ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

டாப் டென்... அழகு!

ரே ஒரு எழுத்து மாறினாலும், அர்த்தம் ஆல் அவுட் தலைகீழாகி விடுகிற தமிழ் சொற்கள் பற்றி ஒவ்வொரு அத்தியாயத்திலும் கொஞ்சம், கொஞ்சம் பார்த்துக் கொண்டிருந்தோம்... ஞாபகம் இருக்கா?

 ‘அது ஏன் சார் ரெண்டு வாரமா மிஸ்சிங்?’ என்று தொடர்ந்து படிக்கிற நண்பர் கேள்விக்குறி போட்டு கடுதாசி அனுப்பியிருந்தார்.

மன்னிச்ச்ச்சூ...! (தமிழில் நமக்கு புடிச்ச வார்த்த!?).

 ஒரே ஒரு எழுத்து மாறினாலும் அர்த்தம் உட்டாலக்கடி ஆகிவிடுகிற அந்தக் குழப்ப வார்த்தைகள் (Words of Doubtful spelling) பட்டியலின் தொடர்ச்சியைப் பார்த்து விட்டு, மெயின் மேட்டருக்குப் பயணப்படலாம். சரியா?


சொல்லுங்க எஜமான்... சொல்லுங்க!

ளிப்பேன் (ஹை... ஜாலி) / கழிப்பேன் (இன்னிக்குப் பொழுதை எப்டி போக்குறது?), கீறி (இலையைக் கீறி விடுப்பா) / கீரி (பாம்புக்கு தோஸ்த்!), குளம் (குளிக்க, குடிக்க) / குலம் (நாம தமிழ் குலம்லே), கூரிய (ரொம்ப ஷ்ஷார்ப்) / கூறிய (அண்ணன் என்ன சொன்னாரு?), கூரை (வானமே கூரை?) / கூறை (புது டிரெஸ்சு), கூறுங்கள் (சொல்லுங்க எஜமான்... சொல்லுங்க!) / கூருங்கள் (மிகுதியாக அடையுங்கள் - அன்பு கூருங்கள்), நீர் (தண்ணீ) / நீறு (தூள் - திருநீறு), துறை (நீர்த்துறை - துறைமுகம்) / துரை (பெயர்), துறவு (ஆள விடுங்கப்பா... சன்னியாசம்) / துரவு (நீர்நிலை - தோட்டம், துரவு), தேநீர் (சாயா எனப்படுகிற டீ) / தேனீர் (தேன் கலந்த நீர்), நீளம் (நாக்கு ரொம்ப... நீளம்) / நீலம் (சொட்டு நீலம்டோய்... நிறம்), நெறி (வழி - நெறிமுறை) / நெரி (கழுத்தை நெரி), பட்டணம் (பெரிய ஊர்) / பட்டினம் (கடற்கரை நகரம் - தேவிபட்டினம், நாகபட்டினம், பட்டினப்பாக்கம்), பறி (பிடுங்கு) / பரி (குதிரை), புரம் (நகரம்) / புறம் (பக்கம்), புலி (கடிக்கும்) / புளி (புளிக்கும்), பொறுப்பு (ரெஸ்பான்சிபிலிட்டி) / பொருப்பு (மலை), பொறி (எலியை பிடிக்க) / பொரி (கொறித்து ருசிக்க).
அடுத்த வாரத்துக்கும் கொஞ்சம் வார்த்தைகளை மிச்சம் வெச்சிக்கிடுவோம். சரிதானே?

டாப் டென்... அழகு!

ரு கதையோ, கவிதையோ, கட்டுரையோ, யாருக்காச்சும் கொடுக்கிறதுக்கு ஆசை ஆசையா எழுதுற லெட்டரோ... அது என்னவா வேணா இருக்கட்டும். நீங்க எழுதுற எழுத்துல என்னென்ன அம்சம் இருக்கணும்; என்னனென்ன அம்சம் இருக்கக்கூடாது? இந்த சீக்ரெட் தெரிஞ்சா கலக்கிடலாம்ல? இதை எங்க கத்துக்கிறது என்ற கவலை தாளித்தால்... நோ பிராப்ளம். பவணந்தி இருக்க பயமேன் என்று போனவாரம் பார்த்தோம். எழுத்து நடையில் தவிர்க்கவேண்டிய பத்து தப்பு, கடைபிடிக்கவேண்டிய பத்து கட்டளைகளை பவணந்தி முனிவர் நன்னூல் இலக்கண நூலில் (13ம் நூற்றாண்டில எழுதுனது சார்!) பாயிண்ட், பாயிண்ட்டாக எழுதி வைத்திருக்கிறார். எழுதும் போது செய்கிற பத்து தவறுகள் பற்றி போனவாரம் படித்தோம். எழுதும் போது கடைபிடிக்கவேண்டிய பத்து அழகு விஷயங்கள்...? அது இந்தவாரம்.

‘‘சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல்,
நவின்றோர்க்கினிமை, நன்மொழி புணர்த்தல்,
ஓசையுடைமை, ஆழமுடைத்தாதல்,
முறையின்வைப்பே, உலகமலையாமை,
விழுமியது பயத்தல், விளக்குதாரணத்தது
ஆகுதல் நூலிற்கு அழகெனும் பத்தே...!’’
(நன்னூல்- 13)

* சுருங்கச் சொல்லல்: வளவளன்னு ஜவ்வாக இழுத்து டார்ச்சர் பண்ணக்கூடாது. சொல்லவேண்டியதை சுருக்க்க்கமாக முடித்து விடவேண்டும்.
* விளங்க வைத்தல்: சுருக்க்க்க்கமாக முடிப்பதாக நினைத்துக் கொண்டு என்ன எழுதியிருக்கிறோம் என்றே படிக்கிறவருக்கு புரியாத அளவுக்கு எழுதி முடித்து விடக்கூடாது.
* நவின்றோர்க்கினிமை: படிக்கப் படிக்க செம இன்ட்ரஸ்டிங்கா இருக்கணுமாக்கும் எழுத்து நடை. எளிமையாக, நகைச்சுவை கலந்து, படிக்க இனிமையாக இருக்கணும்.
* நன்மொழி புணர்த்தல்: பிறமொழி கலப்பின்றி, கூடுமான வரைக்கும் நாகரீகமான, படிக்க உகந்த சொற்களைப் பயன்படுத்தவேண்டும் (நம்ம, நம்மொழி செம்மொழி தொடர் மாதிரி?!).
* ஓசையுடைமை: ஓசை முக்கியம். குறிப்பாக, கவிதை எழுதும் போது சந்தம், எதுகை, மோனை என்று ஓசை நயம் குன்றாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
இன்னும் அஞ்சு பாயிண்ட்ஸ் இருக்கில்லையா...? அது அடுத்த வாரத்துக்கு.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...