வெள்ளி, 1 ஜனவரி, 2016

ஆல் இஸ் வெல்... காரணம், கால்டுவெல்!

‘‘வெளிநாட்டு அறிஞர்கள் ஏராளமானோர் நம்ம மொழிக்காக ஆற்றியிருக்கிற சேவையை படிக்கும் போதே புல்லரிக்குது அய்யா. அவர்கள் பின்பற்றின வழியை கச்சிதமாக, கெட்டியாக பின்பற்றுவோம். பிறமொழிச் சொற்களை கூடிய வரை தவிர்க்கவும் தயாராகிட்டோம். இந்தக் கட்டுரை ஒரு சாவி மாதிரி ஜன்னலை திறந்து உலகத்தை காட்டீருச்சு. இனி எச்சரிக்கையாக இருப்போம். இப்பத்தான் நிம்மதி அய்யா...’’ என்று ‘படு சுத்தமான’ தமிழில் ராமேஸ்வரத்தில் இருந்து நண்பர் கடிதம் அனுப்பியிருந்தார்.

அவரது கனிவான கவனத்துக்கு: கடிதத்தில் இருந்த - ஏராளம், கச்சிதம், கெட்டி, தயார், சாவி, ஜன்னல், எச்சரிக்கை, நிம்மதி... இதெல்லாம் ‘சுத்தமான’ தமிழ் சொற்கள் அல்ல. தெலுங்கு, பாரசீக, அராபிய சொற்கள் என்பது நண்பருக்கும் - மட்டுமல்ல - நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?


நிம்மதி... என்ன மொழி?

றிந்தோ, அறியாமலோ... பேச்சிலும், எழுத்திலும் நிறைய பிறமொழிச் சொற்களை தெளித்துக் கொண்டிருக்கிறோம். இந்த நடைமுறையை விமர்சனப்படுத்துகிறவர்களும் இருக்கிறார்கள். பிறமொழி சொற்களை அப்படியே ஏற்றுக் கொள்வதில் தப்பில்லை. ஆங்கிலம் அப்படித்தானே உலக மொழியாக வளர்ந்தது என ஆமோதிக்கிறவர்களும் இருக்கிறார்கள். அந்த விவாதம், இன்னொரு நாள். அதேநேரம், தமிழில் கலந்திருக்கிற பிறமொழிச் சொற்களை இனம் கண்டு அறிந்து வைத்திருப்பது அவசியம். இல்லையா? முதல் பாராவில் நீங்கள் பார்த்த ‘தமிழ்’ சொற்கள் எல்லாம் என்ன மொழி?

ராளம், கச்சிதம், கெட்டி, எச்சரிக்கை, நிம்மதி - இதெல்லாம் தெலுங்கு சொற்கள். மிகுதி, ஒழுங்கு, உறுதி, விழிப்பாயிருத்தல், கவலையின்மை என்பது இந்தச் சொற்களின் பொருள். தயார் என்பது பாரசீகச் சொல். ஆயத்தம் என்று தமிழில் சொல்லலாம். சாவி, ஜன்னல் இரண்டும் போர்த்துக்கீசிய சொற்கள். இனி வரும் வாரங்களில் இதுவும் சேர்த்துப் பார்க்கலாம். ரைட்டா (இது ஆங்கிலச் சொல்!).

மிழ் இன்றைக்கு ஆல் இஸ் வெல் அந்தஸ்தில் இருக்கிறது என்றால்,.. அதற்குக் காரணம் கால்டுவெல். எப்படி? 1800ம் ஆண்டுகள் வரைக்கும், தமிழ் உள்ளிட்ட அத்தனை இந்திய மொழிகளுக்கும் சம்ஸ்க்ருதமே தாய் என்ற கருத்தாக்கம் நிலவி வந்தது. அதனை திட்டவட்டமாக மறுத்ததோடு, தமிழ் மிகச்சிறந்த செவ்வியல் மொழி. தனித்தே இயங்கும் வல்லமை கொண்டது. திராவிட மொழிக் குடும்பத்தின் தாய் என உறுதிப்படுத்தியவர் ராபர்ட் கால்டுவெல். சும்மா ஒரு பேச்சுக்கு இப்படி சொல்லி விட்டுப் போய் விடவில்லை. மிக நீண்ட, நெடிய ஆய்வு செய்து 1856ம் ஆண்டு அவர் எழுதி வெளியிட்ட ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (A Comparative Grammar of the Dravidian or South Indian Family Languages)’ என்ற நூல், நமது மொழி பற்றி நாம் அறிந்திராத பல ஆச்சர்யத் தகவல்களை அள்ளிக் குவித்தது.

நம்ம குடும்பம்!

* தமிழில் இருந்து பிறந்தவையே தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு மொழிகள். இவை திராவிட மொழிக்குடும்பத்தை சேர்ந்தவை.
* திராவிட மொழிக்குடும்பத்தில் பன்னிரண்டு மொழிகள் உள்ளன. இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு ஆகிய ஆறும் பண்பட்ட மொழிகள். தோடா, கோட்டா, கோண்டு (Gond), கோண்டு (Khond). ஒராவோன், ராஜ்மஹல் ஆகியவை பண்படா மொழிகள்.
* பண்பட்ட மொழிகளில் செம்மொழியாக இருப்பது தமிழே. அது மட்டுமே இன்று சம்ஸ்க்ருதத்தை விலக்கித் தனியாக நிற்கக்கூடிய மொழி.
* பிற செம்மொழிகளான சம்ஸ்க்ருதம், கிரேக்கம், லத்தீன் மொழிகளில் கூட தமிழ் சொற்கள் இடம் பெற்றிருக்கின்றன.
* தமிழில் வழங்கப்படும் அரிசி என்ற சொல்லே கிரேக்கத்தில் ‘அருசா’ என்றும், அங்கிருந்து மருவி, ஆங்கிலத்தில் Rice என்றும் உருவானது என்கிறார் கால்டுவெல்.
* தமிழில் மயிலிறகு, தோகை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. ஹீப்ரு மொழியில் மயிலிறகு ‘துகி’ என்று அழைக்கப்படுகிறது (பைபிளில் பல இடங்களில் ‘துகி’ என்ற சொல் வருகிறது). தமிழின் ‘தோகை’யில் இருந்து மருவியதே ஹீப்ருவின் ‘துகி’ என்கிறார் கால்டுவெல்.

வரலாறு... ஆர்வமா?

யர்லாந்து நாட்டில் 1814 மே 7ம் தேதி பிறந்த ராபர்ட் கால்டுவெல், கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் படிக்கிற காலத்திலேயே மொழியியல் வரலாற்று ஆய்வில் அதிக ஆர்வம் கொண்டார். 24வது வயதில் லண்டன் மிஷனரி சொஸைட்டி அமைப்புடன் சேர்ந்து சமயம் பரப்புவதற்காக 1838, ஜனவரி 8ம் தேதி சென்னை வந்தார். சமயம் பரப்ப, மொழி அறிவு முக்கியம் என்பதால், தமிழை ஆழ்ந்து படித்தார். நம்மொழியின் இலக்கிய, இலக்கண வளம், அவரை ஆரத் தழுவி, ஆக்கிரமித்தது. 1841ல் குரு பட்டம் பெற்று திருநெல்வேலி சென்று, அங்குள்ள இடையன்குடியில் தங்கி சுமாராக 50 ஆண்டுகள் சமயப்பணியுடன், தமிழ் பணியும் சேர்த்தே செய்தார். திருநெல்வேலியில் இருந்த காலத்தில் இவர் எழுதிய ‘திருநெல்வேலியின் அரசியல் பொது வரலாறு (A Political and General History of Tinnevely, 1881)’ நூல், வரலாறு படிப்பதில் ஆர்வம் கொண்டவர்கள் தவற விடக்கூடாத பொக்கிஷம்.

மிழ் கலாச்சாரம், மொழி அறிவை முழுமையாக பெறுவதற்காக சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு (இடையன்குடி) நடைபயணமாகவே சென்றார். வழியில் பல தமிழறிஞர்களை சந்தித்து, தனது மொழி அறிவை செதுக்கிக் கொண்டார். மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் புகழ்பெற்ற கிறிஸ்துவ பள்ளிக்கூடத்தை நிர்வகித்து வந்த ட்ரேஸியை சந்தித்து சமயப்பணிகள் குறித்த ஆலோசனைகள் பெற்றார். தனது கடைசிக் காலத்தை கொடைக்கானலில் கழித்த கால்டுவெல், 1891, ஆகஸ்ட் 28ல் மறைந்தார். கால்டுவெல்லின் விருப்பப்படி அவரது உடல் இடையன்குடியில் அடக்கம் செய்யப்பட்டது.

மிழ் இன்றைக்கு செம்மொழியாக மதிக்கப்படுகிறது என்றால்... கால்டுவெல் போன்றவர்களது ரத்தமும், வியர்வையும் கூட அதற்குக் காரணமாக இருந்திருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது சகோஸ்.
‘‘திராவிட மொழியின் தொன்மை நிலையை நிலைநாட்டப் பேரளவில் பெறலாகும் துணையினைச் செந்தமிழே அளிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். திராவிட மொழிகள் அனைத்தினும், அது (தமிழ்) நனிமிகப் பழங்காலத்திலேயே நாகரிக நிலை பெற்றுவிட்டதன் விளைவாகும் இது...’’ (திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் - பக்கம் 105). அந்த மாபெரும் மனிதருக்கு மரியாதை செலுத்தி, இந்த வாரத்தை நிறைவு செய்யலாமா...?
பின்குறிப்பு: பிதாகரஸ் தேற்றம்....? மன்னிச்சூ! அது அடுத்தவாரம்!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...