புதன், 2 செப்டம்பர், 2015

ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் பாட்டு கேட்டீங்களா?

‘பங்காளி... கழுத்தில இருந்து ரத்தம் ஏதாச்சும் வருதா பாரேன்...’
‘இல்லயேடா மாமு. ஏன் என்னாச்சு?’
‘இல்ல பங்காளி. இப்பத்தான் தமிழ் இலக்கணம் கிளாஸ் முடிச்சு வர்றேன்... அதான்!’
- ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் இருவர் இப்படிப் பேசக் கேட்டேன்.
அடக் கொடுமையே. தமிழ் இலக்கணம் படிப்பது அவ்வளவு டார்ச்சரான விஷயமா? ஏன் இப்படி ஒரு கருத்தாக்கம் இன்றைய மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. இது நல்ல அறிகுறியாகத் தெரியவில்லையே? தமிழ் அறிஞர்களுடன் தொலைபேசினேன். ‘‘எதையெல்லாம் புரிஞ்சுக்கறது கஷ்டமோ, அதையெல்லாம் வெறுக்கறது மனித இயல்பு. அதான் காரணம். இலக்கணப் பாடம் நடத்துற ஆசிரியர், தன்னோட லெவல்ல இருந்து பாடம் நடத்தாம, மாணவரோட லெவலுக்கு, அவனோட புரிதல் லெவலுக்கு இறங்கி வந்து நடத்தணும். அப்புறம், ரொம்ப முக்கியம். இலக்கண உதாரணங்களை அன்றாட வாழ்க்கையில் இருந்து கொடுத்து புரிய வைக்கணும்...’’


பிராக்கெட் போடலாமா?

ரொம்பச் சரி. தமிழ் இலக்கண புத்தகங்களை ஒரு புரட்டுப் புரட்டிப் பாருங்கள். டைஜின் / ஜெலுஸில் போட்டுக் கொண்டே படித்தால் மட்டுமே உள்ளே இறங்கும். அல்லாதபட்சத்தில், பாடம் அஜீரணப் பிரச்னைகளை ஏற்படுத்தலாம். அதுவும், இந்தக் காலத்து இளைஞர்களுக்கு, இந்தக்காலத்து வாழ்வியல் நடைமுறைகளில் இருந்து எடுத்துக்காட்டுகள் சொல்லி நடத்தாவிட்டால், தமிழ் இலக்கணப் பாடம் முடித்து வெளியே வருகிற ‘பங்காளிகள்’ கழுத்தில ரத்தம் வருதா என்று வகுப்பறைகளின் வெளியே ஆராய்ந்து கொண்டிருக்கிற காட்சிகளைத் தவிர்க்கமுடியாது. சத்தியம்.

தொடரின் 38வது அத்தியாயத்தின் முடிவில் பிறைக்குறி எனப்படுகிற பிராக்கெட் பற்றி படித்தோம். எங்கே போடவேண்டும் / கூடாது என்று பார்த்தோம். நிறுத்தக்குறி நெறிமுறைகளில் தெரிந்து கொள்ள இன்னும் கொஞ்சூண்டு இருக்கிறது. அதை பார்த்திடலாம்.

சதுர அடைப்பு (Square Brackets):

* சில தகவல்களை மேற்கோள் குறி போட்டு எழுதுவோம் இல்லையா? அப்படி மேற்கோள் குறிக்குள் இடம்பெறும் வரியில், வேறு ஒரு புதுத் தகவல் சொல்லும் போது இந்த சதுர அடைப்பு [...] போடலாம் - ‘‘ரஜினி எத்தனையோ கேரக்டர்கள் பண்ணியிருந்தாலும், உயிரற்ற ரோபோவா அவர் நடிச்சு கலக்கின படம்தான் [எந்திரன்] எனக்கு ரொம்பவும் ஸ்பெஷல்!’’

* பிராக்கெட் (பிறைக்குறி) போட்டு எழுதிக் கொண்டிருக்கிற போதே, கூடுதலாக இன்னொரு பிராக்கெட் தேவைப்படுகிற இடத்தில், இந்த சதுர அடைப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் - தமிழில் வெளிவந்த சில நாவல்கள் (குறிஞ்சித்தேன் [ராஜம் கிருஷ்ணன்], நைலான் கயிறு [சுஜாதா], இரும்புக்குதிரைகள் [பாலகுமாரன்]) அடுத்த தலைமுறை எழுத்தாளர்களிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

இணைப்புக்கோடு (Dash, Hyphen):

டேஷ், ஹைஃபன் எனப்படுகிற இந்த இணைப்புக்கோடு இன்று எழுத்தில் மிக அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. நமது தொடரிலேயே கூட நீங்கள் கவனித்திருக்கலாம். எங்கெங்கே இந்த இணைப்புக்கோடு தேவைப்படுகிறது?
* தனித்தனியாக கூறப்பட்ட விஷயங்களின் முடிவில், அவை ஒரு தொகுப்பு என புரிய வைப்பதற்கு. பொங்கல், பூரி, கிச்சடி - காலையில் டிபனுக்கு இதில் எது பெஸ்ட்?
* ‘என்று, என்பது, அதை, இடையே’ ஆகிய சொற்களை எழுத டயர்டாக இருக்குமேயானால், சின்னதாக ஒரு டேஷ் போட்டால் போதும்.
இன்று மாலை சினிமாவா, கிரிக்கெட்டா? - குழம்பினான் குமார்.
‘வாடா கிளம்பலாம்’ - பைக்கை ஸ்டார்ட் செய்தான் ராம்.
பையன் தம்மடிப்பானா - நம்ப முடியலையே?
இந்தியா - பாகிஸ்தான் போட்டி இன்று நடக்கிறது.
* ஒரு வாக்கியத்தின் இடையே திடீரென புது தகவலை புகுத்தும் போது. ஓ காதல் கண்மணி படத்தில் ஒரு பாடலை ஏ.ஆர்.அமீன் - ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் - பாடியிருக்கிறார்.
* இது முதல் அது வரை என குறிப்பிடுவதற்கு. பக்கம் 15 - 30.
* இருவேறு சொற்களை சேர்த்து எழுதும் போது (வினாடி-வினா, பகல்-இரவு ஆட்டம்)
* (தொலைபேசி) எண்களை எழுதும் போது பிரித்துக் காட்ட. (044 - 1234567)

சில இடங்களில் இந்த டேஷ், ஹைஃபன் தவறாகவும் பயன்படுத்தப்படுகிறது. எங்கெங்கே தேவையில்லை?
* ஒரு எண்ணும், அதன் தொடர்ச்சியாக எழுத்தும் சேர்ந்து வரும் போது. (பஸ் நம்பர் 12 பி, வீட்டு எண் 70 பி)
* ஊர் பெயரை எழுதி அடுத்து பின்கோட் எழுதுகிற இடத்தில் ‘-’ வேண்டாம். (திருமங்கலம் 625706)

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

1 கருத்து:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...