ஞாயிறு, 20 டிசம்பர், 2015

சீயான் - விக்ரம்; சீயம் - சூர்யா?

‘செம்மொழி தொடரில் கன்டினியூட்டி ஜம்பிங் நிறைய இருக்கே. வயது, தோற்றத்துக்கு ஏற்ப மிருகங்களுக்கு தமிழ் மொழி சூட்டியிருக்கும் வெவ்வேறு பெயர்களை அறிமுகம் செய்ய ஆரம்பித்து, பாதியிலேயே நிறுத்தி விட்டால் எப்படி? ஞாபகமறதி பிரச்னைக்கு வல்லாரை கீரை ட்ரை பண்ணிப் பார்க்கலாமே!’ - திண்டுக்கல்லில் இருந்து இப்படி ஒரு கடுதாசி வந்திருந்தது. அடுத்தடுத்து, நிறைய முக்கிய விஷயங்கள் பேச வேண்டியிருந்ததால், கன்டினியூட்டி ஜம்பிங் இருந்திருக்கும். என்பதால், வல்லாரைக் கீரைக்கு இப்போது அவசரத் தேவையில்லை.


கேசரி... கடிக்கும்!

ற்கனவே யானை, பசு, காளை பார்த்தாச்சு. சிங்கம், புலிக்கு தமிழில் என்னென்ன பெயர்கள் இருக்கிறதாம்? சீயம், கேசரி, மடங்கல், அறுகு, பூட்கை, வயப்போத்து, வயமா, கண்டீரவம் - இதெல்லாமே, ஓங்கி அடிச்சா ஒன்னரை டன் அண்ணனின் தமிழ் பெயர்கள். சிங்கராசாவுக்கு தமிழில் இன்னும் கூட நிறைய பெயர் இருக்கு. மனப்பாடம் செய்ய கஷ்டம் என்பதால் இதுபோதும். புலி சார் இருக்காரே... அவருக்கு தமிழ் இலக்கியங்கள்ல என்னென்ன பெயர் இருக்கு? கொடுவரி, புல், சார்த்தூலம், குயவரி, சித்திரகாயம், வல்லியம், வயமா, வெல்லுமா, உழுவை, பாய்மா, வியாக்கிரம், வேங்கை.

திர்த்தாப்ல புலி அண்ணன் வந்து நின்னா... இந்தப் பெயர்களை சொல்லிப் பாருங்க. தமிழ் சினிமா பிளாஷ்பேக் போல ஏதாவது பழைய குடும்பக் கதை ஞாபகம் வந்து, உங்களை மன்னிச்சு விட்டாலும்... விடலாம்!

வந்தார் போப்!
மிழ் மொழியை இன்றைக்கு செம்மொழி என்று உலகம் கொண்டாடுகிறது என்றால், உலகின் மிக மூத்த மொழியாக அங்கீகரித்து, ஆராதிக்கிறது என்றால்... அதற்காக, பல ஃபாரீன் ‘தமிழ் குடிமகன்’களுக்கு நன்றிக்கடன் செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம் மக்களே. ‘மை நேம் ஈஸ் பாண்ட்...’ என்று ஜேம்ஸ்பாண்ட் பேசுகிற ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்டாலும், தமிழ் மொழியை உயிராக நேசித்துப் போற்றியவர் ஜி.யு.போப் எனப்படுகிற ஜார்ஜ் யூக்ளோ போப் (George Uglow Pope). 1820, ஏப்ரல் 24ல் (தேதியை குறிச்சுக்கோங்க) கனடா நாட்டின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் பிறந்தார். (அப்பா - ஜோன் போப், அம்மா - கேத்ரீன் யூக்ளோ போப்). ‘ங்கா... ங்கா...’ பருவத்திலேயே குடும்பத்துடன் பிரிட்டன் வந்து விட்டார்.
சமயப்பணி புரிவதற்காக, விவிலிய நூற்கழகம் இவரை தமிழகம் அனுப்ப முடிவு செய்தது தமிழுக்கு கிடைத்த பேறு. டைட்டானிக் படத்தில் நீங்கள் பார்த்திருப்பது போல, கைகாட்டி விடைபெற்றவாறு, 1839ல் தமிழகத்துக்கு கப்பலில் கிளம்பினார்.

சேக்ரட் குறள் படிச்சிருக்கீங்களா?

பிரிட்டனில் இருந்து தமிழகத்துக்கு அப்போது எட்டு மாத தூரம். கப்பலில் ஜாலியாக சீட்டாடி பொழுது கழிக்கவில்லை. தமிழ் படித்தார். தமிழறிந்த ஸ்காலராக சென்னையில் கரையிறங்கினார். வந்ததும் பெரிய, பெரிய ஜாம்பவான்களிடம் டியூஷன் சேர்ந்து தமிழ் இலக்கணம், இலக்கியம் கற்றுத் தேர்ந்தார். தமிழ் தவிர, தெலுங்கு, சம்ஸ்க்ருதம் ஆகியவற்றிலும் சார் எக்ஸ்பர்ட். 1850களில் தஞ்சையில் இருந்தபோது, தமிழுக்கு அளப்பரிய சேவையாற்றினார். தமிழ் புலவர்கள், துறவிகள் பற்றி ஆங்கில மொழியில் எழுதி நமது பெருமையை உலகறியச் செய்தார். மேற்கத்திய காரர்கள் கற்றறியும் வகையில் Elementary Tamil Grammar என்ற பெயரில் தமிழ் இலக்கணத்தை சுலபப்படுத்தி மூன்று பாகங்களாக எழுதினார்.

* 1886ல் ‘Sacred Kural’ என்ற பெயரில் நமது திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
* 1893ல் நாலடியார், 1900ல் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அவரது திருவாசக மொழிபெயர்ப்பு இன்றளவுக்கும் மிகச்சிறந்ததாக போற்றப்படுகிறது. இந்தப் பணியை செய்த போது... மறக்கவேண்டாம் மக்களே... அவருக்கு வயது 80 (முப்பது வயதிலேயே விஆர்எஸ் கேட்கிற இன்றைய யூத்களுக்கு போப் வாழ்க்கை ஒரு பாடம், இல்லையா?).
* புறநானூறு, புறப்பொருள் வெண்பாமாலை, திருவருட்பயன் நூல்களை பதிப்பித்து வெளியிட்டார்.
* தமிழ் மொழியின் இலக்கண / இலக்கிய வளங்கள் குறித்து எண்ணற்ற கட்டுரைகளை மேற்கத்திய பத்திரிக்கைகளில் எழுதி, நமது பெருமையை உலகின் கவனத்துக்குக் கொண்டு சேர்த்தார்.

தமிழ் மாணவன்
பாருங்கள்... சமயப்பணி செய்ய வந்தவர், நம்மொழியின் இனிமையில், வளமையில் மயங்கி, என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்று! 88வது வயதில், 1908, பிப்ரவரி 12ம் தேதி காலமான ஜி.யு.போப், மரணத்துக்கு முன்பாக, தனது கடைசி விருப்பங்களாக மூன்று விஷயங்களை நண்பர்களிடம் பதிவு செய்திருக்கிறார்.
* இறப்புக்குப் பின், தனது கல்லறையில் ‘ஒரு தமிழ் மாணவன் இங்கே உறங்கிக் கொண்டிருக்கிறான்’ என்ற வாசகம் செதுக்கப்பட வேண்டும் (அவரது கல்லறை லண்டனில் இருக்கிறது).
* தனது கல்லறைக்குச் செலவிடும் தொகையில் ஒரு சிறு பகுதியாவது தமிழ் மக்களிடம் நன்கொடையாக பெற்றதாக இருக்கவேண்டும் (அப்போதைய தமிழார்வலர்கள், தமிழ் ஆசான்கள் நிதி திரட்டி லண்டன் அனுப்பி வைத்தார்கள்).


* கல்லறையில் தன்னை அடக்கம் செய்யும் போது, தான் மொழி பெயர்த்து வெளியிட்ட திருக்குறள், திருவாசகம் நூல்களையும் தனது உடலுடன் சேர்த்து வைக்கவேண்டும்.

- யோசித்துப் பாருங்கள்... தாய்மொழியாக, உயிர்மொழியாகக் கொண்ட நீங்களும், நானும் கூட தமிழை இந்தளவுக்கு நேசிக்கிறோமா? ஜி.யு.போப்பிற்கு மனதார ஒரு வணக்கம் சொல்லி மரியாதை செலுத்தலாமா?
அப்பா, அம்மா ஆசை ஆசையாக வைத்த பெயரை தூக்கி எறிந்து, அழகு தமிழ் பெயர் சூடிக் கொண்ட இத்தாலி நாட்டு தமிழ் குரு பற்றி... அடுத்தவாரம்!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...