சனி, 1 ஆகஸ்ட், 2015

டோனியிடம் என்ன சொன்னார் அஸ்வின்?

‘அட! தமிழ் இலக்கணத்தில் இவ்ளோ விஷயம் இருக்கா? படிக்கிற காலத்தில மிஸ் பண்ணிட்டேன். முழுசா தெரிஞ்சுக்கணும்னா எது சார் படிக்கணும்?’ - இப்படி ஒரு நண்பர் அலைபேசியிருந்தார். நிஜத்தில், தமிழ் இலக்கணம் ரொம்ப சுலபம். அதேசமயம், அடிப்படையான விஷயங்களை தெரிந்து கொண்டால் மட்டுமே, முங்கு நீச்சல் அடிக்கமுடியும். பேஸ்மென்ட் ஸ்ட்ராங் என்றால், தமிழாசிரியர்களின் ஆலோசனைப்படி நீங்கள் நன்னூல் படிக்கலாம்.


ஜாலிக்கு இடமில்லை!


‘நம்மொழி செம்மொழி’ இலக்கணத் தொடரை வெற்றிகரமான 37வது வாரமாக படித்துக் கொண்டிருக்கிற உங்கள் மனதில் ஒரு குட்டிக் கேள்வி அடிக்கடி கிளம்பி தொல்லை படுத்தியிருக்கும். ‘தமிழில் எழுதப்பட்ட முதல் இலக்கண நூல் எது?’ - போட்டித் தேர்வுகளில் கேள்வி கேட்டால் சரியாக எழுதி மார்க் வாங்கவேண்டுமில்லையா? அகத்தியர் எழுதிய ‘பேரகத்தியம்’ தமிழில் எழுதப்பட்ட முதல் இலக்கண நூல் என்கிற பெருமையை பெறுகிறது. சோகம் என்னவென்றால், இந்த நூலின் மூலம் அல்லது அதன் பிரதிகள் இப்போது யாரிடமும் இல்லை.

பேரகத்தியத்துக்கு வழிநூலாகத் தோன்றியது தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம். எழுத்து, சொல், பொருள் எனும் மூன்று இலக்கண விஷயங்களையும் தொல்காப்பியம் விரிவாக விளக்குகிறது. நம்மொழி செம்மொழி போல ஜாலி, கேலிக்கெல்லாம் இடமில்லை. மிகக் கடினம். என்பதால், நூலக அடுக்குகளையும், பேரறிஞர்களையும் தாண்டி இது மக்களிடம் வரவில்லை. கடினமான தொல்காப்பியத்தை கொஞ்சம் எளிமைப்படுத்தி (இப்போது நாம் செய்கிறது போல) தொகுத்தும், வகுத்தும், விளக்கியும் ‘நன்னூல்’ என்கிற இலக்கண நூலை வழங்கினார் பவணந்தி முனிவர். இன்றைக்கு இலக்கணம் குறித்து நாம் எதாவது சந்தேகங்களை நிவர்த்தி செய்ய, இந்த நன்னூலைத்தான் ரெஃபரன்ஸ் செய்கிறோம். 13ம் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுதப்பட்ட இந்த நூல், தொல்காப்பியத்துக்கு வழிநூலாகவும், அகத்தியத்துக்கு சார்பு நூலாகவும் விளங்குகிறது. இனி, நாம் நிறுத்தக்குறிகள் மேட்டருக்குச் செல்லலாமா?

ரட்டை மேற்கோள்குறி, ஒற்றை மேற்கோள்குறிகளை எங்கு, எப்படி பயன்படுத்தவேண்டும் என்று இனி சுருக்க்க்க்கமாக பார்க்கலாமா?

இரட்டை மேற்கோள்குறி (Double Quotation): 
* ஒருவர் கூறிய வார்த்தைகளை அப்படியே எடுத்தாளும் போது ‘‘.....’’ எனப்படுகிற இரட்டை மேற்கோள்குறி அவசியம். (ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் கூறுகையில், ‘‘இலங்கை கடற்படை அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. கடலுக்குச் சென்று திரும்புவது ஆபத்தான விஷயமாகி விட்டது. மீன்பிடி தொழிலே அழிந்து விடும் அபாயம் இருக்கிறது. இந்தப் பிரச்னைக்கு எப்போதுதான் முற்றுப்புள்ளி வைக்கப்படுமோ?’’ என்றனர்). மீனவர்கள் கூறுகையில் என்கிற இடத்திற்கு அடுத்து துவங்கி, வைக்கப்படுமோ? என்ற இடத்தில் மேற்கோள்குறியை முடித்து விடவேண்டும். ‘‘...முற்றுப்புள்ளி வைக்கப்படுமோ என்றனர்,’’ - இப்படி செய்தால் தப்பு. உரை முடிந்ததும் கொட்டேஷனும் முடிந்து விடவேண்டும். மீனவர்கள் கூறுகையில், - இங்கே ஒரு கமா (காற்புள்ளி) அவசியம்.

நூல் அல்லது கட்டுரையில் இருந்து மேற்கோள் காட்டும் போது. (வைரமுத்து தனது பாடலில், ‘‘வானம் எனக்கொரு போதிமரம்...’’ என்று வர்ணித்திருப்பார்).

ஒரு சொல் வழக்கமான பொருளின்றி, வேறு அர்த்தத்தில் (டபுள் மீனிங்!?) கூறப்படுகிற போது. (‘‘சரக்கு’’ ரெடி என்று நண்பர்களிடம் இருந்து தகவல் வந்தது).

ஒற்றை மேற்கோள் குறி (Single Quotation):
ஒருவரது கூற்றுக்குள் (இரட்டை மேற்கோள்குறிக்குள்) சொல்லப்படுகிற வேறொரு விஷயத்தை ஒற்றை மேற்கோள்குறியிட்டு பிரித்து அடையாளப்படுத்தலாம். (போட்டி முடிந்ததும் டோனி நிருபர்களிடம், ‘‘எங்கள் ஆட்டம் திருப்தியாக இருந்தது. அஸ்வின் இன்னும் சிறப்பாக பந்து வீசவேண்டும். ‘அடுத்தபோட்டியில் திறமையை வெளிப்படுத்துவேன்’ என்று அஸ்வின் என்னிடம் உறுதியளித்திருக்கிறார்,’’ என்றார்).

ஒருவரது எண்ணத்தை வெளிப்படுத்தும் இடத்தில் (தியேட்டர் வாசலுக்கு வந்தப் பிறகு, ‘இந்த சினிமா வேண்டாம்’ என்று முடிவு செய்தான் ராஜா).

எழுதுபவர், ஒரு சொல்லை தனித்துக் காட்ட விரும்பும் போது. (ரஜினிகாந்த்தை மக்கள் ‘சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கிறார்கள்).
நிறுத்தக்குறிகள் இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கின்றன. அடுத்தவாரத்தில் முடித்து விடலாம். சரியா?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

3 கருத்துகள்:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...