வெள்ளி, 18 டிசம்பர், 2015

கககபோ... புலிகேசி சொன்னா சரியா?

ம்சை அரசன் 23ம் புலிகேசி படம் ஞாபகம் இருக்கிறதுதானே? முறுக்கு மீசை புலிகேசி மன்னன் தனது அமைச்சரிடம் ‘கககபோ’ என்று ஸ்டைலாகச் சொல்வாரே! ‘கருத்துக்களை கச்சிதமாக கவ்விக்கொண்டாய் போ...’ என்கிற நீ...ள (!?) சொற்றொடரை படு சுருக்க்க்க்கமாக சொல்கிறாராம். நீங்களும், நானும் கூட சிறு வயதில் (இப்ப என்ன பெரிசா வயசாயிடுச்சி... என்கிற டென்ஷன் வேண்டற்க!) நண்பர்களிடம் இப்படி சொற்களின் சுருக்க வார்த்தைகளாக பேசி கிண்டலடித்திருப்போம். இல்லையா? தமிழ் இலக்கணப் படி இது சரியா?



வரும்... ஆனா...!

சொல்லின் முதலில் வரும் எழுத்து, வராத எழுத்து பற்றி கடந்தவாரம் பார்த்தோம். ஞாபகம் இருக்குதானே? இரண்டே பாயிண்ட்களில் இந்த விஷயத்தை நாம் மனதில் இருத்திக் கொள்ளமுடியும்.
* உயிர் எழுத்துகள் (‘அ’ முதல் ‘ஔ’ வரையிலான 12) ஒரு சொல்லுக்கு முதலில் வரும். மெய்யெழுத்துகள் (க், ங், ச், ஞ், ட், ண்... உள்ளிட்ட 18) சொல்லுக்கு இறுதியில் வரும்.
உயிரெழுத்துகள் தனியாக, சொல்லுக்கு இறுதியில் வராது மெய்யெழுத்துடன் இணைந்து, உயிர்மெய்யாக மாறினால், இறுதியில் வரலாம் (உயிர்மெய்: க, ங, ச, ஞ, ட, ண உள்ளிட்ட 18). அதேபோல, மெய்யெழுத்துகள் தனியாக சொல்லுக்கு முதலில் வராது. உயிர்மெய்யாக மாறினால், ஓ.கே.

ஓமகசியா... ஓகியாகா...

சொல் இலக்கணம் பற்றி, சுருக்க்க்கமாக இரண்டு விஷயங்கள் மட்டும் தெரிந்து கொண்டு, சொற்கள் பற்றிய இந்த சப்ஜெக்ட்டை முடித்து விடலாம். தமிழில், சொல் என்பது எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றி இலக்கணம் தெளிவாக வரையறுத்திருக்கிறது. எதை வேண்டுமானாலும் எழுதி விட்டு, அதை சொல் என்று சத்தியமடிக்கக் கூடாது.

* சொல் என்பது எழுத்துகளால் உருவானதாக இருக்கவேண்டும்.
அதாவது, எழுத்து இலக்கணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிற உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர் மெய்யெழுத்து, ஆய்த எழுத்து ஆகிய எழுத்துகளால் உருவாக்கப்பட்டிருந்தால் மட்டுமே அது சொல். எதிரே இருப்பவரின் கவனத்தைக் கவர்வதற்காக ‘க்க்க்கும்...’ என்று சமயத்தில், தொண்டையை கனைத்து செருமுவீர்களே... அந்த ‘க்க்க்கும்...’மை சொல்லாக கணக்கில் ஏற்றி விடக்கூடாது. சுட்டிக் குழந்தைகளை சிலர், ‘உல்லுல்ல்லுல்லாயி...’ என்று கிழக்காப்பிரிக்க பாஷையில் கொஞ்சுவார்கள். கவனிக்க... அதெல்லாம் சொல்லாகாது.

* சொல் என்பது பொருள் தருவதாக இருக்கவேண்டும்.
தமிழ் சினிமா பாடல்களை தொடர்ந்து கேட்பவராக இருந்தால், இந்த பாயிண்ட் சட்டென புரிந்து விடும். ‘ஓமகசியா... ஓகியாகா..., அசிலி பிசிலி..., டங் டங்.. டிக டிக டங் டங்...’ என்றெல்லாம் சொற்களைப் போட்டு பாடல் எழுதியிருப்பார்கள். 23ம் புலிகேசி படத்தில் வடிவேலு ‘கககபோ...’ என்பார். எழுத்துகளைக் கோர்த்து உருவாக்கியிருந்தாலும் கூட, இதையெல்லாம் சொல் என்று சொன்னால் தொல்காப்பியரும், பவணந்தி முனிவரும் கேஸ் போட கிளம்பி வந்து விடுவார்கள். எழுத்துகளால் உருவாகியிருந்தாலும் கூட, பொருள் / அர்த்தம் தராவிட்டால், அது சொல் அல்ல.

அடடா... அற்புதம்!

போனவாரம், ‘அற்புதம், நிகற்புதம், பூரியம், பிரமகற்பம்...’ மேட்டரைப் படித்து விட்டு, நிறைய நண்பர்கள் ஆர்வமாக லைனில் வந்தார்கள். ஒரு நண்பர் கேட்டார், ‘பூரியம், பிரமகற்பம்’ அளவெல்லாம் எதுக்கு சார்? அதை வெச்சி அந்தக் காலத்தில என்ன பெரிசா கணக்கிட்டிருக்க முடியும்?’ - அவரது கேள்வி நிறையவே ஆச்சர்யம் தந்தது. தமிழ் என்பது நமது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள உதவுகிற ஒரு கருவி (மொழி) மட்டுமே அல்ல. அதையும் தாண்டி நம்மொழியில் அறிவியல் இருக்கிறது. கணிதம் இருக்கிறது. பிதாகோரஸ் தேற்றம் இப்போது படிக்கிறீர்களே... தமிழ் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே, போகிற போக்கில் அதை சொல்லி வைத்திருக்கிறது. தமிழில் இல்லாத அறிவியல் விஷயங்களே இல்லை. நம்புங்கள்... நட்சத்திரங்களின் எண்ணிக்கையை தமிழ் வகுத்து வைத்திருக்கிறது. நட்சத்திரங்களின் எண்ணிக்கையை எந்த அளவில் குறிப்பிடுவதாம்? அதற்குத்தான் இந்த பூரியம், நிகற்புதம், பிரமகற்பம் அளவுகள். இப்ப கேட்ச் பண்ணீட்டிங்களா?

‘தமிழ் மொழியில் அறிவியல், கணித விஷயங்கள் இருக்கிறதா.... அடடே! எனக்கு தெரியவே தெரியாதே’ என்று ஆச்சர்யப்படுகிறீர்களா? நம்மொழியின் மகத்துவம், அருமை, ஆற்றல், பிரமாண்டம்... நமக்கு மட்டும்தான் தெரியவில்லை. நம்மைத் தவிர, மற்ற அத்தனை பேருக்கும் நன்றாகவே தெரிந்திருக்கிறது. இதுபற்றி தனியாக ஒரு தொடர் எழுதுகிற அளவுக்கு விஷயம் இருக்கிறதாக்கும். தமிழ் மொழியின் வல்லமை கண்டு நெக்குருகிப் போய் டோட்டல் சரண்டர் ஆன வெளிநாட்டு மேதைகள் பற்றி தெரியுமா? அப்பா, அம்மா வைத்த பெயரை அகற்றி விட்டு, படு தூய தமிழ் பெயர் சூட்டிக் கொண்டதோடு அல்லாமல், கல்லறையிலும், ‘தமிழ் மாணவன் இங்கு உறங்கிக் கொண்டிருக்கிறான்’ என்று வாசகம் பொறிக்கச் சொன்னவரைப் பற்றி கேள்விப் பட்டதுண்டா? தமிழுக்காக வாழ்ந்த, தமிழாகவே வாழ்ந்த வெள்ளைக்கார அற்புத மனிதர்கள் பற்றி அடுத்தவாரம்!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

1 கருத்து:

  1. மெய்யெழுத்துக்கள் 18-ம் சொல்லின் இறுதியில் வாராது. ண், ம், ய், ர், ல், ழ், ள், ன் ஆகியவை மட்டுமே சொல்லின் இறுதியில் வரும்.

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...