திங்கள், 9 நவம்பர், 2015

குதித்து, குதித்து ஓடினா... என்ன அர்த்தம்?

‘அரவணைத்தல் என்கிற வார்த்தைக்குப் பின்னால் இப்படி ஒரு வரலாறு இருக்கிறதை இப்போதுதான் தெரிந்து கொண்டோம்’ என்று ஒரு வாசகி (திண்டுக்கல்லில் இருந்து) புளகாங்கிதம் அடைந்திருந்தார். நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிற தமிழ், லேசுப்பட்ட மொழி அல்ல நண்பர்களே! சாதாரணமாக பயன்படுத்துகிற வார்த்தை மட்டுமல்ல... விலங்குகளுக்கு சூட்டப்பட்டிருக்கிற பெயரில் கூட அர்த்தம் இருக்கிறது (குதிரை - குதித்து ஓடுவது, கிளி - கிள்ளித் தின்பது, குரங்கு - முதுகெலும்பு வளைந்திருப்பது). தமிழில் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிற காரணப் பெயர்கள் (Casual Noun) பட்டியலில் இருந்து இந்த வாரமும் கொஞ்சம்.


சமணம் போடுங்க!

தட்பம்: தண்மை (அதாவது, குளிர்ச்சி). தட்பவெப்பம் என்று ஒரு வார்த்தை பயன்படுத்துவீர்களே.... குளிர்ச்சி + வெப்பம் = தட்பவெப்பம். ரைட்டா?
கும்மி: குழுமி கை கொட்டியடித்தால் அது கும்மி.
தம்பி: தனக்குப் பின் பிறந்தவன்.
தாய்: தன்னைத் தந்தவள்.
தோப்பு: தொகுப்பு என்பதன் மருவல். மரங்களின் தொகுப்பு, தோப்பு என மருவியது.
பள்ளிக்கூடம்: நல்லா தெரிஞ்சுக்க வேண்டிய வார்த்தை இது. சமண துறவிகள் தங்கிய இடம் பள்ளி எனப்பட்டது. (தரையில் அவர்கள் அமர்கிற பாணியில் கால்களை மடக்கி அமர்வதைத்தான் இப்போதும் நாம் சமணம் போட்டு அமர்வது என்று குறிப்பிடுகிறோம்). சமண துறவிகள், தாங்கள் தங்கிய பள்ளியில் உள்ள கூடத்தில் (உட்புற பகுதி) கல்வி கற்பித்தலையும் செய்து வந்தனர். என்பதால், கல்வி கற்பிக்கிற இடம் பள்ளிக்கூடம் என்கிற பொதுப்பெயர் சூட்டிக் கொண்டது.
பாளையம்: எதிரி மன்னர்களின் படையெடுப்பு, ஊடுருவல்களை முறியடிக்க எல்லையோரப்பகுதிகளில் ஒவ்வொரு மன்னனும் ஒரு படைப்பிரிவை நிறுத்தி வைத்திருப்பது வழக்கம். படைகள் தங்கியிருந்த இடம் பாளையம் என அழைக்கப்பட்டது. தமிழ் மன்னர்களின் ஆட்சிப்பரப்பின் எல்லையில் இருக்கிற ஊர்களின் பெயர்களைப் பாருங்கள்.... பாளையம் என்றுதான் இருக்கும் (உத்தமபாளையம்).

வள்ளி ஓ.கே.!

சுகுமாறன், பாலகுமாரன் பெயர்களுக்கான காரணம் போனவாரம் பார்த்தோம். உடனடியாக தொலைபேசியில் தொடர்புக்கு வந்தார் ஒரு வாசகி. ‘நம்மொழி மாறன், வடமொழி மாரன் விளக்கம் சூப்பர் சார். எங்க லேடீஸ் பெயர்லயும் ஒரு சந்தேகம் இருக்கு. வள்ளி, வல்லி எது சரி சார்? சுந்தரவல்லியா; சுந்தரவள்ளியா? க்ளியர் பண்ணுங்களேன்...’ என்றார். க்ளியர் பண்ணிட்டா போச்சு!
ள்ளி, வல்லி இரண்டுமே வெவ்வேறு அர்த்தம் கொண்ட அக்மார்க் தமிழ் பெயர்கள். வள்ளி தெரியும்தானே? எம்பெருமான், முருகன் லவ் மேரேஜ் செய்து கொண்ட குறிஞ்சிப் பெண். வல்லி என்றால் கொடி என்று அர்த்தம் (கட்சிக் கொடி அல்ல தோழர்களே!). பெண்கள் கொடி போல மென்மையானவர்கள் (நிஜம்தானா?) என்று சத்தியமடித்து புரூவ் பண்ணுவதற்காக வல்லி என்று பெயரில் சேர்த்துக் கொண்டிருக்கலாம். இன்பவல்லி, அமுதவல்லி, செண்பகவல்லி என்று பெயர் சூட்டினால், அவர்கள் கொடி போன்றவர்களாம். ரைட்டா? முருகனின் குறிஞ்சி லவ்ஸ் பெயரைக் காப்பியடித்து வைத்துக் கொண்டால்.... வள்ளி. என்பதால், சுந்தர (அழகான) வள்ளி என்பதே சரி.

முக்கியமான 32!

ழுதுகிற எழுத்து டாலடித்து எல்லோரையும் கவரவேண்டுமானால், தொல்காப்பியமும், நன்னூலும் படிக்கவேண்டும் என்று நான்கைந்து வாரங்களாக தொடர்முழக்க பிரசாரம் செய்து வருகிறோம். கட்டுரை, கவிதைகளில் தவிர்க்கவேண்டிய, சேர்க்க வேண்டிய சங்கதிகள் பற்றி நன்னூலில் இருந்து பத்து, பத்து பாயிண்ட்டுகள் கொடுத்ததில் படித்துப் பார்த்து பலரும் சிலிர்த்துப் போயிருக்கிறார்கள். நன்னூலும், தொல்காப்பியமும், எழுத்தில் கடைபிடிக்கவேண்டிய உத்திகள் குறித்தும் வரையறுத்திருக்கின்றன.

தொல்காப்பியம் குறிப்பிடுகிற ஒரு நூலின் உத்திகள் இங்கே:

1. சொன்னதைத் தெளிவாக அறிதல்
2. அதிகாரங்களை முறையாக அமைத்தல்
3. இறுதியில் தொகுத்துக் கூறல்
4. கூறுபடுத்தி உண்மையை நிலைநாட்டல்
5. சொன்ன பொருளோடு ஒன்ற சொல்லாத பொருளை இடர்பாடின்றி முடித்தல்
6. வராதனவற்றைக் கூறுவதால் ஏனைய வரும் என முடித்தல்
7. வந்ததைக் கொண்டு வராதனவற்றை உணர்த்தல்
8. முன்பு கூறியதைப் பினபு சிறிதுபிறழக் கூறுதல்
9. பொருந்தும் வண்ணம் கூறல்
10. ஒரு பக்கத்தே சொல்லுதல்
11. தன் கொள்கையைக் கூறுதல்
12. நூலில் வைத்துள்ள முறை பிறழாதிருத்தல்
13. பிறர் உடன்பட்டதைத் தானும் ஏற்றுக் கொள்ளுதல்
14. முற்கூறியவற்றைக் காத்தல்
15. பின்னர் வரும் நெறியைப் போற்றுதல்
16. தெளிவுபடுத்திக் கூறுவோம் என்றல்
17. கூறியுள்ளோம் என்றல்
18. தான் புதிதாகக் குறியிடுதல்
19. ஒரு சார்பு இன்மை
20. முன்னோர் முடிபைக் காட்டல்
21. அமைத்துக் கொள்க என்று கூறல்
22. பல பொருள்கள் இருந்தாலும் நல்ல பொருளைக் கொள்ளுதல்
23. தொகுத்த மொழியான் வகுத்துக் கூறல்
24. எதிர்ப்போர் கருத்தை மறுத்துத் தன்கருத்தை உரைத்தல்
25. பிறர் கொள்கைகளையும் சான்றாகக் கூறல்
26. பெரியோர் கருத்தை ஏற்றுக் கொண்டு தான் அதையே கூறல்
27. கருத்து விளக்கத்திற்கு வேறு பொருள்களையும் இடையே கூறுதல்
28. முரணான பொருள்களையும் உணர்த்தல்
29. சொல்லின் குறையை நிறைவு செய்து கூறுதல்
30. தேவைக்குத் தகத் தன் கருத்தைத் தந்து இணைத்து உரைத்தல்
31. நினைவு படுத்திக் கூறுதல்
32. கருத்தை உய்த்து உணரும்படி கூறல்.

ஆச்சா...? நன்னூல் கூறும் 32 உத்திகள், அடுத்தவாரம்.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...