திங்கள், 27 ஜூலை, 2015

பாகுபலி - காட்சி பிரமாண்டத்தின் உச்சம்!

முன்குறிப்பு: இது வழக்கமான, சினிமா விமர்சனக் கட்டுரை அல்ல.
மிழில் வெளிவருகிற பிரமாண்ட சினிமாக்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். தெய்வப்புலவராவது ஒன்றரை அடியில் எழுதினார். அவருக்கு சவால் விடுகிறது போல, ஒற்றை வரியில் கதை தயார் செய்து கொண்டு, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் துணையுடன் காட்சிகளைக் கோர்த்து தைப்பது முதல் வகை. வலுவான கதைக் களத்தை கையில் எடுத்துக் கொண்டு, கதையின் பயணத்துக்கு கூடுதல் பலம் / வேகம் சேர்க்க, கம்ப்யூட்டர் வரைகலையை வெளியில் தெரியாத, கண்களை உருத்தாத வகையில் இழையோட விடுவது இரண்டாவது வகை. ராஜமவுலியின் பாகுபலி... இரண்டாவது வகை!ஹாலிவுட் மெகா பிரமாண்டங்களை மட்டுமே பார்த்து பிரமித்த இந்திய சினிமா ரசிகர்களை, காட்சி பிரமாண்டத்தின் உச்சத்துக்கு நகர்த்திச் செல்வதில் மெய்யாகவே, பெரு வெற்றி பெற்றிருக்கிறது பாகுபலி. படம் துவங்கிய முதல் நிமிடம் துவங்கி, காட்சி முடிகிற கடைசி வினாடி வரைக்கும், திரையில் நிலை கொண்டு நிற்கிறது பிரமாண்டம். படத்தின் துவக்கத்தில் வருகிற அந்த பிரமாண்ட நீர்வீழ்ச்சியும், அதன் பின் நகர்வுக் காட்சிகளும் இந்திய சினிமாவில் CGI (Computer generated imagery) வரைகலை தொழில்நுட்பத்தின் புதிய வீச்சை பதிவு செய்கின்றன.

லக சினிமாவைப் பொருத்தளவில், கதையின் போக்கை இயல்பாக நகர்த்திச் செல்ல CGI தொழில்நுட்பம் முழு வீச்சில் பயன்படுத்தப்படுகிறது. இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம், இந்தத் திரைப்படங்களில் CGI பயன்படுத்தப்பட்டிருக்கிற விஷயத்தை மக்களால் எந்தத் தருணத்திலும் கண்டறிய முடியாது. ‘இந்தப் படத்தில கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் அட்டகாசம்பா...’ என்று ரசிகன் வியந்து பேசினால், அங்கு CGI தொழில்நுட்பம் தோற்றுப் போகிறது. மாறாக, கம்ப்யூட்டர் வரைகலை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை கொஞ்சமும் ரசிகரால் பிரித்து உணர முடியாத அளவுக்கு காட்சிகளை படு தத்ரூபமாக, இயல்பாக, செயற்கை நிழல் சற்றும் படித்து விடாதபடிக்கு, இழையோட விடுவதே CGI தொழில்நுட்பத்தின் நிஜ வெற்றி.


டைட்டானிக், ஜூராஸிக் பார்க், கிளாடியேட்டர் போன்ற மெகா பிரமாண்ட சினிமாக்களை தவிர்த்து விட்டுப் பார்த்தால், ஆங்கிலத்தில் Forrest Gump, Die Hard With A Vengeance, Fight Club, Brokeback Mountain, Blood Diamond, Zodiac, The Fighter, Black Swan, Les Miserables போன்ற பல ஹாலிவுட் சினிமாக்களில் CGI தொழில்நுட்பம் படு இயல்பாக பயன்படுத்தப்பட்டிருக்கும். கிராபிக்ஸ் இருப்பதைக் கண்டுபிடிக்கவே முடியாது. மேலே குறிப்பிட்டிருக்கிற இந்த ஆங்கில சினிமாக்கள் வெளியாகி, சுமாராக 15 வருடங்களைக் கடந்திருக்கும். ஆனாலும், பிரித்தறிய முடியாத அளவுக்கு வெகு இயல்பாக CGI பயன்படுத்திய விதத்தில், இந்தத் திரைப்படங்கள் இன்றளவுக்கும் நிலைத்து நிற்கின்றன.

தே காலகட்டத்தில் வெளியான தமிழ் / இந்திய சினிமாக்களின் நிலைமை... படு பரிதாபம். CGI தொழில்நுட்பத்தை இவர்கள் எதற்கு பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று பார்த்தால், கேட்க இனிமையான பாடலுக்கு எலும்புக்கூடு அபிநயம் பிடித்து பரதநாட்டியம் ஆடுவது போல காட்சிப் படுத்துவதற்குத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். தியேட்டரில் இருந்து வருகிற ரசிகன், ‘கிராபிக்ஸ் பின்னிட்டாங்கப்பா’ என்று சபாஷ் போடுகிறான். அது இயக்குனரின் தோல்வி என்பது இன்னும் இங்குள்ள கலை பிரம்மாக்களால் புரிந்து கொள்ளப்படாதது வெட்கக்கேடு.

கர்ணன்
ன்றால், கதையோடு கூடிய பிரமாண்ட படங்கள் தமிழ் சினிமாவில் இல்லவே இல்லையா? இந்தப் பதிலுக்கு ‘இருந்தது’ என்பது பதில். சற்றேறக்குறைய நாற்பது, ஐம்பது வருடங்களுக்கு முந்தைய கர்ணன், சந்திரலேகா, அடிமைப்பெண் உள்ளிட்ட பல சரித்திர, பிரமாண்டப் படங்களில் கதையின் போக்கை செழுமைப்படுத்த வரைகலை தொழில்நுட்பம் படு ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உண்மையில், அதெல்லாம், CGI உத்திகள் இல்லாத காலம். ஆனாலும், இருக்கிற வசதிகள் கொண்டு காட்சியில் பிரமாண்டத்தை அந்த இயக்குனர்கள் கொண்டு வந்து மிரட்டியிருப்பார்கள்.


பாகுபலிக்கு வருவோம். இன்றைய தேதிக்கு இந்தியாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி CGI தொழில்நுட்பத்தை தன்னளவில் வெகு இயல்பாகக் கொண்டு வர முயற்சி செய்திருக்கிறார். அதில், ஏறக்குறைய அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார். மகிழ்மதி தேசத்தை கம்ப்யூட்டர் வரைகலை கொண்டு அவர் காட்சிப்படுத்தியிருக்கிற விதம் அசத்துகிறது. குறிப்பாக, அரண்மனையின் உட்புறங்கள், வெளி விதானங்களைக் காட்சிப்படுத்திய விதம், ராஜமவுலியின் அசாத்திய கற்பனை வளத்தை நிரூபிக்கிறது.

 யோசிக்க முடியாத முடிச்சுக்களுடன் கூடிய மன்னர் கதை. விண்ணில் இருந்து கொட்டுவது போல படு பிரமாண்ட அருவி. (அது, சாலக்குடி அருவி என்று தெரியும் போது, வரைகலை தொழில்நுட்பம் இங்கே எப்படி பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ளமுடியும்). நீர்மலை என்கிற அந்த பிரமாண்ட மலை மீது விடாமுயற்சியுடன், தாவியும், குதித்தும், சாகசங்கள் செய்தும் ஏறுகிற இளைஞன். முதல் பாதியில் பெருமளவு ஃபேண்டஸி என்றாலும், கதை பார்க்க வந்திருக்கிற கடைசி ரசிகன் வரை, அத்தனை பேரையும் திருப்திப்படுத்துவதற்கான உத்திகள். 250 கோடி ரூபாய்க்கும் அதிகமாக கொட்டி, ராஜா ராணி படம் எடுக்கிற வேலை, இந்திய சினிமாவில் எத்தனை அபாயகரமானது என்பதை புரிந்து கொள்வது கடினமல்ல. ரிசல்ட் வேறு மாதிரி போய் விட்டால்...?

தை நடக்கிற மகிழ்மதி என்கிற தமிழ் தேசத்திற்கு சற்றும் பொருந்தா விட்டாலும் கூட, பனி படர்ந்து கிடக்கிற அந்தப் பிரதேசத்தையும், பனிச் சறுக்குக் காட்சிகளையும் ஆட்சேபனையின்றி ரசித்து விட்டு வரலாம். இரண்டாவது பாதியில் வருகிற காலகேயர்களுடனான போர்க்காட்சி. ராஜமவுலிக்கு ராயல் சல்யூட் அடிக்கவேண்டிய பகுதி. ஒரு போர்க்களத்துக்கான உத்திகள், திட்டமிடல்கள், வியூகங்களை வெகு இயல்பாக தயாரித்திருக்கிறார். போர்க்காட்சி முழுமையும் CGI தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருப்பதை, படம் பார்க்கிற ரசிகன் அறிந்து கொள்ள முடியாதபடிக்கு இயல்பாக இணைத்திருக்கிறார் . என்பதால், அந்த அரைமணிநேர போர்க்களக் காட்சி, ரசிகர்களை வெகுவாக மகிழ்விக்கிறது.

ராஜமவுலி வைத்திருக்கிற கேமரா கோணங்கள் அற்புதம். மன்னர் இறந்து விட்டப் பிறகு, மந்திரி தன்னையே மன்னனாக முடிசூடிக் கொள்ள முனைகிற அந்தக் காட்சியின் போது, சிவகாமி (ரம்யா கிருஷ்ணன்) அரண்மனைக்குள் நடந்து வருவார். ஆர்ப்பரிக்கிற பின்னணி இசை பின்புலத்தை நிரப்ப, ஏரியல் ஷாட் கேமரா கோணம் வைத்து, மேலே இருந்து கீழாக அந்தக் காட்சியை படம் பிடித்திருப்பார் பாருங்கள்.... பிரமாண்டமாக காட்சிப்படுத்தும் கலையை இந்திய சினிமா இயக்குனர்களுக்கு பாடம் நடத்தலாம் ராஜமவுலி. போர்க்களக் காட்சியின் போதும் வைட் ஆங்கிள் போட்டு பறவைப் பார்வை (Bird's View) கோணத்தில் களத்தை காட்டியிருப்பார். சாதாரண ரசிகனை பிரமிப்பின் உச்சத்துக்கே கொண்டு செல்கிற கேமரா உத்திகள் இவை.

காட்சிக்குக் காட்சி வைக்கப்படுகிற ட்விஸ்ட், படத்துக்கு இன்னுமொரு பலம். திரையில் ஓடிக் கொண்டிருக்கிற காட்சி, இன்னும் சில நிமிடங்கள் நீளுமானால்... ரசிகனை நெளிய வைத்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிற போதே, மற்றுமொரு பிரமாண்ட காட்சி திரைக்கு வந்து, படத்தை தொய்வின்றி முன் நகர்த்தும். ஆரம்பத்தில் இருந்து கவனித்துப் பார்த்தால், சங்கிலி கோர்ப்பது போல, அடுத்தடுத்து பிரமாண்டங்களைக் கோர்த்து, கோர்த்து, விறுவிறுப்பு துளியும் குறையாமல் பார்த்துக் கொண்டிருப்பார் இயக்குனர்.

 முதல் காட்சியில் பிரமாண்ட அருவி. அப்புறம் கொஞ்சம் ஃபேண்டஸி. அது நடந்து கொண்டிருக்கும் போதே, பல்வாள்தேவன் (ராணா) காட்டெருமையுடன் மோதுகிற காட்சி. கட்டப்பா (சத்தியராஜ்) அறிமுகம். மகிழ்மதி தேசம், அரண்மனை ஆகியவற்றை பிரமாண்டமாக அறிமுகப்படுத்துகிற ஷாட். நூறடி உயரச் சிலையை நிறுவுகிற காட்சி. இரண்டாவது பாதியில் வியக்க வைக்கிற போர் என்று... ஒரு காட்சி முடியும் போது, அடுத்த காட்சிக்கான கண்ணியை இணைத்தே வருகிறது. என்பதால், படத்தில் இருந்து ரசிகனால் நிமிட நேரம் கூட விலகி வெளியே போக முடிவதில்லை. படம் ஓடுகிற 159 நிமிடநேரமும் முழுமையாக அந்த வரலாற்றில் இணைந்திருக்கிறான்.

மஹதீரா
ப்படி ஒரு படம் எடுக்கிற ஐடியா பல ஆண்டுகளுக்கு முன்பே ராஜமவுலி மனதுக்குள் விழுந்திருக்கவேண்டும். 2009ல் அவர் எடுத்த மஹதீரா (தெலுங்கு) சினிமாவில் ஒரு போர்ஷன் இதேமாதிரி ராஜா ராணி கதை இருக்கும், கவனித்திருப்பீர்கள்.

மஹதீரா

ஏறக்குறைய, பாகுபலிக்கான ஒரு ஒத்திகையாக, அந்தப் போர்ஷனை மஹதீராவில் அவர் செய்திருப்பார். அரண்மனை வடிவமைப்பு, போர்க்களம்... என இன்றைய பாகுபலியின் டிரைலராகவே மஹதீரா ஏறக்குறைய அமைந்திருக்கும். மஹதீராவில் ஒத்திகை பார்த்து, அது மெகா சக்ஸஸ் ஆனதும், துணிச்சலுடன் பாகுபலிக்கு அவர் தயாராகி விட்டார்.


பாகுபலி மாதிரியான ஒரு படம், சாதாரணமல்ல. 250 கோடிக்கும் அதிகமாக பணத்தைக் கொட்டி எடுக்கிற படம், ஒருவேளை ரிசல்ட் தவறி விட்டால்... இயக்குனர், தயாரிப்பாளர், வாங்கியவர் , விற்றவர் எல்லாரும் காலி. முதலில், போட்ட வசூலை எடுக்க வேண்டும். பிறகு, லாபம் எடுக்கவேண்டும். அதற்கு என்ன செய்யலாம்? அதற்கு, ராஜமவுலி செய்தது அற்புதமான மேனேஜ்மென்ட் உத்தி.
 ஒரு வருடம் முன்பே,  பாகுபலி  படம் குறித்த பரபரப்புச் செய்தி களை மீடியாக்களுக்கு கொடுத்தார். கிட்டத்தட்ட ஒரு வருட காலம் இந்திய மீடியாக்கள் பாகுபலி  படம் எப்படி இருக்கும் என்று யூகம் செய்து அலசுவதற்கென்றே, அதுகுறித்த செய்திகள் வெளியிடுவதற்கென்றே சினிமா பக்கத்தை ஒதுக்கி விட்டன. படத்தை ஏறக்குறைய பெரும்பாலான இந்திய மொழிகளில் வெளியிடுவது இரண்டாவது உத்தி. அந்தந்த மொழிக்காரர்களுக்கு, அவரவர் தாய்மொழியில் படம் பார்க்கக் கிடைப்பது அதிகப்பட்ச ஆனந்தம் தரும். என்பதால், வசூல் எகிறும். இந்திய சினிமா சந்தையில் தொடர்ச்சியாக ஒரு வருடகாலம் பாகுபலி குறித்த டிரெண்டிங் உருவாக்கி, உலாவ விட்டார். விளைவாக, ஒரு கட்டத்தில் படம் எப்போது வரும் என்று இந்திய சினிமா ரசிகர்கள் காத்திருக்கத் தொடங்கி விட்டனர்.

ராணா - பிரபாஸ்
ந்தக் காத்திருப்பை படம் ஏமாற்ற வில்லை. அதிக எதிர்பார்ப்புடன் வந்த ரசிகனை முழுமையாகவே திருப்திப் படுத்தி அனுப்புகிறார். வரலாற்றுப்படத்துக்கான வசனத்தை கார்க்கியும், பின்னணி இசையை கீரவாணி என்கிற மரகதமணியும் குறைவின்றிக் கொடுத்திருக்கிறார்கள். செந்தில்குமாரின் ஒளிப்பதிவும் சூப்பர். பாகுபலி பாத்திரத்துக்கு (பாகுபலி என்றால் தோள்வலிமை மிக்கவன் - The One With Strong Arms - என்று அர்த்தமாம்) பொருத்தமாக இருக்கிறார் பிரபாஸ்.
எஸ்.எஸ்.ராஜமவுலி
மொத்தத்தில், ராஜமவுலி தலைமையிலான டெக்‌னீஷியன்கள் அனைவரும் சேர்ந்து, ரசனைக்குரிய, மதிப்பு மிக்க, இந்திய சினிமாவுக்கு கவுரவம் சேர்க்கும் ஒரு படத்தை அளித்திருக்கிறார்கள். பாகுபலி அடுத்தபாகத்துக்காக அனைவரையும் காத்திருக்க வைத்திருக்கிறார்கள். வீ ஆர் வெயிட்டிங் ராஜமவுலி!

பின்குறிப்பு: பாகுபலி படத்தில் ஒரு தப்புக் கூடவா இல்லை? பாராட்டு மட்டுமே இருக்கிறதே என்று விமர்சனங்கள் எழலாம். தப்பில்லை. ஆனால், ஒரு படத்தை இடைவேளையுடன் எழுந்து வந்து விமர்சனம் செய்தால் நன்றாகவா இருக்கும்? பாகுபலி (The Beginning) படமும் அப்படித்தானே? அது இன்னும் முடியவில்லையே? பாகுபலி அடுத்தபாகமும் (The Conclusion) வந்து விடட்டும். முழுமையாக படத்தை பார்த்து விட்டு, நிறை குறைகளை மிக முழுமையான அலசி விமர்சனம் தந்து விடலாம். சரிதானே?
மேக்கிங் ஆஃப் பாகுபலி - வீடியோ இணைப்பு

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

3 கருத்துகள்:

 1. விளம்பரம் + வியாபாரம் - இயக்குனருக்கு கை வாய்ந்த கலையாக இருக்கிறது...

  பதிலளிநீக்கு
 2. பிரபு குணாளன், உதகை28 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 1:33

  சினிமா விமர்சனங்களில் இது புதுவகை. வழக்கமான விமர்சன பாணிகளில் இருந்து மாறுபட்டு இருக்கிறது, படம் தயாரிப்பு, டெக்னிக்கல் விஷயங்கள் முதல்வியாபாரம் வரை விரிவாக விளக்கியிருக்கிறீர்கள். பாகுபலி படம் குறித்த புதிய பார்வையை இந்தக் கட்டுரை உருவாக்கியிருக்கிறது. சினிமா விமர்சனங்களை தொடர்ந்து எழுதுங்கள்.
  நன்றி.
  பிரபு குணாளன், உதகை

  பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...