சனி, 12 டிசம்பர், 2015

பெரியாறு உடையுமா; கேரளா அழியுமா?

‘‘சென்னையில் 24 மணிநேரத்தில் 50 செ.மீ. மழை பெய்தது போல, பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்தால் அது, அணையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறிவிடும் என கேரள மக்கள் பயப்படுகின்றனர். பெரியாறு அணை தனது உறுதியை இழந்து விட்டது. அது உடையுமானால், கேரள மாநிலத்தில் உள்ள ஐந்து மாவட்ட மக்கள் பெரிய பாதிப்புக்குள்ளாவார்கள். புதிய அணை கட்டுவது ஒன்றே தீர்வு...’’ - என்கிற கலகக்குரல் மூலமாக, ஓய்ந்திருந்த பெரியாறு அணை பிரச்னையில் மீண்டும் நெருப்பு பற்ற வைக்கிறார் உம்மன் சாண்டி - சோலார் பேனல், சரிதா நாயர் CD விவகாரங்களில் இருந்து மலையாள மக்களின் கவனத்தை உடனடியாக திசை திருப்ப விரும்புகிற கேரள மாநிலத்தின் முதலமைச்சர்.


உச்சநீதிமன்றம் கொடுத்த அனுமதிக்குப் பிறகு பென்னிகுக் கட்டிய பெரியாறு அணை அடுத்தடுத்த இரு ஆண்டுகளும் அனுமதிக்கப்பட்ட 142 அடி அளவை தொட்டிருக்கிறது. பேபி அணையை பலப்படுத்தி விட்டால், மாட்சிமை மிகுந்த நீதிபதிகள் குழு ஒப்புதல் கொடுத்துள்ள படிக்கு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ள முடியும். சமீபத்தில் அணையை பார்வையிட்ட நடுவர் குழு, பேபி அணையை பலப்படுத்தும் தமிழக அணையின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் வேலை வைத்துக் கொள்ளக்கூடாது என்று கேரளாவுக்கு கடிவாளம் போட்டு விட்டது. என்பதால், 152 அடி என்பது தொட்டு விடும் தூரம்தான்.


இப்படிப்பட்ட சூழலில்தான், கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி, நீர்வளத்துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப் மற்றும் அதிகாரிகள் குழு கடந்த வாரம் (டிசம்பர் 9) டெல்லி விமானம் பிடித்துக் கிளம்பியது. டிசம்பர் 11ம் தேதி பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களை சந்தித்து பெரியாறு அணை மீதான, தங்களது புகார் பட்டியலை கொடுத்திருக்கிறது. பிரதமருடன் சந்திப்புக்குப் பிறகு வெளியே வந்த உம்மன் சாண்டி நிருபர்களுக்கு அளித்த விரிவான பேட்டியின் ஒரு சில வரிகள்தாம்... முதல் பாராவில் நீங்கள் படித்தது.


சென்னையைப் போல வௌ்ளம் வந்து கேரளா அழிந்து விடும் என்கிற உம்மன் சாண்டியின் கவலையை நாம் அத்தனை சுலபத்தில் ஒதுக்கித் தள்ளி விடமுடியாது. மனித உயிர்கள் மற்ற எதையுடன் விட விலையேறப் பெற்றவை. உயிர் பயத்தில் இருக்கிற மலையாள மக்களுக்கு பாதுகாப்பு மிக முக்கியம். என்பதால், உம்மன் சாண்டி மற்றும் அவரது சகாக்களுக்கு விளக்கம் அளித்துப் புரிய வைக்கிற கடமை நமக்கு இருக்கிறது. ஒரு தமிழனாகவோ, மலையாளியாகவோ இந்தப் பிரச்னையை அணுகாமல், மிகுந்த நடுநிலையுடன் விவாதிக்கவேண்டிய கட்டாயம் நமக்கிருக்கிறது.

சாண்டியின் முதல் கவலை... அணை உடைந்து விடும். என்பதால், பெரியாறு அணையை உடைத்து விட்டு, புதிய அணை கட்டவேண்டும். உண்மையில், உடைகிற நிலையிலா இருக்கிறது பெரியாறு அணை?

ஒரு தனிநபர் பொய் சொல்வதை சகித்துக் கொள்ளலாம். ஒரு அரசாங்கமே, ஒரு முதலமைச்சரே பொய் சொன்னால், என்ன செய்வது? முதலில் அந்த அணையின் கட்டுமானத்தை புரிந்து கொள்ளவேண்டும். புவியீர்ப்பு விசையை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்ட GRAVITY DAM  அது. புரிகிற மொழியில் சொல்வதானால், அணையில் தேங்கியிருக்கும் நீரின் அழுத்தம், அடர்த்தி, அலைகள் ஆகியவற்றை தனது சுய எடையால் தாங்கிக் கொள்ளும் வகையில் பெரியாறு அணை கட்டப்பட்டிருக்கிறது.
 அதாவது, அணையின் மேல் பகுதியில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக கீழ் பகுதி வரைக்கும் அகலம் / பருமன் கூடிக் கொண்டே போகும். வலுவான பாறைகளின் மீது அமர்த்தப்பட்டிருக்கிற அணையின் அடிப்பகுதி மிக அதிக எடை கொண்டது. இதுபோன்ற அபரீமிதமான தொழில்நுட்ப வடிவமைப்பில் கட்டப்பட்ட அணைகள் இன்றளவும் உலகளவில் மிகக் குறைவே. இவற்றின் பலம் அலாதியானது என்று அறிவியல் ரீதியாக  நிரூபிக்கப்பட்டிருக்கிறது.


சரி. ஆவணங்களில் இருக்கிற விஷயங்களை மட்டும் வைத்துக் கொண்டு உயிருடன் விளையாடக் கூடாது. என்பதால், அணையின் பலம் இன்றைய தேதியில் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக உச்சநீதிமன்றம்  ஒரு சிறப்புக் குழுவை நியமித்தது. ஐந்து பேர் கொண்ட அதிகாரமளிக்கப்பட்ட குழு உருவாக்கப்பட்டது. ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான இந்தக் குழுவில் தமிழகம் சார்பில் ஏ.ஆர்.லட்சுமணன், கேரளா சார்பில் கே.டி.தாமஸ் (இருவருமே உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகள்), மத்திய நீர்வளத்துறை அமைச்சக முன்னாள் செயலாளர் சி.டி.தத்தே, மத்திய நீர்வள ஆணையத்தின் ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர் டி.கே.மேத்தா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். தத்தே, மேத்தா இருவரும் இந்தத் துறையில் நிபுணர்கள். உலகின் அதிநவீன தொழில்நுட்பக் கருவிகளின் துணைகொண்டு இவர்கள் அணையின் உறுதித்தன்மையை சோதித்தனர்.

அணை கட்டுமான பணிகளின் போது...
இவர்கள் மட்டுமின்றி, நாட்டில் மிக முக்கிய அறிவியல் தொழில்நுட்ப ஜாம்பவான்கள் வரவழைக்கப்பட்டு அணையின் உறுதித்தன்மையை ஆராய்ந்தார். அப்போது மத்திய ராணுவ அமைச்சராக இருந்த ஏ.கே.அந்தோணி, தனது துறையில் இருந்த கடற்படை வீரர்களை தன்னிச்சையாக அனுப்பி வைத்தார். அவர்களும் அணையின் அடியாழம் வரை மூழ்கிச் சென்று அதிர்வலைகளை அனுப்பி ஆராய்ந்தார்கள். அணையில் அடிக்கு ஒரு இடத்தில் துளை போட்டு ஆய்வு நடந்தது. ‘போக்ரான் சோதனை’ ஒன்று தவிர, மற்றெல்லாம் நடத்திப் பார்த்தது இந்தக் குழு. இறுதியாக, தங்களது அறிக்கையை உச்சநீதிமன்றத்துக்கு இந்த அதிகாரமளிக்கப்பட்ட குழு சமர்ப்பித்தது. அதன்படியே, அணை மிக பலமாக இருப்பதாக உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இவர்கள் தவிர, கேரள அரசாங்கம் தன்னிச்சையாக பல்வேறு ஐஐடிகளில் இருந்து நிபுணர்களை வரவழைத்து அணையின் பலத்தை ஆராய்ந்தது. ஆனால், இன்றைக்கு வரை, அந்த ஆய்வறிக்கை தகவல்களை அம்பலப்படுத்தாததன் பின்னணி என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. இப்போது, ‘சர்வதேச நிபுணர்கள் அடங்கிய குழுவைக் கொண்டு அணையை ஆய்வு செய்ய வேண்டும்’ என்கிறார் சாண்டி. இந்தியாவில் இருக்கிறவர்களின் அறிவுத்திறன் மீது அவருக்கு அப்படி ஒரு நம்பிக்கை. இந்திய பொறியியல் கட்டுமான நிபுணர்கள் சங்கம்தான் சாண்டிக்கு பதில் தரவேண்டும். ஒரு வாதத்துக்கு, சாண்டியின் கருத்தை ஏற்றுக் கொண்டாலும்... ஆரம்பத்திலேயே இதைச் சொல்லியிருக்கலாமே? ‘நம்மூர் குழு வேலைக்கு ஆகாது. ஃபாரின் ஆட்கள்தான் தேவை’ என்று ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தால்... இவ்வளவு கால / பொருள் விரயமாகியிராதே.

நீதிபதி கே.டி.தாமஸ்
அணையால் ஒரு ஆபத்தும் இல்லை. அது மிக உறுதியாகவே இருக்கிறது என்று கேரள அரசின் அப்போதைய அட்வகேட் ஜெனரல் தண்டபாணி, மத்திய நீர்வளக் கமிஷனின் முன்னாள் தலைவர் கே.சி.தாமஸ் இருவரும் சத்தியமடித்துச் சொல்லியிருக்கிறார்கள். இங்கு நாம் கவனிக்கவேண்டிய விஷயம்... இருவருமே மலையாளிகள். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும், அணையின் பலத்தை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட ஐவர் குழுவில் இடம் பெற்றிருந்த கேரள அரசுப் பிரதிநிதியுமான கே.டி.தாமஸ், ‘‘பெரியாறு அணை பிரச்னையை அரசியலாக்கி, பொதுமக்கள் மத்தியில் உணர்ச்சிகளைத் தூண்டி விட நடக்கும் முயற்சி துரதிர்ஷ்டவசமானது. அணை பாதுகாப்பானது என்பதை நான் ஏற்கிறேன். அணைக் கட்டுமானப் பொறியியல் வல்லுனர்களால் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இதை நான் ஒப்புக் கொள்கிறேன்...’’ என்று தெரிவித்திருக்கிறார். கே.டி.தாமஸ் சாரும் மலையாளிதான்!


என்றால், உம்மன் சாண்டி ஏன் அணை உடைந்து விடும் என்று கீறல் விழுந்த ரெக்கார்ட் போல திரும்பத் திரும்பச் சொல்கிறார்? அணையின் பலம், பலவீனம் பற்றி அறிந்து கொண்டு, புரிந்து கொண்டு பேசுகிற அளவுக்கு தொழில்நுட்ப அறிவு கொண்டவரா அவர்?

அப்படியெல்லாம் இல்லை. இது முழுக்க, முழுக்க அரசியல். அரசியலன்றி வேறெதுவும் இல்லை. கடந்தமாதம் கேரளாவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சாண்டியின் காங்கிரசை குப்புறத் தள்ளி விட்டு, மார்க்சிஸ்ட் கட்சி டாப்புக்கு வந்திருக்கிறது. இப்போதைக்கு எதையாவது செய்து காங்கிரஸ் இமேஜை மீண்டும் மலையாள மக்கள் மத்தியில் நிமிர்த்திக் காட்டவேண்டும். தவிர, சோலார் பேனல் ஊழல் விவகாரம் அங்கு நாற்றமடித்துக் கிடக்கிறது. தனிப்பட்ட முறையில் உம்மன் சாண்டியே உள்ளே சிக்கி தள்ளாடுகிறார். சரிதா நாயரும், சாண்டியும் சேர்ந்திருக்கிற டிவிடி இருப்பதாக அங்கு வரும் குற்றச்சாட்டுகளால் மலையாள மக்கள் ஆளும் காங்கிரஸ் மற்றும் சாண்டி சார் மீது கடும் கோபத்திலும், கொந்தளிப்பிலும் இருக்கிறார்கள். உடனடியாக, ஒரு குண்டு வெடித்து அவர்களை திசை திருப்பவேண்டும். அதற்கு, பெரியாறைத் தவிரவும் பெரிய விஷயம் அவரிடம் இல்லை. புரிந்ததா?

‘மிகப் பழமையான அந்த அணை, நிலநடுக்கம் வந்தால் உடைந்து போகும்’ என்கிறாரே உம்மன் சாண்டி. நிலநடுக்கம் வந்தால் அணை உடைந்து போகும்தானே? சாண்டி சொல்வதில் உள்ள உண்மையை நாம் ஏன் உணரவில்லை?

ஆரம்பத்தில் படித்த GRAVITY DAM விஷயம் மீண்டும். பெரியாறு அணையின் பலம், அதன் மாபெரும் எடை. மேலிருந்து கீழாக, அகலமாகிக் கொண்டே செல்கிற விதத்தில் புவியீர்ப்பு விசைத் திறன் கொண்டு இந்த அணை கட்டமைக்கப்பட்டிருக்கிறது. என்பதால், நிலநடுக்கங்கள் அணைக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. புவியியல் ரீதியில் பாதுகாப்பாக இருக்கிறது என்று (நாம் சொல்லவில்லை) தொழில்நுட்ப நிபுணர்கள் உறுதி செய்திருக்கிறார்கள். அவர்களின் அறிக்கையின் படி உச்சநீதிமன்றமும் உறுதி செய்திருக்கிறது. அப்பீல்களுக்குப் பிறகு, உச்சநீதிமன்றத்தின் மிக உயர்ந்த Constitutional Bench எனப்படுகிற அரசியல் சாசன அமர்வு இந்த அறிக்கையை ஏற்று, அணை நீர்மட்டத்தை உயர்த்த ஒப்புதல் அளித்திருக்கிறது.

இன்னொரு அபத்தமும் சாண்டியின் குற்றச்சாட்டில் இருக்கிறது. சென்னை போல பெருமழை பெய்தால் அணை தாங்காது என்கிறார். சென்னை நிலைமையை, பெரியாறுடன் ஒப்பிடுவதே தவறு. சென்னை மழை என்பது எதிர்பாராதது. பெரியாறு அணை இருக்கிற இடம் மிகுந்த மழைப்பொழிவு கொண்ட பகுதி என்று தெரிந்தேதான் பென்னிகுக் அங்கு அணை கட்டினார். நிறைய மழை பெய்தால்தானே, அணைக்கு தண்ணீர் கிடைக்கும். மழை பெய்கிற இடத்தில் அணை கட்டுவார்களா... இல்லை பாலைவனத்தில் போய் கட்டுவார்களா? ஆகவே, எத்தனை பெரிய மழை பெய்தாலும் கவலை இல்லை. தாங்கக்கூடிய அளவுக்கே கட்டுமானம் இருக்கிறது.


அதெல்லாம் சரி. நிலநடுக்கம் வந்து அணை உடைந்து விட்டால்...? நிலநடுக்கப்பகுதியில் அணை அமைந்திருக்கிறது என்பது உண்மைதானே?

இடுக்கி அணை (பெரியாறி,ல் 136 அடி மட்டுமே தேக்கப்படும்போது)

ஒரு விஷயத்தை இங்கே நாம் புரிந்து கொள்ளவேண்டும். பெரியாறு அணை மட்டுமல்ல. ஒட்டுமொத்தக் கேரள மாநிலமும் நிலநடுக்க அபாயப்பகுதி மூன்றாம் அடுக்கில் தான் (SEISMIC ZONE - 3) அமைந்திருக்கிறது. சரியா? மக்கள் பாதுகாப்புத்தான் முக்கியம் என்றால், சிறிதும், பெரிதுமாக அங்கு இருக்கிற 31 அணைகளையுமே இடிக்க வேண்டும். அதுதான் மக்களுக்கு உத்தரவாதமான பாதுகாப்பு. செய்வாரா சாண்டி? அணை கட்டி அவர்கள் என்ன விவசாயமா செய்கிறார்கள்? அங்கு எதற்காக அணைக்கட்டுகள்?

இடுக்கி அணை (பெரியாறில் 142 அடி தேக்கப்பட்டப் பிறகு)

அதை விடுங்கள். பெரியாறு அணையில் இருந்து ஜஸ்ட்... 45 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது இடுக்கி அணை. பெரியாறு அணையை விட ஏறத்தாழ எட்டு மடங்கு பெரிய அணை. உலகின் பிரமாண்ட அணைகளுள் இதுவும் ஒன்று. ஆசியாவின் உயரமான ARCH DAM பட்டியலில் இது இரண்டாவது. 155 அடி உயரமுள்ள பெரியாறு அணையின் நீர் கொள்ளளவு வெறும் 15.5 டிஎம்சி. இடுக்கி அணையுடன் ஒப்பிடும் போது பெரியாறு அணை... சும்மா ஜூஜுபி. 555 அடி உயரம் கொண்ட இடுக்கி அணையின் நீர் கொள்ளளவு 72 டிஎம்சி. இப்போது ஒரு கேள்வி. பெரியாறா... இடுக்கியா? எந்த அணை உடைந்தால் மக்களுக்கு அதிக பேரழிவு? பெரியாறு அணையை நிலநடுக்கம் உடைத்து நொறுக்கும் என்றால், அங்கிருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கிற இடுக்கி அணையை மட்டும் சும்மா வந்து முத்தமா கொஞ்சும்? கேரள மக்களின் உயிர் மீது சாண்டிக்கு உண்மையிலேயே அக்கறை, அன்பு, பாசம், பற்று... மேற்கண்டவற்றில் ஏதாகிலும் ஒன்று இருக்குமேயானால், முதலில் இடுக்கி அணையை இடிப்பது பற்றித்தான் யோசிக்கவேண்டும். நான் சொல்வது சரிதானே?

அப்புறம் எதற்காக பெரியாறு அணையை திரும்பத் திரும்பப் பிரச்னை ஆக்குகிறார்கள் கேரள அரசியல்வாதிகள்?

காரணம் இருக்கிறது. கேரள மாநிலத்தின் மின் உற்பத்தியை மனதில் கொண்டு 1976ல் பிரமாண்ட இடுக்கி அணை கட்டப்பட்டது. கட்டி முடித்தப் பின் பார்த்தால்... தண்ணீர் வந்து அணை நிரம்புகிற பாட்டைக் காணோம். பெரியாறை உடைத்தால், அந்தத் தண்ணீரை அப்படியே கொண்டு வந்து இடுக்கியில் நிரப்பிக் கொள்ளலாம் என்று திட்டம் போட்டார்கள். அதற்கு செயல் வடிவமும் கொடுத்தார்கள். 1979 அக்டோபர் 16ம் தேதி வெளியான மலையாள மனோரமா நாளிதழில் முதன்முதலாக அந்தச் செய்தி வெளியானது. ‘பெரியாறு அணைக்கு நிலநடுக்க அபாயம்’. திட்டமிட்டு செய்தி வெளியிட்டார்கள். அன்று துவங்கி இன்றைக்கு வரைக்கும் சொன்ன பொய்யை திரும்பத் திரும்ப அலுக்காமல் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.


இது தவிர, இன்னொரு காரணமும் இருக்கிறது. தமிழகத்து மலைத்தொடரில் உற்பத்தியாகிற பெரியாறு நதியின் தண்ணீருக்கு அலாதி சுவை உண்டு. அணையை தகர்த்துக் கட்டி விட்டால், அவ்வளவு தண்ணீரையும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு பட்டா போட்டுக் கொடுத்து விடலாம். பெப்சி, கோககோலாவுக்கு தாமிரபரணியையும், பாலக்காட்டையும் எழுதிக் கொடுத்தது போல.


எல்லாம் சரி. ஒரு வாதத்துக்காகவே வைத்துக் கொள்வோம். ஒருவேளை பெரியாறு அணை உடைந்து போனால்...?

பெரியாறு அணையும், பிற பகுதிகளும்... புவியியல் அமைப்பு கூறும் உண்மை

உங்களிடம் GOOGLE EARTH இருந்தால், பெரியாறு அணை அமைந்திருக்கிற நிலப்பரப்பு, அணை உடைந்தால் அழிந்து போகும் என்று சாண்டி வகையறாக்கள் சொல்கிற நிலப்பரப்புகளையும் போட்டுப் பாருங்கள். ஒரு உண்மை பளீரென புலப்படும். எத்தனை பெரிய பொய்யை ஒரு மாநில அரசாங்கமும், அதன் உயர்ந்த முதல்வரும் கூசாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தால்... மக்களே, மெய்யாகவே நீங்கள் அதிர்ந்து போவீர்கள்.

மலை உச்சியில் இருக்கிற நகரங்களுக்கு வெகு கீ....ழே ஓடுகிறது பெரியாறு.
 இது எப்படி மேலே வந்து அழிக்கும்?

கடல் மட்டத்தில் இருந்து பெரியாறு அணை 2 ஆயிரத்து 889 அடி உயரத்தில் இருக்கிறது. அது உடைந்தால் அழிந்து போகும் எனச் சொல்லப்படுகிற பகுதிகள் எத்தனை அடி உயரத்தில் இருக்கிறது என்பதை Google Earth உதவியுடன் உறுதி செய்து கொள்ளலாமா? குமுளி - 3 ஆயிரத்து 100 அடி உயரம். வண்டிப் பெரியாறு 3 ஆயிரத்து 350 அடி உயரம். பாம்பனாறு - 3 ஆயிரத்து 750 அடி உயரம். ஏலப்பாறை - 4 ஆயிரத்து 850 அடி உயரம். என்னா ஒரு டுபான்ஸ் பாருங்கள்...? 2 ஆயிரத்து 889 அடி உயரத்தில் இருக்கிற அணை உடைந்து, 4 ஆயிரத்து 850 அடி உயரத்தில் இருக்கிற ஏலப்பாறை மூழ்கி விடும் என்று சாண்டி சொல்கிறார். கேப்பையில் நெய் வடிகிறது என்கிறார் திருவாளர் சாண்டி. சொன்ன பொய்யை திரும்பத் திரும்பவும் சொல்லி உண்மையாக்க முயல்கிற கோயபல்ஸ் தத்துவத்தை சாண்டி கையில் எடுத்திருக்கிறார்.

அப்படியானால், பெரியாறு அணை நிஜமாகவே பாதுகாப்பானதுதானா?


On a worst case scenario, even if the dam breaks (nobody wants it), the Idukki dam can easily accommodate the 15 TMC water. Even if it is full at the time, the water takes four hours from Mullaiperiyar dam (MP) to travel 45 km to reach Idukki dam. The water venting capacity of Idukki dam is 4 Lakh cusecs feet/ second, I hope my educated friends can easily calculate how much time it will take to empty 15 TMC water or more to give space. The land height difference of idukki dam and MP dam is 856 feet, it means lot of water flow downwards, (it won’t go to any village or city to reach idukki, )since water flows from top to bottom. So even if the water flows in 100 feet height from MP to Idukki, there wont be any causalities for the 4.5 million people living in the downstream. 

சாமி சத்தியமாக! உலகின் தலைசிறந்த பொறியியல் தொழில்நுட்ப நிபுணர்கள் ஒன்றுக்கு பலமுறை அதிநவீன ஆய்வுகள் செய்து உறுதிப்படுத்தி விட்டார்கள். ஒருவேளை அணைக்கு சேதமாகி தண்ணீர் வெளியேறினாலும்... மலை இடுக்குகளின் வழியாக மிக பாதுகாப்பாக ஓடி, 45 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கிற இடுக்கி அணையில் அது பத்திரமாக சேகரமாகி விடும். 72 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இடுக்கி அணைக்கு, பெரியாறு அணையின், தம்மாத்துண்டு 15.5 டிஎம்சி தண்ணீரை உள்வாங்கிக் கொள்வதிலா சிக்கல் வந்து விடப்போகிறது?


இடிந்து விடும், இடிந்து விடும் என்று சொல்கிறார்களே... அது என்ன இந்தக் காலத்து லாப நோக்கம் மட்டுமே பிரதானமாகக் கொண்ட அரசியல் கான்ட்ராக்டர்கள் ஏலம் எடுத்து கட்டிய அணையா? தன்னலமற்று, தனது சொந்தச் சொத்துக்கள் விற்று, தென்னக மக்கள் நலனுக்காக கர்னல் ஜான் பென்னிகுக் கட்டிய அணை அது. இன்றைக்கு அல்ல. சாண்டியின் இன்னும் பல தலைமுறைகளைக் கடந்தும்... அது உறுதியாக நிற்கும். அத்தனை சர்ச்சைகளையும் மவுனமாகப் பார்த்த படியே... அது அசையாமல், முன்னெப்போதையும் விட கூடுதல் உறுதியுடன் நிற்கும்!



பெரியாறு அணை விவகாரம் குறித்து ‘பூனைக்குட்டி’யில் இன்னும் அதிகமாக, விளக்கமாக, கூடுதல் விபரங்களை அறிந்து கொள்ள...

கேரளாவும்... பெரியாறு அணை கப்சாக்களும்!

நீர் இருக்கும் வரை... நீர் இருப்பீர்!


142 நிச்சயம்; 152 லட்சியம்!


- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -


7 கருத்துகள்:

  1. Ouru chinna chembarambaakam lake water'aia TN pwd Dept Ku maintain panna theriyala. Intha morons'a nambi ethuku periyar dam'a kudukkanum.

    பதிலளிநீக்கு
  2. விளக்கங்கள் முழுவதும் வாசித்த பின் "அப்பாடா" என்று இருக்கிறது... நன்றி...

    பதிலளிநீக்கு
  3. பூனைக்குட்டி தொடர்ந்து கேரளத்தவரின் பொய் மூட்டைகளின் அணையை உடைத்து வருகிறது. தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  4. Hats off thirumangala krishnakumar. Excellent article. Detailed report on mulla periyar. keep it up. rajiv, Nanjundapuram.

    பதிலளிநீக்கு
  5. பெரியாறு அணையை நிலநடுக்கம் உடைத்து நொறுக்கும் என்றால், அங்கிருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கிற இடுக்கி அணையை மட்டும் சும்மா வந்து முத்தமா கொஞ்சும்? கேரள மக்களின் உயிர் மீது சாண்டிக்கு உண்மையிலேயே அக்கறை, அன்பு, பாசம், பற்று... மேற்கண்டவற்றில் ஏதாகிலும் ஒன்று இருக்குமேயானால், முதலில் இடுக்கி அணையை இடிப்பது பற்றித்தான் யோசிக்கவேண்டும்.
    These lines are the true reflection of every tamils. Hats off Krishnakumar.
    Rajarathnam, Palakkad

    பதிலளிநீக்கு
  6. arumiyana pathivu sir.ullathai ullapadi nandraaga solli ullirgal.thelivana vilakkangalai koduthu ullirgal sir.palarukku ithanai pakirgiren sir.

    பதிலளிநீக்கு
  7. கேரள மக்கள் படிப்பறிவுமிக்கவர்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்களது அரசியல்வாதிகள் எதை சொன்னாலும் நம்பிக் கொள்கிறார்களே!!!

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...