சனி, 4 ஜூலை, 2015

புள்ளிராஜாவுக்கு எத்தனை புள்ளி?

‘நீ புள்ளி வெச்சா... நான் கோலம் போடுவேன்...’ என்று ஒரு விசேஷமான வசனம் (சினிமா பெயர் ஞாபகத்தில் இல்லை) கேட்டிருப்பீர்கள். தத்துவம் படிக்கிறவர்களிடம் பேசினால், ‘உலகத்தின் சகல விஷயங்களுமே ஒரு புள்ளியில் இருந்து துவங்குகின்றன...’ என்பார்கள். தத்துவம், சினிமா இரண்டுமே புள்ளியின் மகத்துவம் பற்றி மேலதிகம் பேசுவதால், நாமும் அதுபற்றி அதிகம் தெரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. முதலில் காற்புள்ளி என்கிற கமாவும், அடுத்ததாக அரைப்புள்ளி என்கிற செமிகோலனும் பார்த்தோம். இனி, முக்காற்புள்ளி எனப்படுகிற கோலன் (Colon), முற்றுப்புள்ளி என்கிற ஃபுல் ஸ்டாப் (FUll Stop) மட்டும் பார்த்து விட்டோமேயானால், புள்ளி சப்ஜெக்ட்டை தள்ளி வைத்து விடலாம். சரியா?



முக்காற்புள்ளி என்ற கோலன் ‘:’ இப்படித்தானே போடுகிறோம். இதை எங்கே போடணும், ஏன் போடணும்? காலையில் அலாரம் வைத்து எழுந்து மனப்பாடம் செய்கிற அளவுக்கு ரொம்ப பெரிய ரூல்ஸ் எல்லாம் இல்லை. சிம்பிள் விஷயம்தான். முக்காற்புள்ளி வைக்கவேண்டிய இடங்களில் லிஸ்ட் இங்கே...
* ஒரு விஷயத்தின் அர்த்தம் கூறுகிற சொற்களை குறிப்பிடுகிற போது (கல்விமான்: கற்றுத் தேர்ந்தவர்; டுபாக்கூர்: ஏமாற்றுகிறவர்.)
*  இருவரோ அல்லது அதற்கு மேற்பட்டவர்களோ பங்கேற்கிற உரையாடலை பதிவு செய்கிற போது (இன்ஸ்பெக்டர்: வண்டியை நிறுத்து. லைசென்ஸ் இருக்கா? பையன்: அது எடுக்கத்தான் போய்கிட்டு இருக்கேன் சார். பக்கத்தில் நிற்கிற கான்ஸ்டபிள்: அட, எங்க இன்ஸ்பெக்டரையே கலாய்க்கிறயா நீ?)
*  ஒரு மனிதரையோ அல்லது விஷயத்தையோ புள்ளிவிபரம் போல விளக்கிக் கூறுகிற போது (பெயர்: வடிவேலு, தொழில்: நடிகர், ஊர்: மதுரை, பட்டம்: வைகைப்புயல்.)
*  ஒரு தகவலைச் சொல்லி, அதனோடு தொடர்புடைய விஷயத்தை அடுத்துக் கூறும் போது (கெஜ்ரிவால் பதவியேற்பு: மக்கள் திரளாகக் குவிந்தனர்.)

*  ஒரு மேற்கோள் தகவல் சொல்லி, அது இன்ன நூலில், இன்ன அதிகாரத்தில் இருக்கிறது என்று சுட்டிக்காட்ட (‘‘கர்த்தரில் அன்பு கூருகிறவர்களே, தீமையை வெறுத்து விடுங்கள்...’’ பைபிள் - சங்கீதம் 97:10)
*  நேரத்தை குறிப்பிடும் போது (‘தினமும் அதிகாலை 8:30 மணிக்கெல்லாம் எந்திருச்சிருவேன்பா...!’)
*  ஒரு பிரமுகரின் கருத்தை, பேட்டியை கூறும் போது (இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘‘.....’’)
முக்காற்புள்ளி சப்ஜெக்ட்டுக்கு இந்த இடத்தில் முற்றுப்புள்ளி இடலாம். காரணம், அடுத்து முற்றுப்புள்ளி நமக்காக காத்திருக்கிறது.

மேட்டரை முடிக்க முற்றுப்புள்ளி எனப்படுகிற ஃபுல் ஸ்டாப் நாம் வைக்கிறோம். வாக்கியத்தின் முடிவில் வைப்பதற்கு மட்டும்தானா முற்றுப்புள்ளி (வாசலில் கோலம் போடுவதற்கும்தான்... என்று போஸ்ட் கார்டு அனுப்பவேண்டாம்). இன்னும் சில பயன்பாடுகளும் இதற்கு இருக்கிறது.
*  ஒரு கட்டுரை, ஒரு வாக்கியத்தில் பொருள் முடிந்தது என்று நமக்கு உணர்த்துவது முற்றுப்புள்ளி. (கமல்ஹாசனின் உத்தமவில்லன் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது.)
*  ஒரு சொல்லை சுருக்கிச் சொல்லும் போது போடுங்க ஒரு முற்றுப்புள்ளி (திரு. மன்மோகன்சிங் - அதாவது திருவாளர் மன்மோகன் சிங், உயர்திரு. தவத்திரு. கி.மு. கி.பி.)

*  ஒருவரது பெயரை சுருக்கிச் சொல்கிற போதும் முற்றுப்புள்ளி அவசியம் (எம்.ஜி.ஆர். என்.டி.ஆர்.)
*  முகவரி எழுதும் போது, இறுதியாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் (நம்பர் 6, விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்குச் சந்து, துபாய் மெயின்ரோடு, துபாய்.).
*  அடைப்புக்குறிக்கு ஒரு வாக்கியம் எழுதும் போது, அடைப்புக்குறியை முடிப்பதற்கு முன்னால் முற்றுப்புள்ளி வைப்பது முறை. உதாரணம்: தேசத்தின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு இளைஞனும் தோள் கொடுக்கவேண்டும். (முதியவர்களும் கூட கொடுக்கலாம்.)
*  ஒரு வாக்கியம் எழுதப்பட்டு, அது சம்பந்தமான கூடுதல் தகவல்களை மட்டும் அடைப்புக் குறிக்குள் கொடுத்திருந்தால், அடைப்புக்குறிக்கு வெளியே மட்டும் முற்றுப்புள்ளி இடவேண்டும். உதாரணம்: தேர்வு அறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்களை மாணவர்கள் எடுத்து வரக்கூடாது (கால்குலேட்டர், செல்போன், போன்றவை).

நிறுத்தக்குறி (Punctuation marks) விஷயத்தில், புள்ளிகள் குறித்து இந்த அளவில் தெரிந்து கொண்டாலே போதும். காற்புள்ளி, அரைப்புள்ளி, முக்காற்புள்ளி, முற்றுப்புள்ளி என இந்த நான்கு புள்ளிகளையும் சரியான இடத்தில் வைத்துப் பழகிக் கொண்டால்... தமிழ் எழுத்தில், நீங்களும் ஒரு புள்ளிராஜாதான்!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

3 கருத்துகள்:

  1. தமிழில் இந்த புள்ளி விவகாரம் எல்லாம் வந்தது ஆங்கிலேயர் வரவுக்குப் பின்னே. பண்டைய தமிழில் இவை இல்லை.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...