ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

இரவு 9 மணிக்கு... தப்பு சார் தப்பு!

‘அப்டி என்ன பெரிசா தப்பு பண்ணீட்டேன்? ஒரு எழுத்து... ஒரே ஒரு எழுத்துத்தான மாறிடுச்சி?’ என்றெல்லாம் சாக்குப்போக்கு சொல்லமுடியாது. ஒரு எழுத்து மாறினாலும், அர்த்தம் தலைகீழாகி விடுகிறது என வார வாரம் படிக்கிறோம் இல்லையா? போனவாரம் பார்த்தோம். புலி / புளி - ஒரு எழுத்துத்தான் வித்தியாசம். ‘தேசிய புளிகள் சரணாலயம்’ என்று வனப்பகுதியில் போர்டு எழுதி வைத்தால் என்ன ஆகும்? ‘கிலோ எவ்வளவு சொல்லுவீக...’ என்று கேட்டுக் கொண்டு மஞ்சள் பையுடன் கூட்டம் கிளம்பி வந்து விடாதா? தலைதெறித்து புலி இடத்தை காலி செய்து விடும். குழப்ப வார்த்தைகள் (Words of Doubtful spelling) பட்டியலை இந்த வாரத்துடன் முடிச்சிக்கலாம். சரியா?


மரக்கரி இருந்தா... மரக்கறி ரெடி!


ரக்கறி (ப்யூர் வெஜிடேரியன் உணவு) / மரக்கரி (அடுப்பு எரிக்கலாம்), மாறி விட்டது (சேஞ்ச் ஆகிடுச்சி) / மாரி விட்டது (மழை முடிஞ்சிடுச்சு), முற்காலம் (லாங் லாங் எகோ - முன் + காலம்) / முக்காலம் (மூன்று காலம்), முந்நூறு (300) / முன்னூறு (அட்வான்ஸா ஒரு நூறு வெட்டலாமா - முன் + நூறு), முன்னால் (முன்பாக) / முன்னாள் (முந்தைய நாள்) / முந்நாள் (மூன்று நாள்), வன்மை (ஆற்றல் - சொல் வன்மை) / வண்மை (அள்ளிக் கொடுக்கிற குணம் - கொடை), வாய்ப்பாடு (2 * 2 = 4 டூ, டூஸ் ஆர் ஃபோர்) / வாய்ப்பாட்டு (பாட்டுப் பாடவா...).

ரு எழுத்தால் ஏற்படுகிற குழப்பங்களை ஓரளவுக்கு பார்த்தோம். ஒரு நல்ல கட்டுரை, கதை, கவிதை என்பது எழுத்துப் பிழைகளற்றதாக இருக்கவேண்டியது கட்டாயம். எழுத்துப் பிழைகள் என்பது சாலையில் போடுகிற ஸ்பீட் பிரேக்கர் மாதிரி. படிக்கிற வாசகரின் வேகத்தை குறைத்து விடும். ஓவராகப் போனால், ரூட்டை மாற்றி விடுவார்கள். தமிழ் இலக்கணம், கொஞ்சமே கொஞ்சம் தெரிந்து கொண்டாலும் போதும். இந்தத் தப்புக்கெல்லாம் பெரிய முற்றுப்புள்ளி போட்டு விடலாம். ஒவ்வொரு விஷயத்துக்கும் நெறிகள் வகுத்து வைத்திருக்கிறது தமிழ். ‘ராத்திரி 9 மணி பஸ்சில ஊருக்குப் போறேன்...’ என்று யாராவது சொன்னால், அது எவ்ளோ பெரிய தப்பு தெரியுமா?

எற்பாடுல இருக்கா ஏற்பாடு?

ரு நாளின் பொழுதை ஆறு பிரிவுகளாக தமிழறிஞர்கள் பகுத்து வைத்திருக்கிறார்கள். காலை (6 முதல் 10 மணி வரை), நண்பகல் (காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை), எற்பாடு (பிற்பகல் 2 முதல் மாலை 6 மணி வரை), மாலை (மாலை 6 முதல் முன்னிரவு 10 மணி வரை), யாமம் (முன்னிரவு 10 முதல் பின்னிரவு 2 மணி வரை), வைகறை (விடிகாலை 2 முதல் காலை 6 மணி வரை). இந்தக் கணக்குப் படி, இரவு 9 மணி என்றால் தப்பு. மாலை 9 மணி என்றுதான் சொன்னால்தான் சரி.

ஒரு நல்ல கட்டுரை, கதை, கவிதையில் கட்டாயம் இருக்கவேண்டிய ‘அழகு’கள் என பத்து விஷயங்களை நன்னூல் வலியுறுத்துகிறது.

‘‘சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல்,
நவின்றோர்க்கினிமை, நன்மொழி புணர்த்தல்,
ஓசையுடைமை, ஆழமுடைத்தாதல்,
முறையின்வைப்பே, உலகமலையாமை,
விழுமியது பயத்தல், விளக்குதாரணத்தது
ஆகுதல் நூலிற்கு அழகெனும் பத்தே...!’’
(நன்னூல்- 13)


இந்த பத்தில், ஓசையுடைமை வரைக்குமான ஐந்து முடிந்து விட்டது. ஐந்து பாக்கி இருக்கிறது. இந்த வாரம் முடித்து விடலாம்.

* ஆழமுடைத்தாதல்: மேம்போக்காக எழுதித் தள்ளக்கூடாது. ஆழமான, செரிவான விஷயம் இருக்கவேண்டும், கேட்டிங்களா?
* முறையின் வைப்பே: ஒரு விஷயத்தை அதன் வரிசை மாறாமல் (Continuity) தொடர்ச்சியாக, அடுத்தடுத்து சீராகச் சொல்லவேண்டும், ஓ.கே?
உலகமலையாமை: இயற்கைக்கு / வழக்கத்துக்கு மாறாக இல்லாமல், இயல்பாக இருந்தால்தான் ரைட்டு.
விழுமியது பயத்தல்: நல்ல அர்த்தம் தரணுமாக்கும்.
* விளக்குதாரணத்தது: படிக்கிறவர் எளிதாக புரிந்து கொள்ளத்தக்க வகையில் ஆங்காங்கே சின்னச்சின்னதாய் பொருத்தமான எடுத்துக்காட்டுகள் கொடுக்கணும் சார்.

ச்சா? எழுதும் போது கடைபிடிக்கவேண்டிய உத்திகள் பற்றிக் கூட நன்னூல் எழுதிய பவணந்தி சார் குறிப்பிட மறக்கவில்லை. எழுதுகிற ஆர்வம் இருக்கிறவர்கள் வீட்டில் நன்னூல் புத்தகம் இருக்கவேண்டியது கட்டாயம். இனி, அடுத்தவாரம்!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

1 கருத்து:

  1. நல்லா எழுதியிருக்கீங்க ப்ரதர்.... இதெல்லாம் எந்த நேரத்துல எழுதுவீங்க யாமத்துலயா? வைகறையிலயா?

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...