சனி, 12 செப்டம்பர், 2015

கமல்ஹாசன்(நடிகர்) - இது சரிதானா?


 ‘நிறுத்தக்குறி மேட்டருக்கு ‘சுபம்’ போட்டா எப்படி? இன்னும் நிறைய சந்தேகம் இருக்கே’ என்று தொடர்பில் வந்தார் ஆர்வமாய் அடிக்கடி பேசுகிற நண்பர். ‘போகிற போக்கில் சந்தேகங்களை கிளியர் பண்ணிடலாம் சார். இப்போ என்ன சந்தேகம்?’ என்றேன். ‘அடைப்புக்குறி எழுதும் போது, உள்ளே / வெளியே இடைவெளி (Space) தேவைப்படுமா என்ன?’ - அவர் எழுப்புகிற சந்தேகம் நியாயமானதே. எழுதும் போது நிறையப் பேர் தப்புச் செய்கிற இடமும் இதுதான். அடைப்புக்குறிக்குள் (Brackets) எழுதும் போது இடைவெளி தேவையே இல்லை. கமல்ஹாசன் (நடிகர்) - இது சரி. கமல்ஹாசன் ( நடிகர் ) - இது தப்பு. அடைப்புக்குறியை துவங்குவதற்கு முன்பாக ஒரு இடைவெளி கட்டாயம். கமல்ஹாசன்(நடிகர்) என்று எழுதினால் மார்க் தரமாட்டார்கள்.


புத்தகம் எழுதுறீங்களா?

‘உங்க நடை சூப்பரோ சூப்பர்...’ என்று நிறைய பேர் பாராட்டித் தள்ளுகிற அளவுக்கு எப்படி எழுதுவது? எழுத்து நடையை பிரமாதமாக்குகிற வித்தையை, எழுதும் போது கடைபிடிக்கவேண்டிய விஷயங்களை நன்னூல் சுலபமாக புரிந்து கொள்கிற வகையில் தொகுத்து வைத்திருக்கிறது. எழுத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள் / கொள்ளப்போகிறவர்கள் / ஆர்வமுள்ளவர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயம் இது. நல்ல எழுத்தில் தவிர்க்கவேண்டிய குற்றங்கள் பற்றி நன்னூல் சூத்திரத்தில் (12வது பாடல்) இருக்கிறது. என்னென்ன குற்றமாம்?

‘‘குன்றக் கூறல் மிகைபடக் கூறல்
கூறியது கூறல் மாறுகொளக் கூறல்
வழூஉச்சொல் புணர்த்தல் மயங்க வைத்தல்
வெற்று எனத் தொடுத்தல் மற்று ஒன்று விரித்தல்
சென்று தேய்ந்து இறுதல் நின்று பயன் இன்மை
என்று இவை ஈரைங் குற்றம் நூற்கே...’’

* குன்றக்கூறல்: விளக்கமாகச் சொல்லி புரிய வைக்கவேண்டிய விஷயத்தை, மணிரத்னம் வசனம் போல சுருக்க்க்கமாக முடித்து விடக்கூடாது.
மிகைபடக்கூறல்: இதில் நம்மவர்கள் எக்ஸ்பர்ட். ஈறை பேனாக்கி, பேனை பெருமாள் ஆக்குவது என்று சொல்வார்களே... அது. எக்ஸ்ட்ரா பில்டப், நடைக்கு ஆகாது. ‘யேய் நிறுத்தப்பா...’ என்று வாசகர் டென்ஷன் ஆவதற்குள் மேட்டரை முடித்து விடவேண்டும்.
* கூறியது கூறல்: சொன்னதையே திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்பச் சொல்லி ராவடி பண்ணக்கூடாது.
* மாறுகொளக்கூறல்: ‘அது அப்போ... இது இப்போ...’ மேட்டர் இது. ஒரு கட்டுரையில் முதல் பாரா ஒரு மேட்டரை தொட்டு விட்டு, கடைசிப்பாராவில் தலைகீழாக பல்டியடித்து வேறு மேட்டருக்கு போய் விடக்கூடாது. அதாவது, முன்னுக்குப் பின் முரணாக எழுதக்கூடாது.
வழூஉச்சொல் புணர்த்தல்: தவறான சொற்களை பயன்படுத்துவது. எழுத்துப் பிழை இதெல்லாம் நல்ல எழுத்துக்கு அழகல்ல.
மயங்க வைத்தல்: ஹிப்னாடிஸம், மெஸ்மரிஸம் மேட்டர் அல்ல. இப்டிச் சொல்லியிருக்காரா... அப்டிச் சொல்லியிருக்காரா என்று படிக்கிற வாசகரை சந்தேகத்தில் தலையை பிய்க்க வைத்து விடக்கூடாது.
வெற்றெனத் தொடுத்தல்: அர்த்தமற்ற, அந்த இடத்துக்கு பொருத்தமற்ற சொற்களைப் பயன்படுத்தக்கூடாது.... கேட்டிங்களா?
* மற்றொன்று விரித்தல்: ஒரு விஷயம் எழுதிக் கொண்டிருக்கும் போதே, திடீரென மேட்டர் மாறி, வேறு விஷயத்துக்கு தாவி விடக்கூடாது.
* சென்று தேய்ந்து இறுதல்: ஆரம்பம் படு ஜேராக இருக்கும். போகப் போக... கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக, உப்புச்சப்பில்லாமல் முடிந்து விடும். அது கூடாது. ஆரம்ப ஜோர் எழுத்தின் கடைசி வரைக்கும் இருக்கணுமாக்கும்.
நின்று பயன் இன்மை: படிக்கிற வாசகருக்கு பயனில்லாத ‘வெட்டி மேட்டர்’ கூடவே கூடாதாம்!

பவணந்தி இருக்க பயமேன்!

ன்றைக்கு எழுத்தாளர்கள் எண்ணிக்கை பெருகி விட்டது. ஃபேஸ் புக், வாட்ஸ் அப் என்று கிடைக்கிறதில் எல்லாம் எழுதுகிறார்கள். படிக்கும் போது நன்றாகவும் இருக்கிறது. கொஞ்சம் தெரிந்து கொண்டு எழுதினால், பிரமாதமாக இருக்கும். அங்கீகாரமும் கிடைக்கும். ‘அதுக்கு என்ன பண்ணனும் சார்?’ என்பது உங்கள் கேள்வியாக இருந்தால், பவணந்தி முனிவர் (நன்னூல் எழுதுன முனிவர்!) மேலே சொல்லியிருக்கிற பத்தையும் மனதில் பதித்துக் கொள்ளுங்கள். கதை, கட்டுரை, கவிதை, லவ் லெட்டர்.... எழுதுகிறது எதுவாக இருந்தாலும், மேற்படி பத்தையும் தவறாமல் கடைபிடித்தால்... நிச்சயம் சக்ஸஸ். சரி. பத்து தப்பு பார்த்தாச்சு. நல்ல எழுத்து எப்படி இருக்கவேண்டுமாம்? மிஸ்டர் பவணந்தி அதை விட்டு வைப்பாரா என்ன? எழுதும்போது கடைபிடிக்கவேண்டிய ‘பத்து அழகு’கள் அடுத்த ஞாயிற்றுக்கிழமை. ஓ.கே.?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

2 கருத்துகள்:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...