வெள்ளி, 25 டிசம்பர், 2015

கதம்... கதம்... குரகதம், துரகதம்!

‘‘படிக்கும் போதே உள்ளம் உருகிடுச்சு சார். கல்லறையில தமிழ் மாணவன்னு எழுதச் சொன்னது; தமிழ் புத்தகங்களை உடலோட சேர்த்து அடக்கம் பண்ண வெச்சதுனு... அட அடா...! ஒரு வெள்ளக்காரத்தொரயே நம்ம மொழி மேல இவ்வளவு பாசம் வெச்சிருந்தா, நாமெல்லாம் நம்ம மொழியை எவ்ளோ பாசமா பாதுகாக்கணும்..?’’ - கண்களைத் துடைத்தபடியே (!!), கலங்கிப் போய் பேசினார் தேனியில் இருந்து ஒரு நண்பர். உண்மைதான். வசிக்கிற ஊரின் வரலாற்றுச் சிறப்பு, உள்ளூர்காரர்களுக்கு எப்படித் தெரிவதில்லையோ, அதுபோலவே, பேசிக் கொண்டிருக்கிற தமிழ் மொழியின் மகத்துவமும் நம்மால் முழுமையாக இன்னும் உணர்ந்து கொள்ளப்படவில்லை. ரைட்டு! கண்களைக் கசக்குவதோடு கடமை முடிந்து விட்டதாக நினைத்து விடாமல், இனியாகிலும் நம்மொழியைக் கருத்தூன்றி கவனமாக படித்து, தவறின்றி எழுதி, பேசி, அதற்கு பெருமை சேர்க்க முயற்சிக்கலாம். சரியா?


அவரா... இவர்?

மிழாகவே, தமிழுக்காகவே வாழ்ந்து, மறைந்த இத்தாலி நாட்டு இயேசுசபை குரு கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி (Constantine Joseph Beschi) என்று நான் அறிமுகப்படுத்தினால், ஒருவேளை நீங்கள் ஏற இறங்கப் பார்க்கலாம். வீரமாமுனிவர் என்று அழகுத் தமிழில் அவர் பெயரைச் சொன்னால், ‘அட... அவரா?’ என்று ஆச்சர்யப்படுவீர்கள். அவரேதான் இந்தவாரம். இத்தாலி நாட்டில் உள்ள கேஸ்டிகிலியோன் (Castiglione) நகரில் நவம்பர் 8, 1680ல் பிறந்தார். 1709ல் இயேசுசபை குருவானதும், கிறிஸ்துவ மதம் பரப்பும் எண்ணத்துடன் 1710, ஜூன் மாதம் இந்தியா கிளம்பினார்.

கோவா வந்திறங்கிய வீ.மாமுனிவர், அங்கிருந்து தமிழகம் வந்து மதுரை அருகே காமநாயக்கன்பட்டியில் அதிக நாட்கள் தங்கியிருந்தார். மதம் பரப்ப வந்தவரை, தமிழ் தத்தெடுத்துக் கொண்டது. மறை பரப்பும் எண்ணத்துடன் தமிழ் கற்றவர், இந்த மொழியின் இலக்கண வளம் கண்டு பிரமித்துப் போனார். இலக்கியச் செழுமை கண்டு வியந்து போனார். முதல் வேலையாக ஆகச்சிறந்த ஆசான்களைச் சந்தித்து, தமிழின் சகல நீள, அகலமும் ஆழ்ந்து கற்கத் துவங்கினார். ஆர்வம் காரணமாக, வெகு சீக்கிரமே தமிழில் வியத்தகு புலமை பெற்றார்.

மிழில் ஆர்வம் அதிகமாக, ஆக... கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்ற தனது பெயரை தூக்கிக் கடாசி விட்டு, தைரியநாதன் என ‘தமிழ்’ பெயர் சூடிக் கொண்டார். இலக்கணத்தில் இன்னும் அதிகம் கற்றுத் தேர்ந்தப் பிறகு, தைரியநாதன் என்பதும் வடமொழிப் பெயர் என்றறிந்து, வீரமாமுனிவர் என்ற மிகத் தூய தமிழ் பெயருக்கு மாறினார். கா.ஜோ.பெஸ்கி, வீரமாமுனிவர் ஆன கதை இது. தமிழுக்காக இவர் ஆற்றிய பணிகளை பட்டியல் போட்டால், பல அத்தியாயங்கள் அதுபற்றி மட்டுமே பேச வேண்டியிருக்கும். என்பதால், சுருக்க்க்க்கமாக...

பரமார்த்த குருவும், சீடர்களும்!

* எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களையும் தொகுத்து தொன்னூல் விளக்கம் என்ற நூல் வெளியிட்டார்.
* பேச்சுத்தமிழுக்கு முதல்முறையாக இலக்கணம் அமைத்து ‘கொடுந்தமிழ் இலக்கணம்’ எழுதினார்.
* திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பாலை லத்தீனில் மொழிபெயர்த்தார்.
* திருப்புகழ், தேவாரம், நன்னூல், ஆத்திச்சூடி ஆகியவற்றை ஐரோப்பிய மொழிகளில் பெயர்த்து வெளியிட்டார்.
இன்றளவுக்கு நிற்கிற இவரது ஆகச்சிறந்த படைப்பாக பரமார்த்த குரு கதையைச் சொல்லலாம். நீங்கள், நான் அத்தனை பேரும் சிறுவயதில் படித்து, சிரித்திருப்போம்... இல்லையா? ஐரோப்பாவில் பிரபலமான இந்தக் கதையை 1728ல் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். தமிழின் முதல் நகைச்சுவை இலக்கியம் இது.
* மற்றொரு பிரமாண்ட சாதனை... தேம்பாவணி. 3 காண்டங்கள், 36 படலங்களாக, 3 ஆயிரத்து 615 விருத்தப்பாடல்களில் ஆன காப்பியம் இது. தமிழில் அமைந்த காப்பியங்களில், தமிழை தாய்மொழியாகக் கொள்ளாத வெளிநாட்டவர் எழுதிய காப்பியம் என்ற பெருமை இதற்குண்டு.
* கவிதை வடிவில் இருந்த தமிழ் இலக்கண, இலக்கியங்களை அனைவரும் படித்தறிகிற வகையில் உரைநடையாக மாற்றி பெருமை சேர்த்தார்.
* இலக்கியம், அகராதி, இலக்கணம், உரைநடை என தமிழின் சகல வகைகளிலும் பங்களிப்பு செய்தவர், வீரமாமுனிவர் தவிர வேறில்லை.
* வெளிநாட்டவரும் தமிழ் கற்க வசதியாக, ஆயிரம் தமிழ் சொற்களுக்கான விளக்கங்களுடன் தமிழ் - லத்தீன் அகராதி, 4 ஆயிரத்து 400 சொற்களுடன் தமிழ் - போர்த்துக்கீசிய அகராதிகளை உருவாக்கினார்.
* இதெல்லாம் விடவும், தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை முதன்முதலாக கொண்டு வந்தவர் இவரே. எ / ஏ, ஒ / ஓ, குறில், நெடில் எழுத்துகளில் சீர்திருத்தம் கொண்டு வந்தார். மெய்யெழுத்துக்கு புள்ளி வைக்காமல் எழுதுகிற வழக்கத்தை மாற்றி சீர்திருத்தினார். இப்போது வழக்கத்தில் இல்லை என்றாலும் கூட, எழுத்துச் சீர்திருத்தம் என்கிற விருட்சத்துக்கு விதையிட்டவர் இவர்.
- இன்னும் நிறைய, நிறைய நூல்கள் எழுதி தமிழுக்கு தொண்டாற்றியிருக்கிறார் வீரமாமுனிவர். தனது பெரும்பாலான படைப்புகளில் திருக்குறளில் இருந்து மேற்கோள் காட்டியிருக்கிறார். பிப்ரவரி 4, 1747ல் உலகை விட்டுப் பிரிந்த வீரமாமுனிவர், தமிழாகவே இன்னும் வாழ்கிறார். அவருக்கு மரியாதை செலுத்தி விட்டு, அடுத்த மேட்டருக்கு போலாம்!

பிதாகரஸ்... தமிழா?

குதிரை தெரியும்தானே... குதிரை? அந்தக் குதிரையை குதிரைன்னும் சொல்லலாம்.... இப்படியும் சொல்லலாம்: பரி, புரவி, இவுளி, கத்துகம், தூகம், மா, கனவட்டம், பாடலம், பாய்மா, அச்சுவம், கோரம், குரகதம், துரகதம், கற்கி, அரி, அயம், கோணம், துரங்கம், அத்திரி, பத்திரி, குந்தம். - இதெல்லாம் குதிரையைக் குறிக்கிற தமிழ் பெயர்கள்.

ட்டுரையை முடிக்கிற நேரத்தில், மானாமதுரையில் இருந்து நண்பர் தொடர்பில் வந்தார். ‘‘தமிழ் மொழியை உயர்வாக பேசுவதில் எனக்கும் உடன்பாடுதான். அதற்காக, இவ்வளவு பில்டப் தேவையா சார்? உலகமே வியக்கிற பிதாகரஸ் தேற்றம் பற்றி தமிழ் இலக்கணத்தில் இருக்கிறது என்பதெல்லாம் கொஞ்சம் ஓவராக இல்லை? எக்ஸ்ட்ரா பில்டப் நம்ம தொடருக்கு வேண்டாமே சார்...’’ - அவரது கருத்து மெய்யாகவே என்னை ஆச்சர்யம் கொள்ளச் செய்தது. பிதாகரஸ் தேற்றம், அந்தக் கணித முறை எழுதப்படுவதற்கு முன்பாகவே தமிழ் இலக்கணம் கணித்து வைத்திருப்பது சத்தியம் சாமீய். நம்மொழியின் அறிவியல், கணித செழுமைகளை நாம் அறிந்து கொள்ளத் தவறியதாலும், எடுத்துச் சொல்ல, ஆவணப்படுத்த மறந்ததாலும் வந்த வினை இது. அடுத்தவாரம்... பிதாகரஸ் தேற்றம், தமிழில் எப்படி இருக்கிறது என்று எளிமையாக... ஓ.கே?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...