நிகழ்த்திய இனப்படுகொலை... இங்கேயாவது கண்ணீர் விடுவதற்கு உறவுகள் இருக்கின்றன. ஆனால் அங்கே... எந்த நாதியும் இல்லை...

    -இரா.சிவக்குமார்

    பதிலளிநீக்கு
  5. குழந்தையின் எதிர்காலம் நல்லபடியாக அமைய வேண்டும் என்று ஆண்டவனை வேண்டுகிறேன்...

    பதிலளிநீக்கு
  6. கிருஷ்ணகுமார், மிகவும் உருக்கமான வார்த்தைகளுடன் எழுததியிருக்கிறீர்கள். இந்தசிறுவனின் வலி துடைக்க உறுதியேற்போம்இந்தச் செய்தியை படித்து முடித்தபோது, நெஞ்சம் முழுவதும் வேதனையே நிரம்பித் தளும்பியது. வாழ்க்கை முழுவதும் உடன் வரக்கூடிய இரத்த உறவுகளை இழந்துவிட்டு அந்தப் பிஞ்சுகள் எங்ஙனம் வாழப்போகின்றன என்பதை நினைக்கும்போது... அப்பப்பா... தாங்க முடியவில்லை

    பதிலளிநீக்கு
  7. thangalin seithi padithen sir.migavum varuthamaaga ullathu sir.thangal pathiraikkyalaraaga irunthu kondu palveru panigalukku idaiyil ithu pondra sambavangalai ivvalvu siram merkondu eluthuvathu nalla visyamthaan.thangalin pani thodara vaalthukkal sir.ithu pondru seithigalai eduthu selvathe migaperiya visyam sir.natpudan L.Chokkalingam

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...