சனி, 22 ஆகஸ்ட், 2015

யானை, யானை... எத்தனை யானை?


‘போன வாரம் கட்டுரை படிச்சதும் ரொம்ப, ரொம்ப ஏமாந்து போயிட்டோம் சார்...’ என்று சில அழைப்புகள் வந்தன. நிஜ அர்த்தத்தில் சொல்கிறார்களா அல்லது இன்றைக்கு நாம் பயன்படுத்துகிற ‘டகால்டி’ அர்த்தத்தில் சொல்கிறார்களா என்று சிறிதுநேரம் புலப்படவில்லை (ஏமாந்து என்கிற தமிழ்ச் சொல்லுக்கு மகிழ்ச்சி, இன்பம் என்பதே நிஜ அர்த்தம் என்று கடந்தவாரம் படித்தோம்... கேட்ச் பண்ணீட்டிங்களா?). இதுபோல இன்னும் நிறைய, நிறைய தமிழ்ச் சொற்களை, அதன் நிஜ அர்த்தம் இன்னதென்று தெரியாமல் / புரியாமல் நாம் ‘டேமேஜ்’ பண்ணிக் கொண்டிருக்கிறோம். கடந்தவாரம் பார்த்த கட்டடம் - கட்டிடம், கறுப்பு - கருப்பு இதெல்லாம் அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்துகிற உதாரணங்கள்.


‘பிடி’ன்னா லேடீ!

போனவாரம் நாம் பார்த்த ‘கரி’ என்கிற சொல்லும் சில வாசகர்கள் மத்தியில் சந்தேகங்களைக் கிளப்பியிருந்ததை தொலைபேசி அழைப்புகள் புரிய வைத்தன. கரி என்றால் அடுப்புக்கரி மட்டும்தானே தெரியும்? யானை என்றொரு சுத்தமான நெய்யில் தயாரிக்கப்பட்ட அர்த்தமும் இருப்பது இப்போதுதான் தெரிகிறது என்று வாசகர்கள் புளகாங்கிதம் அடைந்திருந்தார்கள். கரிய நிறமாக இருப்பதால் அதன் பெயர் கரி. சரி. வெள்ளைக்கலர் யானையை கரி என்று கூப்பிட்டால் அது சங்கடப்படுமே? கவலை வேண்டாம். வெள்ளையானைக்கு (இருக்கிறதா என்ன?) வேழம் என்று பெயர் சூட்டி வைத்திருக்கிறது தமிழ். யானை என்கிற சிங்கிள் ஜீவனுக்கு மட்டுமே தமிழ் எத்தனை பெயர்கள் வைத்திருக்கிறது என்று தெரிந்தால் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். யானைக்கு உலகின் எந்த மொழியிலும் இத்தனை பெயர்கள் இல்லவே இல்லை (சேலஞ்ச்?!). சாம்பிளுக்கு கொஞ்சம் மட்டும் இங்கே...


ளிறு, களபம், மாதங்கம், உம்பர், அல்லியன், ஆம்பல், இபம், இரதி, குஞ்சரம், தும்பு, வல்விலங்கு, தூங்கல், கறையடி, பெருமா, வாரணம், ஓங்கல், பொங்கடி, கும்பி, தும்பி, நால்வாய், கயம், சிந்துரம், புகர்முகம், மதாவளம், தந்தாவளம், வழுவை, மதகயம், போதகம், மதோற்கடம், கடகம் - ஆண் யானைக்கு தமிழ் சூட்டிய பெயர்கள் இதுபோல இன்னும் நிறைய இருக்கின்றன. பெண் யானைக்கு இருக்கிற பெயர்களையும் பார்த்து விடலாம். பிடி, அதவை, வடவை, கரிணி, அத்தினி - இதெல்லாம் கண்களைச் சிமிட்டி, சிமிட்டி நடக்கிற லேடீஸ் யானைகள். கயந்தலை, போதகம், துடியடி, களபம் - வாண்டு யானைகளை இந்தப் பெயர் சொல்லி அழைத்தால், திரும்பிப் பார்த்து (ஒருவேளை) புன்னகை புரியலாம். யானை ஓ.கே. இனி நாம், இலக்கணம் இருக்கிற திசை நோக்கிச் செல்லலாம்.

கமா எதுக்கு?

நிறுத்தக்குறிகள் எனப்படுகிற Punctuation marks பற்றி பார்த்துக் கொண்டிருந்தோம். 39வது வாரம் திடீரென திசை திரும்பி விட்டது. திரும்பவும் அங்கேதான் போகிறோம். நான்கு வாரம் பார்த்தப் பிறகு, ‘அதெதுக்கு சார் பங்க்ச்சுவேஷன் மார்க். நீங்க சொல்ற நன்னூல்ல அது இருக்கா?’ என்று நண்பர் கிராஸ் பண்ணினார். தொடரை அவர் தொடர்ந்து படிக்கத் தவறியிருக்கலாம். தப்பில்லை. நன்னூலை தலைகீழாகத் திருப்பிப் பார்த்தாலும் கமா, புல் ஸ்டாப் பற்றி எல்லாம் அதில் இருக்காது. அப்புறம் எப்படி...? இலக்கணம் என்பது அடிப்படையான சில விஷயங்களை நமக்கு சொல்லிக் கொடுத்து விடுகிறது. எது சரி, எது தப்பு என்று. அது போட்டுக் கொடுத்த பாதையில் நாம் பயணப்படுகிறோம். நமது பயணத்தை அழகாக அமைத்துக் கொள்ள இந்த கமா, செமிகோலன் போன்ற நெறிமுறைகள் உதவுகின்றன.

லக்கணத்துக்கு வெளியே, உரைநடையில் நாம் பின்பற்றவேண்டிய நிறுத்தக்குறி விதிகள் போகிற போக்கில் கிளப்பி விடப்பட்டவை அல்ல. தமிழ் அறிஞர்கள் பலர் ஒன்றாக ஒரு சிட்டிங் போட்டு தயாரித்து வைத்திருப்பவை. உரைநடையில் கடைபிடிக்கவேண்டிய நெறிமுறைகள், நிறுத்தக்குறிகளை பற்றி எல்லாம் அக்குவேர், ஆணிவேராக வரையறுத்து வைத்திருக்கிறார்கள். சரியா? இந்த நெறிமுறைகளைத் தொகுத்துத் தருகிற நூல் நடைக் கையேடு (Manual of Style).  தமிழறிஞர்களின் உழைப்பில், மைசூரில் இருக்கிற இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், சென்னையில் உள்ள மொழி அறக்கட்டளை ஆகியவை இணைந்து 2001ல் தமிழ்நடைக் கையேடு நூல் வெளியிட்டிருக்கின்றன என்றால், பார்த்துக் கொள்ளுங்கள். நிறுத்தக்குறிகளில் நாம் மிச்சம் விட்டு வைத்திருக்கிற ஒன்றிரண்டை அடுத்தவாரம் முடித்த்த்த்தே விடலாம்... சரிதானே?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

1 கருத்து:

 1. யானை...எத்தனை யானையடா ???
  களிறு, களபம், மாதங்கம், உம்பர், அல்லியன், ஆம்பல், இபம், இரதி, குஞ்சரம், தும்பு, வல்விலங்கு, தூங்கல், கறையடி, பெருமா, வாரணம், ஓங்கல், பொங்கடி, கும்பி, தும்பி, நால்வாய், கயம், சிந்துரம், புகர்முகம், மதாவளம், தந்தாவளம், வழுவை, மதகயம், போதகம், மதோற்கடம், கடகம் - ஆண் யானைக்கு தமிழ் சூட்டிய பெயர்கள்..........

  யானை...எத்தனை யானையடி???
  பிடி, அதவை, வடவை, கரிணி, அத்தினி

  கயந்தலை, போதகம், துடியடி, களபம் - வாண்டு யானைகள் !!!

  அருமை சார்...

  பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...