சனி, 5 டிசம்பர், 2015

சுவிஸ் வங்கியில்... வெள்ளம்?

‘உயிரெழுத்து, மெய்யெழுத்தெல்லாம் மூணாம் வகுப்புல படிச்சது சார். ரொம்ப நாளைக்கப்புறம் ஞாபகப்படுத்தியிருக்கீங்க...’ என்று தேநீர் குடிக்கும்போது நண்பர் உள்ளம் உருகினார். படிப்பதெல்லாம், பரிட்சைக்காக மட்டுமே என்று நினைப்பதுதான், நாம் இன்னும் டாப் கியரடித்து, வேகம் பிடிக்க முடியாமல் இருப்பதற்கு மிகப்பெரிய காரணம் (எம்மாம் பெரிய கண்டுபிடிப்பு!?). படிப்பதை, வாழ்க்கையில் பயன்படுத்தக் கற்றுக் கொண்டோமானால், பிரச்னைகள் வரும் போது டோண்ட் வொர்ரி முஸ்தஃபா!


முதலில் அந்த பில்லியன், டிரில்லியன் மேட்டரை முடித்து விட்டு மெயின் சப்ஜெக்ட். சரியா? 1ம் நம்பருக்கு கீழே உள்ள எண்கள் வரிசை, அதை எப்படி உச்சரிப்பது, எழுதுவது என்று தமிழ் வகுத்துத் தந்த அற்புதத்தை போனவாரம் பார்த்து பரவசப்பட்டோம்.. இந்த வாரம்... பிரம்ம்ம்ம்மாண்டமாய்!

அடடா... அற்புதம்!
மில்லியன் என்றால், ஒரு காலத்தில் வாயைப் பிளப்பார்கள் - 10 லட்சம். இப்போது, ‘அத்த வுடு நயினா... மேல சொல்லு’ என்கிறார்கள். மினிமம் டீலிங்கே இப்போதெல்லாம் கோடியில்தான் ஆரம்பிக்கிறது.

மில்லியன் என்பது 1000 * 1000 = 10,00,000. அதற்கு மேலே பில்லியன். அதாவது ஆயிரம் மில்லியன் (1000 * 1000 * 1000 = 1,000,000,000). ஒன்று, பத்து, நூறு... என்று எண்ணி கரை சேர முடியாதவர்களுக்கு... இது 100 கோடி. அதற்கப்புறமாக புழக்கத்தில் இப்போது இருக்கிற மெகா எண் டிரில்லியன். ஓராயிரம் பில்லியன்கள் சேர்ந்தால், ஒரு டிரில்லியன். (1000 * 1000 * 1000 * 1000 = 1,000,000,000,000).

இதற்கு மேலே குவாட்ரில்லியன், குவின்ட்டில்லியன் என்று இப்போது கண்டுபிடித்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதெல்லாம், கணிதத்தில் பி.எச்டி முடித்தவர்களுக்கான விஷயம். ஆனால், மக்களே... இந்த குவாட்ரில்லியன், குவின்ட்டில்லியன் வகையறாக்களை எல்லாம், பல ஆயிரம் வருடங்கள் முன்பாகவே நம்மொழி பட்டியல் போட்டு வைத்திருக்கிறது என்று கேள்விப்பட்டால்... முதலைக்குட்டி போல வாய் திறந்து நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள்தானே?



1 (ஒன்று), 10 (பத்து), 100 (நூறு), 1000 (ஆயிரம்), 10,000 (10 ஆயிரம்), 1,00,000 (நூறாயிரம்... அதாவது, லட்சம்), 10,00,000 (10 லட்சம்), 1,00,00,000 (கோடி). இதுவரைக்கும் சரி. தெரிஞ்சதுதான். இனி பாருங்க.

10,00,00,000 (அற்புதம்), 1,00,00,00,000 (நிகற்புதம்), 10,00,00,00,000 (கும்பம்), 1,00,00,00,00,000 (கணம்), 10,00,00,00,00,000 (கற்பம்), 1,00,00,00,00,00,000 (நிகற்பம்), 10,00,00,00,00,00,000 (பதுமம்), 1,00,00,00,00,00,00,000 (சங்கம்), 10,00,00,00,00,00,00,000 (வெள்ளம்), 1,00,00,00,00,00,00,00,000 (அந்நியம்), 10,00,00,00,00,00,00,00,000 (அர்த்தம்), 1,00,00,00,00,00,00,00,00,000 (பரார்த்தம்), 10,00,00,00,00,00,00,00,00,000 (பூரியம்), 1,00,00,00,00,00,00,00,00,00,000 (பிரமகற்பம்).


- அப்பாடி. சான்ஸே இல்லைதானே? இந்தக் கணக்குப்படி, சுவிஸ் வங்கிகளில் நம்மவர்களுக்கு ஒரு ‘வெள்ளம்’ இருக்குமா? இனி, ரகசிய டீலிங்களுக்கு அந்நியம், சங்கம் என்று தமிழ் பிரமாண்டங்களை ரகசிய ‘கோட் வேர்ட்’டாக பயன்படுத்தாமல் இருந்தால், சரி.

கத்தி, புலி, காக்கிச்சட்டை!
மெயின் மேட்டருக்கு போகப் போறோம். போனவாரம் படிச்ச உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து எல்லாம் நல்லா ஞாபகப்படுத்திக்கோங்க.
‘‘பன்னீர் உயிரும் கசதந பமவய
ஞங ஈர் ஐந்து உயிர் மெய்யும் மொழிமுதல்’’ என்கிறது நன்னூல் (102).
அதாகப்பட்டது, ‘அ’ முதல் ‘ஔ’ வரையிலான 12 உயிர்களும். ‘க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ, ங’ ஆகிய பத்து மெய்களும் மொழிக்கு முதலில் வரும் என்கிறார் நன்னூல் தந்த பவணந்தி சார்.

யிர் எழுத்து தனித்து சொல்லின் முதலில் வரும் (அனேகன், ஆரண்யகாண்டம், இனிமே இப்படித்தான்). மெய்யெழுத்து சொல்லின் முதலில் வராது. அதேசமயம், உயிர் எழுத்தோடு கூட்டணி அமைத்து, உயிர்மெய் எழுத்தாக மாறினால்... தாராளமாக சொல்லின் முதல் எழுத்தாக வரும் (கத்தி, புலி, காக்கிச்சட்டை).

ஜேம்ஸ்பாண்டு!
ட, ல, ர - இந்த மூன்றெழுத்தும் சொல்லுக்கு முதலில் வராது என்று கொஞ்சகாலம் முன்பு வரை ஓரங்கட்டி வைத்திருந்தார்கள். கால மாற்றத்தில் இவை விடுதலை பெற்று விட்டன. முன்பெல்லாம் இராமன், இலட்சுமணன், இலட்சம் என்று எழுதச் சொல்லுவார்கள். லட்சம் என்பதை லட்சம் என்றே எழுதினாலும் தமிழ் சார் இப்போது மார்க் போட்டு விடுவார். க், ச், ட், த், ப், ற் ஆகிய வல்லின மெய்கள் சொல்லின் கடைசியில் வராது என்று பிளாக் அண்ட் ஒயிட் காலத்தில் ஒரு கருத்தாக்கம் இருந்தது. ஆங்கிலப் பெயர்கள் தமிழில் அதிகம் புழங்க ஆரம்பிக்காத காலம் அது. ஜேம்ஸ்வாட்டு, தாமஸ்குக்கு, ஜேம்ஸ்பாண்டு என்று எழுதினார்கள். அதெல்லாம் வேண்டாம். ஜேம்ஸ்வாட், தாமஸ்குக், ஜேம்ஸ்பாண்ட் என்றே எழுதலாம், தப்பில்லை என்று மாடர்ன் தமிழ் ஞானிகள் பச்சைக்கொடி காட்டி விட்டார்களாக்கும்.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

1 கருத்து:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...