வியாழன், 12 நவம்பர், 2015

பிதாவே... இவர்களை மன்னியும்!

‘‘ஒரு கிறிஸ்தவரோ அல்லது இஸ்லாமியரோ ஹிந்து கோவிலில் கொடுக்க படும் பிரசாதத்தை ஏற்றுக்கொள்வது இல்லை... எத்தனை கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியர் கோவில் சென்று இருகிறார்கள்..??
இப்போது ஹிந்துக்களைப்பார்த்து கேட்கிறேன்.. மதசார்பின்மை ஹிந்துக்களுக்கு மட்டுமா?? அல்லது இதை பேணுவது ஹிந்துக்களுக்கு விதிக்க பட்ட விஷயமா? வேறு மத மக்களுக்கு இல்லையா...’’
- சமீபகாலமாக வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இணையவெளிகளில் மிக அதிகமாக உலாவுகிற ஒரு கடிதத்தின் சில வரிகள் இவை. இந்த வரிகள் நியாயம் போலவே இருக்கிறதே... நியாயம்தானா? கடிதத்தை எழுதியவர் யார்? என்ன சொல்ல வருகிறார்...?

முதலில் அந்தக் கடிதத்தை அப்படியே, அவரது வரிகளிலேயே பதிவு செய்து விடுகிறேன். அப்புறமாக, அதற்கு நமது பதில்!
‘‘சகோதரி @Deepika Govind அவர்களின் ஆங்கிலப் பதிவு, தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. மிக மிக நேர்த்தியான சிந்தனை. ஒவ்வொரு இந்தியனும் நிச்சயம் படிக்க வேண்டியது.
நான் குழப்பத்தில் இருக்கிறேன்.. ஆம். ஒரு ஹிந்துவாக குழப்பத்தில் இருக்கிறேன்.. நான் நடுநிலையாள‌னாக இருக்க விரும்புகிறேன்.. அதனால் இந்த குழப்பம் எனக்கு.

நான் ஒரு ஹிந்துவாக பிறந்தேன்.. கிறிஸ்தவ பள்ளியில் படிக்கச் சென்றேன்.. வீட்டில் தீபாவளி கொண்டாடினேன்.. அதே உற்சாகத்தோடு பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாடினேன்.. சில நேரம் கிறிஸ்தவ சர்ச்க்கு சென்றேன். அங்கே பைபிள் வாசகங்கள் கேட்டேன்.. ஆனால், என்றும் என் மதம் அது இருக்கும் முறையில் இருந்து விலகும் என்ற பயம் இல்லாமல்....
இப்போது ஒரு விஷயம் சிந்தித்தால் வியப்பாக இருக்கிறது... இப்போது இருக்கும் மீடியா மற்றும் அறிவாளிகள் ( என்று கூறிக்கொள்ளும் கூட்டம்!) சிந்தனை எப்படி இருக்கும் என்று? கிறிஸ்தவ மக்கள் நிறைந்த இடத்தில் ஒரு ஹிந்து பள்ளி கூடத்தில் இதேபோல் கீதை மற்றும் மகாபாரதம் படித்தால் இவர்கள் சிந்தனை எப்படி இருக்கும்? இதற்கு எப்படி இவர்கள் பதில் தருவார்கள்? நிச்சயம் இவர்கள், கூச்சல் இடுவார்கள்... அது மட்டும் உறுதி!
என் 14 வருட பள்ளி படிப்பில், என்னை மதம் மாற்ற முயற்சி நடந்தது இல்லை... நான் இன்னமும் ஹிந்து. நான் கிறிஸ்மஸ் கொண்டாடுவதில் எனக்கு மேலும் ஒரு சந்தோசம் இருக்கிறது.... ஒரு ஹிந்துவாக என்னால், 33 கோடி கடவுள்/ விக்ரகங்கள் வணங்க முடியும்.. இதில் மேலும் சில கடவுள்களை சேர்த்தால், அதையும் என்னால், வணங்க முடியும்.. இதில் எனக்கு கவலை இல்லை... ஒரு ஹிந்துவாக என்னால், இதை உள்வாங்கிக்கொள்ள முடியும்.. இதை கண்டு பயம் இல்லை.. ஆனால், ஒரு விஷயம் - ஒரு கிறிஸ்தவரோ அல்லது இஸ்லாமியரோ ஹிந்து கோவிலில் கொடுக்க படும் பிரசாதத்தை ஏற்றுக்கொள்வது இல்லை... எத்தனை கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியர் கோவில் சென்று இருகிறார்கள்..?? வைஷ்ணவ தேவி கோவில்? திருப்ப‌தி கோவில்??

ப்போது ஹிந்துக்களைப்பார்த்து கேட்கிறேன்.. மதசார்பின்மை ஹிந்துக்களுக்கு மட்டுமா?? அல்லது இதை பேணுவது ஹிந்துக்களுக்கு விதிக்க பட்ட விஷயமா? வேறு மத மக்களுக்கு இல்லையா?? இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்றால் ஏன் என் வரிப்பணம் ஹஜ் யாத்திரைக்கு இனாமாக போக வேண்டும்? இது ஒரு மதத்துக்கு செய்யும் பாரபட்சமாக தெரியவில்லையா? இது ஒரு சாரசரியான ஹிந்துவாகிய எனக்கு எழும் இயல்பான கேள்வி.. இன்னமும் குழப்பத்தில் நான்..! இது செய்தால், என் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் சந்தோஷப்படுவார்கள் என்றால் எனக்கு கொடுப்பதில் எந்த வருத்தமும் இல்லை... அவர்களுக்கு ஈத்-முபாரக் சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை... இதில் எனக்கு எந்த பயமும் இல்லை.. ஏன் என்றால், நான் ஒரு ஹிந்து!

ந்திய திருநாட்டில் 80% அதிகமாக ஹிந்துக்கள் இருந்தும் அவர்கள் விரும்பிய இறைவனுக்கு ஒரு கோவில் கட்ட 60 வருடத்துக்கு மேல் ஆனது!. ஒரு ஹிந்துவாக நான் அங்கே ராமர் கோவில் இருப்பதை விட.. மசூதியும் கோவிலும் இருப்பதை ஆதரிக்கிறேன். நான் என் மதத்தை அங்கே பெரிதாக்க விரும்பவில்லை. இன்னமும் நான் தான் சிறந்தவன் என் மதம் சிறந்தது என்று சிந்திக்கவில்லை. எல்லோரும் சமமாக வாழ நினைக்கிறன்.. ஏன் என்றால் ' நான் ஒரு ஹிந்து'

நாளை, ஒரு வேளை, என் மகன் ஒரு கிறிஸ்தவப்பெண்ணை மணக்க விரும்பினால், அந்த பெண்ணை மதம் மாற சொல்லி கேட்க மாட்டேன். வற்புறுத்த மாட்டேன். எனக்கு அந்த எண்ணமும் இல்லை. ஆனால், என் மகன் அந்த பெண்ணை மணக்க வேண்டும் என்றால் மதம் மாறி ஆகவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டால், நிலை என்ன? இது திணிக்க பட்ட மத மாற்றம் இல்லையா? இதை குறையுள்ள மத சார்பின்மை என்று சொல்லலாமா? ( blurred version of secularism,created by pseudo –intellectuals !!)

ன்னிடம் திருப்பி கொடுக்க எந்த அவார்டும் இல்லை!. என்னிடம் இதை டாக்குமெண்டரியாக எடுக்க வசதி இல்லை!. ஒரு விவாதமாக்க என்னிடம் ஒரு டிவி இல்லை!. ஆனால், என் இறைவன் என்னை இதையெல்லாம் ஏற்று கொள்ளும் பக்குவம் கொடுத்து இருக்கிறார். மதிக்கும் பக்குவம் கொடுத்து இருக்கிறார்.

ரு ஹிந்துவாக இதை எல்லாம் சகித்துக் கொண்டு வாழ வேண்டிய கட்டாயம் எனக்கு. இதைத்தான் மதச்சார்பின்மை என்று சொல்லிக்கொள்ளவேண்டுமா?


நான் ஒரு பெண். ஹிந்து பெண். என் மகனுக்கு இதையே கற்று கொடுக்க விரும்புகிறேன். அவனுக்கு சொல்ல விழைவது எல்லாம் இது தான்... ஒரு தேவாலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும் என்றால், தலை தாழ்த்தி அதை செய் என்று... ஒரு மசூதியில் செல்ல நேர்ந்தால் அதற்கான பரிபாலங்களை செய். ஒரு குருத்வாராவில் சேவை செய்ய நேர்ந்தால் செய்... மறுக்காதே.. இதை செய்வதால், நீ ஹிந்துவாகவே இருப்பாய்.. ஹிந்துத்தன்மையை விட்டு விலகமாட்டாய் என்று தான் அவனுக்கு படிப்பிக்க விரும்புகிறேன்...

றிவாளிகளே.. நீங்கள் உங்கள் அவார்டை திருப்பி கொடுக்க விழைந்தால் நீங்கள் துணிவுடன் சொல்லுங்கள்... ஹஜ் மானியம் நிறுத்தப்பட வேண்டும்... இறைச்சி தடை நீக்க வேண்டும்... பலதார திருமணம் இஸ்லாத்தில் இருந்து நீக்க படவேண்டும் அப்படி செய்யும் இஸ்லாமியர் ஏற்று கொள்ளப்படமாட்டார்... எந்த சிறுபான்மையினர்க்கும் கல்வி நிறுவனங்களில் சிறப்பு முன்னுரிமை தர வேண்டாம்... தலாக் என்று மூன்று முறை சொல்லி விவாகரத்து வேண்டாம்.. மாற்று மத திருமணங்களுக்கு மத மாற்றம் அவசியம் இல்லை.. கட்டாயம் இல்லை.. என்று சொல்ல முடிந்தால் சொல்லி விட்டு உங்கள் விருதுகளை திருப்பி கொடுங்கள்....!
நண்பர் திரு ஆனந்தன் அமிர்தன் அவர்களின் பதிவில் இருந்து பகிரப்பட்டது

- இவ்வாறாக, அந்தக் கடிதம் இருக்கிறது. இனி, கடிதத்தை நேர்மையாக விமர்சிக்கலாம்...

கோதரி தீபிகா கோவிந்த் (அல்லது, இந்தப் பெயரில் ஒளிந்திருப்பவர்) எழுதிய இந்தக் கடிதம், குறைந்தப்பட்ச அறமோ, நேர்மையோ இல்லாமல், மதவெறியையும், பின்விளைவாக இன மோதல்களையும் உருவாக்கவேண்டும் என்கிற ஒற்றை இலக்குடன் நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கிறது.

கிறிஸ்தவ பள்ளியில் படித்ததாகவும், சர்ச்சுக்கு சென்ற போது பைபிள் வாசகங்கள் கேட்டதாக ‘சகோதரி’ சொல்கிறார். அதற்கடுத்த வரியில் ஹிந்து பள்ளிக்கூடத்தில் மகாபாரதம், கீதை சொல்லிக்கொடுத்தால் அறிவாளிகள் கூச்சல் இடுவார்கள் என்று குற்றம் சாட்டுகிறார். ‘சகோதரி’  கடிதத்தில், முதல் வரிக்கும் அடுத்த வரிக்கும் தொடர்பிருக்கிறா என்று பாருங்கள். கிறிஸ்தவ பள்ளிக்கூடமோ, இந்து பள்ளிக்கூடமோ பாடம் மட்டும்தான் சொல்லித் தருவார்கள். கிறிஸ்தவ கல்வி நிறுவன வளாகங்களில் தனியாக வழிபாட்டுக்கூடங்கள் இருக்கும். அங்குதான் பைபிள் போதனைகள் நடக்கும். இஷ்டமில்லா விட்டால் ‘சகோதரி’ போன்றவர்கள் அங்கு செல்லவேண்டிய கட்டாயமில்லை. இங்கு ஒரு விஷயத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். இந்து அமைப்புகள் நடத்துகிற நிறைய பள்ளிக்கூடங்களில் ‘ஓம்சக்தி பராசக்தி, சரஸ்வதி தேவியே...’ பாடல்கள் இப்போது காலை பிரேயர் மீட்டிங்கில் பாடப்படுகிறது. இதெல்லாம் ‘சகோதரி’க்கு தெரியவில்லையா? தனது 14 வருட பள்ளிகாலத்தில் தன்னை யாரும் மதம் மாற்ற முயற்சிக்க வில்லை, என்று ஒப்புதல் வாக்குமூலம் வேறு கொடுத்திருக்கிறார். அப்புறம் என்ன பிரச்னை?

ரு கிறிஸ்தவரோ, இஸ்லாமியரோ இந்து கோயில்களில் தரப்படும் பிரசாதங்களை ஏற்றுக் கொள்வதில்லை என குற்றம் சாட்டுகிறார். நீங்கள் தருகிற பிரசாதங்களை சாப்பிட்டுத்தானா அவர்கள் தங்களது மதச்சார்பற்ற நிலையை நிரூபிக்க வேண்டும்? கைகள் பட்டு விட்டால் தீட்டு என்று கருதி, பிரசாதங்களை எட்ட நின்று தூக்கிப் போடுகிற சாமியார்களை நோக்கித்தானே நியாயமாக ‘சகோதரி’ விமர்சனக் கடிதங்கள் எழுதியிருக்கவேண்டும்? என்னால் 33 கோடி கடவுள்களை வணங்கமுடியும். இதில் மேலும் சில கடவுள்கள் சேர்ந்தால் அவர்களையும் வணங்கமுடியும் என்கிறார். ஆனால், ஒற்றைக் கடவுளை மட்டுமே வணங்குகிற அவர்களைப் பிடித்து, நீங்கள் நிரப்பி வைத்திருக்கிற 33 கோடியையும் வணங்கச் சொன்னால்... என்ன நியாயம் ‘சகோதரி’ ? இதுதானா நீங்கள் கடைபிடிக்கிற இந்து தர்மம்?

னது வரிப்பணம் ஏன் ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு இனாமாக போகவேண்டும் என்று முதல் வரியில் கோபப்படுகிறார். அடுத்த வரியில், இஸ்லாமிய சகோதரர்கள் சந்தோஷப்படுவார்கள் என்றால், எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்கிறார். இந்த இரு கருத்துக்களில் எது சரி; எது பொய்? ஹஜ் யாத்திரைக்கு இந்துக்களின் வரிப்பணம் ஏன் போகவேண்டும் என்கிற விஷத்தை முதலில் கக்கி விடுகிற ‘சகோதரி’ மறு வினாடியே, சகிப்புத்தன்மையின் சிகரம் போல / புனிதத்தின் பிளம்பு போல தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்காக, ‘எனக்கு வருத்தம் இல்லை’ என்கிறார். வருத்தம் இல்லை என்றால், எதற்காக எனது வரிப்பணம் இனாமாகப் போகவேண்டும் என்ற கேள்வியே அவர் மனதில் எழுந்திருக்கக் கூடாதில்லையா? என்னா ஆக்டிங் பாருங்கள்!

டைசியாக ‘சகோதரி’ அடிக்கிற கூத்துத்தான் உச்சக்கட்டம். ‘‘அறிவாளிகளே.. நீங்கள் உங்கள் அவார்டை திருப்பி கொடுக்க விழைந்தால் நீங்கள் துணிவுடன் சொல்லுங்கள்... ஹஜ் மானியம் நிறுத்தப்பட வேண்டும்... பலதார திருமணம் இஸ்லாத்தில் இருந்து நீக்க படவேண்டும்... தலாக் என்று மூன்று முறை சொல்லி விவாகரத்து வேண்டாம்....’’
நாட்டில் தற்போது இஸ்லாமிய, தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நேரடியாகவே, தாக்குதல் நடத்தப்படுகிறது. நடத்திய தாக்குதலை நியாயப்படுத்தும் துணிச்சலும் தற்போது அதிகரித்திருக்கிறது. அதை எதிர்த்து, சமூக அக்கறை கொண்டவர்கள் விருதுகளை திருப்பிக் கொடுக்கிறார்கள். அவர்கள் எதற்காக இப்போது சம்பந்தமே இல்லாமல் பலதார மணம், ஹஜ் மானியம் பற்றிப் பேசவேண்டும்? அதற்கு இப்போது என்ன தேவை? பலதார மணம், ஹஜ் யாத்திரை விவகாரமா இப்போது பிரச்னை? என்ன பிரச்னையோ அதைத்தானே ‘சகோதரி’ பேசவேண்டும். இருக்கிற காய்ச்சலை விட்டு விட்டு, இல்லாத ஜலதோஷத்துக்கா‘சகோதரி’ நீங்கள் மாத்திரை போடுவீர்கள்? கூடுதலாக ஒரு கேள்வி. பலதார மணம் புரிந்த எத்தனை இஸ்லாமியர்களை இப்போது ‘சகோதரி’ பார்த்திருக்கிறார் என்று கூறமுடியுமா? இஸ்லாமியர்களை விட இந்துக்களே இந்தக் கணக்கில் இப்போது டாப். ‘சகோதரி’க்கு தெரியும்தானே?

‘சகோதரி’ பெயரில் வந்திருக்கும் இந்தக் கடிதம் முழுக்க, முழுக்க அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்தவர்களால் எழுதப்பட்டு இணையம் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. எழுதியவர்கள் தங்கள் கருத்தை ஒழுங்காக எழுதத் தெரியாமல் குழப்பியடித்து, தங்கள் பலவீனத்தை தாங்களே வெளிப்படுத்தி விடுகிறார்கள். பீகார் தேர்தல் முடிவுகள் இந்துமத அடிப்படை வாத அமைப்புகளுக்கு மிகப்பெரும் தோல்வியை தந்திருக்கின்றன. அங்கிருக்கிற கோடிக்கணக்கான இந்துக்கள், இந்த மதவாதிகள் முகத்தில் கரி பூசி விரட்டியிருக்கிறார்கள். இதுபோன்ற தருணங்களில்... மதவாதிகள் கையில் எடுக்கிற விஷயம்... இனமோதல்களும், மதக் கலவரங்களுமே. மோதல்களை உருவாக்கி, மக்களை பிரிப்பதன் மூலம் மட்டுமே அவர்கள் ஓட்டுவேட்டையாடி அதிகாரத்தை பிடிக்கமுடியும். என்பதால் இப்படி கடிதம் தயார் செய்து அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

தம், இனம், மொழிகளின் பெயரால் அப்பாவி மக்களை கூறுபோடுவதைக் காட்டிலும் கொடூரமான செயல் வேறெதுவும் இல்லை. அப்படிக் கூறுபோடக் கிளம்புற அடிப்படைவாதிகள் - அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி - மனித விரோத சக்திகள் என்றால், அதற்கு மாற்றுக் கருத்தில்லை.
‘‘பிதாவே... இவர்களை மன்னியும். நல்ல புத்தி கொடுத்து நேர்வழியில் நடத்தும்...’’ என்று 33 கோடிக்கு வெளியே இருக்கிற கடவுளிடம் வேண்டிக் கொண்டு, வெகுஜன மக்களை ‘சகோதரி’களின் விஷக் கருத்துக்கள் அணுகிவிடாதவாறு நமது கடமையை தொடர்ந்து செய்வோம்!

- பூனைக்குட்டி -

2 கருத்துகள்:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...