சனி, 15 ஆகஸ்ட், 2015

ஏமாந்து போவதும்... இன்பமே!

ரு வார்த்தை மாறினாலும், அர்த்தம் அம்பேல் ஆகி விடுகிற சொற்களை கடந்தவாரம் ஆரம்பித்தோம். ‘நிஜம்தான் சார். படிக்கிற காலத்தில், அரம் செய்ய விரும்புனு ஆத்திச்சூடி எழுதிட்டேன். அரம் செய்யணும்னா திருப்பாச்சேத்தி பக்கம்தான் போகணும்பா. இது, அறம் செய்ய விரும்பு அப்டின்னு கரெக் ஷன் போட்டுட்டு, மிஸ் பின்னிட்டாங்க...’ என்று வாசகர் லைனில் வந்தார். இதுமாதிரி இன்னும் நிறைய வார்த்தைகள் இருக்கின்றன. தெரிந்து கொண்டால் மிஸ்சிடம் அடி வாங்காமல் தப்பிக்கலாம். ஆரம்பிக்கலாமா?


கன்னிக்கு கண்ணி?

றும் (இனிப்பை பார்த்தால்.. நாக்கில் என்ன நடக்கும்?) / ஊரும் (எறும்பு எப்படீங்ணா மூவ் ஆகும்?), உரை (பேசப் போகிற மேட்டர்) / உறை (கவர் வாங்கிப் போடுங்க பிரதர், செல்போனுக்கு), ஊன் (சிக்கன், மட்டன் வகையறா) / ஊண் (உணவு), எண்ணெய் (தலைக்கு தேய்க்க, சமையல் செய்ய) / எண்ணை (நம்பரை... அதான், எண்ணைச் சொல்லுங்க சார்), எரிந்தான் (பத்த வெச்சிட்டியே பறட்ட...) / எறிந்தான் (குட் த்ரோ), ஏமாந்து (ஜாலி, இன்பம், மகிழ்ச்சி) / ஏமாறி (நம்பி மோசம் போயிட்டேனே...), ஏரி (தண்ணீ எவ்ளோ கெடக்கு?) / ஏறி (பஸ்சில ஏறி), ஒரு (சிங்கிள், ஒன்று) / ஒறு (தண்டனை), ஒளித்தான் (மறைத்தான்) / ஒழித்தான் (இல்லாம பண்ணீட்டான்), கட்டிடம் (வீடு கட்டுவதற்கான மனை) / கட்டடம் (பில்டிங்), கன்னி (சிக்ஸ்டீன், செவன்டீன்... ஸ்வீட்டீன்) / கண்ணி (என்னமா வலை வீசுறான் பார்றா), கறுப்பு (எனக்கு புடிச்ச கலரு) / கருப்பு (பஞ்சம்), கரி (யானை, அடுப்புக்கரி) / கறி (சிக்கன், மட்டன், அப்றம்... காய்கறி) - இப்டி இன்னும் நிறைய இருக்கு பாஸ். அடுத்தவாரத்துக்கும் கொஞ்சம் மிச்சம் வெச்சிக்கலாமா?

- படித்த போது, சில வார்த்தைகள் ஜெர்க் அடிக்க வைத்திருக்கலாம். ‘ஏமாந்து’ என்கிற வார்த்தையை, குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு மூன்று வேளை என்கிற அளவுக்காவது நாம் பயன்படுத்திக் கொண்டிருப்போம் இல்லையா? ‘கழுத்தறுத்திட்டான் மச்சான், கூட இருந்தே குழி பறிச்சிட்டான், முதுகுல குத்திட்டான், நம்ப வெச்சி டீல் கொடுத்திட்டான், முகத்தில கரியைப் பூசிட்டான்...’ - இப்படியாகவும், இன்னும் பல விதங்களிலும் நாம் சொல்கிற சொல்லாடல்கள் எல்லாமே, ‘ஏமாற்றம்’ என்கிற ஒற்றைச் சொல்லின் பலவித பிரயோகங்கள் இல்லையா? என்றால், ஏமாந்து என்பதற்கு எப்படி ‘ஜாலி, இன்பம், மகிழ்ச்சி’ என அர்த்தம் கொள்ளமுடியும்?

சாத்தனார்... ஏமாந்தார்?

ந்தக் கேள்வி உங்களுக்கு வந்தது போலவே, எனக்கும் வந்தது. ‘தவறான அர்த்தத்தில் பேசிப்பேசி, இந்த வார்த்தையின் அர்த்தமே மாறி அனர்த்தமாகி விட்டது’ என்று வருத்தப்படுகிறார்கள் தமிழறிஞர்கள். உண்மையில், ‘ஏமாந்து’ என்ற தமிழ்ச் சொல்லின் அர்த்தம் இன்பமடைந்து என்பது(மட்டும்)தானாம். ஆதாரம் கேட்டு புகார்மனு எழுதக் காத்திருப்பவர்களுக்காக புறநானூற்றுப் பாடலில் இருந்து உதாரணம் இங்கே.

பாண்டியன் இலவந்திகைப் பள்ளி துஞ்சிய நன்மாறனை நோக்கி, வடமவண்ணக்கன் பேரி சாத்தனார் பாடிய பாடல் இது (புறநானூறு, 198 - மறவாது ஈமே). பாண்டிய மன்னனிடம் பாட்டுப் பாடி பரிசு வாங்குவதற்காக சாத்தனார் சார் அரண்மனை செல்கிறார். மன்னன் நாளைக் கடத்துகிறாரே தவிர, பரிசைக் கொடுத்த பாடில்லை. டென்ஷன் ஆகிறார் புலவர். இனியும் இங்கு காலம் கடத்துவதில் பயனில்லை என்று முடிவுக்கு வருகிறார். மன்னனுக்கு புத்தி சொல்லி, ‘‘அருவி தாழ்ந்த பெருவரை போல / ஆரமொடு பொலிந்த மார்பின் தண்டாக்...’’ என்ற பாடலை பாடிச் செல்கிறார் (இதற்குப் பிறகாவது மன்னன் பரிசு கொடுத்தானா... தெரியவில்லை).

லெட்டர் க்ளிக் ஆகணுமா?

பாடலின் இரண்டாவது பத்தியில், ‘‘காதல் பெருமையின் கனவினும் அரற்றும்என் (பரிசு மீது எனக்கிருக்கிற பற்று காரணமாக, கனவிலும் கூட உனது பெயரையே புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன்) / காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப... (அந்தப் பரிசு மீது எனக்குள்ள விருப்பம் காரணமாக, எனது நெஞ்சம் இன்புற்று மகிழுமாறு...)’’ என்கிற அடி வருகிறது. ஏமாந்து உவப்ப = இன்புற்று மகிழுமாறு. ஆக, ஏமாந்து என்கிற வார்த்தைக்கு, நாம் இப்போது பயன்படுத்துகிறது போன்ற ‘டுபாக்கூர்’ அர்த்தம் இல்லை என்பதை புறநானூறு புரியவைத்திருக்கும். இனி கடிதம் கொடுக்கும் போது, ‘‘உன்னிடம் ஏமாந்து போவதும், இரட்டிப்பு மகிழ்ச்சியே...’’ என்று எக்ஸ்ட்ரா ஃபீல் கொடுத்து எழுதலாம். புறநானூறு தெரிந்திருந்தால்... ஒருவேளை உங்கள் லெட்டர் க்ளிக் ஆகலாம்.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

1 கருத்து:

  1. அருண்குமார் பரத், கோவை16 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 9:13

    தமிழ் இலக்கணத்தை நகைச்சுவையாக எழுதுகிறீர்கள், நல்ல முயற்சி. பாராட்டுக்கள். ஒவ்வொரு வாரமும் படம் எங்கிருந்து அய்யா பிடிக்கிறீர்கள். படு ரசனைக்காரராக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்,.

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...