திங்கள், 7 செப்டம்பர், 2015

நீ நடந்தால்... நடை அழகு!

‘‘இமயமலை போலுயர்ந்த ஒரு நாடும், தன்மொழியில் தாழ்ந்தால், வீழும்...’’ - இது பாரதிதாசனின் வார்த்தைகள். பின்பற்றுகிறோமா? பக்கத்து மாநிலங்கள், தேசங்களைச் சேர்ந்த மக்கள், தங்கள் தாய்மொழியின் சிறப்புகளை பல திசைகளுக்கும் கொண்டு சேர்த்தல், தாய்மொழி கல்வி மேம்பாடு ஆகியவற்றுக்காக டபுள் ஷிப்ட் போட்டு வேலை பார்க்கின்றனர். கட்டிக் காக்க முடியாத அளவுக்கு சொல் வளத்தை கன்டெய்னரில் அடைத்து வைத்திருக்கிற நாம், அன்றாட உரையாடலுக்குக் கூட அயல்மொழிச் சொற்களை இரவல் வாங்கிப் பேசிக் கொண்டிருப்பது, தப்புத்தானே? ‘டிரெய்ன், ஒன் அவர் லேட்டாம் ப்ரோ’ - இதுதான், இன்றைக்கு நாம் பேசிக் கொண்டிருக்கிற ‘தாய்மொழி!’. ஒபாமா கேட்டால், சிரிக்க மாட்டார்?


உங்கள் நடை எப்படி?

லக்கணத்தோடு சேர்த்து ‘நடை’ பற்றியும் தெரிந்து வைத்துக் கொள்வது எழுத்தாளப் பெருமக்களுக்கு பயன்படும். நிறுத்தக்குறி இலக்கணம் முடித்ததும், ‘நடை’ பற்றி நிறைய பேச வேண்டியிருக்கிறது. நடை என்றதும், சினிமாவில் படு ஸ்டைலாக நம்ம உச்ச நட்சத்திரம் நடந்து வருவாரே... அதை நினைத்து விடப்படாது. ஒழுங்கான அமைப்பில் எழுதுவதற்கான நெறிமுறையை, நடை என்று சொல்லலாம். எழுத்தில் ஒருவர் தனக்கென ஏற்படுத்திக் கொண்ட பாணியையும் நடை என்பார்கள். சுஜாதா கதை படிக்கும் போதே, நடை டாலடிக்குமே! நவ நாகரீக எழுத்தைப் பொருத்தளவில், நடை நிறைய புது அவதாரங்கள் எடுத்து விட்டது. பிற மொழி கலப்பு, உள்ளூர் உச்சரிப்பு, வட்டார வழக்கு என இன்றைக்கு திசைக்குத் திசை தமிழ் மாறுபடுகிறது.

தன் அடிப்படையில், நாம் எழுதுகிற நடையை பத்து விதமாக பிரித்திருக்கிறார்கள் தமிழ் அறிஞர்கள். வெள்ளை நடை (படித்தவுடன் புரிந்தால் அது வெ.நடை), கொடும்புணர் நடை (படித்து புரிந்து கொள்வதற்குள் நா வறண்டு விடும்), மணிப்பிரவாள நடை (வடமொழி வார்த்தைகள் கலந்து எழுதுவது), செந்தமிழ் நடை (100 சதவீதம் கலப்படமின்றி, இலக்கணப் பிழை இன்றி எழுதுவது), கொச்சை நடை (இன்னா மாமே... உம்மூஞ்சில எம் பீச்சாங்கைய வெக்க...), செய்யுள் நடை (புலவர்களுக்கு மட்டும் புரிகிறது போல இலக்கிய மணம் கமழும் எழுத்து), தருக்க நடை (கேள்வி - பதிலாக எழுதுவது), கொடுந்தமிழ் நடை (அந்தந்த வட்டாரத்தில் பயன்படுத்தப்படுகிற வார்த்தைகளை போட்டு எழுதுவது), கலப்பு நடை (பிறமொழி சொற்கள் 60 சதவீதம், தமிழ் 40 சதவீதம் போட்டு எழுதினால் க. நடை).

சாய்கோடம்மா... சாய்கோடு!

நிறுத்தக்குறி சப்ஜெக்ட்டில் இனி பார்க்கப்போகிற விஷயம் சாய்கோடு (Slash). ‘ / ’ - இதுதான் ஸ்லாஷ் எனப்படுகிற சாய்கோடு. இதில் இரண்டு வகை இருக்கிறது. முன்சாய்கோடு (Forward slash), பின்சாய்கோடு (Back slash). நிறுத்தக்குறி லிஸ்ட்டில் முன்சாய்கோடு மட்டுமே ( / ) இருக்கிறது. சாய்கோடு என்றாலே ‘ / ’ இதுதான். பேக் ஸ்லாஷ் எனப்படும் பின்சாய்கோடு ( \ ) கம்ப்யூட்டர் மொழியாக மட்டுமே பயன்படுகிறது.

* வாக்கியத்தில் பொருத்தமான வெவ்வேறு விஷயங்கள் சொல்லும்போது ‘ / ’ போடலாம். (காலை உணவாக பொங்கல் / இட்லி / பூரி / தோசை சாப்பிடலாம்).
* அரசாணை தகவல்கள், அலுவலகக் குறிப்புகளுக்கு பயன்படும். (அரசாணை எண்: 2015/009/பணிக்கொடை/)
* தொகையை எழுதும் போது. (ரூ.5000/-)
* இணைய முகவரி எழுதும் போது. (http://)

நட்சத்திரம் இருக்குதா?

டுத்து அடிக்கோடு (Underline / Underscore). படிக்கிறவரின் கவனத்தை ஈர்க்க, குறிப்பிட்ட ஒரு விஷயத்தை அழுத்திப் பதிய வைக்க, அடிக்கோடு எனப்படுகிற அண்டர்லைன் போடுவார்கள். பத்தாம் வகுப்பு பரிட்சை எழுதிய அன்பர்கள், முக்கியமான பார்மூலாக்கள் எழுதியப் பிறகு அதை ஸ்கெட்ச் வைத்து அண்டர்லைன் கொடுத்திருப்பார்களே... அது!

நிறுத்தக்குறி இலக்கணத்தை ‘உடுக்குறி (Asterisk)’ மேட்டருடன் முடித்து விடலாம் என நினைக்கிறேன். புத்தகங்கள் படிக்கும் போது, ஒரு விஷயத்துக்கு பக்கத்தில் ‘ * ’ - இப்படி ஒரு நட்சத்திரம் போட்டிருப்பார்களே, அதுதான் உடுக்குறி. அந்தப் பக்கத்துக்குக் கீழே, குட்டி எழுத்தில், அந்த நட்சத்திரக்குறிக்கான காரணத்தை விளக்கியிருப்பார்கள். விளம்பரத்தில் ‘லிட்டருக்கு 200 கிலோ மீட்டர் கொடுக்கும்’ என்று பெரிய எழுத்தில் எழுதி விட்டு நட்சத்திரம் போட்டிருப்பார்கள். ரொம்பக் கீழே, கண்ணுக்கே தெரியாத குட்டி எழுத்தில் ‘அப்பப்போ உருட்டிக் கொண்டு போனால்...’ என்று விளக்கம் தருவார்கள் இல்லையா...? அது உடுக்குறி.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

2 கருத்துகள்:

  1. இன்றைய தலைமுறையினருக்கு ஏற்றவாறு எளிதாக புரியும் வகையில் அருமையான விளக்கம்.
    கிருஸ்ணகுமார் கலக்கல் குமார்

    பதிலளிநீக்கு
  2. ஒவ்வொன்றையும் அருமையாக விளக்கியுள்ளீர்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...