சனி, 7 நவம்பர், 2015

கமல்கானும்; ஷாருக்ஹாசனும்!

ந்திய சினிமாவின் இரு பெரும் ஆளுமைகளைப் பற்றி மிகக் குறைவான வரிகளுக்குள் இங்கு பேசி முடிப்பதாக உத்தேசம். ஒருவர் ஒலக நாயகன். கட்டி நடிக்காத வேடம் மிச்சம் எதுவும் இருக்கிறதா என்று கண்டுபிடித்துத்தான் சொல்லவேண்டும். இன்னொருவர் இந்தியாவின் வசூல் சூப்பர் ஸ்டார். இந்திய சினிமா ரசிகர்களின் இதயத்துக்குள் ஸ்டூல் போட்டு உட்கார்ந்திருக்கிற ஷாருக்கான். இன்றைய தேதியில், இருவருக்குமான பிரச்னை பொதுவானது. விருது பிரச்னை. பிரச்னையின் பின்னணி என்ன?

லிக்கறி சாப்பிட்டு விவசாயிகள் செத்துக் கொண்டிருந்த காலத்தில், அவர்கள் தரப்பு நியாயங்களுக்காக ஒரு வார்த்தை பேசாத பலரும் கூட, இன்றைக்கு மாடுகளுக்காக தாமாக முன்வந்து ஆஜராகி, அப்பீல் போட்டு வாதாடிக் கொண்டிருக்கிறார்கள்.
‘‘மாடுகளுக்கு இன்னா செய்தாரை ஒறுத்தல்
அவர் சாப்ட்டரை முடித்துவிடல்...’’
என்பது இவர்கள் படித்து வைத்து பின்பற்றுகிற வேத வசனம். உத்தரப் பிரதேசத்தின் தாத்ரி பகுதியில், மாட்டுக்கறி சாப்பிட்டார் என்ற ‘மாபெரும் குற்றம்’ சுமத்தி, ஒரு இஸ்லாமிய முதியவரை அடித்தே கொன்றார்கள். மாட்டுக்கறி சாப்பிடுபவரை வேதம் கொல்லச் சொல்கிறது என்று மேற்கோள் காட்டி பேசுகிற புதிய வேதாந்திகள் நிறையப் பேர், மழைக்கு முளைக்கிற காளான்கள் போல, இப்போது பாரதிய ஜனதா ஆட்சியில் முளைத்துக் கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

மாட்டுக்கறி சாப்பிடுவேன் என்று பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையாவையே, ‘கழுத்தை வெட்டுவேன்...’ என்று பேசி கதிகலங்கச் செய்திருக்கிறார் அந்த மாநில பாரதிய ஜனதா தலைவர். எனும் போது, சாதாரண மனிதர்கள் நிலைமை... கவலைக்கிடம் தான். புதிய வேதத்தின் படி மரணத் தண்டனை நிறைவேற்றுவது என்று கிளம்பி விட்டால், பக்கத்தில் இருக்கிற கேரளாவில் 90 சதவீதம் பேரை பரலோகம் அனுப்ப வேண்டியிருக்கும். கடவுளின் சொந்த தேசம்... மாடுகள் மட்டுமே வசிக்கிற தேசமாகிப் போகும். வேதாந்திகள், கேரளாவுக்கு விதிவிலக்கு ஏதேனும் வைத்திருக்கிறார்களா என விசாரிக்கவேண்டும்.

னால், நாம் இங்கு பேசப் போவது இந்த பீஃப் பிரச்னை பற்றி அல்ல. அது பற்றி நிறையப் பேர், நிறைய பேசி விட்டார்கள். சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட மக்கள் மீது இதுவரைக்கும் வெளியில் தெரியாமல், மறைமுகமாக அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கும். பாஜ ஆட்சிக்கு வந்தப் பிறகு, அது ஒன்றும் ஒளித்து மறைத்து செய்கிற விஷயமில்லை என்று வேதாந்திகள் டிக்ளேர் பண்ணி விட்டார்கள். விளைவு...? நாடு முழுக்க சிறுபான்மை / ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் நேரடியாகவே குறி வைத்துத் தாக்கப்படும் சம்பவங்கள் மிக அதிகமாக அதிகரித்து விட்டன. தினந்தோறும் நடக்கிற விஷயமாகி விட்டது. தினமும் நடக்கிறபடியால், செய்தித்தாள்களில் அதெல்லாம் சிங்கிள் காலம் செய்தியாக தரம் குறைந்து குறுகி விட்டது.

ந்த அக்கிரம செய்கைக்காரர்களைக் கண்டித்து மனிதநேயத்தை மனது நிறைய தேக்கி வைத்திருக்கிற முற்போக்காளர்கள், (நிஜமான) அறிவுஜீவிகள், சமூக சிந்தனையாளர்கள் புதிய புரட்சியை கையிலெடுத்தனர். தேசத்தின் மாபெரும் சமூக நெருக்கடி நிலையை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக தேசிய விருதுகளை திருப்பி அனுப்புகிற போராட்டம். சாகித்ய அகடமி விருது பெற்ற எழுத்தாளர்கள், தேசத்தின் உயர் விருது விஞ்ஞானிகள், சமூக ஆர்வலர்கள் அணிவகுத்து, தங்களுக்கு தேசம் வந்த விருதுகளை திருப்பி அனுப்ப... ஆடிப் போனது மத்திய அரசு.

ப்போதாவது யோசித்தார்களா... என்றால், இல்லை. விருதுகளை திருப்பி அனுப்புகிறவர்கள் தேசத் துரோகிகள். எதிர்கட்சி முகாம்களைச் சேர்ந்தவர்கள் என்று போலி ஜாதகம் தயாரித்து அனுப்பி பிரசாரம் துவக்கினார்கள். ‘‘தேசத்தின் மீதான எனது பற்றும், அன்பும் கேள்விகளுக்கு அப்பாற்பட்டது...’’ என்று கூறிக் கொள்கிற பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், நவம்பர் 2ம் தேதி 50வது பிறந்த நாளை மும்பையில் கொண்டாடினார். அப்போது அவர் பேசிய வார்த்தைகள் (நியாயமாகப் பார்த்தால்) தேசத்தின் மனச்சாட்சியை உலுக்கியிருக்கவேண்டும்.

‘‘இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு; இங்கே கருத்து சுதந்திரம் உண்டு.  சமீபகாலமாக, நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவது கவலை அளிக்கிறது.  இதேநிலை தொடருமேயானால், வளர்ந்த நாடாக இந்தியா உருவாவதற்கு பெரும் முட்டுக்கட்டை ஏற்படும். எனது நாட்டுப்பற்று பற்றி யாரும் கேள்விக் கேட்க முடியாது. எல்லா மதங்களும் எனக்கு சமம்தான்...’’ என்று பேசியிருந்தார். அவ்வளவுதான். அடிப்படைவாத ஆர்எஸ்எஸ், பிஜேபி காரர்கள், பெட்ரோலைக் குடித்தது போல தீ கக்க ஆரம்பித்தார்கள்.

‘‘இப்படிப் பேசியதற்காக ஷாருக்கான் மீது தேசத் துரோக வழக்குப் பதிய வேண்டும். அவரை பாகிஸ்தானுக்கு நாடு கடத்தவேண்டும்...’’ என்று போட்டுத் தாக்கியிருக்கிறார் சாத்வி பிராச்சி. ஆளும் பாரதிய ஜனதா கட்சியை பின்னிருந்து இயக்கும் மகா வல்லமை பெற்ற விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் முக்கிய பெண் தலைவர். ‘ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் நடித்த படங்களை இந்துக்கள் பார்க்கக் கூடாது’ என்று கொஞ்ச நாள் முன்பாக குண்டு வீசியவரும் இவரே. நாட்டில் உள்ள சிறுபான்மை மக்கள் மீது நேரடியாக ஆசிட் அடிக்கிற வார்த்தைகளைக் கொட்டி வன்மம் வளர்ப்பதை முழுநேர வேலையாகக் கொண்டவர்.

‘‘ஷாருக்கான் இந்தியாவில் வாழ்கிறார். ஆனால், அவர் மனம் முழுக்க பாகிஸ்தானில் இருக்கிறது. அவர்  பாகிஸ்தானுக்கே போய்விடலாம். இந்தியாவின் கொள்கைகளுக்கு ஏற்ப ஷாருக்கான் வாழ்வதும் இல்லை; செயல்படுவதும் இல்லை...’’ என்கிறார் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவராக கைலாஷ் விஜய் வர்க்கியா. அதாவது, நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து கொண்டே வருகிறது என்று ஷாருக்கான் போன்றவர்கள் குற்றம் சாட்டுவதுதான் குற்றமாம். அடக்குமுறைகளை சகித்துக் கொள்ள முடியாமல் எதிர்ப்புக் குரல் எழுப்புவதைத்தான் இவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

ந்த இடத்தில் ஒரு பிரேக் போட்டு, அப்படியே நம்மூருக்கு வருவோம். பகுத்தறிவுப் புலியாக வலம் வருகிற ஒலக நாயகன் பற்றி அறிந்திருப்போம். சமீபத்தில் இந்த பகுத்தறிவுப்புலி, அடிப்படைவாத புலியான ராஜ் தாக்கரேவை (மகாராஷ்டிரா நவநிர்மான் MNP), மும்பையில் அவரது வீட்டில் சந்தித்து கூடிக் குலாவி விட்டு ஊர் திரும்பியிருக்கிறது. மக்களை இனம், மொழிகளின் அடிப்படையில் பிரித்து மோத விடுகிற ஆளை நம்ம ஒலக நாயகன் எதற்காக சந்திக்கிறார் என்று இங்கிருக்கிற அவரது அதிதீவிர அபிமானிகள் குழம்பிப் போனார்கள். ‘‘அவர் எனது நீண்டகால நண்பர். அதான் சந்தித்து பேசி விட்டு வந்தேன்...’’ என்று தனக்கே உரித்தான அந்த ‘போத்தீஸ் விளம்பர’ கம்பீரக் குரலில் மர்மம் விலக்கிறார் ஒலகம். ‘உன் நண்பனை யாரென்று சொல்... உன்னை யாரென்று சொல்கிறேன்’ என்று ஒரு விசேஷமான பழமொழி இருக்கிறது. ராஜ் தாக்கரே இவரது நண்பராம். அப்படியானால், இவர் யாரென்று புரிந்து கொள்ளத் தெரிந்தவர்கள்... பாக்கியவான்கள்.

தற்கடுத்து ஒலக நாயகன் வீசிய யார்க்கர் தான் ரியல்லி டேஞ்சர். வீட்டு அலமாரியில் ஏகப்பட்ட விருதுகளை வாங்கி அடுக்கி வைத்திருக்கிறவர் அவர். ஆகவே, விருது சர்ச்சை பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. தடலாடியாக வந்தது ஒலகநாயகனின் பதில். ‘‘தேசிய விருதுகளை திரும்ப ஒப்படைக்கிற பேச்சுக்கே இடமில்லை. அப்படி ஒப்படைப்பதால் எந்தப் பயனும் இல்லை...’’ என்றார். அத்தோடு விட்டாரா என்றால்... இல்லை.

‘‘விருதுகளைத் திருப்பித் தருவது என்பது பயனற்ற செயல். விருதுகளை திருப்பித் தருவதால் எந்த ஒரு தாக்கமும் ஏற்படாது. விருதுகளை திருப்பிக் கொடுப்பது என்பது அரசை அவமதிப்பதாகும். சகிப்புத்தன்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் கட்டுரைகளை உருவாக்க வேண்டும். தேசிய விருதுகளை திரும்ப அளிப்பவர்களுக்கும் கூட பொறுமையுடன் கூடிய சகிப்புத்தன்மை தேவை...’’ என்பது ‘எல்லாம் அறிந்த’ ஒலக நாயகனின் அறிவுப்பூர்வமான கருத்து.

விஸ்வரூபம் படத்துக்கு பெரும் பிரச்னை ஏற்பட்ட போது, ‘நாட்டை விட்டே  வெளியேறுவேன்...’ என்றார். நாட்டை விட்டு வெளியேறுவது பயனுள்ள செயலா? ஆர்எஸ்எஸ் அணுகுமுறைகள் பிடிக்காத அத்தனை பேரும் நாட்டை விட்டு வெளியேறி விடவேண்டும் என்கிறாரா? அப்படி வெளியேறி விட்டால், பிரச்னை முடிந்து விடுமா? சகிப்புத்தன்மை குறித்து கட்டுரை எழுதவேண்டுமாம். பக்கம், பக்கமாக எழுதித் தள்ளியாகி விட்டது. எல்லாம் சரி. கடைசியாக ஒன்று சொல்கிறார் பாருங்கள்... அங்கேதான் நிற்கிறார் பகுத்தறிவுப் பகலவன்.

‘விருதுகளைத் திருப்பி அளிப்பவர்களுக்கும் பொறுமையுடன் கூடிய சகிப்புத்தன்மை தேவை...’ - மக்களே, வன்முறை செய்கிறவர்கள், மதக் கலவரம் தூண்டுகிறவர்கள், ரத்த ஆறு ஓடச் செய்கிறவர்களக்கு சகிப்புத் தன்மை தேவையில்லையாம். அதைக் கண்டிக்கிறவர்களுக்குத்தான் பொறுமையும், சகிப்புத்தன்மையும் தேவையாம். நாட்டில் அதிகரித்திருக்கிற வன்முறைகளைப் பார்த்து இந்த பகுத்தறிவுப் புலி,  எத்தனை கட்டுரை எழுதியிருக்கிறதாம்? குறைந்தபட்சம், ஒரு மென்மையான கண்டிப்பாவது தெரிவித்திருக்கிறதா? வீட்டில் அடுக்கி வைத்திருக்கிற விருதுகளை எடுத்துக் கொடுங்க சார்... டில்லிக்கு கொரியர்ல அனுப்பிடலாம் என்று யாராவது இவரைக் கேட்டார்களா? மோடி, தூய்மை பாரதம் (swachh bharat)திட்டம் அறிவித்த போது, குப்பைக் கூடையுடன் தமிழிசையுடன் போஸ் கொடுப்பதில் காட்டிய ஆர்வத்தை, இந்த நெருக்கடியான காலத்தில் காட்டாதது ஏனாம்? லட்சணம் தெரிந்துதான், இந்த மேட்டருக்கு யாரும் ஒலகத்தை அணுகவே இல்லை.

மிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஜாதிப் பெயரில் தலைப்பு சூட்டி, புதிய டிரெண்ட் வகுத்துத் தந்தவர் இந்த பெரியார் சீடர்.  தனது சினிமாக்களில் கேரக்டர்களுக்கு கட்டாயம் சாதிப் பெயர் சூட்டுவதை ஒரு கொள்கையாகவே இன்றளவும் வைத்திருப்பவர் இவர். வில்லன் கேரக்டர்களின் பெயர்கள் பெரும்பாலும் சிறுபான்மை / ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் பெயராகவே இவரது படங்களில் இருக்கும். சினிமாவை விடவும், நிஜத்தில் மிகத் தேர்ந்த நடிகர் அவர் என்பதை இன்னும் நிறையப்பேர் உணர்ந்து கொள்ளாதது துரதிர்ஷ்டமே!

ஷாருக்கான், ஒலக நாயகன்.... - நியாயம் பேசியதற்காக, மதத்தின் பெயரால் பழிசுமத்தப்பட்டு ஒருவர் குற்றம் சாட்டப்படுகிறார். நியாயம் பேசுவது போலான தேர்ந்த நடிப்புடன் மதவெறியை சமூகத்து நெரிசலுக்குள் மெல்லக் கசியவிடுகிறார் மற்றொருவர்!

ப்பேர்ப்பட்ட நேர்ந்த நடிப்பு? அதுவும் வெள்ளித்திரைக்கு வெளியே! எப்போது தரப்போகிறீர்கள் அவருக்கு இன்னொரு தேசிய விருது?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

(தமிழ் சினிமாவில் சிறுபான்மையினர் குறித்த மேல் வாசிப்புக்கு...
‘அப்பாவிகளை குறிவைக்கும் துப்பாக்கி’
இந்தத் தளங்களையும் பார்க்கவும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...