சனி, 8 ஆகஸ்ட், 2015

பாண்ட்... ஜேம்ஸ்பாண்ட்!


‘கட்டுரை ஒண்ணு எழுதிகிட்டிருக்கேன் சார். ஒரு சின்ன டவுட்டு. வியர்வை, வேர்வை... எந்த வார்த்தை சரி? ரைட்டிங் பாதியில நிக்குது. அர்ஜென்ட்டா கிளியர் பண்ணமுடியுமா?’ - நண்பர் தொலைபேசியில் வந்தார். கிளியர் பண்ணிட்டாப் போச்சு. ‘வியர்வை, வேர்வை இரண்டுமே சரிதான். சார் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். தப்பில்லை’ என்றேன். ‘அதெப்பிடி சார்?’ என்றார். வியர்வை மேட்டர் மட்டுமில்லை. இன்னும் நிறைய வார்த்தைகள் இருக்கின்றன. இரு வகையாக எழுதப்படுகிற சொற்கள் (Words of double spelling) என்று தமிழில் ஒரு பட்டியலே இருக்கிறது. எப்படி எழுதினாலும், அர்த்தம் மாறாது. தப்பும் இல்லை. அந்த லிஸ்ட்டில் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா?


அக்கரை இருக்கா?

ப்போது / அப்பொழுது, அறம் / அறன், ஆனை / யானை, இயந்திரம் / எந்திரம், கனா / கனவு, கோயில் / கோவில், செதில் / செதிள், திறம் / திறன், துளிர் / தளிர், பவளம் / பவழம், பெயர் / பேர், மங்கலம் / மங்களம், வியர்வை / வேர்வை... இப்படி நிறைய இருக்கின்றன. எழுத்து மாறினால், இந்த வார்த்தைகளில் மட்டும் தப்பில்லை. இடத்துக்கு ஏற்ற மாதிரி மாற்றி, மாற்றி போட்டு தாக்கவேண்டியதுதான். பொதுவாக, கும்பிடப் போகிற இடத்தை கோயில் என்றும், ஊர் பெயரை கோவில் என்றும் எழுதவேண்டும் என்பார்கள் (முருகன் கோயில், நாகர்கோவில்). மாறினாலும் தப்பில்லை. யாரும் கேஸ் போடமாட்டார்கள்.

ரு வகையாக எழுதப்படுகிற சொற்களைப் பார்க்கிற போதே, மறக்காமல் தெரிந்து கொண்டு விடவேண்டிய மற்றொரு விஷயம் இருக்கிறது. அது, சந்தேகத்திற்குரிய சொற்கள் (List of words of Doubtful spelling). சில சொற்களை எழுதும் போது, இது சரியா, அது சரியா என்று குழப்பம் தாளிக்கும். பிழையின்றி தமிழ் எழுத, இந்த குழப்பியடிக்கிற சொற்கள் பற்றி கட்டாயம் தெரிந்திருக்கவேண்டும். இல்லாவிட்டால், தப்புத் தப்பாக லெட்டர் எழுதிக் கொடுத்து, வாங்கிக் கட்டிக் கொள்ளவேண்டியிருக்கும். ‘உன் எதிர்காலத்தில எனக்கு எவ்வளவு அக்கரை இருக்கு தெரியுமா?’ என்று எழுதினால்... கஷ்டம். அக்கறை என்றால் கவனம். நீங்கள் எழுதியிருந்த அக்கரை என்பதற்கு ஆற்றின் அந்தப்பக்க கரை என்று அர்த்தம். இன்னும் கொஞ்சம் சொற்களும் பார்க்கலாம்.

சாப்டர் க்ளோஸ்!

றம் (தர்மம்) / அரம் (ஒரு கருவி), அறிந்தான் (தெரிந்து கொண்டான்) / அரிந்தான் (வெட்டினான்), இரந்தான் (தான தர்மம் செய்தான்) / இறந்தான் (சாப்டர் க்ளோஸ்), இறக்கம் (சரிவு) / இரக்கம் (ஐயோ... பாவம்), உழவுத்தொழில் (காவிரியில் தண்ணீ வருமா?) / உளவுத்தொழில் (பாண்ட்... ஜேம்ஸ் பாண்ட்) - இந்த மாதிரி வார்த்தைகள் இன்னும் நிறைய இருக்கின்றன. அடுத்தவாரமும் பார்க்கலாம். இப்போ, நிறுத்தக்குறிகள் நமக்காக நிற்கின்றன. அங்கே போலாம்... வாங்க!


* விடுகுறி (Apostrophe).இதை (') தனிமேற்கோள் குறி என்றும் சொல்வார்கள். மேட்டரை சுருக்க்க்க்கமாக சொல்வதற்காக எண் அல்லது எழுத்தை விட்டு விட்டு எழுதும் போது ( ’ ) இந்தக் குறி போடலாம். செப்டம்பர் ’15 என்றால் செப்டம்பர் 2015 என்று புரிந்து கொள்ளவேண்டும்.

* மேற்படி குறி (Ditto mark).குறிப்பிட ஒரு விஷயம் மீண்டும், மீண்டும் தொடருமானால், இந்த ‘டிட்டோ’ குறி போடலாம். வீட்டில் மளிகை சிட்டை எழுதியிருக்கிறீர்களா? தக்காளி 1 கிலோ, கத்தரிக்காய் 1 கிலோ, வெண்டைக்காய் 1 கிலோ என்று லிஸ்ட் எழுதுகிற போது, கத்தரிக்காய், வெண்டைக்காய் என்று மட்டும் எழுதி விட்டு, அளவுக்கு பதில் ‘டிட்டோ மார்க்’ போட்டால், கடைக்கார அண்ணன் 1 கிலோ என்று புரிந்து கொள்வார்.

* பிறைக்குறி (Brackets என்று பிரிட்டீஷ் காரர்களும், Parentheses என்று அமெரிக்கா காரர்களும் பெயர் சூட்டியிருக்கிறார்கள்) பற்றி நாம் விளக்கவேண்டிய அவசியமில்லை. விளக்கிக்கூற வேண்டிய இடத்தில் பிராக்கெட் போடலாம். இந்த பாராவையே பாருங்களேன். பிறைக்குறி என்று சொல்லி விட்டு, பிராக்கெட்டுக்குள் பிரிட்டீஷ், அமெரிக்கா காரர்கள் பற்றி விளக்கப்பட்டிருக்கிறது இல்லையா? இதுதவிர, ஒரு நபரின் வயது, தேதி போன்ற கூடுதல் தகவல்களை பிராக்கெட் போட்டு எழுதலாம். கண்ணன் (வயது 22) நாளை (மார்ச் 30) ஊருக்கு (சென்னை) போகிறார்.
மற்றவை அடுத்தவாரம்.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

5 கருத்துகள்:

 1. நன்று நன்று

  கரிகாலன்

  பதிலளிநீக்கு
 2. ‘டிட்டோ’ விளக்கம் உட்பட அனைத்தும் அருமை...

  பதிலளிநீக்கு
 3. தமிழ் இலக்கணத்தை ஜேம்ஸ்பாண்ட் படம் போட்டும் சொல்லித் தரமுடியமா? நல்ல முயற்சிதான். பழைய பதிவுகளை பார்க்க இணைபபு தரமுடியுமா?

  பதிலளிநீக்கு
 4. தம்பி, கிருஷ்...பொளந்து கட்டுறீங்க. வாழ்த்துகள். நான், நிறைய உங்கள் தொடர் கட்டுரைகளில் இருந்து கற்றுக்கொண்டேன்.

  பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...