புதன், 9 செப்டம்பர், 2015

பாகுபலி: கண்ணால் கண்டதும் பொய்!

‘கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்... தீர விசாரிப்பதே மெய்’ - சின்ன வயதில் பள்ளிக்கூடத்தில் படித்தது ஞாபகம் இருக்கிறதா? பல நூறு வருடங்களுக்கு முன்பாக தமிழ் இலக்கியங்கள் சொன்ன ‘கண்ணால் காண்பதும் பொய்’ மேட்டரை, இப்போது வந்த பாகுபலி சினிமா உறுதி செய்கிறது.

எப்படி?

அதை தொழில்நுட்ப ரீதியாக ‘டெமோ’ செய்ய விழைவதே இந்தச் சிறிய கட்டுரையின் பெரியநோக்கம். இந்திய சினிமாவின் மெகா ஹிட் பாகுபலி, எப்படியெல்லாம் கண்கட்டி வித்தை காட்டி நம்மை கட்டிப் போட்டிருக்கிறது என்று தெரிந்தால்.... மெய்யாகவே ஆச்சர்யப்பட்டுப் போவீர்கள். வாருங்கள், ஆச்சர்யப்படலாம்!


காமிக்ஸ் கதைகள் படித்து வளர்ந்தவர்கள் மட்டுமே கற்பனை செய்து பார்க்க முடிகிற ஃபேண்டஸி உலகம், பாகுபலி படத்தில் வருகிற மகிழ்மதி தேசம்.
சினிமாஸ்கோப் திரை கொள்ளாத அளவுக்கு கொட்டுகிற அருவியும், அதில், வழுக்கி விழுந்தும் கூட, மண்டையை உடைத்துக் கொள்ளாமல்,  சாகசம் செய்து ஏறி அசத்துகிற ஹீரோவும்... ஏறக்குறைய சினிமாவின் முதல் அரை மணிநேரத்துக்கு நம்மை உறைய வைத்திருப்பார்கள்... உண்மைதானே?
பச்சைப்பசேல் மலைக்குன்றின் மேலாக, பனிப் போர்வைக்குக் கீழாக, அடுக்கு, அடுக்காக அமைந்திருக்கிற அரண்மனை, கட்டிடங்கள், அகழிகள்... இமைக்கக் கூட மறந்து, பிரமித்துப் படம் பார்த்தோம் இல்லையா? எங்கிருக்கிறது இப்படி ஒரு அசத்தல் லொகேஷன்?

டுத்த சம்மருக்கு டிக்கெட் போடும் திட்டத்துடன் எஸ்.எஸ்.ராஜமவுலியை அணுகுபவர்களுக்கு ஏமாற்றமே பதிலாகக் கிடைக்கும். உண்மைதான். எல்லாமே கிராபிக்ஸ் + வரைகலை தொழில்நுட்பம். அதாவது, VFX  (Visual Effects), CGI (Computer generated imagery) தொழில்நுட்பங்களை இணைத்து இந்த கண்கட்டி வித்தையை சாத்தியமாக்கி இருக்கிறார்கள். அதென்ன VFX; அதென்ன CGI?

மேம்போக்காகப் பார்த்தால் இரண்டுக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. ஏறக்குறைய ஒரே வேலைதான். இல்லாத ஒரு விஷயத்தை இருப்பது போல திரையில் காட்சிப்படுத்தும் கலை. டைட்டானிக், ஜூராஸிக் பார்க் மாதிரியான ஆங்கிலப் படங்களைப் பார்த்து, ‘பின்னிட்டான் ப்ரோ...’ என்று ராவெல்லாம் புலம்பியிருப்போமே.... எல்லாமே இந்தத் தொழில்நுட்பம்தான். தமிழ் சினிமாக்காரர்களும் இந்தத் தொழில்நுட்பத்தை செய்கிறார்கள். என்ன, எலும்புக்கூடை பரதநாட்டியம் ஆட விடுவதற்குத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

சினிமா ஃபீல்டுக்குப் போகிற ஆர்வத்தில் இருக்கிற யூத்ஸ், இந்த இரு தொழில்நுட்பங்கள் குறித்து கொஞ்சம் அதிகமாக தெரிந்து வைத்திருப்பது நல்லது. நாளைக்கு நல்ல தயாரிப்பாளர் கிடைத்தால், அசத்தி விடலாமில்லையா?


CGI, அதாவது Computer generated imagery எனப்படுவது வரைகலை தொழில்நுட்பம். இதற்காகவே இருக்கிற அதிநவீன அப்ளிகேஷன்ஸ், சாப்ட்வேர்கள் மூலம், இல்லாத ஒரு விஷயத்தை, பொருளை கற்பனையாக உருவாக்குவது CGI. ஜூராஸிக் பார்க் படத்தில், டைனோசர் வருகிறதே... அது CGI. அதாவது, கம்ப்யூட்டர் துணையுடன் உருவாக்கப்பட்ட வரைகலை படம். வெறும் காட்சிப்படம். இந்த CGI பிம்பத்தை முழுநீளத்தில் இயக்குவது, ஓட வைப்பது VFX எனப்படுகிற கிராபிக்ஸ் visual effects. ஒரு உதாரணம் பார்க்கலாம். CGI மூலமாக ஒரு டைனோசர் உருவாக்கியாச்சு. ச்சும்மா நிற்கிற டைனோசரை வைத்துக் கொண்டு என்ன செய்வது? அதை ஓட விடணுமில்லையா? இப்பக் கொண்டு வாங்க VFX தொழில்நுட்பத்தை.

ந்த விஷூவல் எபெக்ட்ஸ் தொழில்நுட்பம் கொண்டு, ச்சும்மா நின்று கொண்டிருக்கிற டைனோசரை ஓட வைக்கலாம், பாட வைக்கலாம், டூயட் ஆட வைக்கலாம். CGI, VFX தொழில்நுட்ப தகவல்களை கேட்ச் பண்ணீட்டிங்களா?


ப்போ பாகுபலிக்கு வரலாம். ஐம்பது குற்றாலம் மெயின் ஃபால்ஸ்களை ஒன்று சேர்த்து தைத்தது போல, படத்தின் ஆரம்பத்தில் வருகிற மெகா அருவி இருக்கிறது பாருங்கள். அது அப்பட்டமாக கிராபிக் தொழில்நுட்பம். மட்டுமல்ல, ‘மகேஸ்வரா... மகேந்திர பாகுபலி வாழ வேண்டும்...’ என்று அடித்தொண்டையில் இருந்து ஆங்காரமாகக் கத்தியபடி ரம்யா கிருஷ்ணன் ஆற்றுத் தண்ணீருக்குள் அப்பீட் ஆவாரே... அதுவும் கூட, ஜிம்மிக்ஸ் வேலைதானாம். சினிமா போஸ்டரில் குழந்தையை பிடித்த படி, ஆற்றுத் தண்ணீருக்கு மேலாக, ஒரு கை மட்டும் நீட்டிக் கொண்டிருக்குமே... ஒரு கின்லே வாட்டர் பாட்டிலை பிடிக்க வைத்துக் கொண்டு, இதை படம் பிடித்திருக்கிறார்கள். ஆரம்பம் துவங்கி, ஆக்ரோஷ போர்க்களக் காட்சியுடன் முடிகிற கடைசி நிமிடம் வரைக்கும் இயக்குனர் ராஜமவுலி, விஷூவல் எபெக்ட்ஸ் மேற்பார்வையாளர்  சீனிவாஸ் மோகன், கேமராமேன் செந்தில்குமார் மற்றும் அவர்களது டீம் கிராபிக்ஸ் மேளா நடத்தி முடித்திருக்கிறார்கள்.

கிராபிக்ஸ் செய்திருக்கிறார்கள், வரைகலை செய்திருக்கிறார்கள்... என்று கீறல் ரிக்கார்ட் போல திரும்பத் திரும்ப சொல்லாதிங்க பிரதர். எது கிராபிக்ஸ்; எது வரைகலை. டைரக்டா மேட்டருக்கு வாங்க’ - இப்படியாக சவுண்ட் வருவதற்குள்... மேட்டருக்கு வந்து விடலாம்.

பாகுபலி படத்தைப் பொறுத்தளவுக்கு, ஏறக்குறைய 95 சதவீதம் படம் CGI எனப்படுகிற வரைகலை தொழில்நுட்பம், VFX எனப்படுகிற விஷூவல் எபெக்ட்ஸ் தொழில்நுட்பம் கலந்தே செய்யப்பட்டிருக்கிறது. ‘‘பாகுபலியில் மொத்த போர்க்களக் காட்சியுமே 300 x 300 அடி நீள, அகலம் கொண்ட பெரிய கிரீன் மேட்டுக்கு (பச்சைத் திரை)முன்பாகத்தான் படமாக்கப்பட்டது. போர்க்காட்சிகளில் கேமராவுக்கு முன்னால் 25 அடி வரை இருப்பது மட்டுமே நிஜம். 25 அடியைத் தாண்டி இருக்கும் அனைத்தும் கிராபிக்ஸே...’’ என்று நம்மை மிரள வைக்கிறார் கேமராமேன் செந்தில்குமார். படத்தில் நம்மை மெய் மறக்க / சிலிர்க்கச் செய்கிற காட்சிகள் வெறும் வரைகலையே என அடையாளப்படுத்திக் கொள்ள பாகுபலி படக்குழுவுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. எந்தெந்தக் காட்சிகளை எப்படியெப்படி எல்லாம் கிராபிக்ஸ் செய்திருக்கிறார்கள் என, பாகுபலிக்கு கிராபிக்ஸ் செய்த முக்தா விஎப்எக்ஸ் பிரேக்டவுன்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

சினிமாவில் நீங்கள் பார்த்து, பிரமித்துப் போன காட்சிகள், இப்படித்தான் எடுக்கப்பட்டதா எனத் தெரிந்தால்... மெய்யாகவே ஆச்சர்யப்பட்டுப் போவீர்கள். தவிர, ‘அடச்சே... இவ்வளவுதானா? இதைப் பார்த்துத்தானா கைதட்டி, விசிலடித்தோம்...’ என்று சலித்துக் கொள்ளும் அபாயமும் இருக்கிறது. என்பதால், அத்தனை ரகசியங்களையும் போட்டு உடைக்காமல், மிகச் சில காட்சிகளை மட்டும், ‘பூனைக்குட்டி’யை பின்தொடரும் நண்பர்கள் பார்வைக்கு இங்கே வைக்கிறோம்!
(பெரிதாகப் பார்க்க, படங்களின் மீது மவ்ஸ் வைத்து க்ளிக் பண்ணவும்)


‘ஹொனன... ஹோனன செந்தேனா’ பாட்டும், படமாக்கப்பட்ட விதமும், மலையும், அருவியும்... ரொம்பப் பிடித்திருக்குமே? நடுவில் பிரமாண்டமாக அருவி கொட்டிக் கொண்டிருக்க, மலைச்சிகரத்தின் ஒரு பக்கத்தில் இருந்து மறு பக்கத்துக்கு குரங்குகளையும் மிஞ்சுகிற லாவகத்துடன் ஹீரோ தாவிக் குதிப்பாரே? அந்தக் காட்சியில் கைதட்டினீர்கள்தானே? பாருங்கள், என்ன கதை நடந்திருக்கிறது என்று! ஸ்டூடியோவுக்குள், பாதுகாப்பாக கீழே மெத்தை எல்லாம் விரித்து வைத்துக் கொண்டு, முதுகில் (சேப்டியாக) கம்பியும் மாட்டிக் கொண்டு தவ்வுகிற மாதிரி ஒரு ஆக்‌ஷன். தட்ஸ் ஆல்.


ழநியில் மயில் காவடி எடுத்துப் பறக்கிற பக்தர் போல முதுகில் எக்கச்சக்கமாய் கம்பிகள் கட்டிக் கொண்டு மிதந்து போகிறார் பாருங்கள் பிரபாஸ். இந்தக் காட்சியை, திரையில் நீங்கள் எப்படி பார்த்திருக்கிறீர்கள் என்று பக்கத்தில் இருக்கிற படம் சொல்லும்.


கொட்டுகிற அருவிக்கு பக்கமாக பிரபாஸ் நடந்து போகிறார். ஆனால், ஸ்டூடியோவில் படம் பிடித்த போது... அருவியைக் காணோமே, அது எங்கே போச்சு?


த்தனை ஹெச்.பி. மோட்டர் மாட்டினாலும், தண்ணீர் இப்படி ததும்பித் ததும்பிக் கொட்டாது. இவ்வளவு தண்ணீர் கொட்டுகிற அருவி மகிழ்மதி எனப்படுகிற தமிழ் தேசத்தில் இருந்தால், முல்லைப் பெரியாறு சர்ச்சை கூட  இன்றைக்குக் கிளம்பி இருக்காது. அந்தளவுக்கு தண்ணீர் கொட்டும் அருவியில் டூயட் பாடுகிற காட்சியை, இப்படித்தான் எடுத்திருக்கிறார்கள்.


பாடல் முடிந்ததும் வருகிற ஒரு காட்சியில், மிகப்பெரிய ஒரு மரத்தை, பிரபாஸ், டிவியில் வருகிற சோட்டா பீம் போல, சர்வ சாதாரணமாக - அதுவும் பின்புறமாக - தாவிக் கடப்பார், கவனித்திருப்பீர்கள். அந்தக் காட்சியை ஒரு குட்டியூண்டு அறைக்குள்தான் படம் பிடித்திருக்கிறார்கள்.


 படத்தின் ஆரம்பக் காட்சிகளில் ஹீரோ பிரபாஸ் ஏறுகிற அந்த பிரமாண்ட நீர்மலை அருவி நிஜத்தில் எப்படி இருக்கும்? முதல் படத்தில் பார்த்தீர்களா...? அப்படித்தான் இருக்கும்!


ரம்ப கட்டத்தில் வருகிற சூப்பரோ சூப்பர் சீ்ன் இது. மலை உச்சியில் இருந்து டைவ் அடித்து, அம்பு வைத்து மேலே இருக்கிற மரத்தில் அடித்து, அதில் மாட்டியிருக்கிற கொடியைப் பற்றிக் கொண்டு ஏறுகிற மாதிரியான ஒரு சாகசக் காட்சியை இந்தியப் படங்களில் இதற்கு முன்பாக பார்த்த ஞாபகம் இருக்காதே? அதை இப்டித்தான் ப்ரோ எடுத்திருக்காங்க.


கீழ விழுந்தா.... கீழ போக மாட்டோம். ‘மேல’தான் போகணும் என்கிற அளவுக்கு நியூட்டன் விதியை பொய்யாக்குகிற மாதிரியான இந்தக் காட்சி உங்களை பதற்றப்படுத்தியிருக்கலாம். இருக்காதா? மேகக் கூட்டங்களே ஹீரோவுக்குக் கீழேதானே பறக்கின்றன? இடுப்பில் இருக்கிற கயிறு உருவினால், என்னாகும்? நோ டென்ஷன். ஒன்றும் ஆகாது என்பதை இந்தப் படம் நிரூபிக்கிறது இல்லையா?


‘மகேஸ்வரா.... நான் செய்த பாவத்துக்கு மரணமே தண்டனையானால், இந்தக் குழந்தை வாழ வேண்டும்...’ என்று சிவகாமி அதாங்க ரம்யா கிருஷ்ணன் மிரட்டுகிற அந்த காட்டாறு எப்படி இருக்கிறது பாருங்கள். இடுப்பளவுத் தண்ணீருக்குள் இறங்கி, கழுத்து வரைக்கும் போகிற மாதிரி உணர்ச்சி காட்டுவது சிரமம்தான் மக்காஸ்.


டத்தின் PROMO போஸ்டர்களில் இந்தக் காட்சிதான் நிறைய இடம் பிடித்திருந்தது. ஆற்றுத் தண்ணீருக்குள் இருந்து உயர்ந்து எழும்புகிற கையில், ஒரு குட்டிக் குழந்தை. நிஜத்தில், தொட்டித் தண்ணீருக்குள் வைத்து படம் பிடித்திருக்கிறார்கள். அதுவும், குழந்தை எல்லாம் இல்லை. குழந்தைக்குப் பதில், ஒரு கின்லே வாட்டர் பாட்டிலை தூக்கிப் பிடித்த படி!


லை விளிம்புகளில், வவ்வால் போல ஹீரோ தொற்றிக் கொண்டு ஏறிப் போகிற சீன், ஸ்டூடியோவில் காட்சி படுத்தப்பட்டிருக்கிறது.


லை விளிம்பில், கால் வைக்கக் கூட இடமில்லாத சூழலில் முதுகை உரசிக் கொண்டு நடந்து போவாரே ஹீரோ...? கால் மட்டும் வழுக்கினால்... கீழே விரித்து வைத்திருக்கிற மெத்தையில் போய்த்தான் விழவேண்டும்!


‘ஊ... ஹூ... ஊ... ஹூ... உஉஉ...’ என்று அடித்தொண்டையில் இருந்து குரல் எழுப்பிக் கொண்டு டார்ஜான் மர விழுதுகளைப் பற்றிய படியே சாகசம் செய்வாரே, அது மாதிரி இருக்கில்ல? ஆனால், ஸ்டூடியோ அறைக்குள் இருக்கிற தண்ணீர் தொட்டிக்குள் படம் பிடித்திருக்கிறார்கள். அப்புறமாக VFX பண்ணி விட்டார்கள்.


டர்ந்த கானகத்தில் இருக்கிற மரத்தை ‘ஹர்டில் ஜம்ப்’ பண்ணிப் போகிறார் பாருங்கள் ஹீரோ. அது இப்படித்தான். கானகம்தான் மிஸ்சிங்.


CGI - VFX தொழில்நுட்பப் பிரயோகத்துக்கு நல்ல உதாரணம் இந்தக் காட்சி. மன்னன் பல்வாள் தேவனுக்கு தங்கத்தில் சிலை வைக்கிற காட்சியின் போது, இந்த யானை திடீரென டென்ஷனாகி சலம்பல் பண்ணும். முதல்படத்தைப் பாருங்கள். நிஜத்தில் யானையை CGI (Computer generated imagery) தொழில்நுட்பம் மூலமாக வரைகலையில் உருவாக்குகிறார்கள். பிறகு, Visual Effects எனப்படுகிற VFX  தொழில்நுட்பம் மூலமாக, யானையின் ‘சலம்பல்’ கணினித் திரையில் உருவாக்கப்பட்டு, சினிமா ஃபிலிம் சுருளில் பதிவாகிறது.


CGI தொழில்நுட்பம் மூலமாக ஹீரோவுக்கு பின்புறம் உள்ள அரண்மனைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.



CGI தொழில்நுட்பம் ச்சும்மா விளையாண்டிருக்கிறது பாருங்கள். கிரீன் மேட் செட்டுக்குள் இரு புறமும் தீப்பந்தங்கள் மட்டும் வைத்து (அதுவும் கிராபிக்ஸோ, என்னவோ...) ரம்யா கிருஷ்ணனை நடக்க வைத்து படம் பிடித்து விட்டார்கள். பிறகு, கிராபிக்ஸ் குழு பின்னணியில் அரண்மனையை சேர்த்து விட்டது.


CGI தொழில்நுட்பத்தில் உருவான மற்றொரு சூப்பர் காட்சி.


ச்சை கலர் போர்டுகளை தடுப்பாக வைத்து, அதற்குள் ஆடிப் பாடி, படம் பிடித்து, அப்புறம் என்னமாக பின்னணி கிராபிக்ஸ் பண்ணி அசத்தியிருக்கிறார்கள் பாருங்கள்!

எஸ்.எஸ்.ராஜமவுலி
ல்லாம் வெறும் கிராபிக்ஸ்தானே? இதைப் போயா வாய் பிளந்து பார்த்து ஆச்சர்யப்பட்டோம் என்று படத்தை குறைத்து எடை போட்டு விடவேண்டாம். இந்தக் காட்சியமைப்புகளை கிராபிக்ஸ் மூலம் கொண்டு வர, எஸ்.எஸ்.ராஜமவுலி தலைமையிலான படக்குழு உழைத்த உழைப்பு கொஞ்ச நஞ்சமல்ல. இந்தக் காட்சிகளை கற்பனையில் உருவாக்கியதும், அந்தக் கற்பனையை அப்படியே திரை வடிவமாக்கியதும்தான், இயக்குனரின் ஆகப்பெரிய வெற்றி. இரண்டாம் பாகத்தில் கிராபிக்ஸ் மிரட்டல் இன்னும் அதிகம் இருக்கும் என்கிறார் இயக்குனர்.

காத்திருப்போம்!

(பாகுபலி VFX மேக்கிங் வீடியோ... உங்களுக்காக!)


பாகுபலி CGI தொழில்நுட்பம் பற்றி இன்னும் கூடுதலாகத் தெரிந்து கொள்ள, பூனைக்குட்டியில்  வெளியான
 ‘பாகுபலி - காட்சி பிரமாண்டத்தின் உச்சம்!’ கட்டுரையை படிக்கலாம்!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

7 கருத்துகள்:

  1. ராம்பிரகாஷ், ரியாத்12 செப்டம்பர், 2015 அன்று AM 8:50

    பூனைக்குட்டியின;் ஒவ்வொரு கட்டுரையிலும் கடுமையான உழைப்பு இருக்கும். 100வது கட்டுரையில் இன்னும் கூடுதல் உழைப்பை பார்க்க முடிகிறது. தொழில்நுட்ப தகவல்களை விளக்கிய விதம் அருமை. சினிமா தொழில்நுட்ப கட்டுரைகளை தொடர வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. The Bagubali team used MAYA software, i thing. go through and write more about MAYA software.

    பதிலளிநீக்கு
  3. ஒரு கட்டுரை எழுதுவதற்கு இவ்வளவு விசயம் தெரியனுமா.. அப்பப்பா.....
    அருமை.

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...